‘ஓய்வு பெறும் எண்ணம் ஒருபோதுமில்லை’ - 102 வயதில் காய்கறி விற்கும் மூதாட்டி!
இளமையில் மட்டுமல்ல முதுமையிலும் வறுமை என்பது கொடுமையான ஒன்று, அதனை நிரூபிக்கும் விதமாக தனது குடும்பத்தை காப்பற்றுவதற்காக 102 வயது மூதாட்டி ஒருவர் காய்கறி விற்பனை செய்து வரும் சம்பவம் இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
இளமையில் மட்டுமல்ல முதுமையிலும் வறுமை என்பது கொடுமையான ஒன்று, அதனை நிரூபிக்கும் விதமாக தனது குடும்பத்தை காப்பற்றுவதற்காக 102 வயது மூதாட்டி ஒருவர் காய்கறி விற்பனை செய்து வரும் சம்பவம் இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
கொல்கத்தாவைச் சேர்ந்த லட்சுமி மைதி, வயது என்பது வெறும் நம்பர் மட்டுமே அது ஒருவருடைய உழைக்கும் திறனை அளவிடும் கருவி வயது அல்ல என்பதை நிரூபித்துள்ளார். ஏனெனில், தனது குடும்பத்தை எந்த சூழ்நிலையிலும் நிதி நெருக்கடியில் தள்ள விரும்பாத அவர், 102 வயதிலும் காய்கறி விற்பனை செய்து வருகிறார்.
மேற்கு வங்க மாநிலம் புர்பா மேதினிபூர் மாவட்டத்தில் உள்ள ஜோகிபெர் கிராமத்தில் வசித்து வரும் லட்சுமி மைதி பாட்டி, தினமும் அதிகாலை 4 மணிக்கே கோலாகாட்டில் காய்கறிகளை மொத்தமாக வாங்கி, அவற்றை ரிக்ஷாவில் ஏற்றிக்கொண்டு உள்ளூர் சந்தைக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்கிறார். லட்சுமி மைதி பாட்டி கூறுகையில்,
“48 ஆண்டுகளுக்கு முன்பு என் கணவர் இறந்த பிறகு, நாங்கள் பல நாட்கள் உணவு இல்லாமல் இருந்தோம், வீட்டை நடத்த, நான் காய்கறி விற்க ஆரம்பித்தேன், அப்போது என் மகனுக்கு 16 வயதுதான். அப்போது சில நாட்கள் மிகவும் கொடுமையானதாக இருந்தது. குறிப்பாக நான் நோய்வாய்ப்பட்டு இருப்பினும், நான் எப்போதும் என் குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன்,” என்கிறார்.
கடந்த சில ஆண்டுகளாக மைதி பாட்டியின் உழைப்புக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்து வருகிறது. ஹெல்ப் ஏஜ் இந்தியா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் அவரைப் போன்ற பெண்களுக்காக ESHG (முதியோர் சுய உதவிக் குழு) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஹெல்ப் ஏஜ் இந்தியாவின் மூத்த அதிகாரி அபிஜித் சென் கூறுகையில்,
“நூற்றாண்டை எட்டிய பெண்களைப் போன்ற பெண்கள் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை உத்வேகமாக உள்ளனர். மைதி தனது கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவதை உறுதிசெய்தார். ESHG திட்டத்தின் கீழ் பண உதவியுடன் நாங்கள் தொடர்பு கொண்ட பல பெண்களில் அவரும் ஒருவர்,” எனத் தெரிவித்துள்ளார்.
நூற்றாண்டைக் கடந்த லட்சுமி மைதி பாட்டியின் வீட்டில் தற்போது புதிய அலங்காரப் பொருட்கள் மற்றும் டி.வி உள்ளிட்ட பொருட்கள் உள்ளன.
"எட்டு ஆண்டுகளுக்கு முன்பு என் மகனுக்கு டீ-ஸ்நாக்ஸ் விற்பனைத் தொழிலை அமைப்பதற்காக தன்னார்வத் தொண்டு நிறுவனம் ரூ.40,000 கடனாக வழங்கியபோது எங்கள் நிலைமை மாறத் தொடங்கியது.”
மைதியின் 64 வயது மகன் கௌர், தனது தாயார் "துர்கா தேவியின் அவதாரம்" என்று பெருமை பொங்க தெரிவிக்கிறார்.
"என் தாய் எனக்கு மட்டுமல்ல, என் குழந்தைகளுக்கும் உணவளித்தாள். அவர் என் மகளின் திருமணத்திற்கு நிதியுதவி செய்தாள், எங்களுக்கு ஒரு நல்ல வீடு வாங்கித் தந்தாள், கடன்கள் அனைத்தையும் கட்டி முடித்துவிட்டார். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஒரு மகன் தனது வயதான தாயை கவனித்துக்கொள்கிறார்கள். இருப்பினும், என் அம்மா, என்னை ஒருபோதும் சார்ந்திருக்கவில்லை, அவர் ஒரு இரும்புப் பெண்," எனக்கூறுகிறார்.
102 வயதாகிறதே ஓய்வு பெறும் எண்ணமில்லையா? மைதி பாட்டியிடம் கேட்டாள், “அது பற்றி இதுவரையிலும் யோசிக்கவில்லை...” என்கிறார்.
தொகுப்பு - கனிமொழி