கர்நாடகா மாநிலத்தில் 384 ஆலமரங்களை நட்டு வளர்த்துள்ள 103 வயது சூப்பர் பாட்டி!
புத்தகங்களால் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆகியவரல்ல இவர். முறையாக பள்ளிக்கு சென்று படிக்கவில்லை. தொழிலாளியாக பணிபுரிந்து இந்தியாவில் வாழும் பல லட்ச பெண்களைப் போல வாழ்க்கையோடு போராடியவர் இவர்.
103 வயதாகும் திம்மக்கா; பெங்களுரு ஊரக வட்டம், மகடி தாலுக்கில் உள்ள ஹுலிகல் கிராமத்தில் பிறந்தார். சிறுவயது முதல் முதுகெலும்பு தேயும் அளவு, நாள் முழுதும் கடுமையாக உழைத்து, பேகல் சிக்கைய்யா என்பவரை மணந்தார் திம்மக்கா. மாடு மேய்க்கும் கணவருடன் சேர்ந்து 25 ஆண்டு காலம் கழிந்த நிலையில் குழந்தைகள் இல்லாத திம்மக்கா, மரக்கன்றுகளை நட முடிவெடுத்தார். அவற்றை தன் குழந்தையாக வளர்க்கவும் தீர்மானித்தார்.
ஆலமரங்கள் நிறைந்தவை திம்மக்காவில் கிராமம். அவர் தன் கணவருடன் மரக்கன்றுகளை நடத்தொடங்கினார். முதல் ஆண்டில், சுமார் 4 கிமி தூரத்திற்கு 10 கன்றுகளை நட்டனர். இரண்டாம் ஆண்டில் 15, மூன்றாம் வருடம் 20 ஆக மரக்கன்றுகள் எண்ணிக்கை உயர்ந்தது. தன்னிடம் இருக்கும் சொற்ப வருமானத்தை கொண்டு மரங்களை வளர்த்தார். நான்கு கிலோ மீட்டர் தூரம் தண்ணீர் வாளிகளை எடுத்துச்சென்று மரக்கன்றுகளுக்கு நீர் பாய்ச்சினர். ஆடு, மாடு மேயாமல் இருக்க வேலியும் அமைத்தனர்.
1991-ல் திம்மக்காவின் கணவர் உயிரிழந்தார். இருப்பினும் அவர் நட்டுச்சென்ற மரக்கன்றுகள் இன்று வளர்ந்து அவரின் நினைவுகளை தாங்கி நிற்கிறது. கடந்த 50 ஆண்டுகளாக இருவரும் சேர்ந்து ஹுலிக்கல் பகுதியில் சுமார் 5 கிமி தூரத்துக்கு சுமார் 384 ஆலமரங்கள் வளர்ந்து கம்பீரமாக நிற்கின்றன.
1996-ல் தேசிய குடிமகள் விருதை பெற்றபோதே திம்மக்காவின் பணிகள் பற்றி வெளியே தெரிய ஆரம்பித்தது. அவரின் வாழ்க்கை திரைப்படமாக்கப்பட்டது. பல விருதுகளை அவர் பெற்றிருந்தாலும், யாரும் தனக்கு பண உதவிகள் செய்யவில்லை என்று ஆதங்கப்பட்டுள்ளார் திம்மக்கா. அவர் பெயரை பயன்படுத்தி, அவருக்கு வரும் நிதியை சிலர் எடுத்துக்கொள்வதாக சந்தேகிக்கிறார்.
”ஒரு மருத்துவமனை தொடங்க நீண்ட நாளாக முயற்சி எடுத்துவருகிறேன், ஆனால் அதற்கு யாரும் உதவிட முன்வரவில்லை. இருந்தாலும் என் முயற்சியை நான் தொடருவேன்,”
என்கிறார் இந்த ஆச்சர்யப்படுத்தும் மூதாட்டி.
கட்டுரை: Think Change India