Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

250 படுக்கை வசதியுடன் வடபழனியில் புதிய காவேரி மருத்துவமனை; மதுரையில் விரைவில் புதிய மருத்துவமனை!

சென்னையில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனைகளில் ஒன்றான காவேரி மருத்துவமனை, வடபழனியில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனை ஒன்றை திறந்துள்ளது. இதனை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று திறந்துவைத்தார்.

250 படுக்கை வசதியுடன் வடபழனியில் புதிய காவேரி மருத்துவமனை; மதுரையில் விரைவில் புதிய மருத்துவமனை!

Wednesday March 20, 2024 , 3 min Read

சென்னையில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனைகளில் ஒன்றான காவேரி மருத்துவமனை, வடபழனியில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனை ஒன்றை திறந்துள்ளது. இதனை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று திறந்துவைத்தார்.

காவேரி குரூப் ஆஃப் ஹாஸ்பிடல் நிறுவனம், கடந்த ஆண்டு வடபழனி ஆற்காடு சாலையில் அமைந்துள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையை சுமார் 152 கோடி ரூபாய்க்கு வாங்கியது. 110 படுக்கைகளுடன் செயல்பட்டு வந்த இந்த ஹாஸ்பிட்டல் தற்போது 250 படுக்கைகளுடன் உயர் தர சிகிச்சை மையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

kauvery hospital opening ceremony

புதிய மருத்துவமயின் சிறப்புகள்:

வடபழனி ஆற்காடு சாலையில் கட்டப்பட்டுள்ள காவேரி உயர்நிலை மருத்துவமனையில் 9 உயர்சிகிச்சை நேர்த்தி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதயம் மற்றும் நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சை, எலும்பியல் மற்றும் முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சை, இதய அறிவியல், நரம்பியல், கருவள சிகிச்சைகள், நோயறிதல் மற்றும் இடையீட்டு கதிரியக்கவியல் மற்றும் அவசரநிலை சிகிச்சை ஆகியவற்றிற்கான சிறப்பு உயர்நேர்த்தி சிகிச்சை மையங்கள் உள்ளன.

250 படுக்கை வசதிகளைக் கொண்ட இம்மருத்துவமனையில், 75 படுக்கைகளுடன் கூடிய உயிர்காக்கும் தீவிர சிகிச்சைப்பிரிவு (CCU), 30 படுக்கை வசதிகளுடன் கூடிய உறுப்புமாற்று சிகிச்சைக்கான தீவிர சிகிச்சைப்பிரிவு உள்ளது.

kauvery hospital opening ceremony

லேமினார் ஃபுளோ-உடன் கூடிய 6 மாடுலர் அறுவை சிகிச்சை அரங்குகள் ஆகிய வசதிகளும், நவீன சாதனங்களும் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிறுவனர் மற்றும் செயலாக்க இயக்குனர் டாக்டர்.S.அரவிந்தன் செல்வராஜ் யுவர்ஸ்டோரி தமிழுக்கு அளித்த பேட்டியில்,

“வடபழனியில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனை தான் தமிழ்நாட்டிலேயே முதல் Quaternary care (நான்காம் நிலை சிகிச்சை பராமரிப்பு மையம்) என்ற பெருமையைப் பெற்றுள்ளது. தற்போது 2,500 படுக்கை வசதிகளை காவேரி குரூப் ஆஃப் ஹாஸ்பிடல் கொண்டுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் மேலும் ஆயிரம் படுக்கை வசதிகளை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். அடுத்தகட்டமாக சென்னை மற்றும் நெல்லையில் உள்ள மருத்துவமனைகளில் 300 படுக்கை வசதிகளையும், சேலத்தில் 250 படுக்கை வசதிகளையும் விரிவுபடுத்தவுள்ளோம். மதுரையிலும் 500 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை எங்களின் புதிய திட்டத்தின் கீழ் வரவுள்ளது,” என்றார்.

கடந்த ஆண்டு 70 மில்லியன் டாலர் முதலீட்டை பெற்ற காவேரி மருத்துவமனை குழுமம், இன்னும் 2 முதல் 3 ஆண்டுகளில் ஐபிஓவை வெளியிட திட்டமிட்டுள்ளதாக டாக்டர். அரவிந்தன் தெரிவித்தார்.

திறப்பு விழாவில் ரஜினிகாந்த்:

சென்னையில் காவேரி மருத்துவமனையின் புதிய கிளையை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திறந்துவைத்தார். மருத்துவமனையை திறந்த வைத்த பிறகு மேடையில் ரஜினிகாந்த் உரையாற்றினார். அப்போது சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக்கொண்டது குறித்தும், ஏவிஎம் ஸ்டூடியோ குறித்த பழைய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார்.

Rajinikanth

இத்திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ரஜினிகாந்த் கூறுகையில்,

“நான்காம் நிலை உயர்சிகிச்சை வழங்குநராக வடபழனி காவேரி மருத்துவமனை அங்கீகரிக்கப்பட்டிருப்பது, மிக உயர்ந்த நிலையில் மேம்பட்ட மருத்துவ சேவைகளை வழங்குவதில் காவேரி மருத்துவமனைகள் குழுமம் காட்டும் அர்ப்பணிப்பையும், நிபுணத்துவத்தையும் வலுவாக கோடிட்டுக் காட்டுகிறது. தனிச்சிறப்பான சிகிச்சையையும், மிக நவீன உடல்நல பராமரிப்பு தீர்வுகளையும் வழங்குவதில் உயர்மேண்மை நிலையை எட்டவேண்டும் என்பதில் இம்மருத்துவமனை காட்டி வரும் பொறுப்புறுதி, புதுமையான சிகிச்சை பராமரிப்பின் நம்பிக்கையளிக்கும் கலங்கரை விளக்கமாக இதன் நிலையை வலுப்படுத்துகிறது,” என்றார்.

மறைந்த இயக்குநர் விசு இயக்கிய, சம்சாரம் அது மின்சாரம் படத்திற்காக கட்டப்பட்ட வீடு அமைந்திருந்த இடத்தில் தான் தற்போது காவேரி மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். அந்த வீட்டில் ஷூட்டிங் செய்த அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டானதாக கூறிய ரஜினிகாந்த், அப்படிப்பட்ட ராசியான இடம் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தன்னுடைய பர்சனல் மருத்துவர் பரிந்துரையின் படி, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் தனக்கு மேஜர் ஆப்ரேஷன் நடத்தப்பட்டதைக் கூறினார்.

kauvery hospital opening ceremony
ஒழுக்கம், நேர்மை, அர்பணிப்பு, கடின உழைப்பு ஒரு மனிதனுக்கு முக்கியம். இப்படியான இந்த நான்கு விஷயங்கள் ஒரு மனிதன்கிட்ட இருந்தால் அவர் நிச்சயமாக வாழ்க்கைல முன்னேறுவார், இந்த அனைத்துமே இவர்களிடம் உள்ளது, என்றார் ரஜினிகாந்த்.

சென்னை மருத்துவ தலைநகரமாக உயர்ந்துவது நமக்கெல்லாம் பெருமை எனக்கூறிய ரஜினிகாந்த் தனது உரையை நிறைவு செய்யும் போது, “இங்க பேச வேண்டாம்னு நினைச்சேன். மீடியா ஆட்கள் வருவாங்க. பேசுங்கன்னு சொன்னாங்க. இங்க இத்தனை கேமராவை பார்த்ததும் எனக்கு பயம் வந்துடுச்சு. தேர்தல் சமயம் வேற. மூச்சு விடக்கூடவே பயமாக இருக்கு...” என ரஜினிகாந்த் கலகலப்பாக பேசியது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.