Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

அஞ்சேல் 10 | நல்லதில் பங்காற்று! - நடிகர் விதார்த் [பகுதி 1]

தமிழின் கவனத்துக்குரிய நடிகர் விதார்த் பகிரும் அனுபவக் குறிப்புகள்.

அஞ்சேல் 10 | நல்லதில் பங்காற்று! - நடிகர் விதார்த் [பகுதி 1]

Wednesday January 03, 2018 , 5 min Read

(தமிழ்த் திரைத்துறையின் நம்பிக்கை நட்சத்திரங்கள் தாங்கள் எதிர்கொண்ட சவால்களையும், மேற்கொண்ட போராட்டங்களையும் பகிரும் தொடர்.)

சினிமாவும் சினிமா சார்ந்த பேச்சுகளும் நிறைந்த கிராமத்துச் சூழலில் பிறந்து வளர்ந்ததுதான் என்னைத் திரைப்படத் துறையில் ஈடுபடத் தூண்டியது.
பட உதவி: தினேஷ் பாபுராஜ்

பட உதவி: தினேஷ் பாபுராஜ்


நான் பிறந்த ஊர் களக்காடு - திருநெல்வேலி மாவட்டம். எங்கள் வீட்டு வாசலில் இருந்துப் பார்த்தால் காடும் அருவியும் தெரியும். எங்கள் பொழுதுபோக்கே காட்டுக்குள் சுற்றுவதுதான். புலிகள், சிங்கவால் குரங்குகள் என பலவும் அங்கே வலம் வரும். நான் வளர்ந்தது தேவக்கோட்டை. விடுமுறைக் காலத்தில்தான் களக்காடு வருவோம். காலையில் எழுந்து இரண்டு கிலோமீட்டருக்கு நடந்து ஆற்றங்கரைக்குச் செல்வோம். அங்கு குளித்துவிட்டு வீடு திரும்பும்போது கபகபவென வயிறு பசிக்கும். எங்கள் பாட்டி சுடச்சுட தோசைகளை பேரப்பிள்ளைகள் அனைவருக்கும் சுட்டுத் தருவார். பள்ளி விடுமுறை என்றாலே பத்து, பதினைந்து பசங்க ஒன்றுசேர்ந்து களக்காடு கிராமத்தையே அமர்க்களப்படுத்துவோம்.

எங்கள் மாமா எம்.ஜி.ஆரின் தீவிர விசிறி. அவரது விதவிதமான போட்டோக்களைப் பார்க்கவே வியப்பாக இருக்கும். தாத்தாவோ சென்னை வந்து ஏவிஎம் தயாரித்த 'ஓர் இரவு', 'பரசக்தி' ஆகிய படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்தவர். தன் குடும்பத்தின் நிலை கருதி ஊருக்குத் திரும்பியவர். அவருக்கு சினிமா மீது ஈடுபாடு அதிகம் என்பதால் நான் தியேட்டரில் படம் பார்க்க அவ்வப்போது நாலணா தருவார். பாக்கியலக்‌ஷ்மி, மீரா ஆகிய திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படும் படங்கள் ஒன்றைக் கூடத் தவறவிடாமல் பார்ப்பேன். வாரத்துக்கு இரண்டு படங்கள் வெளியாகும். காலையில் எழுந்து வேகமாக ஓடிச் சென்று என்ன படம் ரிலீஸ் ஆகியிருக்கிறது என சின்னச் சின்ன போஸ்டர்களைப் பார்ப்பதே குதூகலமான அனுபவம்.

அப்போது தெலுங்கு டப்பிங் படங்கள் மிகுதியாக வரும். குறிப்பாக, மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணா நடித்த ஆக்‌ஷன் படங்கள் பலவற்றைப் பார்த்திருக்கிறேன். தமிழில் ஆக்‌ஷன் ஹீரோ என்றால் அது விஜயகாந்த் என்பதால் அவரது ரசிகராகவே இருந்தேன். எங்கள் வீட்டில் எம்.ஜி.ஆர். - சிவாஜி ரசிகர்கள் அதிகம். தியேட்டரில் படம் பார்ப்பதைவிட வீட்டில் சினிமா குறித்து பேசுவதையும் விவாதிப்பதையும் ஆர்வத்துடன் கவனிப்பேன்.

என் தாத்தா என்னை வெவ்வேறு பெயர்களை வைத்து அழைப்பார். அசோக், குமார், செல்வம்... இப்படி பல பெயர்கள் வைத்து மாற்றி மாற்றி கூப்பிடுவார். எனக்குக் குழப்பமாகவே இருக்கும். பிறகுதான் தெரிந்தது, அவர் பார்த்த படங்களில் அவரை மிகவும் ஈர்த்த கதாபாத்திரங்களின் பெயர்களைச் சொல்லி என்னை அழைக்கிறார் என்று. சினிமா மீதான அவரது ஈடுபாடு வியப்புக்குரியது.

சினிமாவை ரசிக்கவைத்த களக்காடு கிராமமும், தாத்தா, மாமா முதலானோரின் தீவிர ஆர்வத்தைக் கண்டதும்தான் எனக்கும் திரைப்படங்கள் மீது தீராதக் காதலை உண்டாக்கின. அந்தக் காதல் ஒரு கட்டத்தில் வெறித்தனத்துக்கே கொண்டு சென்றது. 'தர்மத்தின் தலைவன்' படம் பார்த்துவிட்டு, என் வீட்டு உத்திரத்தில் கயிறு போட்டு ஏறி விழுந்து மண்டை உடைந்ததால் மூன்று நாள் சுயநினைவு இல்லாமல் போன சம்பவங்களும் நடத்திருக்கின்றன. 

மேலும், நண்பர்களும் அண்ணன்களும் செய்யத் தயங்கும் சாகசங்களை கைத்தட்டலுக்காக செய்வதைப் பெருமையாகக் கருதுவேன். அதனால் காயம்பட்ட தழும்புகள் இன்னமும் என் உடம்பில் உள்ளன. தியேட்டரில் ஜாக்கிசான் படம் பார்க்கும்போது என் அருகில் எவருமே உட்கார்ந்திருக்க மாட்டார்கள். என் கை, கால்களை வீசியபடியே படம் பார்ப்பேன்.

நான் சினிமாவுக்கு முயற்சி செய்ததற்கான காரணமே பள்ளிப் பருவத்தில் கடந்து வந்த இந்த அனுபவங்கள்தான் என்பது இப்போது அசைபோடும்போது தெளிவாகத் தெரிகிறது. ஆறாம் வகுப்பு வரை நன்றாகப் படித்தேன். அதன்பின் விளையாட்டில்தான் கவனம். மரக்குரங்கு போன்ற விளையாட்டுகள் மறக்க முடியாதவை. அந்தச் சூழலில், ஒருநாள் லாரி டிரைவர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் சென்று வந்த ஊர்களின் பெயர்களைக் கேட்டு வாய்ப் பிளந்தேன். 'ஓஹ்... டிரைவர் ஆகிவிட்டால் ஊரெல்லாம் சுற்றலாம்' என்று தெரிந்துகொண்டு, அதையே லட்சியமாகக்கி டிரைவிங் கற்றுக்கொண்டேன். அப்பாவும் வேன் ஒன்றை வாங்கித் தந்தார். 18 வயது ஆனதும் டிராவல்ஸ் தொழிலில் தீவிரம் காட்டினேன்.

அதன்பின் 1998-ல் கோவை வந்து இரண்டு ஆண்டுகள் இருந்தேன். அப்போது சினிமாவில் இயங்கி வந்த நண்பர் ஒருவர் மூலம் ஆர்வத்துடன் சினிமாவில் நடிக்க புறப்பட்டேன். 

சென்னையில் தனியாகத் திரிந்த ஆரம்ப காலம் மறக்க முடியாதது. தங்குவதற்கு எந்த வசதியும் இல்லை. கோடம்பாக்கம் பூங்காவில் ஒரு சின்ன கட்டிட அறை உள்ளது. இரவு 10.30 ஆனதும் அதன் மேல்தளத்தில் போய் படுத்துக்கொள்வேன். அங்கு ஆள் வருவதற்குள் அதிகாலை 4 மணிக்கே எழுந்து கிளம்பிவிடுவேன். லிபர்டியில் உள்ள காம்ப்ளெக்ஸ் பாத்ரூமில் குளிப்பேன். இப்படியே நான்கு மாதங்கள் நகர்ந்தன. 
பட உதவி: தினேஷ் பாபுராஜ்

பட உதவி: தினேஷ் பாபுராஜ்


பின்னர், வங்கி ஒன்றில் அட்டெண்டராக வேலை பார்த்தேன். ஒருநாளுக்கு ரூ.25 சம்பளம். அந்த வேலையும் ஒத்துவரவில்லை. அதன்பின் டிராவல்ஸ், பிரின்டிங் என பற்பல வேலைகளைச் செய்தேன். எதுவுமே மனநிறைவு தராததால் நடிப்பு ஒன்றில் மட்டும் கவனம் செலுத்த முடிவு செய்தேன்.

அந்தக் காலக்கட்டத்தில் கிடைத்த வாய்ப்பு மூலம் 'மின்னலே' படத்தின் மாதவன் நண்பர்களில் ஒருவராக நடித்தேன். சினிமாவுக்காக முறைப்படி நடிப்புக் கலையைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. 'கூத்துப் பட்டறை'யில் சேர்ந்தேன். சினிமாவை விட நாடகங்கள் பிடித்துப்போனது. லைவ் ஆக நடிப்பது, கைத்தட்டல்களை அள்ளுவது, உடனடி விமர்சனங்களை எதிர்கொள்வது என நாடகங்களிலேயே முழு ஈடுபாடு கொண்டேன். எட்டு ஆண்டுகளில் 1000-க்கும் மேற்பட்ட நாடகங்கள் நடித்தேன்.

ஒருமுறை என் நாடகத்தை இயக்குநர் பிரபு சாலமன் பார்த்தார். 'என் படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும்' என்று 'கொக்கி', 'லீ' மற்றும் 'லாடம்' ஆகிய மூன்று படங்களில் தொடர்ச்சியாக உறுதுணைக் கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு தந்தார். இதனிடையே இயக்குநர் பேரரசுவின் ஒரு படத்தில் நடித்தேன். சினிமாவில் நடிப்பது எனது அடிப்படைச் செலவுகளுக்கு வெகுவாக உதவியது. ஆனாலும், நாடகங்கள் மீதே அதிக ஈடுபாடு காட்டினேன். யுனெஸ்கோ மூலமாக உலக அளவிலான நாடகக் கலைஞர்களுடனான அனுபவப் பரிமாற்றம், தினம் தினம் புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ளும் சூழலால் நாடக உலகம் மிகவும் பிடித்திருந்தது.

நண்பரும் இயக்குநருமான கே.வி.நந்து ஒரு ஸ்கிரிப்ட்டை கொடுத்து 'நீங்கதான் ஹீரோ' என்றார். எனக்குக் கொஞ்சம் தயக்கம். ஆனாலும் 'சரி, முயற்சிப்போமே' என்று நடிக்க ஆரம்பித்தேன். இடையில் 'மைனா'வுக்காக ஹீரோவைத் தேடும் பணியில் இயக்குநர் பிரபு சாலமன் தீவிரமாக இருந்தார். அவருக்காக நானும் கூட ஹீரோவைத் தேடினேன். கடைசியில், நானே அந்தப் படத்தின் நாயகன் ஆகிவிட்டேன். ஒருநாள் அலுவலகம் அழைத்தார். சென்றேன். போட்டோ எடுக்கப்பட்டது. அடுத்த வாரத்திலேயே 'நீதான் ஹீரோ' என்று சொல்லிவிட்டார்.

'தொட்டுப்பார்' ரிலீஸ் ஆகி 20 நாட்கள் கழித்து 'மைனா' வெளியாகி மிகப் பெரிய ஹிட் ஆனது. நான் நினைத்துப் பார்க்காத ஹிட் அது. அதன்பின் நிறைய நிறுவனங்களிடம் இருந்து பட வாய்ப்புகள் குவிந்தன. ஏவிஎம் நிறுவனத்திடம் இருந்தும் ஒரு வாய்ப்பு வந்தது. தாத்தா நடித்த பட நிறுவனம் என்பதால் சென்டிமென்டுடன், ஏவிஎம்-மின் 175-வது படம் என்பதால் 'முதல் இடம்' படத்தில் நடித்தேன்.

'மைனா'வுக்குப் பின் நடித்த படங்கள் குறிப்பிடத்தக்க கவனம் பெறவில்லை. நான் தேர்ந்தெடுத்த கதைகள் சரியில்லை என்று என்னைச் சுற்றியுள்ளவர்கள் விமர்சித்தார்கள். ஆனால், ஒரு படத்தின் தோல்விக்கு குறிப்பிட்ட எந்தத் தரப்பையும் குறை சொல்லக் கூடாது. இது ஒரு கூட்டுப் படைப்பு. ஏதோ சில கவனக் குறைவுகள்தான் படம் சரியாக அமையாமல் போவதற்குக் காரணம் என்று நம்புகிறேன்.

சினிமாவில் ஏற்பட்ட தொய்வு என்னை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. ஏனெனில், நான் 'ஹீரோ'வாக வலம்வர வேண்டும் என்பதை விரும்பவில்லை. மாறாக, 'நடிகர்' என்ற அடையாளத்தை அழுத்தமாகப் பதிவு செய்யவே விரும்பினேன். அதற்காக, என்னை ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கும் எந்தக் கதாபாத்திரத்திலும் நடிக்கத் தயாராக இருக்கிறேன். முதன்மை மட்டுமின்றி, உறுதுணைக் கதாபாத்திரங்களிலும் நடிப்பதில் தயக்கமே இல்லை.

'மைனா' படத்தைப் பார்த்த ரஜினி சார், 'என்ன படங்க... பிரதமா இருக்கு. இதுல ஒரு சின்ன கேரக்டராவது எனக்குக் கொடுத்திருக்கலாமே. ஹீரோவோட அப்பாவா கூட நடிச்சிருப்பேன். கேட்டிருக்கலாமே...' என்றார். அவர் அப்படிச் செய்வாரா? செய்யமாட்டாரா? என்பதை எல்லாம் அலசி ஆராய வேண்டாம். ஒரு நல்ல படைப்பில் தனது பங்களிப்பு ஏதோ விதத்தில் இருக்க வேண்டும் என்று விரும்புவதுதான் உண்மையான நடிப்புக் கலைஞனின் மனம்.

இந்த மனப்போக்கு எனக்கு இயல்பிலேயே உள்ளது. எனவேதான் சின்னக் கதாபாத்திரம் என்றாலும் ஒரு நல்ல படைப்பில் பங்காற்றுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். மேலும், 'இவன் இந்த மாதிரி கதாபாத்திரங்கள் மட்டும்தான் நடிப்பான்; இப்படித்தான் நடிப்பான்' என்ற பேச்சுக்கே இடம்தரக் கூடாது. எந்தக் கதாபாத்திரத்துக்கும் என்னைப் பொருத்திக்கொள்ள வேண்டும் என்பதே ஒரு நடிகருக்கு சவால். அந்தச் சவாலை நோக்கி நகரவே விரும்புகிறேன்.

'குற்றமே தண்டனை', 'ஒரு கிடாயின் கருணை மனு', 'குரங்கு பொம்மை' என ப்யூர் சினிமாவை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தேன். இந்த அனுபவத்தையொட்டி உங்களிடம் சில விஷயங்களை அடுத்த பகுதியில் சற்றே விரிவாக பகிர்கிறேன்.

விதார்த் (41) - 'மைனா' மூலம் கவனம் ஈர்த்த நடிகர். முதன்மைக் கதாபாத்திரமோ அல்லது உறுதுணைக் கதாபாத்திரமோ எதுவாக இருந்தாலும், இவர் நடித்த படங்களைப் பட்டியலிட்டால் அதில் விதார்த் காட்டிய வித்தியாசங்கள் புலப்படும். அசல் சினிமா நோக்கிய தமிழ்த் திரைப்படத் துறையின் சமீபத்திய நகர்வுக்கு இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. 'குற்றமே தண்டனை', 'ஒரு கிடாயின் கருணை மனு', 'குரங்கு பொம்மை', 'விழித்திரு' என இவரது தெரிவுகளும், அதில் வெளிப்படுத்திய நடிப்பாற்றலும் இவர் மீதான நம்பிக்கையைக் கூட்டியிருக்கிறது. இந்தியில் இர்ஃபான் கான், நவாஸுதீன் சித்திக் போல் தமிழில் தேட முற்பட்டால் கண்ணில் படுபவர்களில் முக்கியமானவர் நடிகர் விதார்த்.

'அஞ்சேல்' தொடரும்...

முந்தைய அத்தியாயம்: அஞ்சேல் 9 | அர்ப்பணிப்பு அவசியம்! - 'அருவி' இயக்குநர் அருண் பிரபு [பகுதி 2]