Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

தாயின் பாலியல் தொழிலில் பெருமிதம் கண்ட மகளின் புதியபாதை!

தாயின் பாலியல் தொழிலில் பெருமிதம் கண்ட மகளின் புதியபாதை!

Tuesday February 16, 2016 , 5 min Read

என் சிறுவயதில் அம்மா தன்னைப் பற்றி என்னிடம் முழுமையாகச் சொல்வார். பார்களுக்கு நடனமாடச் செல்வதும், வாடிக்கையாளர்களை வீட்டுக்கே அழைத்து வருவதுமாக இருப்பதால், அவரது தொழிலை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. நான் வாழ்ந்ததும் அந்த மாதிரியான பகுதியில்தான் (காமாதிபுரா - மும்பை சிவப்பு விளக்குப் பகுதி) என்பதால் என்ன நடக்கிறது என்பதை படிப்படியாக புரிந்துகொள்ள முடிந்தது.

பாலியல் தொழிலாளியின் 21 வயது மகள் ஷீத்தல் ஜெயின். சிறுமியாக இருந்தபோது சொந்த சித்தப்பாவால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அவல அனுபவமும் உண்டு.

ஆனால், இந்தச் சூழல்களை எப்படி அவர் வென்றார் என்பது இங்கே சொல்லக்கூடிய நிஜக்கதை அல்ல. இது, தன் அம்மாவையும், அவர் தொழிலையும் மதிக்கத் தொடங்கியது பற்றியும், தனக்கு மிகவும் பிடித்த டிரம்மிங் மூலம் இசையில் மேல்படிப்புக்காக வெளிநாடு வரை சென்றது பற்றியதுமே இந்தக் கதை.

image


கரடுமுரடான ஆரம்பம்

ஷீத்தல் சிறுமியாக இருந்தபோது தன்னிடம் அக்கம் பக்கத்தினர், "தேறி மம்மி கந்தா காம் கர்த்தி ஹே..." (உங்க அம்மா கெட்ட தொழில் பண்றாங்க) என்று சொல்லிவந்ததும் அவருக்கு நினைவிருக்கிறது. இதுதான் அம்மாவுக்கும் மகளுக்கும் சண்டை சச்சரவு வருவதற்கு முக்கியக் காரணம். தன் மகளுக்கு நல்ல வாழ்க்கை கிடைப்பதற்காக, விடுதிகளையும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் நாடினார் ஷீத்தலின் அம்மா. அவ்வப்போது விடுதிகளையும் என்.ஜி.ஓ.க்களையும் மாற்றி வந்ததும் ஷீத்தலுக்கு கவலையையும் கோபத்தையும் வெகுவாக அதிகரிக்கச் செய்தது. அவர் அடிக்கடி இப்படிக் கேட்டுக்கொள்வார்... "எனக்கு மட்டும் ஏன் இதெல்லாம் நடக்குது?"

"என்னிடம் நிறைய கேள்விகள் இருந்தன. எனக்கு ஏன் இயல்பான ஒரு வாழ்க்கை கிடைக்கவில்லை? மற்ற சிறுவர்களைப் போல எனக்குப் பிடித்த மாதிரி என்னால் படிக்க முடியாதது ஏன்?" என்று கேள்விகளை அடுக்குவார் ஷீத்தல். கற்றலில் ஆர்வம் உள்ள அவருக்கு அவ்வப்போது பள்ளிகளையும் என்.ஜி.ஓ.க்களையும் மாற்றியது படிப்பை மிகவும் பாதித்தது. ஒரு பள்ளியில் ஆறாம் வகுப்பு, இன்னொரு பள்ளியில் ஏழாம் வகுப்பு, பிறகு வேறொரு பள்ளியில் மீண்டும் நான்காம் வகுப்பு, அதன் பின் இன்னொரு பள்ளியில் பத்தாம் வகுப்பு என ஷீத்தலின் அடிப்படைக் கல்வியே அலைக்கழிக்கப்பட்டது. அத்துடன், உலகத்தில் தன்னால் எதையும் சாதிக்க முடியாது என்ற விரக்தியையும் அந்த அனுபவம் ஊட்டிவிட்டுச் சென்றது.

அங்கே இன்னொரு பிரச்சினையையும் சந்தித்தார். அரவணைத்த அமைப்புகளும், விடுதிகளும் தன்னைப் பற்றியும், தன் அம்மாவைப் பற்றியும் ஒரு வார்த்தை கூட வெளிப்படையாக பேசியது இல்லை. மாறாக, "என் அடையாளத்தையும், என் அம்மாவின் அடையாளத்தையும் வெளிக்காட்ட வேண்டாம் என்று என்னிடம் அடிக்கடி சொன்னார்கள். யார் மீதும் நம்பிக்கையும் இல்லாமல் போனது."

கிராந்தி - கனவுகளுக்கு கிடைத்த சிறகுகள்

மும்பையில் சிவப்பு விளக்குப் பகுதியில் பாலியல் தொழிலாளிகளின் மகள்களுக்காக இயங்கும் 'கிராந்தி' என்று தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு ஷீத்தல் வந்து சேர்ந்த பிறகு அதிர்ஷ்டக் காற்று வீசத் தொடங்கியது. கிராந்தியில் பேசவும் தங்களை வெளிப்படுத்தவும் சரியான வாய்ப்பு கிடைக்கும். அன்பும் அரவணைப்பும் கிடைப்பதுடன் பிடித்ததைச் சாதிக்கக் கூடிய சூழல் கிட்டும்.

image


"ஒரு என்.ஜி.ஓ.வில் இருந்த பிறகு அம்மாவுடனே தங்குவதற்கு சென்றேன். ஆனால், அங்கு என்னால் சரியாக படிக்கவோ, எந்த முன்னேற்றத்தைக் காணவும் முடியாத சூழ்நிலை. என் நண்பர்கள் கவிதாவும், லக்‌ஷ்மியும்தான் கிராந்தி பற்றி கூறினர். அந்த இடத்தின் தன்மையை எடுத்துச் சொன்னார்கள். என் அம்மாவின் ஒப்புதலுடன் அந்த இடத்துக்குச் சென்றேன்."

கிராந்தியில் பாலியல் கல்வி, பாலியல் தொழிலாளிகள் குறித்து வெளிப்படையாகச் சொல்லித் தருவார்கள். தங்களது சொந்தக் கதைகளைப் பகிரவும் வாய்ப்பு வழங்கப்படும். இதுவரை தங்கிய இடங்களுக்கும் இந்த இடத்துக்கும் உள்ள வேறுபாட்டை உணர முடிந்தது. முதல் முறையாக தன்னைப் பற்றியும், தன் அம்மாவைப் பற்றியும் பேச முடிந்தது. "என் அம்மாவின் போராட்டங்களை முழுமையாக உணர்ந்தேன். எனக்கு ஒரு நல்ல வாழ்க்கைக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே அவர் எல்லாவற்றையும் செய்தார் என்பதை நினைத்து அவரை மதிக்க ஆரம்பித்தேன்."

2015-ல் ஷீத்தல் ஆற்றிய உரை ஒன்றில், "என் அம்மாவும் வேலைதான் செய்கிறார். அவருடைய பணி மட்டும் ஏன் மதிக்கப்படுவது இல்லை?" என்று கேள்வி எழுப்புகிறார்.

ஷீத்தல் மனம் திறந்து தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது குறித்து கிராந்தியின் இணை நிறுவனர் ராபினிடம் தான் பகிர்ந்தார். "அப்போது என் அம்மாவிடம் நான் நெருக்கமாக இல்லை. ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் கூட அதை அவரிடம் எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. அந்தச் சம்பவங்கள் நினைவுக்கு வரும்போதெல்லாம், ஒரு கெட்ட கனவாக நினைத்து மறக்க முயற்சி செய்வேன்." தன் அம்மாவுக்கு நெருக்கமானவரால் தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறோம் என்பதைப் புரிந்துகொண்ட பிறகே கிராந்திக்கு வந்தார் ஷீத்தல். "ராபின் அக்காவிடம்தான் அதைப் பற்றி முழுமையாகச் சொன்னேன். எனக்கு நம்பிக்கை ஏற்படுத்திய முதல் நபர் அவர்தான். தன் மகளைப் போல் என்னை கவனித்துக்கொண்டார்" என்று உருக்கமாக சொன்னார் ஷீத்தல். பின்னர், தன் அம்மாவிடமும் பாசமுடன் பழகத் தொடங்கிய ஷீத்தல், தனக்கு நேர்ந்த அனைத்தையும் அவரிடமும் சொன்னார்.

முந்தைய என்.ஜி.ஓ.க்கள் போல் அல்லாமல் தங்களுக்கு கிடைத்த சுதந்திரம் பற்றி விவரித்த ஷீத்தல், "கிராந்தியில் பல்வேறு பயிற்சி வகுப்புகள், பயிலரங்குகள் முறைப்படி நடைபெற்றன. விடுமுறை நாட்களில் ஜாலியாக வீட்டுக்குச் சென்று வரவும் அனுமதிக்கப்பட்டது" என்றார்.

புதியபாதை நோக்கி...

ஷீத்தலுக்கு இசை மீது எப்போதும் தீராதக் காதல். அதுவும், மும்பையில் கணேஷ் பூஜை சமயங்களில் டிரம்ஸை ரசிப்பது கொள்ளை பிரியம். கிராந்தியில் ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த ஒன்றை தேர்ந்தெடுத்து பயிற்சி செய்வது கட்டாயம். இது, அவர்களது காயத்துக்கு மருந்தாகவும் கருதப்படுகிறது. எதுவாக இருந்தாலும் முறைப்படி மூன்று மாதங்களுக்கு ஆசிரியர்கள் மூலம் சொல்லித் தரப்படும். "ராபின் அக்காவிடம் பேசிய பிறகு, இசையையும் டிரம்ஸையும் தேர்ந்தெடுப்பது என முடிவு செய்தேன். அப்போது நடந்த உரையாடல், இசை மூலமே என் கேரியர் முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள் இருப்பதையும் அறிந்தேன்." ராஜஸ்தானில் உள்ள இசைப் பள்ளியில் மூன்று மாதம் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால், ஷீத்தலை அடுத்தகட்டத்துக்கு எப்படி நகர்த்துவது என்பது அந்த இசைப் பள்ளிக்குத் தெரியவில்லை.

image


கிராந்திக்குத் திரும்பிய ஷீத்தல், இணை நிறுவனர்கள் ராபின் மற்றும் பானி ஆகியோரிடம் தனது பாதைக்கு சரியான வழிவகுக்குமாறு கேட்டார்.

2015-ல் முழு ஸ்காலர்ஷிப்புடன் இசைப் படிப்பு பெறும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், விசா வரவில்லை. கிராந்தி நிறுவனர்கள் இருவரும் வாஷிங்டன் டிசியில் உள்ள லெவின் ஸ்கூல் ஆஃப் மியூசிக்கில் விண்ணப்பித்தனர். பாதி ஸ்காலர்ஷிப்புடன் ஷீத்தலை சேர்ந்துக் கொண்டது அந்த இசைக் கல்லூரி. "ஒவ்வொரு பயிற்சி வகுப்புகள் மட்டுமின்றி, பேண்ட் மூலமும் பயிற்சி கிடைத்தது. அமெரிக்காவில் தங்கியிருந்த 10 மாதங்களில் வெவ்வேறு இடங்களில் நடந்த மூன்று பேண்ட் நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன். வெளிநாட்டுக்குச் சென்றது ரொம்ப பயமாக இருந்தாலும் பெருமிதமாக இருந்தது" என்று குதூகலித்தார் ஷீத்தல்.

தற்போது, புனேவைச் சேர்ந்த இசை நிறுவனம் ஒன்றில் இன்டர்ன் ஆக இருக்கிறார். அங்கு மற்ற இசைக் கருவிகளையும் வாசிக்கக் கற்றுக்கொள்கிறார். ஆனால், டிரம்ஸ் வாசிப்பதுதான் அவருக்கு இன்னமும் பிடித்தமானது.

நீங்கள் அறிந்த வாழ்க்கைத் தத்துவம், இலக்கு குறித்து கேட்டதற்கு, "நேர்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், நான் எங்கு சென்று சேர்வேன் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், நான் முயற்சிகளை மேற்கொள்ளும்போதெல்லாம் வீழ்ச்சியையும் எதிர்கொள்கிறேன். கடலுக்குள் குதித்த பிறகே அலைகளில் நீந்தத் தொடங்க வேண்டும் என்று கருதுபவள் நான்."

சற்றே இளைப்பாறி மீண்டும் ஷீத்தல் உதிர்த்த முத்துகள் இவை...

நான் சாதிக்கும் தருணங்களில், எனக்குத் தேவையானபோது உறுதுணையாக இருந்தவர்களை நினைவில் கொள்வேன். ராபின் அக்காவும் பானி அக்காவும் கிராந்தியில் என்னை முற்றிலும் மாற்றிக்கொள்ள உதவினர். அதுதான் இந்த இடத்துக்கு என்னை கொண்டு சேர்த்திருக்கிறது. மக்களின் மனநிலையை மாற்ற விரும்புகிறேன். எங்கள் பின்னணியைப் பற்றிய முழுமையான புரிதலை ஏற்படுத்த விரும்புகிறேன். எங்களாலும் நட்சத்திரங்களை குறிவைத்து எட்ட முடியும் என்பதை உணர்த்த விரும்புகிறேன். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை: எங்கள் குரலைக் கேளுங்கள்; எங்களுடன் பேசுங்கள்; எங்களுக்கு உறுதுணையாக இருங்கள்.

தன் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து காமாதிபுராவில் தங்களைப் போன்ற பெண்களுக்காக ஒரு நூலகம் அமைக்க வேண்டும் என்பதுதான் ஷீத்தலின் கனவு. "நாங்கள் சிறுமிகளாக இருந்தபோது எங்களுக்கு வெளியே என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்பதே தெரியாது. அந்த வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்க விரும்புகிறேன். அவர்கள் மனம் போல் வாழ உறுதுணையாக இருக்க வேண்டும். அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்க வேண்டும்" என்று தெளிவாகச் சொல்கிறார் ஷீத்தல்.

ஆக்கம்: ஸ்னிக்தா சின்ஹா | தமிழில்: கீட்சவன்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்



இது போன்ற ஊக்கமளிக்கக்கூடிய பெண்களின் கதை:

உறவினரால் பலாத்காரம்; பிங்கி ஷேக் தடைகளைத் தகர்த்து தோள் நிமிர்ந்து நிற்கிறார்

கொல்கத்தா சிவப்பு விளக்குப் பகுதி பெண்களின் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை எழுதும் மகுவா!