விளையாட்டாக சொன்ன வார்த்தை, வர்த்தகமாக மாறிய ‘தண்டசோறு’
பொறியியல் பட்டதாரி நவீன் குமார், கோவையில் தொடங்கிய ’ஹோட்டல் தண்டச்சோறு’-ல் குவியும் கல்லூரி மாணவர்கள்...
கோவையில் எஸ்.என்.எஸ் கல்லூரி இருக்கும் பகுதியை கடந்து சென்றிருப்பவர்கள் எல்லாருமே ‘ஹோட்டல் தண்டச்சோறு’ எனும் பதாகையை பார்க்காமல் இருக்க மாட்டார்கள். நிச்சயமாக இந்த பெயரை பற்றி நண்பர்களிடம் பேசவும் செய்திருப்பார்கள். இந்த ஹோட்டலை நிறுவிய நவீன் குமாரிடம் அவரை பற்றியும் அவருடைய ஹோட்டல் பற்றியும் பேச வாய்ப்பு கிடைத்தது.
கோவையில் பிறந்து வளர்ந்தவர் நவீன். பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, பொறியியல் படிப்பு. பெரும்பாலான இளைஞர்களை போலவே பொறியியல் தேர்ந்தெடுத்திருந்தாலும், அதன் மீது வன்மம் ஒன்றும் இல்லை அவருக்கு. ஆனால்,பொறியியல் படித்து, ஒரு ஸ்டார்ட்-அப்பில் அனுபவத்திற்காக வேலை செய்தாலும், ஒரு ஹோட்டல் தொடங்கி நடத்த வேண்டும் என்பது நவீனின் நீண்ட கால கனவாக இருந்தது. அதற்கு முழு முதற்காரணம், ஹோட்டல் நடத்தி வந்த அவருடைய சித்தி.
ஹோட்டல் தொடங்குவதற்கு சொந்தமாக நிலம் இருந்ததால், தன்னுடைய சேமிப்பை வைத்து, பிற செலவுகளை செய்திருக்கிறார். ஒரு வருடம் வேலை செய்து சேமித்தது மட்டுமில்லாமல், கூடவே நாட்டு நாய்களை பெருக்கம் செய்து அதன் மூலமாகவும் சம்பாதித்திருக்கிறார் நவீன். ராஜபாளையம் மற்றும் சிப்பிப்பாறை நாய்களை ப்ரீட் செய்வதை தன்னுடைய பேஷனாகவே கருதுகிறார் அவர்.
“முன்னாடி ஜெர்மன் ஷெப்பர்டு தான் ப்ரீட் பண்ணி வித்துட்டு இருந்தேன். 2016 மெரினா போராட்டத்திற்கு பிறகு தான் நாட்டு நாய்களை வளர்க்க தொடங்கினேன்,” என்று அது குறித்து சொல்கிறார்.
சேமிப்பில் இருந்து ஹோட்டல் தொடங்குவதில் என்ன பெரிய சிக்கல் இருந்துவிட போகிறது? இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைப்பது தவறு தான். முன் அனுபவம் இல்லாத ஒரு வேலையை செய்யத் தொடங்கும் போது, தன்னம்பிக்கை தவிர வேறு யாரும் துணையிருப்பதில்லை என்பது கடந்த ஒரு வருடத்தில் நவீனுக்கு புரிந்திருக்கிறது.
தன்னுடைய நண்பனின் துணையோடு கடந்த அக்டோபர் மாதத்தில் ’தண்டச்சோறு’ ஹோட்டல் தொடங்கியிருக்கிறார். ஆனால், விவசாயக் குடும்பத்தை சேர்ந்த அந்த நண்பர், விவசாயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதால் ஒருக்கட்டத்தில் ஹோட்டலில் இருந்து விலகியிருக்கிறார். அதுவரை இரண்டு பேர் சேர்ந்து செய்த வேலைகளை எல்லாம் நவீன் ஒரே ஆளாக சமாளிக்க வேண்டியதானது. இருந்தாலும், அவர் சோர்ந்துவிடவில்லை.
தற்போது ஹோட்டலில் நான்கு ஊழியர்கள் இருக்கிறார்கள். அதில் சமைப்பதற்கு ஒருவர். சமையல் வேலைகள் அத்தனையையும் செய்யும் செல்வி, ஏறத்தாழ ஆயிரம் பேருக்கு கூட சமைக்கும் திறமை இருப்பவர் என்று சொல்கிறார் நவீன்.
‘சரி நவீன், ஹோட்டல்ல நீங்க என்ன வேலை செய்வீங்க?’ என்று கேட்டால், சிரித்துக் கொண்டே ‘ நான் எல்லா வேலையையும் செய்வேன்,’ என்கிறார்.
’தண்டச்சோறு’ என்று பெயரிட்டதற்குக் காரணம் கேட்ட போது,
‘அது என் அப்பா அடிக்கடி சொல்ற வார்த்தை. அதை மீன் பண்ணி சொல்ல மாட்டாரு.. வெளையாட்டா சொல்வாரு. அது ஒரு காரணம். ரெண்டாவது, எனக்கு நெகடிவ் மார்க்கெடிங் மேல ரொம்ப நம்பிக்கை இருந்துச்சு. இப்போ தண்டச்சோறுனு ஒரு பேரை பார்க்குறவங்க, என் ஹோட்டலுக்குள்ள வராங்களோ இல்லையோ, கண்டிப்பா என் ஹோட்டல் பேரு அவங்களுக்கு மறக்காது,’ என்கிறார்.
கூடவே, கல்லூரி இளைஞர்களை இந்த பெயர் எளிதாக கவரும் என்பதும் இன்னொரு காரணம். சொல்லப் போனால், அருகில் இருக்கும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தான் தண்டச்சோறு ஹோட்டலின் முதன்மையான வாடிக்கையாளர்கள்.
‘லோவர் மிடில் க்ளாஸ், மிடில் க்ளாஸ் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற மாதிரி தான் என்னுடைய உணவின் விலையையும் நிர்ணயம் செய்கிறேன்’ என்கிறார் நவீன். ஐந்து ரூபாய்க்கு விற்கப்படும் ஹோட்டல் தண்டச்சோறின் ‘மினி பரோட்டா’ இங்கே மாணவர்கள் மத்தியில் பிரபலமாம்.
இதனால் தான் கல்லூரி விடுமுறை காலங்களில், சிறு தடுமாற்றத்தை சந்திக்கிறார் நவீன்.
“செமஸ்டர் எக்ஸாம் முடிஞ்சு லீவ் விட்டுட்டா, எனக்கு கஸ்டமர்ஸ் குறைவாங்க. ஆனா, அதுக்காக நான் ஹோட்டலை மூடிட முடியாது. மூடிட்டேனா எனக்கு வர்ற மற்ற கஸ்டமர்ஸ் போயிடுவாங்க. இதனால, நான் முன்னாடி சேமிச்சு வச்சதை யூஸ் பண்ணி மறுபடியும் மொதல்ல இருந்து தொடங்குற மாதிரி ஹோட்டலை நடத்தணும்,” என ஹோட்டல் வணிகத்தில் இருக்கும் சிக்கல்களை சொல்கிறார்.
இதை சமாளிக்க, தனியே ஆர்டர்கள் எடுத்து செய்து கொண்டும் இருக்கிறார் நவீன். இந்த அக்டோபர் மாதம் வந்தால், ஹோட்டல் தொடங்கப்பட்டு ஒரு வருடம் ஆகப் போகிறது. ஒரு வருட காலத்தில் தான் நிறைய அனுபவங்களை கற்றுத் தேர்ந்திருப்பதாக உணர்கிறார். வணிகம் தொடர்பான சந்தேகங்களை தன்னுடைய சித்தியிடம் கேட்டு தெரிந்து கொள்ளும் நவீன், பெரும்பாலான நேரங்களில் தனியாகவே வணிகத்தையும், வாழ்க்கையையும் எதிர்கொள்வதாக உணர்கிறார்.
சொந்தமான பிசினஸ் தொடங்க வேண்டும் என்று நினைக்கும் இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புவீர்கள் என்றால்,
“யார் வேணாலும் பிசினஸ் தொடங்க போறேன்னு சொல்லிடலாம், முடிவு பண்ணிடலாம். ஆனா, அதுக்கு முன்னாடி மனசளவுல தயார் ஆகணும். இது தான் என் ஃபீல்டுனு முடிவு பண்ணி, அதுல இருக்கணும். இன்னைக்கு முடிவு பண்ணி, நாளைக்கு தொடங்குற காரியம் இல்ல, இது. ஒரு பிசினஸ் தொடங்கின நல்ல பிரேக்-ஈவன் கெடைக்குறதுக்கே அஞ்சு வருஷம் ஆகும். இதை எல்லாம் ஏத்துக்க, புரிஞ்சுக்க தயார் ஆகணும்,” என்கிறார்.
தனிப்பட்ட முறையில் உங்களுக்கு யாராவது ரோல்மாடல்கள், இன்ஸ்பிரேஷன் இருக்கிறார்களா என்ற போது, “எனக்கு ஹிப்-ஹாப் தமிழா அவரை பிடிக்கும். நான் அவரை நிறைய தடவ புளியம்பட்டியில பார்த்திருக்கேன். எனக்கு அவரை நல்லா தெரியும், ஆனா, அவருக்கு என்னை தெரியாது. எனக்கு அவரோட வளர்ச்சி தான் ரொம்ப பெரிய எனர்ஜியா இருக்கும். மனசு கஷ்டமா இருந்தா கூட, அவர் பேசுற வீடியோ எல்லாம் போட்டு பார்ப்பேன். மத்தபடி யாரும் எனக்கு அப்படி ரோல்மாடல் எல்லாம் கெடையாது,”என்றார்.
பேசி முடித்தும், ஹிப்-ஹாப் தமிழா நவீனோடு கை குலுக்கி, அவரோடு ஒரே மேஜையில் உணவருந்தும் காட்சி ஒன்று கண்ணில் தோன்றியது. அது நிச்சயம் சாத்தியம் என்பது நம் எல்லாருக்குமே தெரியும்.