துபாய் வேலையை விட்டு மதுரையில் AI ஸ்டார்ட் அப் - ஆண்டிற்கு ரூ.6 கோடி டர்ன் ஓவர் செய்யும்'Ask Eva' முகமது இஷான்!
குடும்பச் சூழலால் துபாய் வேலையை விட்டு விட்டு மதுரை வந்த முகமது இஷான், ASK EVA என்ற ஏஐ சார்ந்த நிறுவனத்தை ஆரம்பித்து, மூன்றே வருடங்களில் வருடத்திற்கு ரூ.6 கோடிக்கு மேல் டர்ன் ஓவர் செய்யும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார்.
எதிர்காலம் இனி AI ஐ நம்பித்தான் இருக்கப் போகிறது என்பதைக் கணித்து, மற்றவர்கள் இப்படிக்கூட ஒரு தொழில் செய்ய முடியுமா என யோசித்துக்கூட பார்த்திராத நாட்களில், தனது நம்பிக்கையை மட்டுமே பெரிய மூலதனமாகக் கொண்டு, வெறும் 16,000 ரூபாய் முதலீட்டில், பத்துக்கு பத்து அளவிலுள்ள சிறிய அறையில் முகமது இஷான் என்ற மதுரைக்காரர் ஆரம்பித்ததுதான் 'ஆஸ்க் ஈவா' (Askeva.io).
கடந்த 2021ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், மூன்றே ஆண்டுகளில் எதிர்பார்த்ததைவிட அதிக வளர்ச்சியைக் கண்டு, தற்போது ஆண்டிற்கு ரூ.6 கோடிக்கு மேல் டர்ன் ஓவர் செய்யும் நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.
“மதுரைதான் என் சொந்த ஊர். பிடெக் ஐடி படித்து முடித்ததும், துபாயில் மெசேஜிங் இண்டஸ்ட்ரீயில் வேலை பார்த்தேன். அப்போதிருந்தே, சாட்பாட் மூலம் ஆட்டோமேட்டிக்காக ஏஐ மூலம் பதில் அளிக்கும் முறையை ஒரு தொழிலாக செய்தால் எப்படி இருக்கும்,“ என யோசிக்கத் தொடங்கினேன், என்றார் இஷான்.
திடீரென 2019ம் ஆண்டு, குடும்பச் சூழல் காரணமாக இந்தியா வர வேண்டிய நிலை. இங்கு வந்ததும் கையில் இருந்த காசெல்லாம் காலியாகி விட்டது. மீண்டும் எந்தவொரு நிறுவனத்திலும் வேலைக்குச் சேரும் எண்ணமில்லை. எனவே, ட்யூன் பாத் டெக்னாலஜி (Tune path Technology) என்ற கம்பெனியை சொந்தமாக ஆரம்பித்தேன்.
ஆப்கள் உருவாக்கம், வெப்சைட் டெவலப்மெண்ட் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் போன்ற வேலைகளை எடுத்துச் செய்து வந்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, அதில் கிடைத்த வருமானத்தில் எனது கனவு ப்ராஜெக்ட்டான ஆஸ்க் ஈவாவை 2021ல் ஆரம்பித்தேன், என தனது கடந்த காலங்களை நினைவு கூர்கிறார் இஷான்.

Ask EVA நிறுவனர் முகமது இஷான்
நம்பிக்கை ஜெயித்தது!
இஷானின் குடும்பத்தில் அவர்தான் முதல் தலைமுறை தொழில்முனைவோர் என்பதால், ஆரம்பத்தில் அவர் மதுரையில் வேலைக்குச் செல்லாமல், புதிய தொழில் தொடங்கப் போகிறேன் என்ற முடிவெடுத்தபோது, பல எதிர்ப்புகளைச் சந்தித்திருக்கிறார். நிரந்தரமான வருமானம் தரும் ஒரு வேலைக்குச் செல்லாமல், அனுபவமில்லாத தொழிலைத் தொடங்கி அதில் அவர் நஷ்டமடைந்து விடக் கூடாதே என்ற அக்கறையில் பலர் அறிவுரைகளைக் கூறியுள்ளனர். ஆனால், அவை எதையும் தன் காதில் போட்டுக் கொள்ளவில்லை இஷான்.
“கொரோனாவுக்கு முன்பு, அதாவது, 2021ம் ஆண்டு ஏஐ டெக்னாலஜி கொண்டு நான் தொடங்கிய இந்த ஸ்டார்ப் அப் பற்றி யாருக்கும் புரியவில்லை. இப்படியெல்லாம்கூட தொழில் செய்ய முடியுமா என்ற ஆச்சர்யத்தைவிட, இதெல்லாம் ஒரு தொழிலா? இதில் எப்படி லாபம் சம்பாதிக்க முடியும் என்ற குழப்பம்தான் என்னைச் சுற்றி இருந்தவர்களிடம் இருந்தது. ஆனால், எனக்கு இந்த ஸ்டார்ட் அப்பில் முழு நம்பிக்கை இருந்தது. நிச்சயம் இதில் ஜெயித்துக் காட்ட முடியும் என நான் நம்பினேன்.“
அப்போது கையில் இருந்த 16,000 ரூபாயை வைத்து, பத்துக்கு பத்து என்ற அளவில் சிறிய அறையில் எனது ஸ்டார்ட் அப்பை நான் ஆரம்பித்தேன். எனது குடும்பத்தில் முதல் தலைமுறை தொழில்முனைவோர் என்பதால், உரிய வழிகாட்டலும் எனக்குக் கிடைக்கவில்லை. சிங்கிள் மேன் ஷோவாக எல்லா வேலைகளையும் நானே பார்த்தேன். ஆறு மாதத்திற்குப் பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமாக எனது டீமை பெரிதாக்கினேன். ஆனால், அப்போதுதான் சரியாக கொரோனா ஊரடங்கு வந்ததால், நிறைய சவால்களையும், சிரமங்களையும் எதிர்கொள்ள வேண்டியதாகி விட்டது.
”ஸ்டார்ட் அப் ஆரம்பித்த புதிதில், அதில் கிடைக்கும் வருமானத்தை எல்லாம் மீண்டும் தொழிலிலேயே போட வேண்டி இருந்தது. எனவே, லாபம் என தனியாக எதுவும் எடுக்க முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக டீமிற்கு பயிற்சி கொடுத்து, அவர்களை இந்தத் தொழிலுக்கு பழக்குவதற்கே எனக்கு நிறைய நாட்கள் தேவைப்பட்டது. அடிபட்டு, அடிபட்டுத்தான் அதில் இருந்து அனுபவங்களைக் கற்றுக் கொண்டேன்,” எனக் கூறுகிறார் இஷான்.

ஆண்டுக்கு ரூ. 6 கோடி டர்ன் ஓவர்
சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆஸ்க் ஈவா, தற்போது இரண்டு இடங்களில் மிகப்பெரிய அலுவலகங்களுடன் நல்ல வரவேற்பையும், வளர்ச்சியையும் பெற்றிருக்கிறது. 55க்கும் மேற்பட்டோர் இங்கு வேலை பார்த்து வருகின்றனர். மிகப்பெரிய கம்பெனிகள் உட்பட சுமார் 1500க்கும் மேற்பட்டவர்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர். ஆண்டிற்கு 6 கோடிகளுக்கும் மேல் டர்ன் ஓவர் செய்து வருகின்றனர். உலகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆஸ்க் ஈவாவிற்கு வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
“ASk Excutive virtual assistant என்பதன் சுருக்கம்தான், எங்களது Ask eva. அதாவது, எங்களது ஸ்டார்ட் அப் ஒரு விர்ச்சுவல் அசிஸ்டெண்ட். ஒரு கம்பெனியின் விர்ச்சுவல் அஸிஸ்டெண்ட்டாக எங்கள் தயாரிப்பு, சாட் பாட் முறையில் 24 மணி நேரமும் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்.“
வாட்ஸ் அப் ஏபிகே-க்கு மேலே தான் எங்களது பிளாட்பார்ம்மை நாங்கள் நிறுவியுள்ளோம். எங்களுடையது low code no code AI platform. வாடிக்கையாளரே உருவாக்கிக் கொள்ளும் அளவிற்கு எளிமையான வடிவில் சாட்பாட்-ஐ நாங்கள் உருவாக்கித் தருகிறோம்.
உதாரணத்திற்கு ஒரு மருத்துவமனைக்கு அப்பாயிண்ட்மெண்ட் வேண்டும் என்றால், அந்த மருத்துவமனையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அங்கிருக்கும் ஊழியரிடம் உங்கள் பிரச்சினைகளை எடுத்துக் கூறி, உரிய டாக்டரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்க வேண்டும்.
ஆனால், எங்கள் ஆஸ்க் ஈவா மூலம் வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளும் போது, இதே வேலைகளை தனியாக ஊழியர் இல்லாமல், அதுவே செய்து முடித்து விடும். அப்பாயிண்ட்மெண்ட் புக் பண்ணுவது, பேமெண்ட் செலுத்துவது, பர்சேஸ் பண்ணுவது என எல்லா வேலைகளையும் எங்கள் ஆஸ்க் ஈவா உங்களுக்காகச் செய்து கொடுத்து விடும்.
நாம் அவசரத்திற்கு தொடர்பு கொள்ளும் போது, நள்ளிரவில் அல்லது அங்கு சம்பந்தப்பட்ட ஊழியர் இல்லை என்றால் நாம் அசௌகரியங்களைச் சந்திக்க வேண்டியதாகி விடும். ஆனால், எங்கள் ஆஸ்க் ஈவாவில் அந்தக் கவலை இல்லை. 24 மணி நேரம் செயல்படும் என்பது இதன் கூடுதல் வசதி, என விரிவாக எடுத்துக் கூறுகிறார் இஷான்.

மதுரை டெவலப்பர்கள்
ஆஸ்க் ஈவா மாதிரியான தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட் அப்`கள், சென்னை, கோவை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் இருந்து செயல்படுவதைத்தான் விரும்புவார்கள். ஆனால், தனது ஸ்டார்ட் அப்பைப் போலவே, அவர்களது சிந்தனைகளில் இருந்தும் மாறுபட்டு, புதிய கோணத்தில் பேசுகிறார் இஷான்.
“மதுரை போன்றதொரு தென்மாவட்டத்தில் இருந்து இந்த ஸ்டார்ட் அப் ஆரம்பித்ததை என்னுடைய பிளஸ் ஆகத்தான் நான் பார்க்கிறேன். மதுரையில் செலவு மிகவும் குறைவாக இருந்தது எனக்கு ஆரம்பகாலத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் உதவியாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், சென்னை போன்ற பெரு நகரங்களில் மார்க்கெட்டிங் எக்ஸ்போசர் நிறைய கிடைக்கும். ஆனால் அதற்கு ஆகும் செலவும் பல மடங்காக இருந்திருக்கும்.“
அதோடு இது ஓரிடத்தில் இருந்து கொண்டு, உலகில் எந்த மூலையில் இருப்பவர்களையும் ஆன்லைனில் தொடர்பு கொள்ளக்கூடிய தொழில் என்பதால், நாங்கள் எங்கிருந்து வேலை பார்க்கிறோம் என்பது எங்களது வாடிக்கையாளர்களுக்கு ஒரு பிரச்சினையாக இருந்ததில்லை, என்கிறார் இஷான்.

எங்கள் இலக்கு
வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பையும், குறுகிய காலத்தில் அபரிமிதமான வளர்ச்சியையும் பெற்றுள்ள ஆஸ்க் ஈவா, அடுத்த பத்து ஆண்டிற்கு என ஒரு இலக்கை நிர்ணயித்து, அதை நோக்கி வெற்றிநடை போட்டு வருகிறது.
“பெரிய பெரிய ஜாம்பவான்கள் இந்த தொழிலில் உள்ளனர். நாங்கள் குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவையைக் கொடுப்பதால், எங்களது தயாரிப்பிற்கு நல்ல வரவேற்பு உள்ளது. அடுத்த பத்து ஆண்டுக்குள், உலகில் டாப் 10 கம்பெனிகளில் எங்களது ஆஸ்க் ஈவாவையும் கொண்டு வர வேண்டும். இதுதான் எங்களது இலக்கு,” என நம்பிக்கையுடன் முடிக்கிறார் இஷான்.