‘50 வயதில் அப்போலோ தொடங்கிய என்னை முட்டாள் என்றனர்’ - Dr.பிரதாப் சி ரெட்டி
இந்தியாவின் மருத்துவ சுகாதாரத் துறையில் புரட்சியை ஏற்படுத்தியவர் அப்போலோ மருத்துவமனைகள் நிறுவனர் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி.
தாராளமயமாக்கல் கொள்கை 1991ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு முந்தைய காலகட்டமான 1983ல் சிகப்பு நாடா முறை காரணமாக இந்திய பொருளாதாரம் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. 'லைசென்ஸ் பெர்மிட் ராஜ்’ அமலில் இருந்த சமயம் அது. அதன்படி நாட்டில் தொழில் புரியவேண்டுமானால் பல்வேறு உரிமங்களைப் பெறவேண்டியது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இது மிகவும் விரிவான செயல்முறைகளை உள்ளடக்கியது.
1983-ம் ஆண்டு சென்னையில் இந்தியாவின் முதல் கார்ப்பரேட் மருத்துவமனையான 'அப்போலோ மருத்துவமனை'களைத் திறந்தார் நிறுவனர் தலைவர் பிரதாப் சி ரெட்டி. இந்த விரிவான செயல்முறைகள் அவருக்குத் தடையாக இருக்கவில்லை. இந்த மருத்துவமனை சர்வதேச தரத்தில் மருத்துவப் பராமரிப்பு வழங்கியது.
மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மருத்துவக் கட்டணம் மிகவும் குறைவாகவே இருந்தது. அந்த சமயத்தில் டாக்டர் ரெட்டியின் முயற்சிக்கு ஆதரவளிக்காமல் பலர் தடுத்துள்ளனர். இதுபோன்ற முயற்சியில் ஈடுபடுவதற்காக முட்டாள் என்றும் அழைத்துள்ளனர். அந்த சமயத்தில் அவரது வயது 50.
“என்னுடைய விருப்பத்தை அறிந்த மக்கள் என்னை ‘முட்டாள்’ என்று அழைத்தார்கள். அதுவே என்னுடைய பலமாக மாறியது,” என்று டாக்டர் ரெட்டி யுவர்ஸ்டோரி நிறுவனர் மற்றும் சிஇஓ ஷ்ரத்தா ஷர்மா உடனான சமீபத்திய உரையாடலில் குறிப்பிட்டுள்ளார்.
அப்போலோ மருத்துவமனைகள் 150 படுக்கை வசதிகள் கொண்ட முதல் பல்நோக்கு மருத்துவமனையை கிரீம்ஸ் சாலையில் 1983ம் ஆண்டு திறந்தது. பின்னர் நாடு முழுவதும் 12,000 படுக்கை வசதிகள் கொண்ட 71 மருத்துவமனைகளாக விரிவடைந்தது.
அதுதவிர 3,400 மருந்தகங்கள், 90-க்கும் அதிகமான முதன்மை பராமரிப்பு கிளினிக்குகள், 150 நோய் கண்டறியும் மையங்கள் போன்றவையும் செயல்படுகின்றன. டாக்டர் ரெட்டி 80-களில் நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்தார். முதல் மருத்துவமனையைத் திறப்பதற்கான அனுமதிகள் பெற, பல முறை டெல்லி பயணித்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அவர் கூறும்போது,
“உரிய அனுமதிகளைப் பெறும் செயல்முறையில் டெல்லியில் அதிகாரவர்க்கத்தினர் பலரைத் தொடர்புகொள்ளவேண்டும். பிரதமரைக்கூட எளிதாக காலை நேரங்களில் சந்தித்துவிடலாம்,” என்றார்.
அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி டாக்டர் ரெட்டியை வீட்டிற்கு அழைப்பார். காபி அருந்தியவாறே இருவரும் உரையாடுவார்கள். சிலசமயம் காலை உணவிற்கும் அழைக்கப்படுவார். இதற்கு மாறாக சில அரசாங்க அலுவலர்களை சந்திப்பது மிகவும் கடினம் என்கிறார்.
“கீழ் பிரிவு அதிகாரிகள் சிலர் ‘நான் வேலையாக இருக்கிறேன், மூன்று நாட்கள் கழித்து வாருங்கள்’ என்று சொல்வதுண்டு. பல வேலைகளுக்காக இப்படிப்பட்ட பலரை நான் சந்திக்க வேண்டியிருந்தது,” என்றார் ரெட்டி.
இவ்வாறு அலைந்து திரிந்ததில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. “எனக்கு ரத்த அழுத்தமும் நீரிழிவும் ஏற்பட்டது. ஓய்வில் இருக்கும்போது ஈசிஜி நார்மலாக இருந்தது. எனவே உடல்நிலையில் கவனம் செலுத்தினேன்,” என்றார். அதற்கு பின் அவரது உடல்நிலை சீரானது.
“இந்த உடல் உபாதைகள் அனைத்தையும் சீராக்கினேன். இன்றளவும் என்னுடைய ஈசிஜி நார்மலாகவே உள்ளது,” என்று 87 வயதாகும் ரெட்டி புன்னகையுடன் கூறினார்.
சுற்றிலும் எதிர்மறையான சூழல் இருந்தபோதும் உடல்நிலையைத் தேற்றி பழைய நிலைக்குக் கொண்டு வரப் பின்பற்றிய விஷயங்கள் குறித்து டாக்டர் ரெட்டி பகிர்ந்துகொண்டார்.
“என் உணவைக் கட்டுப்படுத்தினேன். பழங்கள் என்னுடைய உணவில் இடம்பெற்றிருந்தன. எண்ணெய் சேர்க்காமல் சாப்பிட்டேன். மாலை நேரங்களில் சிறிதளவு ஸ்நாக்ஸ் எடுத்துக்கொண்டேன். இரவில் குறைவான உணவு எடுத்துக்கொண்டேன். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த முயற்சியின் பலனாக இன்னும் சில காலம் ஆரோக்கியமாக இருக்கமுடிந்தால் மேலும் மகிழ்ச்சியடைவேன்,” என்றார்.
“இது கடினமல்ல. நான் அதிகம் பிரார்த்தனைகள் செய்வேன். எனக்கு தியானம் செய்வதில் விருப்பமில்லை. பிரார்த்தனைகளே தியானம் போன்றதுதான். எனவே பிரார்த்தனைகளே என் மனதை அமைதியாக வைத்துள்ளது. இல்லையெனில் இந்த கோவிட்-19 காலகட்டத்தில் அமைதியிழந்து காணப்பட்டிருப்பேன்,” என்கிறார்.
அமெரிக்க கனவை துறந்தார்
டாக்டர் ரெட்டி சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முடித்த பிறகு 1960-களில் அமெரிக்கா சென்றார். மாசசூசெட்ஸ் வார்செஸ்டர் சிட்டி மருத்துவமனையில் சேர்ந்தார். உறைவிட மருத்துவராக இருந்து முதன்மை உறைவிட மருத்துவர் ஆனார்.
பின்னர் பாஸ்டனில் உள்ள மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் கார்டியாலஜி பிரிவில் ஃபெலோஷிப் கிடைத்தது. மிசோர் ஸ்டேட் செஸ்ட் ரிசர்ச் மருத்துவமனையில் பல்வேறு ஆராய்ச்சித் திட்டங்களில் பங்களித்தார். அமெரிக்காவில் பணிபுரியும் எதிர்பார்ப்புடனேயே அவரது பயிற்சி காலம் கடந்தது. ஆனால் பத்தாண்டுகள் அமெரிக்காவில் கழித்த நிலையில் அவரது அப்பா இந்தியா திரும்பவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
டாக்டர் ரெட்டி 70’களில் சென்னை திரும்பினார். புதிய மருத்துவமனை ஒன்றில் சேர்ந்தார். இந்தியா திரும்பியதும் நாட்டின் மருத்துவத் துறையின் உள்கட்டமைப்பு, டெலிவரி, குறைந்த கட்டணத்தில் மருத்துவச் சேவை வழங்குதல் உள்ளிட்ட அம்சங்களில் மிகப்பெரிய இடைவெளி இருப்பதை உணர்ந்தார்.
ஒருமுறை இளம் வயதுடைய நோயாளி ஒருவர் முறையான சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்த சம்பவம் அவரைப் பெரிதும் பாதித்தது. அந்த இளைஞரால் சிகிச்சைக்கு வெளிநாடுகளுக்குச் செல்ல முடியவில்லை. இந்தியாவில் அந்த வசதியும் இல்லை. இதுவே தனியார் துறையில் இந்தியாவின் முதல் பல்நோக்கு மருத்துவமனையை உருவாக்கும் திட்டத்திற்கு உந்துதலாக இருந்தது. இப்படி உருவானதுதான் அப்போலோ மருத்துவமனைகள்.
கடந்த முப்பதாண்டுகளில் இந்தியாவின் மருத்துவத் துறை மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்துள்ளது. இந்தப் புரட்சியில் அப்போலோ மருத்துவமனைகள் மற்றும் டாக்டர் ரெட்டியின் பங்கு மிகவும் முக்கியமானது.
“முப்பதாண்டுகளில் நாம் சிறப்பாக வளர்ச்சியடைந்துள்ளோம். அதற்கு ஒரே ஒரு காரணத்தை மட்டுமே நான் குறிப்பிடுவேன். இந்தியர்கள் புத்திசாலிகள்,” என்றார்.
இந்தியாவை உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக உருவாக்கவேண்டும் என்கிற பிரதமர் நரேந்திர மோடியின் இலக்கு விரைவில் எட்டப்படும் என்கிறார் டாக்டர் ரெட்டி.
“உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவாகும் என்கிறார் பிரதமர் மோடி. அதற்கு சில திட்டங்களை நாம் வகுக்கவேண்டும். சில வழிகாட்டுதல்களை நாம் பின்பற்றவேண்டும்,” என்றார்.
பத்தாண்டுகளில் இந்தியா மருத்துவத் துறையில் சாதனை படைக்கும் என்கிறார் பத்ம விபூஷன் விருது பெற்ற இந்த மருத்துவர். இந்திய மக்கள்தொகையில் இளம் சமூகத்தினரின் எண்ணிக்கை அதிகம் இருப்பதை சாதமாக அம்சமாகக் கருதுகிறார்.
இளைஞர்கள் மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் என உருவாக பயிற்சியளிக்கலாம். இதன் மூலம் உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வலுவான சுகாதார அமைப்பை உருவாக்கமுடியும் என்கிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: ராமர்கோ சென்குப்தா | தமிழில்: ஸ்ரீவித்யா