கேரளாவைச் சேர்ந்த 13 வயது இளம் செஸ் சாம்பியன்!
கேரளாவின் திருச்சூர் பகுதியைச் சேர்ந்த நிஹல் சரின் தனது ஆறு வயதில் செஸ் விளையாடத் துவங்கினார். இந்த விளையாட்டின் அடிப்படைகளை அவரது தாத்தா கற்றுக்கொடுத்தார். ஓராண்டிற்குப் பிறகு நிஹல் செஸ் விளையாட்டில் நிபுணத்துவம் பெற்று திருச்சூரில் நடந்த 25 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் வெற்றி பெற்றார்.
தற்போது 13 வயதான நிஹல் இந்தியாவில் இரண்டாவது இளம் சர்வதேச மாஸ்டர் (IM), உலகளவில் மூன்றாவது இளம் IM, உலகளவில் 14 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் சிறந்த வீரர், 18 வயதுக்குட்பட்டோரில் உலகளவில் இரண்டாம் இடம் என பல பட்டங்களை வென்றுள்ளார். அவருக்கு அளிக்கப்பட்ட பயிற்சி குறித்து அவரது முதல் பயிற்சியாளர் ஈபி நிர்மல் ’ஸ்க்ரால்’-க்கு தெரிவிக்கையில்,
நான் அவருக்கு மாறுபட்ட விதத்தில் பயிற்சியளிக்க விரும்பினேன். பெற்றோர்களிடம் சென்று குழந்தைகள் தாங்கள் கற்றுக்கொண்டதை விவரித்து காட்டவேண்டும் என்பதை கருத்தில் கொண்டு பயிற்சியளிக்க மாட்டேன். என்னுடைய பயிற்சிக்கு நிஹலின் பெற்றோர் முழுமையாக ஆதரவளித்தனர். அவர் வேடிக்கையாக கற்கவேண்டும் என அவர்கள் விரும்பினார்கள். அது உதவியது. அவர் அடிப்படை விஷயங்களை கற்றுக்கொண்டதும் இணையதளத்தில் விளையாட ஊக்குவித்தேன்.
நிஹல் செஸ் விளையாட துவங்குவதற்கு முன்பு ஒரு சில விளையாட்டுகளில் ஈடுபட முயற்சித்து அதில் வெற்றியடையவில்லை. செஸ் விளையாடத் துவங்கிய சிறிது நாட்களிலேயே அந்த விளையாட்டில் இயற்கையாகவே அவருக்கு ஒரு ஈடுபாடு இருந்தது தெரிய வந்தது. நிஹல் குழந்தையாக இருந்தபோதே கற்பதிலும் நினைவில் நிறுத்திக்கொள்வதிலும் ஆர்வம் காட்டினார். இது செஸ் மாஸ்டர்களுக்கு பொதுவாக இருக்கவேண்டிய ஒரு முக்கிய பண்பாகும். உதாரணத்திற்கு அவருக்கு மூன்று வயதிருக்கும்போதே 190 நாடுகளின் கொடிகளை நினைவில் நிறுத்தி சரியாக அடையாளம் காட்டுவார்.
நிஹல் முறையாக செஸ் பயிற்சி வகுப்புகளுக்கு செல்லத் துவங்கியதும் மற்ற குழந்தைகளைக் காட்டிலும் அதிக நேரம் வகுப்பில் செலவிடுவார். கடந்த நான்காண்டுகளில் ஆன்லைனில் சுமார் 11,000 செஸ் போட்டிகளில் பங்கேற்றுளார்.
தனது முந்தையை தவறிலிருந்து விரைவாக கற்றுக்கொள்வார் என்பதே நிஹலின் தனித்துவமாகும். 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற உலக இளம் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்ற இளம் போட்டியாளர்களில் நிஹல் ஒருவராவார். இந்திய அணி இரண்டாம் பரிசை வெல்ல உதவியதுடன் போட்டியில் தங்க பதக்கமும் வென்றார். தனது அனுபவம் குறித்து ’ஸ்போர்ட்ஸ்டார்’-க்கு தெரிவிக்கையில்,
"தனிநபர் பதக்கத்தை வென்றது மகிழ்சியாகவும் ஆச்சரியம் நிறைந்ததாகவும் இருந்தது. குழுவாக சாம்பியன்ஷிப் பெற்றது இதுவே முதல் முறை. இது ஒரு சிறப்பான அனுபவமாக அமைந்தது. சில பிரபல செஸ் வீரர்களை சந்தித்தேன். என்னுடைய குழுவின் வெற்றிக்கு பங்களிக்க முடிந்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.”
ஒவ்வொரு செஸ் வீரரும் க்ராண்ட்மாஸ்டர் பட்டத்தை வெல்ல மூன்று சர்வதேச மாஸ்டர் நார்ம்களை வென்றிருக்கவேண்டும். நிஹல் மூன்று நார்ம்களையும் வென்று க்ராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெற உள்ளார்.
கட்டுரை : THINK CHANGE INDIA