Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

ஒரு ஃபெமினாஸி கொண்டாட்டம்...!

ஒரு ஃபெமினாஸி கொண்டாட்டம்...!

Monday May 06, 2019 , 3 min Read

ஒரு மத்திய வயது பெண்ணை சில இளம் பெண்கள் சூழ்ந்து கொண்டு ‘மன்னிப்பு கேள், மன்னிப்பு கேள்’ என வற்புறுத்துவதில் தொடங்குகிறது அந்த வைரல் வீடியோ. வீடியோவிற்கான முன்னுரையில், ‘நீளம் குறைவான ட்ரெஸ் அணிந்திருந்த என்னைப் பார்த்து, இப்படி ட்ரெஸ் செய்வதால் கண்டிப்பாக பாலியல் வன்முறைக்கு நீ ஆளாக்கப்பட வேண்டும் என்றது மட்டுமில்லாமல், அங்கிருந்த சில ஆண்களிடம் சென்று என்னை ‘ரேப்’ செய்ய வேண்டும் என்றும் அந்த பெண் சொன்னார்’ என அந்த வீடியோவை பதிவிட்ட ஷிவானி குப்தா எழுதியிருக்கிறார்.

Image Courtesy : YouthKiAwaaz

வீடியோ பல மில்லியின் முறைகள் பார்க்கப்பட்டிருக்கிறது; பல முறை பகிரப்பட்டிருக்கிறது; வீடியோவை பார்த்த அத்தனை பேரும் அந்த இளம் பெண்களின் துணிச்சலை, தீர்க்கத்தை பாராட்டியிருக்கிறார்கள். #auntyJiApologise எனும் ஹாஷ்டாக் ட்ரெண்டானது. (இப்போது அந்த வீடியோ நீக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பல யூட்யூப் சேனல்களில் பதிவேற்றப்பட்டிருக்கிறது)

இதொரு சாதாரண நிகழ்வு அல்ல. சமூக வலைதளங்களில் தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கும் பெண் விடுதலைக்கான பிரச்சாரம் இந்த சம்பவத்திற்கு ஒரு உந்துதலாகவே இருந்திருக்கும். கூடவே, இந்த நிகழ்வு இத்தனைp பேரை சென்றடைய காரணமும் சமூக வலைதளம் தான் என்பதை கவனிக்க வேண்டும்.

வீடியோ பலமுறை பகிரப்பட்டதன் விளைவாக, குறிப்பிட்ட அந்த பெண்மணி சோமா சக்ரபர்த்தி என்று அடையாளம் கண்டுபிடிக்கப்படுகிறது. அவருடைய ஃபேஸ்புக் ஐடிக்கும், இன்ஸ்டாகிராம் ஐடிக்கும் தொடர்ந்து மெசேஜ்கள் போய்க் கொண்டே இருக்கின்றன.

‘மன்னிப்பு கேள், மன்னிப்பு கேள்’ என்பது மட்டுமில்லாமல், அவரை தனிப்பட்ட முறையில் அச்சுறுத்தும் மெசேஜ்களும் போகின்றன. ஒருக்கட்டத்தில் இவ்வளவு வெறுப்பை தாங்க முடியாமல் சோமா மன்னிப்பும் கேட்கிறார்.

இந்த இடத்தில், சோமா சக்ரபர்த்தியை தனிப்பட்ட முறையில் அச்சுறுத்தியவர்களுக்கு எல்லாம் கண்டனம் சொல்ல நினைப்பவர்கள், ஒட்டுமொத்தமாக அந்த நிகழ்வையே விமர்சிக்கத் தொடங்குகிறார்கள்.

பெண்ணியம் என்பது வெறுப்பை விதைக்கக் கூடாது என்றெல்லாம் பாடம் நடத்தத் தொடங்குகிறார்கள். இந்த தீடீர் போலி-பெண்ணியவாதிகள் தான் ஆபத்தானவர்கள். சோமா சக்ரபர்த்திக்கு அச்சுறுத்தல் மெசேஜ் அனுப்பிய யாரும் ஃபெமினிஸ்டுகளாக இருக்க வாய்ப்பில்லை – அவை ட்ரோல்கள், இதை புரிந்து கொள்வது கடினம் அல்ல.

திடீர் பெண்ணின காவலர்களுக்கு இன்னும் கொஞ்சம் நேரம் கொடுத்தால், மாலில் சோமா சக்ரபர்த்தியை மன்னிப்பு கேட்க சொன்னவர்கள் எல்லாம் தேவையே இல்லாமல் அவ்வளவு வெறுப்பை கொட்டினார்கள் என்றும், சோமாவிடம் அன்பாக எடுத்துச் சொல்லியிருக்க வேண்டும் என்றும் கருத்து சொல்வார்கள்.

பெண்ணியம் பாலின சமத்துவத்திற்கான போராட்டம். அது உங்கள் சௌகரியத்திற்கு ஏற்ற மாதிரி, மென்மையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் எப்படி? சோமாவின் பிற்போக்குத்தனம் நேரடி வன்முறையாக இருக்கும் போது, ஷிவானியின் குரல் சத்தமாக கேட்பது எப்படி தவறு?

ஷிவானியின் இன்ஸ்டாகிராம் படங்களுக்கு எல்லாம் ‘ நீ தேவையில்லாமல் விஷயத்தை பெரிது படுத்திவிட்டாய்’ எனும் ரீதியல் நிறைய கமெண்டுகளை பார்க்க முடிகிறது. இந்த கமெண்டுகளின் அர்த்தம் ‘ உன்னுடைய ஃபெமினிசத்தை நீ கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும்’ என்பது தான்.

பெண்ணிய கருத்துக்களை பேசும், பகிரும் எவருக்குமே இது பலமுறை கேட்டு கேட்டு புளித்துப் போன விஷயமாகவே இருக்கும். ‘ஏன் நீ சின்ன விஷயத்தை எல்லாம் ஃபெமினிசம் கூட கனெக்ட் பண்ற’ என்பது தொடங்கி, ‘வீட்டுக்குள்ள ஃபெமினிசம் பேசுனா நீ குடும்பத்துக்கு செட் ஆக மாட்ட’ என்பது வரை திரும்பத் திரும்ப ‘ஃபெமினிசத்தை குறைத்துக் கொள்’ எனும் செக்ஸிஸ்டான அறிவுரையை சொல்ல சுத்தி நான்கு பேர் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள்ள்.

வழிதவறி என்னுடைய இன்பாக்ஸிற்கு வந்த ஒருவர் என்னை ‘ஃபெமினாஸி(Feminazi) என்று முத்திரை குத்தி ஒரு மாதம் கூட இருக்காது. இப்படி பாலின சமத்துவத்திற்கான இயக்கத்தை , பல்லாயிரம் உயிர்களை கொன்று குவித்த தீவிரவாத சித்தாந்தத்தோடு ஒப்பிட்டு சொல்வதால், ஃபெமினிஸ்டுகள் எல்லாம் நடுக்கம் கொள்வார்கள் என்று நினைக்கிறார்கள் போல. இப்படி முத்திரை குத்துவதனால் இயங்கிக் கொண்டிருக்கும் பெண்களின் தீவிரத்தை குறைத்துவிடலாம் என்று நினைக்கிறார்கள் போல.

இப்படி முத்திரை குத்துவதனால் பெண்களை தங்கள் மீதே சந்தேகம் ஏற்பட வைத்துவிடலாம் என்று நினைக்கிறார்கள் போல. தொடர்ந்து ’பெண்ணியத்தை குறைத்துக் கொள்’ எனக் கத்திக் கொண்டே இருப்பதனால் ஒருக்கட்டத்தில் பெண்கள் இவர்கள் குரலுக்கு அடிபணிந்து ஃபெமினிசத்தை குறைத்துக் கொள்வார்கள் என நம்புகிறார்கள் போல. பாவம்.

மம்முட்டியின் படம் ஒன்றில் வந்த செக்ஸிஸ்ட் வசனத்திற்கு கண்டனம் தெரிவித்த பார்வதியை சரமாரியாக தாக்கிய மம்முக்கா ரசிகர்கள் அவருக்கு கொடுத்த பட்டம் ‘ஃபெமினிச்சி’. கிட்டத்தட்ட ‘ஃபெமினாஸி’ மாதிரி தான் என்று வைத்துக் கொள்வோம். அடுத்த சில நாட்களில் தன் கைப்பையில் ‘ஃபெமினிச்சி’ என்ற வார்த்தையை பதிந்து கொண்டார் பார்வதி. அதாவது, தனக்கு எதிராக வீசப்பட்ட ஒரு வார்த்தையை தன்னுடைய முடியை அலங்கரிக்கும் க்ரீடமாக வைத்துக் கொண்டார்.

ஃபெமினாஸி எனும் வார்த்தை கூட, பெமினிஸ்டுகளின் இயக்கம் தன்னுடைய ஆணாதிக்க இருத்தலை நிராகரித்து அழிக்குமோ என அஞ்சும் சிறுவர் சிறுமியர்களால் வீசப்படுவது தான். கூடவே, இந்த சிறுவர்கள் ‘பெமினிசத்தை குறைத்துக் கொள்’, ‘பெமினிசத்தை மென்மையாக செய்’ என்று எல்லாமும் அபத்தமாக பேசுவார்கள்.

  1. பெண்ணியம் உங்கள் வசதிக்கேற்றபடி மாற்றிக் கொள்ளும் டேபிள்மேட் கிடையாது.
  2. பெண்ணியத்தை சொட்டு நீலம் போல தண்ணீரில் ஊற்றிக் கலக்கி டைல்யூட் ஆக்க முடியாது.
  3. ‘ஹாஃப் குஸ்கா பார்சல்’ என்பது போல ‘ஹாஃப் பெண்ணியம் மட்டும் போதும்’ என அளவு சொல்லி வாங்கிவர முடியாது – என்பதை எல்லாம் குறித்துக் கொள்ளுங்கள்.

ஷிவானியும் அவர் நண்பர்களும் சோமா சக்ரபர்த்தியை சூழ்ந்து கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்த போது, திடீரென வரும் வேறொரு பெண் ‘பெண்கள் அவர்கள் இஷ்டத்துக்கு எதை வேண்டுமானாலும் உடுத்தலாம், அதை கேட்க யாருக்கும் உரிமை இல்லை’ என்று சொல்லும் போது எவ்வளவு உணர்வுப் பூர்வமான கோபத்தோடும், வேகத்தோடும் கத்திச் சொன்னாரோ, பெண்ணியமும் அவ்வளவு தீர்க்கமாக, அழுத்தமாகத் தான் இருக்கும்.

இதைச் சொல்பவர்கள் எல்லாம் ‘ஃபெமினாஸிக்கள்’ என்றால், அருமை நண்பர்களே, இதொரு ஃபெமினாஸி கொண்டாட்ட நேரம்...!