தொழில்முனைவோராக சாதிக்க நினைக்கும் பெண்களை ஊக்கப்படுத்திய மேஜிக் பெண்கள் 2.0 நிகழ்ச்சி!
'தொழில்முனைவோர் என்பவருக்கு எந்த பாலினமும் கிடையாது. பிறரின் பாராட்டையும் மதிப்பீடுகளையும் எதிர்பார்க்காமல் உண்மையாக இருங்கள்,' என சென்னையில் நடைபெற்ற மேஜிக் பெண்கள் 2.0 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நேச்சுரல் நிறுவனத்தின் இணை நிறுவனர் சி. கே. குமரவேல் தொழில்முனைவோர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
தொழில்முனைவோராகத் துடிக்கும் பெண்கள் தொடங்கி, வீட்டைப் பராமரிக்கும் குடும்பத் தலைவிகள் வரை அனைத்துப் பெண்களுக்கும் தேவையான மனநலன், பொருளாதார திட்டமிடல் உட்பட பல்வேறு உபயோகமான அம்சங்களை கொண்ட நிகழ்ச்சியாக 'மேஜிக் பெண்கள் 2.0', கடந்த சனிக்கிழமை (மார்ச் 29ம் தேதி) மாலை சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்.எம்.ஏவில் நடைபெற்றது.
மீடியா பார்ட்னராக யுவர்ஸ்டோரி தமிழ் இருந்த இந்த நிகழ்ச்சியில், பெண்களின் வளர்ச்சி மற்றும் நலனுக்காக பல்வேறு விஷயங்கள் குறித்து சின்னத்திரை நடிகை நீலிமா ராணி, தமிழ்நாடு திட்டக்குழு உறுப்பினர் சுதா ராமன் மற்றும் டிக்கெட்9 சி.இ.ஓ யாழினி சண்முகம் எனப் பல பிரபலங்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

உண்மையாக இருங்கள்
இந்த நிகழ்வில் தொழில்முனைவோராக சாதிக்க நினைக்கும் பெண்களை ஊக்கப்படுத்தும் வகையில் உரைகள், உரையாடல்கள் மற்றும் சந்தேகங்களுக்கு தீர்வு காணும் குழு விவாதங்கள் எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பெண் தொழில்முனைவோர் உள்ளிட்ட பல்வேறு பெண்கள் கலந்துகொண்டனர்.
"தொழில்முனைவோர் என்பவருக்கு எந்த பாலினமும் கிடையாது. பிறரின் பாராட்டையும் மதிப்பீடுகளையும் எதிர்பார்க்காமல் உண்மையாக இருங்கள்," என்ற அறிவுரையோடு இந்நிகழ்வைத் தொடங்கி வைத்தார் நேச்சுரல் நிறுவனத்தின் இணை நிறுவனர் சி. கே. குமரவேல்.
அவரைத் தொடர்ந்து, பெண்களின் மன ஆரோக்கியத்தை ஊக்கப்படுத்தும் விதமாக, ‘பெண்கள் மனநலம் மற்றும் அவர்களின் நல்வாழ்வு’ என்ற தலைப்பில், தொழில் முனைவோர் மற்றும் மனநல பயிற்சியாளரான மாலிகா ரவிக்குமார் பேசினார். அப்போது அவர்,
“பெண்கள் தங்களது உணர்ச்சிகளுக்கான ரிமோட்டை பிறரிடம் கொடுத்துவிடுகிறார்கள். யாரிடம் ரிமோட் இருக்கிறதோ அவர்களும் எதை செய்தால் பெண்கள் உடைந்து போவார்களோ அதையே செய்வார்கள். எனவே, அந்த ரிமோட்டை திரும்பி வாங்கிவிடுங்கள்," எனக் கலகலப்பாக தனது கருத்துக்களை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களிடம் கொண்டு சேர்த்தார்.

நேச்சுரல்ஸ் இணை நிறுவனர் சி.கே.குமரவேல்
தொழில்முனைவோருக்கான நேர மேலாண்மை
மேஜிக் பெண்கள் 2.0 நிகழ்ச்சியில், ஸ்ரீராம் கேப்பிடலின் நிர்வாக இயக்குநர் சுபஸ்ரீ ஸ்ரீராம் பேசுகையில்,
“நான் பல நிறுவனங்களை நிர்வகித்து வருகிறேன். ஆனால், சமமான நேரத்தை எல்லா நிறுவனத்துக்கும் செலவிட முடியாது. எதற்குத் தேவை உள்ளதோ, எது அதிக முதலீடுகளை ஈர்க்கிறதோ அதற்குத்தான் அதிக நேரம் ஒதுக்குவேன். நீங்கள் ஒரு தொழில்முனைவோராக ஆகிவிட்டால் அலுவலகத்தில் செலவிடும் நேரம் மட்டுமல்ல. வேலையைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருப்பதும் வேலையில்தான் வரும்," என தொழில்முனைவோருக்கான நேர மேலாண்மை பற்றி பேசினார்.
மேலும், தொடர்ந்து பேசிய அவர்,
“நிறுவனத்தின் வளர்ச்சிக்கு சரியான நபரைத் தேர்ந்தெடுங்கள், உங்களுடைய தவறுகளை ஒப்புக் கொள்ளுங்கள், முடிவை மாற்றிக்கொள்ள வெட்கப்பட்டு அதை மூடி மறைக்காதீர்கள். இவற்றின் மூலம் உங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளைத் தீர்த்துவிடலாம்," என்பது போன்ற பயனுள்ள பல அறிவுரைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியின் இறுதி நிகழ்வாக பெண் தொழில்முனைவோர் மற்றும் சாதனையாளர்கள் என்ற தலைப்பில் குழு விவாதத்தை தலைமையேற்று நடத்தினார் ப்ளிங் ஸ்மார்ட் ஹோம்ஸின் நிறுவனர் ஐஸ்வர்யா செந்தில்நாதன்.
அதில் பேசிய நடிகையும், தொழில்முனைவோருமான நிலீமா ராணி,
“தொழில் தொடங்க இருக்கும் பெண்கள் முதலில் உங்கள் குடும்பத்தினருக்கு உங்கள் மேல் நம்பிக்கை வர வையுங்கள். பின்பு அவர்களே உங்களை உற்சாகப்படுத்த ஆரம்பித்துவிடுவார்கள்," என்றார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ் செய்தித் தொலைகாட்சியின் முதல் பெண் ஆசிரியரான சுகிதா சாரங்கராஜ், உலக கேரம் போட்டியில் இந்தியாவுக்காக மூன்று தங்க பதக்கங்களை பெற்ற காசிமா, ரேடியோ ஜாக்கியும் தொகுப்பாளருமான டோஷிலா உமாசங்கர் ஆகியோருக்கு சாதனை பெண்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.