14 மில்லியன் டாலர் பி - சுற்று நிதி திரட்டியது சென்னை ஸ்டார்ட் அப் eplane!
சென்னையைச் சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப் புதிய நிதியை, சர்வதேச சான்றிதழ் மற்றும் தொழில்நுட்பத்தின் வர்த்தக பயன்பாடு முயற்சிக்காக பயன்படுத்திக்கொள்ள உள்ளது.
இந்தியாவின் மின்சாரம் சார்ந்த டேக் ஆப் மற்றும் லேண்டிங் (eVTOL) வாகனப் பரப்பில் செயல்பட்டு வரும் 'இபிளேன்' (ePlane) நிறுவனம், ஸ்பெஷலே இன்வெஸ்ட் மற்றும் அண்டாரேஸ் வென்சர்ஸ் தலைமை வகித்த பி சுற்றில் 14 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது.
மைசிலியோ மொபிலிட்டி, நவல் ரவிகாந்த், ஹோமேஜ் வென்சர்ஸ் (ஆதிய கோஷ்), ஜாவா கேபிடல், சமர்த்யா இன்வெஸ்ட்மெண்ட் அட்வைசர்ஸ் , ரெட்ஸ்டார்ட் லேப்ஸ் மற்றும், அனிகட் இதில் பங்கேற்றன.
சென்னை ஸ்டார்ட்-அப் ஆன 'இபிளேன்' நிறுவனத்தின் விமானி இயக்கும் விமான உருவாக்கம் மற்றும் சான்றிதழாக்கத்திற்காக இந்த நிதி பயன்படுத்திக்கொள்ளப்படும். அடுத்த ஆண்டு மத்தியில் இந்த விமானம் சோதித்து பார்க்கப்பட உள்ளது.
நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆற்றல் மேம்பாடு தவிர, இந்த நிதி இபிளேன் டிரோன் தொழில்நுட்பத்தை வர்த்தகமயமாக்கவும் பயன்படுத்திக்கொள்ளப்படும். துணை நிறுவனம் மூலம் இதை செய்ய உள்ளது.
மேலும், நிறுவனம் தனது மேம்பட்ட புரோடைப்பிங் செயல்முறை மற்றும் சோதனை வசதியை சர்வதேச eVTOL தரத்திற்கு ஏற்ப மேம்படுத்திக்கொள்ளும்.
“இபிளேன், இந்த பிரிவில் (eVTOL ) குறிப்பிடத்தக்க தலைமை பண்பு மற்றும் புதுமையாக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது. நீடித்த, தொழில்நுட்பத் தீர்வுகள் மூலம் நகர்புற போக்குவரத்து சிக்கல்களுக்கு தீர்வு காணும் உறுதியும் தெரிகிறது. இந்த நோக்கத்தை ஆதரிப்பதில் உற்சாகம் கொள்கிறோம்,” என Speciale Invest நிர்வாக பாட்னர் விஷேஷ் ராஜராம் கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் சர்வதேச அளவில் நகர்புற போக்குவரத்தில் நிறுவனத்தின் தாக்கம் குறிப்பிடத் தக்கதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
பேராசிரியர் சத்யா சக்ரவர்த்தியால் நிறுவபட்டு, 2019ல் ஐஐடி மெட்ராசில் அடைக்காக்கப்பட்ட இந்நிறுவனம், நகர்புற போக்குவரத்தில் புரட்சியை கொண்டு வர விரும்புகிறது. இலகுவான, எளிதான நீடித்த தன்மை கொண்டு தீர்வுகள் மூலம் இதை செய்ய முயல்கிறது.
சென்னையைச் சேர்ந்த இந்நிறுவனம், நகரங்களுக்கு இடையே ஏழு மடங்கு வேகமாக இயங்கக் கூடிய e200x நவீன விமானத்தை உருவாக்கி வருகிறது. நகர்புற நெரிசலுக்கு மத்தியில் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்திற்கு இது உதவும்.
“புதுமையாக்கம், நீடித்தத் தன்மை, தொழில்நுட்பம் சார்ந்த தீர்வு ஆகியவற்றில் இவர்களின் ஈடுபாடு, ஆசியாவில் eVTOL துறையில் முன்னணியில் விளங்க வைக்கிறது. தங்கள் தொழில்நுட்பத்தை வர்த்தகமயமாக்கி, வான்வழி போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் சேவையை வழங்க உள்ள நிலையில் நிறுவனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு துணை நிற்கிறோம்,” என Antares Ventures நிறுவனர் மற்றும் நிர்வாக பார்ட்னர் மைக்கேல் க்ரிசீல்ஸ் கூறியுள்ளார்.
கடந்த சுற்று நிதிக்கு பிறகு நிறுவனம் சேவை உருவாக்கத்தில் முன்னேற்றம் கண்டுள்ளதோடு, அறிவுசார் சொத்துரிமை விரிவாக்கத்திலும் கவனம் செலுத்தியுள்ளது.
“பாதுகாப்பு, நீடித்த தன்மை மற்றும் புதுமையாக்கத்தில் கவனம் செலுத்துவது எங்கள் உத்தியில் முக்கிய அம்சமாக தொடரும். இந்த முதலீடு வான்வழி போக்குவரத்தை நிஜத்தில் சாத்தியமாக்க உதவும்,” என்று இபிளேன் நிறுவனர், சி.இ.ஓ சத்யா சக்ரவர்த்தி கூறியுள்ளார்.
இதற்கு முன் இந்நிறுவனம், 5.85 மில்லியன் டாலர் நிதி பெற்றுள்ளது. 2022ல் மைசிலியோ மற்றும் ஸ்பெஷலே இன்வெஸ்ட் பங்கேற்ற ஏ சுற்றுக்கு முந்தைய 5 மில்லியன் டாலர் நிதியும் இதில் அடங்கும்.
முதலீட்டாளர்களிடம் இருந்து 10 மில்லியன் டாலர் அளவு நிதி திரட்ட பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக இந்த ஸ்டார்ட் அப் ஏற்கனவே யுவர்ஸ்டோரியுடனான உரையாடலில் உறுதி படுத்தியுள்ளது.
இந்நிறுவனம் கடந்த ஆண்டு விமான போக்குவரத்து இயக்குனர் ஜெனரல் அலுவலகத்திடம் இருந்து வடிவமைப்பு நிறுவன அனுமதி பெற்றது. மின் விமானத்திற்காக இத்தகைய அனுமதி பெறும் முதல் இந்திய தனியார் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலத்தில்: இஷான் பத்ரா, தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan