கோவை ஆயுள்தண்டனை கைதி உருவாக்கிய 'சோலார் ஆட்டோ' - குவியும் பாராட்டு!
கோவை மத்திய சிறையில், ஆயுள் தண்டனை பெற்ற கைதி ஒருவர் சூரிய ஒளி மின்சக்தி மூலம் இயங்கும் ஆட்டோவை குறைந்த செலவில் உருவாக்கி அசத்தியுள்ளார்.
சிறை என்பது குற்றம் செய்தவர்களை அடைத்து வைக்கும் ஒரு இடம் மட்டுமல்ல.. அது அவர்களை சீர்திருத்தும் இடமாகவும் இருக்கிறது. சிறையில்தான் பல தலைவர்கள் உருவானார்கள் என்கிறது நம் வரலாறு.
தற்போதும் அப்படித்தான் ஆயுள் தண்டனை பெற்ற சிறைக்கைதி ஒருவர், சிறை வளாகத்திற்குள் இருந்தபடியே, உருவாக்கி வரும் பல பயனுள்ள பொருட்கள் பல தரப்பிலும் பாராட்டைப் பெற்று வருகிறது.
கோவை சிறையில் தற்போது 2,420 சிறைவாசிகள் உள்ளனர். இவர்களில் டாக்டர்கள், வழக்கறிஞர்கள், இன்ஜினியர்கள், எம்பிஏ படித்தவர்கள் என 500க்கும் மேற்பட்டவர்கள் நன்கு படித்தவர்கள் எனக் கூறப்படுகிறது. இவர்களில் ஒருவர்தான், ஆயுள்கைதியாக இருக்கும் யுக ஆதித்தன் என்ற 32 வயது ஏரோநாட்டிகல் என்ஜினியர்.
சிறையில் தள்ளிய காதல்
யுக ஆதித்தனின் சொந்த ஊர், ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை அடுத்த மின்வெட்டுவாபாளையம் ஆகும். ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங் முடித்து, எதிர்காலக் கனவுகளுடன் நன்றாக சென்று கொண்டிருந்த அவரது வாழ்க்கையில் காதல் சதி செய்தது. அவரது காதலி செய்த துரோகத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல், அவரைக் கொலை செய்ய நினைத்த முடிவால் இன்று சிறைக் கம்பிகளுக்குள் வாழ்க்கையைக் கழித்து வருகிறார்.
தன் காதலியைக் கொல்ல கூலி கொடுத்து ஒருவரை நியமித்துள்ளார் யுக ஆதித்தன். அந்நபர் தவறுதலாக சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு பதிலாக வேறு ஒரு பெண்ணைக் கொலை செய்து விட்டார். 2014ம் ஆண்டு நடந்த கொலை சம்பவத்தில், போலீசார் யுக ஆதித்தனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 2016ம் ஆண்டு ஜூன் மாதத்தில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, யுக ஆதித்தன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த எட்டு வருடங்களுக்கும் மேலாக கோவை சிறையில் இருக்கும் இவர், தற்போது சோலார் ஆட்டோ ஒன்றைத் தயாரித்ததன் மூலம் பிரபலமாகியுள்ளார். சிறைவாசிகளைப் பார்க்க வரும் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் எனப் பலரும் சிறையின் நுழைவாயில் பகுதியிலிருந்து சிறை சந்திப்புப் பகுதிக்கு வெகுதுாரம் நடந்து வர சிரமப்படுவதால், அவர்களுக்கு உதவும் வகையில் இந்த சோலார் ஆட்டோவை அவர் உருவாக்கியுள்ளார்.
யுக ஆதித்தனின் பொறியியல் திறன்
ஆயிரக்கணக்கானோர் வாழும் சிறையில், தினமும் அவர்களுக்கு பல ஆயிரம் சப்பாத்தி தயாரிக்க வேண்டி உள்ளது. இதற்காக முதலில் அங்கு ஒரு சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரத்தை வாங்கியுள்ளனர். ஆனால், நீண்ட நாட்களுக்கு அது தாக்குப் பிடிக்க முடியாமல் பழுதாகி விட்டதாம். அப்போது என்ன செய்வது என அதிகாரிகள் யோசித்துக் கொண்டிருந்தபோது, அதனை யுக ஆதித்தன் தான் சரி செய்து கொடுத்துள்ளார்.
அப்போதுதான் அவருடைய பொறியியல் திறமையும், இயந்திரங்கள் உருவாக்குவதில் அவருக்கு இருந்த ஆர்வமும் அதிகாரிகளுக்குத் தெரிய வந்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக, கடந்த ஆண்டு சிறை அதிகாரிகள் உதவியுடன், ஒரு இ சைக்கிளை தயாரித்துள்ளார் யுக ஆதித்தன். மின்சாரம் மற்றும் சோலார் பேனல் என இரண்டு வகைகள் மட்டுமின்றி, வாகனத்தை இயக்கினால் தானாகவே சார்ஜ் ஆகிவிடும் வகையில் அதனை அவர் உருவாக்கி இருந்தது அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்தியது. .
சோலார் ஆட்டோ
அந்த இ-சைக்கிள், இங்குள்ள வார்டன்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கவே, யுக ஆதித்தனை வைத்து சோலார் ஆட்டோ ஒன்றை தயாரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். யுக ஆதித்தனும் இதற்கு ஆர்வமாக சம்மதித்ததுடன், அந்த சோலார் வாகனத்துக்குத் தேவையான மூலப் பொருட்களையும் பட்டியல் போட்டுக் கொடுத்துள்ளார்.
சிறைக்குள் இருந்த இரும்பு, கம்பிகள் போன்றவை போக, மோட்டார் போன்ற சில பொருட்கள் மட்டுமே வெளியில் வாங்கித் தந்துள்ளனர் அதிகாரிகள். அதன்பின், சக சிறைவாசிகள் மற்றும் தொழில்நுட்பம் தெரிந்த சிறை அலுவலர் ஒருவர் என சிலரின் உதவியுடன் இந்த வாகனத்தை யுக ஆதித்தன் தயாரித்துக் கொடுத்துள்ளார்.
இது குறித்து கோவை சரக சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில், “சிறை வளாகத்திலிருந்து, வெளியே ஒரு மூலையில் சிறை மருத்துவமனை உள்ளது. ஏதாவது அவசரம் என்றாலும், தகவல் தெரிவித்து, வெளியிலிருந்து ஆம்புலன்ஸ் வர தாமதமாகிறது. பல நேரங்களில் ஆட்களை துாக்கிக் கொண்டு வரவேண்டியுள்ளது. அதனால் சிறைவாசிகள் அல்லது ஊழியர்களை விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லஒரு வாகனம் தேவைப்பட்டது. அதேபோல்,
“சிறை வளாகத்துக்குள் வேறு எந்த வாகனத்தையும் பயன்படுத்துவதில்லை என்பதால், சிறையை ஆய்வு செய்ய வரும் குழுவினர், நீதிபதிகள், அமைச்சர்கள், உயரதிகாரிகள் பலரும் சிறை வளாகம் முழுவதும் செல்வதற்கும் ஒரு வாகனம் அவசியமாக இருந்தது. இப்படி பல விதமான பயன்பாட்டுக்காகத்தான் இந்த சோலார் வாகனத்தை தயாரிக்க முடிவு செய்தோம்.“
200 கிமீ ஓட்டலாம்
இந்த ஆட்டோவின் மீது சூரிய ஒளி உற்பத்திக்கான தகடு அமைக்கப்பட்டுள்ளது. ஆட்டோவில் ஓட்டுநரின் இருக்கைக்கு அடியில், இதற்கான பேட்டரி உள்ளிட்ட கட்டமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. சூரிய மின்சக்தி மூலம் ஒருமுறை பேட்டரி முழுவதுமாக நிரம்பினால், 200 கிலோ மீட்டர் தொடர்ச்சியாக ஓட்டலாம். 35 கி.மீ. வேகத்தில் ஆட்டோவை ஓட்டலாம்.
இதில், ஓட்டுநர் உட்பட 8 பேர் வரை அமர்ந்து செல்லலாம். எல்இடி விளக்கு, ஹாரன், ஹேன்ட் பிரேக், டேப் ரிக்கார் போன்ற வசதிகள் உள்ளன. சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வரும் ஆட்டோ நல்ல முறையில் உபயோகமாக உள்ளது, எனத் தெரிவித்துள்ளார்.
பாராட்டு
கடந்த வாரத்தில் கோவை மத்திய சிறைக்கு வந்த சிறைத்துறை டிஜிபி மகேஸ்வர தயாள், இந்த சோலார் ஆட்டோவில்தான் சிறை வளாகத்துக்குள் சென்று வந்துள்ளார். அப்போது அந்த வாகனத்தின் செயல்பாட்டைப் பார்த்து அசந்து போன அவர், அதை உருவாக்கியது ஒரு சிறைவாசி என்பதை அறிந்து ஆச்சர்யம் அடைந்துள்ளார்.
பின்னர், அவர் யுக அதித்தனை நேரில் பாராட்டியதோடு, இந்த வாகனத்தில் சில திருத்தங்கள் செய்யவும், அதன் செலவை மேலும் குறைத்து, மற்ற மத்திய சிறைகளுக்குள் இதைப் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கவும் ஆலோசனையும் தெரிவித்துள்ளார்.
இதேபோல், வேலுாரில் உள்ள சிறைத்துறை பயிற்சி மையத்தில் பயிற்சி எடுக்க வந்த மிசோராம் உள்ளிட்ட வடகிழக்கு மாநில அதிகாரிகள் பலரும், கோவைக்கு வந்தபோது இந்த சோலார் வாகனத்தைப் பார்த்து பாராட்டிச் சென்றுள்ளனர்.
''சோலார் ஆட்டோ தயாரித்த யுக ஆதித்தனுக்கு ஊதியத்துடன் பாராட்டுச் சான்றும் கொடுத்துள்ளோம். இப்போது அவரால் மற்றவர்களும் தொழில் பயிற்சி பெறுகின்றனர். இந்த ஆட்டோவில் மிகவும் சக்திவாய்ந்த மோட்டாரைப் பயன்படுத்தியுள்ளோம். மிகவும் கனமுள்ள இரும்புகளைப் பயன்படுத்தியுள்ளோம். சாதாரண ஆட்டோ வாங்கவே ரூ.3 லட்சத்துக்கும் மேல் ஆகும் என்கிற சூழலில், தற்போது இந்த சோலார் ஆட்டோவை மொத்தமாக 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் உருவாக்கியுள்ளோம். இதில், சில மாறுதல்களைச் செய்தால், செலவைக் குறைத்து 1 லட்ச ரூபாய்க்கு இதைத் தயாரித்து விடலாம்,” என்கிறார் டிஐஜி சண்முகசுந்தரம்.
மின்சார ஆம்புலன்ஸ் தயாரிக்க திட்டம்
இ-சைக்கிள், சோலார் ஆட்டோ ரிக்ஷாவை தொடர்ந்து, யுக ஆதித்தன் உதவியுடன் அடுத்ததாக மின்சார ஆம்புலன்ஸ் வாகனத்தைத் தயாரிக்கவும் கோவை மத்திய சிறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
கோவையில் ஏராளமான தொழிற்சாலைகள் இருப்பதால், அவற்றில் பயன்படுத்தும் வகையில் சோலார் ஆட்டோ தயாரிப்பதற்கு யாராவது ஆர்டர் கொடுத்தால், தமிழக அரசு மற்றும் உயர் அதிகாரிகள் அனுமதி பெற்று, வெளியே விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளனர். அதற்கான அனுமதி கிடைத்ததும், காப்புரிமை பெற்று, வெளியே விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
தண்டனை பெற்ற கைதிகளின் வாழ்க்கை சிறைக்குள் முடங்கிப் போய் விடாமல் இருக்க, அரசும், அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களை மேற்கொண்டு படிக்க வைப்பது, தொழில் பயிற்சி அளிப்பது, தொழில்முனைவோர் ஆக்குவது என பல்வேறு வகையில் கைதிகளின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.
சிறைவாசிகளின் தயாரிப்புகள்
கோவை சிறை சார்பில் மட்டும் இரண்டு பெட்ரோல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர, ஒண்டிப்புதுார் பகுதியில் 30 ஏக்கர் பரப்பளவில் விவசாயமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அங்குள்ள 900 தென்னை மரங்களில் இருந்து பறிக்கப்படும் தேங்காயைப் பயன்படுத்தி, செக்கில் தேங்காய் எண்ணெயும் அங்கேயே தயாரிக்கப்படுகிறது. சிறை வளாகத்தில் செக்கு நல்லெண்ணெய், கடலை எண்ணெய் தயாரிப்பும் நடைபெறுகிறது.
சிறைவாசிகள் தயாரிக்கும் ஸ்வீட் பிரெட், கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, திருப்பூர் அரசு மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் உள்ள உள் நோயாளிகளுக்கு தினமும் உணவாக வழங்கப்படுகிறது.
அதேபோல், அவர்கள் தயாரிக்கும் கோப்புகள் உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்கள், அரசு அலுவலக உபயோகத்திற்காக விநியோகிக்கப்படுகிறது. சிறைவாசிகள் தயாரிக்கும் குளிர் ஆடைகள், ரெயின் கோட் போன்றவை வெளியிலும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த பணிகளைச் செய்யும் சிறைவாசிகளுக்கு, சிறைத்துறையால் ஊதியமும் தரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.