குடியிருப்புப் பகுதிகளில் வண்ண ஓவியங்கள்; வெளிநாட்டு ஓவியர்கள் கைவண்ணத்தில் ஜொலிக்கும் கோவை!
கோவையில் சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் ஓவியர்கள் இணைந்து குடியிருப்பு பகுதிகளில் கோவை மக்களின் வாழ்வியலை எதிரொலிக்கக்கூடிய அழகிய ஓவியங்களை வரைந்து அசத்தியுள்ளனர்.
கோவையில் சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் ஓவியர்கள் இணைந்து குடியிருப்பு பகுதிகளில் கோவை மக்களின் வாழ்வியலை எதிரொலிக்கக்கூடிய அழகிய ஓவியங்களை வரைந்து அசத்தியுள்ளனர்.
புதுப்பொலிவு பெறும் கோவை:
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னைக்கு மேலும் அழகூட்டும் விதமாக பேருந்து நிலையங்கள், மேம்பாலங்கள், சுவர்களின் தமிழர்களின் பண்பாடு, கலை, இலக்கியத்தை பிரதிபலிக்கும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. தற்போது சென்னையை அடுத்து கோவையை மெட்ரோ நகரமாக மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக புத்தம் புதிய பூங்காக்கள், குளங்களில் படகு சவாரி, மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கு எல்லாம் மசூடம் வைத்தது போல் கோவையில் சாமானிய மக்கள் வசிக்கக்கூடிய அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் அழகிய ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. தற்போது தனியார் அமைப்பைச் சேர்ந்த சிங்கப்பூர், ஸ்பெயின் ஓவியர்கள் இணைந்து, கோவை மக்களின் வாழ்வியலை ஓவியமாக வரைந்து வருகின்றனர். இது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
'ஸ்ட்ரீட் ஆர்ட்' அமைப்பினர், உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, சாதாரண மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு சென்று, அங்குள்ள சுவர்களில், அவர்களின் வாழ்வியலை மையப்படுத்தி, தத்ரூபமாக ஓவியங்களை வரைகின்றனர்.
வெளிநாட்டு ஓவியர்கள் கைவண்ணம்:
உக்கடம் புல்லுக்காடு மைதானத்தில், நகர்ப்புற வாழ்விட வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இதற்கு முன், கோவையை சேர்ந்த ஓவியர் ஜீவா மற்றும் பிரான்ஸ் நாட்டு ஓவியர்கள் பலரும் இணைந்து, ஓவியங்கள் வரைந்தனர். அது, கோவை மக்களை ஆச்சரியப்படுத்தியது.
தற்போது சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் நாடுகளில் இருந்து ஓவியர்கள் வருகை தந்துள்ளனர். இவர்களுடன் இந்திய ஓவியர்கள் இணைந்து, ஓவியம் வரைய ஆரம்பித்திருக்கின்றனர்.
42 அடி உயரம் மற்றும், 42 அடி - அகல சுவற்றில் ஓவியம் வரையப்படுகிறது. முதற்கட்டமாக, மெஸ் ஒன்றில், ஒரு வாழை இலையில், ஊத்தப்பம், இட்லி பொடி, உளுந்த வடை இருப்பது போலவும், ஒருவர் டீ ஆற்றுவது போலவும், கண்ணாடி டம்ளரில் டீ இருப்பது போலவும் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளது.
அந்த சுவரின் மற்றொரு புறத்தில், ஓவியத்தின் மீதமுள்ள பகுதியை வரைய இருக்கின்றனர். இது கோவை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.