Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

குழந்தைகளை விரட்டும் கொரோனா; பெற்றோரே உஷார்: மருத்துவர் கூறும் ஆலோசனை!

உலகை உலுக்கி வரும் கொடூரன் கொரோனாவின் இரண்டாவது அலை குழந்தைகளையும் தனக்குள் இழுத்துக் கொண்டிருக்கிறது. இளம் சிறார்களை இந்த வைரஸின் பிடியில் இருந்து தற்காக்க முடியுமா?

குழந்தைகளை விரட்டும் கொரோனா; பெற்றோரே உஷார்: மருத்துவர் கூறும் ஆலோசனை!

Monday May 03, 2021 , 4 min Read

உலக நாடுகளே பார்த்து மிரண்டு போகும் அளவிற்கு இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோர முகத்தை காட்டி வருகிறது. நிற்காமல் சுழலும் பூமி போல கொரோனாவால் இறந்தவர்களை எரிப்பதற்காக மயானங்கள் 24x7 இயங்குகிறது. பாசத்திற்குரியவர்களைக் காப்பாற்றி விட வேண்டும் என்று மருத்துவமனை, ரெம்டெசிவிர் மருந்து கிடைக்கும் இடங்களில் பதற்றத்துடன் வரிசையில் காத்திருக்கின்றனர் மக்கள்.


இரண்டாவது அலை வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வைரஸ் தாக்கம் ஏற்பட்ட 3வது நாளிலேயே மூச்சுத்திணறலை ஏற்படுத்தும் விதமாக நுரையீரலில் தீவிர தாக்குதலை ஏற்படுத்துகிறது தற்போது பரவி வரும் கோவிட் தொற்று. நாள்தோறும் ஆயிரக்கணக்கில் தொற்று உறுதியாகி வரும் நிலையில், கடந்த 2 மாதங்களாக 12 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கும் கோவிட் தொற்று அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது.


நாளொன்றிற்கு சுமார் 400க்கும் அதிகமான 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கொரோனா தொற்றுக்கு ஆளாவதாக மருத்துவத்துறைத் தெரிவிக்கிறது.


குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்பதை எவ்வாறு கண்டறிய முடியும் என்று குழந்தைகள் நல மருத்துவர் மாதுரி பிரபுவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது,

“கடந்த ஆண்டு கொரோனா நோய் பரவலின் போது பெற்றோர் மிகவும் விழிப்புடன் இருந்ததன் வெளிப்பாடே அவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படாமல் பாதுகாப்பாக இருந்தார்கள். ஆனால் தற்போது குழந்தைகளை நிகழ்ச்சிகள், வெளி இடங்களை அழைத்துச் செல்வது அதிகரித்து இருக்கிறது. கொரோனா கால சுகாதார பழக்க வழக்கங்களும் கடைபிடிக்காததால் குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று என்று வருவது அதிகரித்திருப்பதைக் காண முடிகிறது.”
peadiatrician

மருத்துவர். மாதுரி பிரபு, குழந்தைகள் நல மருத்துவம்

குழந்தைகளுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தாலும் பெற்றோர் அச்சமோ பதற்றமோ அடையத் தேவையில்லை. சரியான கவனமும், முறையான மருத்துவச் சிகிச்சையும் மேற்கொண்டால் அவர்கள் அபாய கட்டத்திற்கு செல்லாமல் பாதுகாக்கலாம்.


குடும்பத்தில் யாருக்கேனும் கொரோனா தொற்று இருந்தாலோ, அல்லது தொற்று பாதித்தவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தாலோ குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

திடீரென 100டிகிரிக்கு அதிகமாக காய்ச்சல் ஏற்படுவதே குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதற்கான அறிகுறி. காய்ச்சல் ஏற்பட்ட உடன் பதற்றப்படாமல் நேரில் மருத்துவமனை செல்ல முடியாவிட்டாலும் ஆன்லைன் மூலம் குழந்தைகள் நல மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று காய்ச்சலுக்கான மருந்துகளான பாராசிடமால், கால்பால் உள்ளிட்டவற்றை கொடுக்கலாம்.

குழந்தைகளின் எடைக்கு ஏற்ப இந்த மருந்துகளின் அளவும் கொடுக்கப்பட வேண்டும், தவறான அளவில் கொடுப்பதும் கூட காய்ச்சலை குறைக்காது என்பதால் இதையும் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். மேலும், குறைந்தபட்சம் 4 மணி நேரம் முதல் 6 மணி நேரத்திற்கு ஒரு முறை காய்ச்சல் மருந்து கொடுக்கலாம்.


வைரஸ் தொற்று பாதித்த குழந்தைகளுக்கு 3 நாட்களுக்கு 100 டிகிரிக்கு மேல் காய்ச்சல் தொடர்வதைக் காண முடிகிறது. அறிகுறிகள் தென்பட்ட 3 நாட்களில் அவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருக்கிறதா என்பதை அடிக்கடி சரிபார்க்க வேண்டும், அவ்வாறு சிரமம் இருப்பதாக தெரிந்தால் தாமதிக்காமல் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும்.

காய்ச்சல் விடவே இல்லை, வேக வேகமாக மூச்சு விடுகிறது, உதடுகள் நீலம் பூத்துக் காணப்படுகிறது, கடுமையான சோர்வு, எதையும் சாப்பிட முடியவில்லை, படுத்த படுக்கையாக இருக்கிறது, சுயநினவை இழக்கிறது, பல்ஸ் ஆக்ஸிமீட்டரில் குழந்தையின் ஆக்ஸிஜன் அளவு 95 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கிறது. இப்படியான மோசமான அறிகுறிகள் தோன்றுமானால் உடனடியாகக் குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற வேண்டும்.

அப்போது அவர்களுக்கு குளுக்கோஸ் ஏற்றுவது, ஆக்ஸிஜன் செலுத்துவது, ஸ்டீராய்டு மருந்துகள் கொடுப்பது, வென்டிலேட்டர் சிகிச்சை தருவது உள்ளிட்ட தீவிர சிகிச்சைகள் தேவைப்படும். எனினும் இப்படியான தீவிர நிலைக்கு 5 சதவீதம் குழந்தைகளே செல்கின்றனர் என்பது ஆறுதல் தரும் விஷயம், என்கிறார் மாதுரி.


மேலும், காய்ச்சல் இல்லாமலும் கூட திடீரென குழந்தை சாப்பிட மறுக்கிறது, தொடர் இருமல், வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை இருந்தால் அவையும் கோவிட்– 19 வைரஸ் தொற்றிற்கான அறிகுறிகளே. குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதியானாலும் அவர்களுக்கு இணை நோய்களான புற்றுநோய், சர்க்கரை நோய் உள்ளிட்டவை இல்லாவிட்டால் அபாய கட்டத்திற்கு செல்வதில்லை.


மருத்துவமனைகளிலேயே குழந்தைகளுக்கும் கூட தனி கொரோனா வார்டுகள் அமைக்க அரசு பரிந்துரைத்துள்ளதால், பெற்றோர் முறையான மருத்துவச் சிகிச்சையை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.


கொரோனா தொற்றில் இருந்து குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது? என்பதே பெரும்பாலான பெற்றோரின் கேள்வியாக இருக்கிறது. நாம் கட்டுப்பாடாக இருந்தால் குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று ஏற்படாது என்கிறார் மருத்துவர் மாதுரி.

“குழந்தைகளுக்கு பள்ளிகள் இல்லை, விளையாட்டுப் பூங்காக்கள் இல்லை அவர்கள் ஏற்கனவே வீட்டில் தான் இருக்கிறார்கள். அப்படி இருந்தும் அவர்களுக்கு எப்படி தொற்று ஏற்படுகிறது என்றால், வெளியில் இருந்து செல்லும் பெரியவர்களே குழந்தைகளுக்கு வைரஸை பரப்பி விடுகின்றனர்.”

எனவே வெளியில் சென்று வருபவர்கள் வீட்டிற்கு வந்த உடன் கைகளை சுத்தமாக கழுவுவதோடு சிறுவர்களிடம் எப்போதுமே சமூக இடைவெளியை கடைபிடித்து பழகுவதால் அவர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்த முடியும்.

கொரோனா

மேலும், 3 வயது முதலே குழந்தைகளுக்கு தற்போது கடைபிடிக்கப்படும் கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவது, முகம், கண், காது உள்ளிட்ட இடங்களை அடிக்கடி தொடுதல் கூடாது, பொது இடங்களுக்குச் செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் போன்ற சுகாதார பழக்கங்களை கடைபிடிக்கக் கற்றுக்கொடுக்க வேண்டும்.


குழந்தைகள் அடிக்கடி பயன்படுத்தும் விளையாட்டுப்பொருட்கள், ரிமோட், கதவு, தாழ்ப்பாள், தண்ணீர் குழாய் மற்றும் அவர்கள் விளையாடும் அறை, தரை உள்ளிட்டவற்றை அடிக்க கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடன் விளையாட அனுமதிக்கக் கூடாது.


தொற்று உறுதியான குழந்தையை இரண்டு வாரங்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்த வேண்டும். நடைமுறையில் சிரமம் என்றாலும் கவனத்துடனும் பொறுமையுடனும் இந்த விஷயத்தில் பெற்றோர் செயல்பட வேண்டும். மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளோடு தினசரி நிறைய தண்ணீர் குடிக்கச் செய்ய வேண்டும்.


பழங்கள், பழச்சாறுகள், பால், பருப்பு, முட்டை, மீன் போன்ற புரதச் சத்துள்ள உணவுகள் தரப்பட வேண்டியது முக்கியம். குழந்தைக்கு ஓய்வு அவசியம். விளையாடவிடக்கூடாது. சிறு குழந்தைகளுக்கு வீட்டில் முகக்கவசம் அணியத் தேவையில்லை. நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கென்று தனியான மருந்துகள் எதுவும் இல்லை, எனவே, குழந்தைகள் நல மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று ஊட்டச்சத்து மருந்துகளை வேண்டுமானால் கொடுக்கலாம் என்கிறார் மருத்துவர் மாதுரி பிரபு.