'திருமணம் காத்திருக்கலாம்; என் நோயாளிகள் சிகிச்சைக்காக காத்திருக்கக் கூடாது'
கொரோனா சிகிச்சைக்காக தன் திருமணத்தை தள்ளிவைத்த கேரளப் பெண் டாக்டர்.ஷிஃபா முஹம்மத்!
கொரோனா வைரஸ் உலக நாடுகளை கிடுக்கப் பிடி போட்டு நெருக்கி நசுக்கி வரும் வேளையில், பொருளாதார ஆரோக்கிய நெருக்கடிகள் தவிர்க்க முடியாதது. ஜாதி, மதம், இனம், நிறம், மொழி என்று எந்த வித்தியாசங்களையும் பார்க்காமல் மக்களின் உயிர்களைக் குடித்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸில் இருந்து மக்களைக் காப்பாற்ற எல்லா நாடுகளும் முனைந்து செயல்பட்டு வருகின்றன.
இறை இல்லங்களில் வழிபாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன. பல மாதங்களுக்கு முன் நிச்சயிக்கப்பட்டத் திருமணங்கள், முகங்களை மாஸ்க் போட்டு கட்டிய நாலு பேர் முன்னிலையில் நடக்கின்றன. தடபுடல் விருந்து இல்லை. ஆனால் மணமக்கள் மாஸ்க் அணிய மறக்கவில்லை.

நிச்சயித்த திருமணத்தை கொரோனா நோய்க்கான சிகிச்சைப் பணிக்காக தள்ளி வைத்து நெகிழச் செய்திருக்கிறார் டாக்டர்.ஷிஃபா முஹம்மத். கேரளத்தின் கண்ணனூரைச் சேர்ந்தவர். கண்ணனூர் பரியாரம் மருத்துவக் கல்லூரியில் 'ஹவுஸ் சர்ஜனா'க ஷிஃபா பணிபுரிந்து வருகிறார்.
ஷிஃபாவின் திருமணம் துபாயில் பணிபுரியும் அனஸ் என்பவருடன் 29 மார்ச், ஞாயிறு அன்று நடப்பதாக நிச்சயிக்கப்பட்டு இருந்தது. திருமண அழைப்பிதழ்களும் உற்றார் உறவினர்கள் தெரிந்தவர்களுக்குக் கொடுத்தாகிவிட்டது.
கொரானா பாதிப்பினால் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் ஷிஃபா திருமணநாள் நெருங்குகிறதே என்று பதட்டப்படவில்லை.
'மாலை சூடும் மண நாள்... இளமங்கையின் வாழ்வில் திருநாள்..' என்று மனம் சிறகடிப்பதை நிறுத்தி வைத்தார். கைகளில் மருதாணி இட்டுக் கொள்ளவில்லை. ஆனால் ஸ்டெதஸ்கோப் கழுத்தில் மாட்டிக் கொண்டு காப்பு உடைகளை அணிந்து கொண்டு கொரோனா நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் பரிசோதனை செய்யச் சென்றுவிட்டார். மருத்துவமனையில் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தார்.”
சக டாக்டர்கள்,
"என்ன ஷிஃபா .. நாளைக்கு திருமணம் .. இங்கேயே நிக்கிறே.. விடுப்பு எடுக்கலையா.." என்று கேட்க? "என் திருமணம் காத்திருக்கலாம்... எனது நோயாளிகள் சிகிச்சைக்காக காத்திருக்கக் கூடாது... நோயாளிகள் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் தருணத்தில் எனது திருமணம் முக்கியமில்லை," என்றார்.
அப்போ திருமணம்.. என்று நண்பிகள் கேட்க? அதை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளேன். அப்பாவும் மாப்பிள்ளையும் இதற்கு சம்மதித்துவிட்டனர், என்றார் ஷிஃபா.
நட்பு வட்டம் ஷிஃபாவின் பதிலைக் கேட்டு ஸ்தம்பித்தது. டாக்டர் ஷிஃபாவுக்கு 23 வயதாகிறது. திருமணம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியமான சம்பவம். ஆனால் என் மகள் ஷி ஃ பா தனது மருத்துவக் கடமைக்கு முக்கியத்துவம் கொடுத்து இக்கட்டான நிலையில் நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்தார்.
‘திருமணத்தைத் தள்ளிப் போடுங்கள்...’ என்ற அவள் சொன்ன போது முதலில் எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. பெற்றோராக எங்களுக்கு ஏமாற்றம் இருந்தாலும், ஒரு குடிமகனாக எனது மகளின் முடிவினைப் புரிந்து ஏற்றுக் கொண்டேன். அதுபோல மணமகன் வீட்டாரும் ஏற்றுக் கொண்டார்கள்.
நானும் அரசியல் கட்சி மூலமாக சமூகப் பணியில் ஈடுபட்டுள்ளேன். மனைவி ஒரு ஆசிரியை, ஷி ஃ பாவின் முடிவு எங்களுக்கு பெருமித்தத்தைத் தருகிறது. என்றார் ஷி ஃ பா வின் தகப்பனார் முக்கம் முஹம்மது.
ஷி ஃ பாவின் அக்காவும் ஒரு டாக்டர்தான். அவர் கள்ளிக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி புரிகிறார். தனது திருமணம் ஒத்திகை வைக்க முடிவு செய்தது குறித்து விரிவாக ஷிஃபா பேச விரும்பவில்லை.
"நான் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. எனது கடமையைச் செய்திருக்கிறேன். அவ்வளவுதான். என்னைப் போல் பல டாக்டர்களும் தாங்கள் முன் நிச்சயித்திருந்தத் திட்டங்களை, முடிவுகளை, நிகழ்ச்சிகளை நோயாளிகளுக்காக மாற்றிவைத்துவிட்டு நோயாளிகளின் உயிர்களைக் காப்பதில் ஈடுபட்டிருப்பார்கள். நானும் அதைத்தான் செய்திருக்கிறேன்,' என்கிறார் ஷிஃபா.
தகவல் உதவி: ஹிந்துஸ்தான் டைம்ஸ் | தமிழில்: பிஸ்மி பரிணாமம்