35 மில்லியன் டாலர் நிறுவனம் - ‘கிரிப்டோ உலகின் பேரரசன்’ ஆன ஐஐடி டிராப்அவுட் இளைஞரின் கதை!
ஐஐடியில் படிப்பை பாதியில் நிறுத்தினாலும், கிரிப்டோ வர்த்தகத்தில் 35 மில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனத்தை கட்டமைத்த ராகுல் ராய் என்ற இளைஞரின் உத்வேகமூட்டும் பயணம் இது.
பிசினஸ் முயற்சிகளில் தோல்வியுற்ற பலரும் கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் கொடிகட்டி பறப்பதைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். அந்தவகையில், தன் படிப்பை பாதியில் நிறுத்தினாலும், கிரிப்டோ உலகில் 35 மில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனத்தை கட்டமைத்துள்ள ராகுல் ராய் என்ற இளைஞரின் வாழ்க்கைப் பயணம் உத்வேகமூட்டுவதாக அமைந்துள்ளது.
கிரிப்டோ வர்த்தகம்:
2020-ம் ஆண்டு உலகமே கொரோனா லாக்டவுனால் வீட்டிற்குள் முடங்கியது. குறிப்பாக, இந்தியா போன்ற வளரும் நாடுகள் கடும் பாதிப்புகளை சந்தித்தன. வேலையிழப்பு, ஊதியக் குறைப்பு போன்ற பல்வேறு சிக்கல்களுக்கு இந்தியப் பணியாளர்கள் ஆளாகினர். அப்படிப்பட்ட இக்கட்டான தருணத்தில்தான் கிரிப்டோகரன்சி அதிக அளவில் பிரபலமாக ஆரம்பித்தது.
பலரும் இந்த டிஜிட்டல் கரன்சியைப் பற்றி இணையத்தில் யூடியூப் உள்ளிட்ட தளங்கள் மூலம் அறிந்து, அதன் பிறகு கிரிப்டோவில் வர்த்தகம் செய்வதற்கான பல்வேறு ஆப்களில் முதலீடு செய்ய ஆரம்பித்தனர். இதே காலக்கட்டத்தின்தான் ராகுல் ராய் என்ற இளைஞர் காமா பாயின்ட் கேப்பிட்டல் என்ற தனது சொந்த கிரிப்டோ நிறுவனத்தை உருவாக்கினார். தற்போது ‘கிரிப்டோ உலகின் பேரரசர்’ என புகழப்படும் ராகுல் ராய், சவால்கள் நிறைந்த இந்த வர்த்தகத்தில் சாதித்தது எப்படி? - இதோ அந்த உத்வேகப் பயணம்...
யார் இந்த ராகுல் ராய்?
25 வயதான ராகுல் ராய்க்கு 2015-ம் ஆண்டு ஐஐடி மும்பையில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதனை பாதியிலேயே கைவிட்ட அவர் 2019-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ‘தி வார்டன்’ ஸ்கூலில் பொருளாதாரத்தில் பிஎஸ்சி பட்டம் பெற்றார். அங்கு படித்த முடித்த கையோடு அமெரிக்காவில் உள்ள மோர்கன் ஸ்டான்லி நிறுவனத்தில் ஆய்வாளராக ராகுல் ராய் பணியில் சேர்ந்தார். அங்கு ஓராண்டுக்கு மேல் பணியாற்றிய ராகுல் ராய், 2020-ம் ஆண்டு வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவிற்குத் திரும்பினார்.
இந்தியா திரும்பிய ராகுல் ராய்க்கு கிரிப்டோ மீதான ஆர்வம் அதிகரிக்கத் தொடங்கியது. எனவே, கிரிப்டோ முதலீடுகள் குறித்து ஆய்வு செய்ய ஆரம்பித்தார். அவரைப் போலவே கிரிப்டோ முதலீடுகள் மீது ஆர்வம் கொண்டவர்களான ஈஷ் அகர்வால் மற்றும் சனத் ராவ் ஆகியோருடன் இணைந்து 2021-ம் ஆண்டு ‘காமா பாயின்ட் கேப்பிட்டல்’ என்ற நிறுவனத்தை தொடங்கினார். தற்போது பிளாக்டவர் கேபிட்டலில் மார்க்கெட் நியூட்ரலின் இணைத் தலைவராக உள்ளார். அங்கு அவர் $150 மில்லியன் கிரிப்டோ ஹெட்ஜ் நிதியை நிர்வகிக்கிறார்.
காமா பாயின்ட் கேபிட்டல்:
காமா பாயின்ட் கேபிட்டல் என்பது டிஜிட்டல் சொத்துகள் மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யும் ஹெட்ஜ் ஃபண்ட் ஆகும். தற்போது இந்த நிறுவனம் சிறந்த வருமானத்தை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு நம்பகமான தேர்வாக மாறியுள்ளது.
இதனையடுத்து, கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் BlockTower Capital என்ற நிறுவனம் ராகுல் ராயின் காமா பாயின்ட் கேபிட்டல் நிறுவனத்தை 35 மில்லியன் டாலர்களைக் கொட்டிக் கொடுத்து வாங்கியது.
"இது ஒரு கடினமான முடிவு. ஆனால், விவேகமான முடிவு. ஏனென்றால், நாம் ஏற்கெனவே இருக்கும் நிலையை அடைய பல ஆண்டுகள் ஆகும்.”
இப்படி மிகத் தெளிவாக இயக்கும் ராகுல் ராய், 24 வயதில் கிரிப்டோ முதலீட்டில் களமிறங்கி ஓராண்டுக்குள் அந்த நிறுவனத்தை மில்லியன் டாலருக்கு விற்று, இளம் கோடீஸ்வரராக உருவானததால்தான் ‘கிரிப்டோ உலகின் பேரரசர்’ எனப் புகழப்படுகிறார்.