Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

'தவறாக வழிகாட்டும் மற்றவர்களை நம்பாதீர்கள்; தடுப்பூசி போட்டுக் கொள்ள முன் வாருங்கள்’ - டாக்டர் அஷ்வின் கருப்பன்!

கொரோனா பரவலின் தற்போதைய மோசமான பாதிப்புகளில் இருந்து மீள 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் இதுகுறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கிறார் மருத்துவர் அஸ்வின் கருப்பன்.

'தவறாக வழிகாட்டும் மற்றவர்களை நம்பாதீர்கள்; தடுப்பூசி போட்டுக் கொள்ள முன் வாருங்கள்’ - டாக்டர் அஷ்வின் கருப்பன்!

Wednesday May 05, 2021 , 6 min Read

மே 1-ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்துள்ளது. இதற்காக CoWin என்கிற தளத்தில் பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டார்கள்.


ஆனால் போதிய மருந்து இல்லாததால் மே 1-ம் தேதி போடப்படாது என்று கூறப்பட்டாலும் விரைவில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்வது தொடர்பான பல்வேறு சந்தேகங்களைத் தீர்த்துவைக்கிறார் க்ளின்ஈகிள்ஸ் குளோபல் மருத்துவமனையின் டாக்டர் அஸ்வின் கருப்பன்.

Indu-Ashwin

யுவர்ஸ்டோரி தமிழ் ஆசிரியர் இந்துஜா ரகுனாதன் உடன் டாக்டர்.அஷ்வின் கருப்பன்

யுவர்ஸ்டோரி: கடந்த 15 நாட்களில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் எப்படி இருக்கிறது? கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்களா?


டாக்டர் அஸ்வின் கருப்பன்: தற்போதிருக்கும் சூழலை இரண்டாம் அலை என்று சொல்வதைக் காட்டிலும் கொரோனா சுனாமி என்று சொல்வதே சரியாக இருக்கும். முதல் அலையில் தொற்று கட்டுப்பாட்டில் இருந்தது. பலருக்கு அறிகுறிகள் ஏதும் இல்லை. பலர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டனர்.


இந்த அலையில் அதிகம் பாதிக்கப்பட்ட 45 வயதிற்கு மேற்பட்டோரும் நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற இணை நோய் இருப்பவர்களுக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.

தற்போது இந்தியாவில் 600-க்கும் மேற்பட்ட உருமாறிய வைரஸ் காணப்படுகிறது. தற்போது தாக்கும் வைரஸ் 45 வயதிற்குட்பட்டவர்களையே அதிகம் பாதிக்கிறது. 20-25 வயது நோயாளிகளையும் பார்க்கமுடிகிறது.

30 வயது முதல் 40 வயது வரை இருப்பவர்களே மிகவும் மோசமாக பாதிக்கப்படுவதாகத் தெரிகிறது. இவர்களே ஐசியூ-வில், வெண்டிலேட்டர் தேவைப்படும் அளவிற்கு அதிகளவில் இருக்கிறார்க்ள். 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டுவிட்டதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கபடுவது குறைந்துள்ளது.

எனவே இளம் வயதினரிடையே தற்போது தொற்று அதிகரித்திருப்பதற்கு வைரஸ் உருமாறிய தன்மையும் 45 வயதிற்குட்பவர்களுக்கு தடுப்பூசி போடாததுமே முக்கியக் காரணங்கள் எனலாம். இதுதவிர இளைஞர்கள் வேலைக்கு செல்ல ஆரம்பித்துள்ளதால் அவர்களிடையே அலட்சியப் போக்கும் காணப்படுகிறது.


யுவர்ஸ்டோரி: கடந்த ஆண்டு பலர் பாதிக்கப்பட்டாலும் இந்த ஆண்டுதான் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. இதற்கான காரணம் என்ன?


டாக்டர் அஸ்வின் கருப்பன்: முதல் காரணம் ஏற்கெனவே சொன்னது போல் இந்த வைரஸ் உருமாறியிருக்கிறது. இரண்டாவது Ro. ஒருத்தரிடமிருந்து எத்தனை பேருக்கு தொற்று ஏற்படும் என்பதை Ro என்கிற அளவுகோல் குறிக்கிறது. முன்பிருந்த ஸ்ட்ரெயின் 1–க்கும் குறைவாகவே இருந்தது. தற்போது இது 1.3 அல்லது 1.4 என்கிற அளவில் இருக்கிறது. அதாவது ஒருவர் 400-450 பேருக்கு இந்தத் தொற்றைப் பரப்புவதற்கான வாய்ப்புள்ளது.

1

மூன்றாவது காரணம் இந்த வைரஸின் வீரியம் அதிகமிருப்பதால் நுரையீரலை வேகமாக பாதிக்கிறது. இந்த வீரியத்தை இரண்டு விதமாகப் பார்க்கலாம். முதல் கட்டத்தில் தொடர்ந்து ஜுரம் 4-5 நாட்கள் வரை இருக்கும். அதைத் தொடர்ந்து சளி, இருமல் மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டது.


ஆனால், இரண்டாவது அலையில்ல் ஒரு நாள் காய்ச்சல் அல்லது அதீத சோர்வு இருக்கும். பின்னர் திடீரென்று மூச்சுத்திணறலுடன் மருத்துவமனைக்கு வருகிறார்கள்.

தொற்று சரியாகிவிடும் என்று நம்பி வீட்டிலேயே இருந்துவிட்டு காலதாமதமாக ஆக்சிஜன் பற்றாக்குறையுடன் மருத்துவமனைக்கு வருபவர்களும் இருக்கிறார்கள். இந்தத் தொற்று விரைவாகவே நுரையீலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்திவிடுவதால் மருத்துவமனைக்கு 70-75 என்கிற சாச்சுரேஷன் அளவில்தான் வருகிறார்கள். அதுவும் காரணம்.

யுவர்ஸ்டோரி:  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படும் நிலையில் அவர்களுக்கான முக்கிய வழிகாட்டல்கள் என்னவாக இருக்கும்?


டாக்டர் அஸ்வின் கருப்பன்: 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கே தொற்று பாதிப்பு இருந்தது என்பதால் அதை அடிப்படையாகக் கொண்டே தடுப்பூசிகள் பரிசோதனை செய்யப்பட்டன.

தற்போதுள்ள உருமாறிய வைரஸ் வீரியம் அதிகமிருப்பதால் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும், குறிப்பாக 25-45 வயது வரை இருப்பவர்கள் இன்றைய சூழலில் பாதுகாப்பாக இல்லை என்பதால் கட்டாயம் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும்.


சிலருக்கு இளம் வயதில் டயாபட்டீஸ், பிபி, கொலஸ்ட்ரால் போன்ற பாதிப்புகள் இருக்கலாம். என்றாலும் பயப்படவேண்டிய அவசியமில்லை. வயதானவர்களில் பிளட் தின்னர்ஸ் அல்லது வேறு மருந்து எடுத்துக்கொண்டிருப்பார்கள், சிலருக்கு அலர்ஜி இருக்க வாய்ப்புண்டு. இதுபோன்ற பிரச்சனைகள் இளம் வயதினருக்கு இருப்பதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு.

மக்கள் எந்தவித அச்சமும் இன்றி வதந்திகளை நம்பாமல் உடனடியாகப் பதிவு செய்துகொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும்.

தொற்று உருமாறிக்கொண்டே ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவிக்கொண்டேதான் இருக்கும். 80 சதவீத்த்திற்கும் மேற்பட்டவர்களுக்கு எதிர்பாற்றல் உருவானால் தானாகவே குறைந்துவிடும். எனவே விரைவில் தடுப்பாற்றல் உருவானால் தப்பிக்கலாம்.


யுவர்ஸ்டோரி: இளைஞர்கள் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளாத காரணத்தால் இணை நோய் இருப்பது கண்டறியப்படாத நிலையில் அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது பாதுகப்பானதா?


டாக்டர் அஸ்வின்: 30-45 வயதுடையவர்களுக்கு நீரிழிவு, பிபி, கொலஸ்ட்ரால் போன்றவை இருப்பதற்கு வாய்ப்பு அதிகம். அதை பரிசோதனை செய்துகொண்ட பிறகும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். புற்றுநோய், அலர்ஜி உள்ளிட்ட வேறு பாதிப்புகள் இருப்பவர்கள் மருத்துவ ஆலோசனை எடுத்துக்கொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.


இன்று அனைத்து தடுப்பூசி மையங்களிலும் பிபி, பல்ஸ், சுகர் செக் செய்த பிறகே தடுப்பூசி போடுகிறார்கள். எனவே தனிப்பட்ட பரிசோதனைகள் தேவையில்லை.

தடுப்பூசி

யுவர்ஸ்டோரி: வெளியில் அதிகம் நடமாடக்கூடிய இளைஞர்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுமோ என்கிற அச்சம் உள்ளது. இவர்களுக்கு எந்த மாதிரியான பக்க விளைவுகளை ஏற்படும்?


டாக்டர் அஸ்வின்: இந்தியாவில் மட்டும் 10 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. உலகளவில் இந்தியாவில்தான் அதிகளவில் போடப்பட்டுள்ளது. யாருக்கும் பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ஒரு சில சம்பவங்கள் நடந்ததற்கும் தடுப்பூசிக்கும் தொடர்பிருக்க வாய்ப்பில்லை.


வழக்கமாக ஊசி போடும்போது ஊசி போட்ட இடத்தில் வலி இருப்பது போல் இந்தத் தடுப்பூசிக்கும் இருக்கலாம். இதுதவிர காய்ச்சல், சளி, உடல்சோர்வு போன்ற பாரசிடமால் போட்டு சரிசெய்துவிடக்கூடிய சிறு உபாதைகள் இருக்கலாம்.

தடுப்பூசி போட்ட உடனேயே எதிர்ப்பாற்றல் வந்துவிடாது. முதல் டோஸ் செலுத்திக்கொண்ட 28 நாட்களில் 65 சதவீதம் எதிர்பாற்றல் வரலாம். இரண்டாவது டோஸ் போட்ட 14 நாட்களில் 100 சதவீத எதிர்பாற்றல் கிடைக்கும்.

தடுப்பூசி போட்டதும் தொற்று ஏற்படாது என்கிற நம்பிக்கையில் அஜாக்கிரத்தையாக இருப்பதால் தொற்று ஏற்படுகிறது.


யுவர்ஸ்டோரி: இளைஞர்கள் மனதில் தோன்றும் பயம், குழப்பம், சந்தேகம் போன்றவற்றைக் களையும் வகையில் தடுப்பூசி போட்டுக்கொள்வதால் ஏற்படும் ஆபத்துகளையும் கொரோனா பாதிப்பினால் ஏற்படும் ஆபத்துகளையும் ஒப்பிட்டு விளக்குங்கள்?


டாக்டர் அஸ்வின்: தடுப்பூசி போட்டுக்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் மிகக்குறைவு. தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு 0.04%. அதாவது 10,000 பேரில் இரண்டு பேருக்கு தொற்று ஏற்படலாம்.

தடுப்பூசி செலுத்திக்கொண்டு தொற்று ஏற்பட்டாலும் லேசான அறிகுறிகளுடன் சரியாகிவிடும். தடுப்பூசிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதால் பாதுகாப்பானது என்பதையே தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
இளைஞர்கள் தங்களையும் தற்காத்துக்கொண்டு சமூகப் பொறுப்புணர்வுடன் மற்றவர்களுக்கும் சரியான தகவல்களைக் கொண்டு சேர்த்து பாதுகாக்கவேண்டும்.

80 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போட்டால் மட்டுமே இதிலிருந்து வெளியே வரமுடியும். தடுப்பூசி போடவில்லையெனில் இதிலிருந்து தப்பிப்போமா  என்பதே சந்தேகம்தான். இன்று நிறைய இளைஞர்கள் இறந்து கொண்டிருகிறார்கள் என்பதே உண்மை.

தடுப்பூசி 100% ஐசியூ செல்லாமல் தடுக்கும் என்பதே உண்மை. தேவையில்லாத வதந்திகளைப் பரப்புவதை நிறுத்தினாலே இதிலிருந்து வெளியே வரலாம்.

யுவர்ஸ்டோரி: ஓராண்டாக வெளியில் நடமாடினாலும் தொற்று பாதிக்கவில்லை, எதற்காக ஊசி போட்டுக்கொள்ளவேண்டும் என்று சிலர் கேள்வியெழுப்புகிறார்கள். இவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?


டாக்டர் அஸ்வின்: பயணம் செய்பவர்கள் விபத்துகளைத் தவிர்க்க ஹெல்மெட், சீட் பெல்ட் போன்றவற்றை அணிவதில்லையா? அதுபோல் தடுப்பூசியும் தற்காப்பு நடவடிக்கைதான்.

தடுப்பூசி என்பது வருமுன் காப்பதற்கான உத்தி. தடுப்பூசி என்பது உங்களை மட்டும் தற்காத்துக்கொள்வதல்ல. வீட்டில் இருக்கும் அனைவரையும் பாதுகாப்பதற்கு சமம் என்பதால் அலட்சியம் வேண்டாம்.

யுவர்ஸ்டோரி: இளைஞர்களே அதிகளவில் ரத்ததானம் செய்கிறார்கள். தடுப்பூசி போட்டுக்கொண்டால் எத்தனை நாட்களுக்குப் பிறகு ரத்தம் கொடுக்கலாம்?

டாக்டர் அஸ்வின்: ரத்த வங்கியில் ரத்தம் கொடுப்பவர்களில் 90% பேர் இளைஞர்கள். கடந்த ஆண்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் வாகன போக்குவரத்து குறைவு; விபத்துகளும் குறைவு; அறுவை சிகிச்சைகளும் குறைவு; இதனால் ரத்தத்திற்கான பற்றாக்குறை கடந்த ஆண்டு இல்லை.


இந்த ஆண்டு மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அறுவைசிகிச்சைகளும் நடந்து வருகிறது. கல்லூரிகள் இல்லாததால் ரத்தத் தான முகாம்களும் நடப்பதில்லை. இதனால் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது.

எந்த தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் 28 நாள் முதல் 60 நாள் வரை ரத்தம் கொடுக்கக்கூடாது. குறிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும்போது உடம்பில் எதிர்பாற்றல் உருவாகும். இந்த நிலையில் ரத்தம் கொடுக்கும்போது அந்த ரத்தத்தைப் பெற்றுக்கொள்வர்களுக்கு ரியாக்‌ஷன் ஏற்பட வாய்ப்புண்டு.

எனவே தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு 2-3 நாட்களுக்கு முன்பு ரத்தம் கொடுத்துவிட்டுப் பிறகு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.


யுவர்ஸ்டோரி: தொற்று இருப்பவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளக்கூடாது என்று சொல்லப்படும் நிலையில் அறிகுறி தென்படாதவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா? தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் எத்தனை நாட்களுக்குப் பின்னர் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்?


டாக்டர் அஸ்வின்: அறிகுறி இல்லாதவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் தவறில்லை. அச்சப்படவேண்டாம். ஆண்டிபாடி பரிசோதனை செய்துகொண்டுதான் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும் என்று பரிந்துரைக்கப்படுவதில்லை.

கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் குணமான நாளில் இருந்து 4 வாரங்கள் கழித்து போட்டுக்கொள்ளலாம்.

வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்துகொண்டே செல்வதால் ஏற்கெனவே தொற்று ஏற்பட்டு மீண்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்போது எதிர்ப்புசக்தியை மேலும் பலப்படுத்துகிறது. எனவே கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தாலும் தடுப்பூசி போட்டுகொள்வதே நல்லது.


யுவர்ஸ்டோரி: எந்த தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்பது மக்களிடையே விவாதப்பொருளாக மாறியுள்ள நிலையில் உங்கள் ஆலோசனை என்ன?


டாக்டர் அஸ்வின்: முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது பாரத் பயோடெக் கோவாக்சின். மற்றொன்று கோவிஷீல்ட். இரண்டுமே தற்போது போடப்பட்டு வருகிறது. ஸ்புட்னிக்-வி தடுப்பூசி அடுத்து போடப்பட உள்ளது. ஃபைசர், மார்ட்ர்னா தடுப்பூசிகளை அமெரிக்கா அனுப்ப உள்ளது.

மக்களுக்குக் குழப்பமே தேவையில்லை. எல்லா தடுப்பூசிகளுமே பரிசோதனைகளைக் கடந்து வந்துள்ளது. தடுப்பூசி மையத்தில் எந்தத் தடுப்பூசி கையிருப்பு உள்ளதோ அதைப் போட்டுக்கொள்ளலாம். முதல் டோஸ் போட்ட அதே தடுப்பூசியை இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ளவேண்டும்.

முதலில் கோவிஷீல்ட் நன்றாக வேலை செய்கிறது என்று சொல்லப்பட்டது. பின்னர் கோவாக்சின் நல்லது என்று கூறப்பட்டது. இது மக்களின் கருத்து மட்டுமே. விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்படவில்லை.


யுவர்ஸ்டோரி: தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக இருப்பினும் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மக்கள் ஏன் தயக்கம் காட்டுகிறார்கள்?

தடுப்பூசிகள்

டாக்டர் அஸ்வின்: தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகளவில் மக்களிடையில் தயக்கம் இருப்பது உண்மைதான். இளைஞர்களிடம் விழிப்புணர்வு உள்ளது. பல இளைஞர்கள் அப்பா, அம்மாவை வலுக்கட்டாயமாக கூட்டி வந்து தடுப்பூசி போட்டதைப் பார்த்திருக்கிறேன். ஒரு சிலர் இதில் அரசியல் செய்கிறார்கள். மற்றவர்களைத் தவறாக வழிநடத்துகிறார்கள். இதுதான் பிரச்சனை.

தடுப்பூசி மட்டுமே மீள்வதற்கான ஒரே வழி என்றிருக்கும் நிலையில் வதந்திகளை நம்பாதீர்கள், வதந்திகளைப் பரப்பாதீர்கள். பலர் தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டு மற்றவர்களை தவறாக வழிநடுத்துகிறார்கள். எனவே நீங்கள் உங்களை நம்புங்கள், தைரியமாக தடுப்பூசி எடுத்துக்கொள்ளுங்கள்.

தமிழக மக்கள் ஆர்வமாகவே இருக்கிறார்கள்; அதேசமயம் அவர்களிடம் அச்சமும் உள்ளது. மக்களிடம் சரியான தகவல்கள் சென்றடைவதில்லை.


யுவர்ஸ்டோரி: ஏற்கெனவே அழுத்தத்தில் இருக்கும் சுகாதாரத் துறையின் சுமை மேலும் கூடாதவாறு தடுப்பூசியின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எப்படி எடுத்துரைக்கலாம்?


டாக்டர் அஸ்வின்: தடுப்பூசி போடவெண்டுமா என்பதை பாதிக்கப்பட்டவர்களிடம் கேட்டுப் பார்த்தால் புரிந்துகொள்ள முடியும். இவர்கள் கதறி அழுகிறார்கள். மக்கள் ஆம்புலன்ஸில் உயிரிழக்கிறார்கள். இப்படிப்பட்ட அவலநிலை உள்ளது.


ஐசியூ சென்று பார்த்தால் எத்தனை இளைஞர்கள் வெண்டிலேட்டரில் உயிருக்குப் போராடி வருகிறார்கள் என்பது புரியும். படுக்கை கிடைக்காமல் ஆக்சிஜனுடன் காத்திருக்கிறார்கள்.

இந்த நிலை வரக்கூடாது என்பதற்காகவே தடுப்பூசி.

இதையும் கடந்து செல்வோம் என்கிற நம்பிக்கையுடன் இருங்கள். மருத்துவர்களான நாங்கள் உங்களைக் காப்பாற்றத் துணை நிற்போம். நீங்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்.