பொறியாளர்கள் மவுசை நகர்த்துவதில்லை தெரியுமா...!
”கடினமான வேலைகளை செய்ய சோம்பல் மிக்க ஒருவரை தேர்வு செய்கிறேன். ஏனெனில், சோம்பல் மிக்கவர், அதை செய்வதற்கான எளிய வழியை கண்டறிவார்.”- பில்கேட்ஸ்
சில ஆண்டுகளுக்கு முன் 2009-10 ல் நான் அப்போது பணியாற்றிய கூகுள் நிறுவனம், பாதுகாப்பு காரணங்களுக்காக எல்லாவற்றையும் ஆப்பிளின் மேக்புக்கிற்கு மாற்ற தீர்மானித்தது. என் வாழ்க்கையில் முதல் முறையாக மேக்புக்கை திறந்த போது, அதை பயன்படுத்த திண்டாடினேன். அதன்பிறகு ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் அதன் மல்டி டச் வசதி, மல்டி பிங்கர் ஸ்வைப் செயல்முறைக்கும், வேகமாக இயக்கவும் கற்றுக்கொண்டு பழகினேன்.
திடீரென என் சக ஊழியர் ஒருவர், என் விரல்கள் டிராக்பேட் மீது வேகமாக நகர்வதை பார்த்து, மொத்த குழுவினர் முன் அவர், ’பொறியாளர்கள் மவுசை நகர்த்துவதில்லை’ என சத்தமாக கூறினார்.
நான் சங்கடமாக உணர்ந்தாலும் அவர் சொல்வதுடன் உடன்படாமல் இருக்க முடியவில்லை. அவர் சொன்னது என்னவெனில், இது மிக அதிக உழைப்பை எடுத்துக்கொண்டுள்ளது, இதற்கு பதில் நான் கீபோர்டு குறுக்கு வழிகளை கற்றுக்கொண்டிருக்க வேண்டும். டிராக் பேடில் நகர்த்துவதை விட இது சுலபமானது. இது மிகவும் அடிப்படையான சங்கதி. விண்டோசில் நாள் முழுவதும் உலா வருவது போன்ற செயலை குறைவான ஆற்றலோடு செய்ய வேண்டும்.
கண்டுபிடிப்புகளின் தாய்
இதை இன்னும் நீட்டித்து சொல்வது என்றால், பொறியாளர்கள் சோம்பேரிகளாக இருக்க வேண்டும் என சொல்லப்படுவதில் தப்பில்லை. சோம்பல் என்றால், உங்கள் ஆற்றலை சரியாக பயன்படுத்துவதாகும். ஏனெனில் நீங்கள் ஒரு பொறியாளர்.
பொறியியல் என்பது, ஏதேனும் ஒரு விதத்தில் சிறந்த வழியை கண்டறிவதாகும். பொறியாளர்கள் விரைவில் அலுப்படைவார்கள்.
நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், மீண்டும் மீண்டும் செய்ய வேண்டியவற்றை நீக்கும் தொழில்நுட்பம் மற்றும் பொருட்களை நீங்கள் உருவாக்க வேண்டும் என்பது தான்.
இருந்தும், உங்களால் பெரும்பாலான மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய பணிகளில் இருந்து விடுபட முடியாது. இதற்கு என்ன வழி என்று கேட்டால், மீண்டும் மீண்டும் செய்ய வேண்டியவற்றை மேற்கொள்ளுமாறு கூறப்பட்டதுமே, அதற்கான மேடை அல்லது திரும்ப பயன்படுத்தக்கூடியதை நீங்கள் உருவாக்க வேண்டும்.
யாரேனும் உங்களிடம் தரவுகள் தேவை எனக் கேட்டால், அவர்கள் மூன்றாவது முறை உங்கள் மேஜைக்கு வந்தால், தரவுகள் எடுப்பதைவிட்டு அதற்காக ஒரு நிரலை எழுதி அவர்களிடம் கொடுத்துவிடுங்கள். உங்களை பலரும் தேடி வந்து வேறு வேறு கோரிக்கைகள் வைத்தால் அனைத்து வகை தரவுகளையும் எடுத்து தரும் வகையில் அதை பொதுவானதாக உருவாக்குங்கள்.
சுருக்கமாகச் சொல்வதானால், சோம்பல் மற்றும் அலுப்பை கண்டுபிடிப்பிற்கான உந்துதலாக மாற்றுங்கள்!
எச்- குறியீடு
இன்னொரு விஷயம், பயன்படுத்திய பிறகு தூக்கி வீசும் நிரலை எழுதாதீர்கள். எப்போதும் மீண்டும் பயன்படுத்துவதற்காக உருவாக்குங்கள். மீண்டும் பயன்படுத்த உருவாக்கும் போது, அது ஒருங்கிணைப்புக்கு ஏற்றதாகிறது. நல்ல நிரல் என்பது நேரம் எடுக்கக் கூடியது என்பதும், வேகமாக உருவாக்கப்படுவது மோசமானது என கொள்ளப்படுவதையும் அறிவேன்.
இதில் நான் மாறுபடுகிறேன். நீங்கள் எப்போதும் மீண்டும் பயன்படுத்த உருவாக்கினீர்கள் என்றால், ஒவ்வொரு முறை நீங்கள் புதிய நிரலை எழுதும் போதும், அது நீங்கள் ஏற்கவே உருவாக்கியதன் மீது அமைந்திருக்கும். இது அழகாகவும், வேகமாகவும் அமையும் என்றாலும், இப்படி செய்வதை உங்கள் முறையாக வைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் பணி மீண்டும் பயன்படுத்துப்படுவது உங்களுக்கு ஊக்கம் அளிப்பதை உணரலாம். அறிவியல் ஆய்வு சமூகம் இப்படி தான் செயல்படுகிறது.
எச்.குறியீடு எனும் வினோத வழியை குறிப்பிட விரும்புகிறேன். இது ஒரு விஞ்ஞானியின் ஆய்வு வெளியீட்டின் தாக்கத்தை மதிப்பிடுகிறது. அதாவது, உங்கள் ஆய்வு எத்தனை முறை புதிய ஒன்றை உருவாக்க பயன்படுகிறது என கணக்கிடுகிறது. ஏனெனில் தாக்கத்தை புரிந்து கொள்வது, இன்னும் புதியவற்றுக்கு அடிப்படையாக அமையக்கூடியவற்றை கண்டறிய ஊக்குவிக்கிறது.
அருபமான பொறியியல்
கடைசியாக நான் சுட்டிக்காட்ட விரும்பும் விஷயம், அருபத் தன்மை தொடர்பானது. அருப தன்மை என்பது மிகவும் சுவாரஸ்யமானது. இந்த உயர் சிந்தனை முறையே 50,000 ஆண்டுகளுக்கு முன் நியாண்டெர்தால்கள் உள்ளிட்ட சக விலங்கு இனங்களில் இருந்து மனித இனம் மேம்பட்டு வர உதவியது.
நம் வாழ்க்கையில் பல இடங்களில் இதை பயன்படுத்துகிறோம் என அறிவேன். நாம் தினசரி பயன்படுத்தும் விஷயங்களில் இதை கையாள்கிறோமா? ஏனெனில், நீங்கள் ஒரு விஷயத்தை அருபமாக சிந்தித்து, அதை செயல்படுத்தினால், நீங்கள் ஒரு பொறியாளராக உருவாகி இருக்கிறீர்கள் எனப் பொருள். இது தான் உயர்மட்ட பொறியியல்.
அடிப்படையில் நீங்கள் மீண்டும் பயன்படுத்துவதற்கு மட்டும் உருவாக்கவில்லை, மறு சுழற்சிக்கும் உருவாக்குகிறீர்கள். நீங்கள் மற்ற பொறியாளர்கள் கூட்டத்தில் இருந்து தனித்து நிற்கிறீர்கள் என பொருள். நீங்கள் அருபமான பிரேம் ஒர்க் அல்லது நூலகத்தை உருவாக்கியிருக்கிறீர்கள். இப்போது உங்களுக்கான பாகங்கள் இதன் மீது உருவாக்கப்படலாம் என்பதோடு, நீங்கள் கற்பனை செய்திராத பாகங்கள் அல்லது பயன்கள், எதிர்காலப் பயன்களும், காலத்தை விஞ்சி நிற்கக் கூடியவற்றையும், விற்பனை வாசகங்களை கடந்து நிற்கக் கூடியவற்றை உருவாக்கலாம். ஏனெனில், இந்த வகை பிரேம் ஒர்க் நீண்ட ஆயுள் காலம் கொண்டிருக்கும். நீண்ட ஆயுல் காலத்தை விட இதற்கு அதிக பலன் இருப்பதாகவே நினைக்கிறேன்.
அமேசான் கதை இதற்கு நல்ல உதாரணம். 2000களின் துவக்கத்தில், அமேசான் பொறியாளர்கள், தளத்தின் வாடிக்கையாளர்கள் அதிகரிப்புக்கு ஏற்ப தங்கள் டேட்டா செண்டரை சுத்தம் செய்ய வேண்டியிருந்தது. அவர்கள் தங்கள் மொத்த பிரேம் ஒர்கையும் அருபமாக்கினர். அப்போது, அமேசான் பல ஆண்டுகளுக்குப் பிறகு பெறக்கூடிய தொடர்பில்லாத வர்த்தகங்களுக்கான அடித்தளத்தை அமைக்கிறோம் என அவர்கள் உணரவேவில்லை. இதுவே அமேசான் வெப் சர்வீசாசனது. மறுசுழற்சிக்கான வெற்றிகரமான உதாரணம்.
மூன்று ’ஆர்’கள்
மொத்தத்தில், நீங்கள் ஏற்கனவே ஊகித்திருக்கக் கூடியது போல், குறைப்பது, மறு பயன்பாடு மற்றும் மறு சுழற்சியை குறிக்கும் மூன்று ஆர்களை பயன்படுத்துங்கள். உங்கள் நேரத்தையும், முயற்சியையும் குறையுங்கள். மறுபயன்பாட்டிற்கும், மறுசுழற்சிக்கும் உருவாக்குங்கள்.
இந்த மூன்று ஆர்கள் ஐடியா எனக்கு மிகவும் நெருக்கமானது. பெங்களூரில் மண்டூர் குப்பை மேட்டை பார்த்த பிறகு, குப்பை நிர்வாகத்திற்காக இதை தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். அதோடு இந்த ஐடியாவை நீங்கள் வாழ்க்கை முழுவதும் மறு சுழற்சி செய்யலாம்.
ஆங்கில கட்டுரையாளர்: விநோத் குமார் (உலகின் முன்னணி மென்பொருள் பொறியாளர்களில் ஒருவர். ) | தமிழில்:சைபர்சிம்மன்
(பொறுப்பு திறப்பு: கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகள், பார்வைகள் ஆசிரியருடையவை, யுவர்ஸ்டோரி கருத்தை பிரதிபலிக்கவில்லை).