குப்பையில் இருந்து கோடிகளை அள்ளும் பெண் - கைகொடுத்த ‘கருப்பு தங்கம்’
'கருப்பு தங்கம்' என அழைக்கப்படும் மண்புழு உரம் தயாரிப்பு மூலமாக கோடிக்கணக்கில் சம்பாதித்து வரும் பெண் சோசியல் மீடியாவில் கவனம் ஈர்த்துள்ளார்.
'கருப்பு தங்கம்' என அழைக்கப்படும் மண்புழு உரம் தயாரிப்பு மூலமாக கோடிக்கணக்கில் சம்பாதித்து வரும் தொழிலதிபர் சோசியல் மீடியாவில் கவனம் ஈர்த்துள்ளார்.
விவசாயத்திற்கு மட்டுமல்ல, திடக்கழிவு மேலாண்மையிலும் மண்புழு உரம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இயற்கையில் கிடைக்கும் விவசாயக் கழிவுப் பொருள்களான சாணம், இலை, தழை போன்றவற்றை உள்கொண்டு எச்சங்களை சிறுசிறு உருண்டைகளாக மண்புழுக்கள் வெளியேற்றுவதையே மண்புழு உரம் என்கிறோம். இதில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து என அனைத்தும் கிடைப்பதால் பயிர்கள் தழைத்து வளர உதவுகிறது.
உத்திர பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த சனா கான் என்பவர் மண்புழு உரம் (மண்புழுவைப் பயன்படுத்தி செறிவூட்டப்பட்ட உரம்) தயாரித்து ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டி வருகிறார்.
தொழிலதிபர் சனா கானுக்கு, தான் மருத்துவராக வர வேண்டும் என்பதே சின்ன வயது கனவாக இருந்துள்ளது. நுழைவுத்தேர்வில் கோட்டை விட்டதை அடுத்து, அவருக்கு இன்ஜினியரிங் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்போது இறுதியாண்டு படிக்கும் போது மண்புழு உரம் தயாரிப்பது தொடர்பான புரோஜெக்டில் சனா கான் பணியாற்றியுள்ளார்.
அன்று முதல் இதையே தொழிலாக செய்யக்கூடாது என்ற எண்ணம் அவருக்குள் உருவாக ஆரம்பித்துள்ளது.
"புரோஜெக்டில் பணியாற்றும் போது, என் சிந்தனை முழுவதும் மண்புழுக்கள் பற்றியே இருந்தது. இந்தத் திட்டத்தை ஏன் பெரிய அளவில் செயல்படுத்தக்கூடாது? என யோசித்தேன். மண்புழுக்களை அதிக அளவில் இனப்பெருக்கம் செய்ய வைத்து, தற்போது மண்புழு உரம் தயாரிப்பதையே எனது தொழிலாக மாற்றிக்கொண்டேன்,” என்கிறார்.
2014ம் ஆண்டு தனது சகோதரர் வழங்கிய நிதியுதவி மூலமாக ’எஸ்.ஜே. ஆர்கானிக்ஸ்’ என்ற மண்புழு உரம் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
நிறுவனத்தை தொடங்கிய போது நிறைய நஷ்டங்களை சந்திக்க நேர்ந்தாலும், சனா கான் அதனை லாபகரமானதாக மாற்றக்கூடிய புதிய வழியைக் கண்டுபிடித்தார். ஆம், கால்நடைகள், வீட்டுக்கழிவுகள் போன்ற மக்கும் குப்பையை மண்புழு உரமாக மாற்ற முடிவெடுத்தார். சனா கானின் இந்த முடிவு அவருக்கு லாபத்தை அள்ளிக்கொடுக்க ஆரம்பித்தது.
தற்போது எஸ்.ஜே.ஆர்கானிக்ஸ் மண்ணிற்கு ஏற்ற வகையிலான தனித்துவமான மண்புழு உரங்களை தயாரித்து வருகிறது. அதேபோல், ஒவ்வொரு தொகுதி மண்புழு உரமும் சான்றிதழ் தரநிலைகளை பூர்த்தி செய்ய ஆய்வக சோதனை செய்யப்படுகிறது.
2020 ஆம் ஆண்டில், இந்நிறுவனம் 500 டன் கழிவுகளை சேகரித்து, அதன் மூலம் மாதம் 150 டன் மண்புழு உரத்தை உற்பத்தி செய்துள்ளது. இன்று ஆண்டுக்கு ரூ.1 கோடி வருவாய் ஈட்டி, 30க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பை வழங்குகிறது.
எஸ்.ஜே.ஆர்கானிக்ஸ் ஆலோசனையின் கீழ், மீரட்டில் உள்ள 100க்கும் மேற்பட்ட பள்ளிகளில் மண்புழு உரம் தயாரிக்கும் தளங்களை அமைத்துள்ளன. தொழில்முனைவோருக்கான பயிற்சி நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது.
மண்புழு உரம் தயாரிப்பது குறித்த தனது அறிவைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், உத்தரப் பிரதேசத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் இயற்கை விவசாய முறைகளை பிரபலப்படுத்த முடியும் என்று சனா நம்புகிறார்.
தகவல் உதவி - தி பெட்டர் இந்தியா | தமிழில் - கனிமொழி