நகைகளை விற்று, வங்கிக் கடன் வாங்கி சாலைகளில் திரியும் நாய்களை பராமரிக்கும் நல்லுள்ளம் படைத்தவர்!
மேற்குவங்கத்தைச் சேர்ந்த நிலஞ்சனா பிஸ்வாஸ் தனது முயற்சிக்கு போதிய ஆதரவு கிடைக்காதபோதும் சாலைகளில் திரியும் சுமார் 400 நாய்களை பராமரித்து வருகிறார்.
மேற்குவங்கத்தில் உள்ள நாடியா மாவட்டத்தைச் சேர்ந்த 45 பெண்மணி ஒருவர் தனது பகுதியில் சாலைகளில் திரியும் 400 நாய்களைப் பராமரிக்க 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள தனது நகைகளை விற்பனை செய்துள்ளார். 3 லட்ச ரூபாய் வங்கியில் கடன் வாங்கியுள்ளார்.
நிலஞ்சனா பிஸ்வாஸ் இந்த நாய்களுக்கான உணவு, மருந்து மற்றும் இதர பராமரிப்புகளுக்காக ஒரு மாதத்திற்கு சுமார் 40,000 ரூபாய் வரை செலவிடுகிறார். ஆதரவற்று திரியும் இந்த நாய்களை மீட்க இவர் தனியாகவே போராடி வருகிறார்.
பலரும் இவரது முயற்சிக்கு உதவ முன்வரவில்லை. அருகில் வசிப்போர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். நிலஞ்சனாவின் கணவர் பபோதோஷ் பிஸ்வாஸ் ஒரு தொழிலதிபர். இவரும் நிலஞ்சனாவின் முயற்சிக்கு எந்த விதத்திலும் ஆதரவளிக்கவில்லை. நிலஞ்சனாவின் மகனும் கல்லூரியில் படிக்கும் மகளும் தவிர மற்ற அனைவருமே இவரது செயலை எதிர்த்தனர்.
2014-ம் ஆண்டு நிலஞ்சனா சாலைகளில் திரிந்துகொண்டிருந்த சில நாய்களை பராமரிக்கத் தொடங்கினார். இன்று 400 நாய்களை பராமரித்து வருகிறார். மூன்று பணியாளர்கள் இவருக்கு ஆதரவளிக்கின்றனர். அவர்கள் தெருக்களில் உள்ள நாய்களுக்கு சிக்கன், சாதம் உள்ளிட்ட உணவுகளை தயாரித்து விநியோகம் செய்கின்றனர். இதற்காக இவர் மாதம் 10,000 ரூபாய் செலவிடுவதாக நியூஸ் 18 தெரிவிக்கிறது. அவர் கூறும்போது,
“ஒரு நாயை மட்டுமே நான் வாங்கினேன். மற்றவை சாலைகளில் இருந்து வந்தவை. ஒரு சில நாய்கள் தெரிந்தவர்களிடம் இருந்து பெறப்பட்டது. ஆனால் அனைத்துமே எனக்கு பிடித்தமானவை,” என்கிறார்.
நிலஞ்சனாவின் வீட்டில் நாய்களுக்கான உணவை சேமிக்க ஒரு ரெஃப்ரிஜரேட்டர் உள்ளது. உணவு சமைக்கப்பட்டதும் ஊழியர் ஒருவர் உணவை பெரிய பானைகளில் வைக்கிறார். அவை மின் ரிக்ஷாக்களில் எடுத்து செல்லப்பட்டு வீதிகளில் உள்ள நாய்களுக்கு வழங்கப்படுகிறது.
கட்டுரை: THINK CHANGE INDIA