Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

300 ரூபாயில் வீட்டில் காளான் வளர்த்து, சந்தையில் 1200 ரூபாய் வரை விற்கலாம் தெரியுமா?

சத்தான அதே சமயம் சுவையான காளான் கொண்டு பல உணவுவகைகள் தயாரிக்கமுடியும். இந்த காளான்களை வீட்டிலேயே வளர்க்க சுலபமான வழிமுறை இதோ:

300 ரூபாயில் வீட்டில் காளான் வளர்த்து, சந்தையில் 1200 ரூபாய் வரை விற்கலாம் தெரியுமா?

Thursday September 03, 2020 , 3 min Read

உணவில் காளான் சேர்ப்பது அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. அதிக ப்ரோடீன் சத்து உள்ளதால் மஷ்ரூம் பிரியாணி முதல் மஷ்ரூம் ஃப்ரை என பல விதவித உணவுவகைகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சமைத்தும், ஹோட்டல்களில் சாப்பிட்டும் வருகின்றனர்.


இத்தகைய சிறப்பு மிகுந்த காளானை வீட்டிலேயே வளர்க்கமுடியும் தெரியுமா?


காளானில் பலவகைகள் உண்டு, அதில் சிலவற்றவையே உண்பதற்கு உகந்ததாகும். அதை தெரிந்து கொண்டு பயன்படுத்துவது நல்லது. காளாண் என்பது பூஞ்சான வகையைச் சார்ந்தது. உலகில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளான் வகைகள் உள்ளன. அவற்றுள் 100 வகை காளான்கள் மட்டும் நச்சுத் தன்மையற்றவையாகவும், உணவாகவும் பயன்படுத்தப்படக்கூடிய வகையாகும். இக்காளான்களில் 90 சதவீதம் ஈரப்பதமும், அதிகளவில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய புரதமும், அமினோ அமிலங்களும் மற்றும் நுண் ஊட்டச் சத்துக்களும், வைட்டமின்களும் உள்ளன.


ஆய்ஸ்டர் மஷ்ரூம் அதாவது சிப்பிக் காளான் பெரும்பாலான உணவில் பயன்படுத்தக் கூடிய வகையாகும். இதில் உள்ள புரதச்சத்து அனைவருக்கும் சிறந்த அதே சமயம் ஆரோகியமானதாகும். இந்த சிப்பிக் காளான் வகையை வீட்டில் வளர்க்க சிறிய இடம் போதுமானதாகும்.


சிறிய, இருட்டான, காலியான ஒரு இடம் இருந்தால் அதில் சுமார் 2 கிலோ காளான்களை வளர்த்திடமுடியும். காளான் வளர்ப்பு குறித்து தற்போது பல பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்படுகின்றன. காளான் வளர்ப்பது சுலபம் ஆனால் அதற்குத் தேவையான மூலப் பொருட்களை சேகரிப்பதுதான் சற்று கடினமானதாகும்.

Oyster Mushroom
“காளான் சாகுபடிக்குத் தேவையான விதைகளை உங்கள் அருகில் இருக்கும் தோட்டக்கலை மையத்தில் இருந்து வாங்கிக் கொள்ளுங்கள். அதைத்தவிர தேவையான மற்ற பொருட்களையும் அங்கிருந்து வாங்கி வையுங்கள்.”

இப்போது காளான் வளர்க்கத் தேவையான விதை மற்றும் இதரப் பொருட்கள் அமேசான் போன்ற ஆன்லைன் தளத்திலும் கிட் ஆக கிடைக்கிறது. அதையும் நீங்கள் வாங்கி எளிதில் காளான் வளர்ப்பில் ஈடுபடலாம்.

2 கிலோ காளான் வளர்க்க உங்களுக்குத் தேவையான பொருட்கள் இதோ:

  • 1 கிலோ கோதுமை வைக்கோல் / நெல் வைக்கோல்
  • 100 கிராம் காளான் விதைகள் (Spawn)
  • 10 லிட்டர் தண்ணீர்
  • தெர்மாமீட்டர்
  • ஒளி ஊடுருவக்கூடிய பிளாஸ்டிக் பை (2 கிலோ எடையை நிரப்பக்கூடிய அளவு பை)
  • வாளி / பக்கெட்
  • போர்வை / தெர்மோகோல்


காளான் வளர்ப்பின் முதல் கட்டம்

முதலில் கோதுமை வைக்கோல் / நெல் வைக்கோலை கிருமி நீக்கம் செய்யவேண்டும். தண்ணீரை 70° செல்சியஸ் அளவிற்கு சுட வைக்கவேண்டும் (வீட்டில் உள்ள கெய்சரிலும் இதை செய்யலாம்). தெர்மாமீட்டர் கொண்டு சூட்டின் அளவை சரிப்பார்க்கலாம். பின்னர் ஒரு வாளியில் அந்த சுடுநீரை ஊற்றி அதில் முழு வைக்கோலை 2 மணி நேரம் ஊறவைக்கவும். வாளியை அல்லது பக்கெட்டை தெர்மாகோல் அல்லது ஒரு போர்வையால் மூடிவிடவும்.


அடுத்து ஊறவைத்த வைக்கோலை 6-7 மணி நேரம் ஒரு விசிறி அல்லது நிழலின் கீழ் (சூரிய ஒளி இல்லாமல்) உலர வைக்க வேண்டும். இந்த செயல்முறையை ஒரே இரவில் செய்யப்படலாம். வைக்கோல் முழுமையாக காய்ந்ததும், நீங்கள் அதை 3 வலுவான பிளாஸ்டிக் பைகளில் (Transparent) காளான் விதைகளுடன் சேர்த்து பரப்பி வைக்கவேண்டும். விதைகள் பையில் சமமாக பரப்பி இருப்பதை உறுதி செய்யுங்கள்.


பின்னர் பிளாஸ்டிக் பை காற்றுடன் இருக்கும்படி மூட வேண்டும். ஆனால் ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். பை மூடப்பட்டதும், ஒவ்வொரு பையிலும் சுமார் 10-15 துளைகளை போடுங்கள். அந்த பைகளை இருட்டான காலியான அலமாரி அல்லது பீரோ போன்ற இடத்தில் வைத்திடுங்கள். இவ்வாறு 15-20 நாட்களுக்கு 25 டிகிரி செல்சியஸ் தட்பவெப்பம் இருக்கும் அளவிற்கு அந்த இடத்திலேயே வைத்து விடுங்கள்.


அதன் பின்னர் அந்த பிளாஸ்டிக் பைகள் வெள்ளை நிறமாக மாறி இருக்கும். அதைத்தவிர வேறு நிறத்தில் பைகள் மாறி இருந்தால் நீங்கள் அதை தூக்கிப்போடுவது நல்லது. வெள்ளை நிற பைகளாக மாறும் விதைகளே சரியான காளான் வளர்க்க உகந்ததாகும்.

oyster

காளான் வளர்ப்பின் இரண்டாம் கட்டம்

இப்போது நீங்கள் அந்த வெண்மை நிறமாக மாறிய பைகளில் ஈரப்பதம் ஆக்கவேண்டும். அதற்கு நீங்கள் உங்கள் பால்கனியில் அந்த பைகளை வைக்கலாம். காளான்கள் முளைக்கும் வரை ஒவ்வொரு நாளும் 4-5 முறை தண்ணீரை அதன் மீது தெளிக்க வேண்டும்.

பின்னர் மெல்ல காளான் முளைப்பதை காண்பீர்கள். முளைத்த காளான்களை அகற்ற, நீங்கள் அவற்றின் வேர்களிலிருந்து பிரித்து எடுத்து அவற்றைப் பறிக்க வேண்டும்.

குறைவான செலவு அதிக வருமானம்

குறைந்த முதலீட்டில், ஈசியாக காளானை வீட்டிலே வளர்த்து இன்று அதிகம் சம்பாதிக்க முடியும். பலரும் இதை ஒரு தொழிலாகவே செய்யத்தொடங்கியுள்ளனர். வீட்டில் இருந்தபடியே இதைச் செய்யமுடியும் என்பதால் பல இல்லத்தரசிகள் இதை சிறுதொழிலாகவும் செய்து, ஆன்லைனில் காளான் விற்பனை செய்கின்றனர்.

2 கிலோ காளானுக்குத் தேவையான அனைத்தையும் வாங்க ரூ.300 முதலீடு இருந்தால் போதும். இந்த அளவு காளனை சந்தையில் ரூ.1200 வரை விற்று சம்பாதிக்கலாம்.

காளானுக்கு சந்தையில் அதிக வரவேற்பு இருப்பதால், அதன் சந்தை விலையும் அதிகமாகவே இருக்கிறு. இதனால் குறைந்த அளவு காளான் வளர்ப்பவர்களும் நல்ல வருவாய் ஈட்டமுடியும்.


புரதம், நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவை உருவாக்க காளான்கள் சிறந்த வழியாகும். நீங்கள் இதில் முதலீடு செய்ய பொறுமையும், நேரமும் இருந்தால், அதை வளர்ப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். அதே சமயம் நல்ல வருவாயும் ஈட்டி சந்தோஷமாகவும் இருக்கமுடியும்.