Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

கழுதைப்புலி ரூ.800; யானை ரூ.1000: நடிகர்களைத் தொடர்ந்து நீங்களும் வண்டலூர் விலங்குகளை தத்தெடுக்க உதவும் கையேடு!

பாய்ந்து ஓடும் சிறுத்தைகள், தனியாய் திமிராய் நிற்கும் சிங்கங்கள், அழகாய் காட்சியளிக்கும் யானைகள் என டிஸ்கவரி சேனலில், காட்டு விலங்குகளை சிறுவயதில் பார்த்து, வியந்து, ரசித்த நேரங்களில் எல்லாம், அவற்றை வீட்டில் வளர்க்க பலரும் விருப்பப்பட்டிருக்கலாம்!

கழுதைப்புலி ரூ.800; யானை ரூ.1000: நடிகர்களைத் தொடர்ந்து நீங்களும் வண்டலூர் விலங்குகளை தத்தெடுக்க உதவும் கையேடு!

Wednesday September 08, 2021 , 4 min Read

பாய்ந்து ஓடும் சிறுத்தைகள், தனியாய் திமிராய் நிற்கும் சிங்கங்கள், அழகாய் காட்சியளிக்கும் யானைகள் என டிஸ்கவரி சேனலில், காட்டு விலங்குகளை சிறுவயதில் பார்த்து, வியந்து, ரசித்த நேரங்களில் எல்லாம், அவற்றை வீட்டில் வளர்க்க பலரும் விருப்பப்பட்டிருக்கலாம்!


இன்றைய காலத்தில் அதுவும் சாத்தியமாகியுள்ளது. ஒரே வித்தியாசம் என்னவெனில், நீங்கள் உங்கள் வீட்டில் விலங்குகளை வளர்க்க முடியாது, மாறாக வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வளர்க்கலாம்.

வண்டலுார் வனவிலங்கு பூங்காவில் உள்ள பறவை, விலங்குகளுக்கான உணவு மற்றும் பராமரிப்புச் செலவுகளை ஏற்றுக் கொண்டு, அவற்றை நீங்கள் தத்தெடுத்து கொள்ளலாம். 100 ரூபாயில் நீங்களும் ஒரு விலங்கின் தத்தெடுப்பாளராக மாறமுடியும்.
zoo

சென்னையின் மெயின் அட்ராக்‌ஷன்களுள் ஒன்றான வண்டலுாரில் உள்ள உயிரியல் பூங்காவில், பறவைகள், பாலுாட்டிகள், ஊர்வன விலங்குகள் என 2,700க்கும் மேற்பட்ட உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஒரு ஆண்டுக்கு தோராயமாக 20 லட்சம் மக்கள் பூங்காவினை பார்வையிட வருகைப் புரிகின்றனர்.


விலங்குகளை பொதுமக்கள் தத்தெடுத்து பராமரிக்கும் திட்டம் 2009ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொடங்கப்பட்ட ஆண்டிலிருந்தே விலங்குகளை, மக்கள் ஆர்வம் காட்டி தத்தெடுத்துவந்த நிலையில், சமீப ஆண்டுகளில் நடிகர் கார்த்திக், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்ற திரை நட்சத்திரங்கள் யானை, சிங்கம், புலிகளை தத்தெடுத்து விலங்குகளின் பாதுகாப்பில் அவர்களது பங்கினை ஆற்றியுள்ளனர்.

இரு தினங்களுக்கு முன்பாக, நடிகர் சிவகார்த்திகேயன் பூங்காவில் உள்ள 'விஷ்ணு' என்ற ஆண் சிங்கத்தையும், 'பிரகுர்த்தி' என்ற பெண் யானையையும் 6 மாதங்களுக்கு தத்தெடுத்து, மக்கள் இதுபோன்ற முயற்சிகளை எடுப்பதற்கான உந்துக்கோலாக செயல்பட்டுள்ளார்.

கழுதைப்புலிக்கு ரூ.800; கண்டாமிருகத்திற்கு ரூ.1000

"தத்தெடுப்பு இயக்கத்தில் பங்கேற்க வயது தடை இல்லை. எவரேனும் எந்த உயிரினத்தையும் தத்தெடுக்கலாம். தத்தெடுத்தல் என்பது, விலங்குகளுக்கான செலவினங்களை ஏற்றுக் கொண்டு, வனவிலங்குகளின் பாதுகாப்பில் ஒரு அங்கமாக இருப்பதாகும். ஒவ்வொரு விலங்குகள் மற்றும் பறவைகளின் மீதும் தனிகவனம் செலுத்தப்பட்டு, வெவ்வேறு விதமான உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு, ஒவ்வொரு உயிரினத்துக்கும் அதன் உணவிற்கேற்ப நாளொன்றிற்கான செலவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

”தத்தெடுப்பவர்கள் அவர்கள் விரும்பும் உயிரினத்திற்கான ஒரு நாள் அல்லது ஒரு மாதம் ஏன், ஒரு வருடத்திற்கான உணவுச் செலவினை ஏற்று தத்தெடுத்து கொள்கின்றனர். உணவு செலவினங்கள் தவிர்த்து, உயிரினங்களின் பராமரிப்பு, மருத்துவம் மற்றும் உறைவிட பராமரிப்பிற்கும் நிதியளிக்கலாம். நன்கொடையாளர்களுக்கு தத்தெடுப்பு பற்றிய சான்றிதழும், பூங்காவினை பார்வையிடுவதில் சில சலுகைகளும் வழங்கப்படும்," என்று உயிரியல் பூங்கா அதிகாரி நம்மிடம் தெரிவித்தார்.
zoo

தத்தெடுப்பாளர்கள் செலவிடும் தொகைக்கு 80ஜி வருமான வரி விலக்கு உண்டு. அவர்களது பெயர்கள் தத்தெடுக்கப்பட்ட உயிரினத்தின் அமைவிடத்திற்கு அருகிலிருக்கும் பலகையில் எழுதப்படுகின்றன. தத்தெடுப்பாளர்கள் அளிக்கும் நிதியுதவியை பொறுத்து, அவர்கள் தத்தெடுத்தக் காலத்தில் பூங்காவினை பார்வையிடுவதில் சில சிறப்புச் சலுகைகள் அளிக்கப்படுகின்றன.


அதன்படி, ரூ.5,000 முதல் 10,000 வரை நிதியுதவி செய்த தத்தெடுப்பாளர்கள் பூங்காவினை இருமுறை இருநபர்களுடனும், ரூ.10,000 முதல் 20,000ரூபாய் வரை நன்கொடை அளித்தவர்கள் 4 நபர்களுடன் இரு முறையும் நுழைவுக் கட்டணமின்றி பூங்காவினை பார்வையிடலாம். அதிகப்பட்சமாய், ரூ.50,000க்கும் மேல் நிதியளித்தவர்கள், தத்தெடுப்பு காலத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் 5 நபர்களுக்கு மிகாமல் பூங்காவிற்கு வருகையில், அவர்களது நுழைவுக்கட்டணம் இலவசம், பரந்த பூங்காவில் உள்ள விலங்குகளை பார்வையிடுவதற்கான மின்சார வண்டியில் இருமுறை இலவசமாய் பயணம் மேற்கொள்ளலாம்.


ஒரு உயிரினம் தத்தெடுக்கப்படும் போது, அதற்கான செலவினங்கள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. உண்மையில், அந்த விலங்கினத்தின் பாதுகாப்பிற்கான குரலாக மாறுகிறது. வனவிலங்குகளின் பாதுக்காப்பின் அவசியத்தை எடுத்துரைக்கிறது. அதற்கு சரியானத் தேர்வாக அமையும் 'விலங்குகள் தத்தெடுப்பு'. அவ்வாறு,

வண்டலுார் உயிரியல் பூங்காவில் 100 ரூபாய் செலுத்தி, புறா, கிளி, லவ் பேர்ட்ஸ், முதல் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பட்கெரிகர் பறவைக்கும் கூட ஒரு நாள் தத்தெடுப்பாளராக மாறலாம். சிங்கம், புலி மற்றும் வெள்ளைப் புலிகளுக்கான ஒருநாள் உணவுத் தொகை ரூ.2000, சிறுத்தைக்கு ரூ.1,500 இந்திய யானைகளுக்கு ரூ.1000, சிம்பான்சிளுக்கு ரூ.1000, காட்டு நாயுக்கு ரூ.700, காட்டு பூனைக்கு ரூ.500, கழுதைப் புலிக்கு ரூ.800, ஒற்றை கொம்பு காண்டாமிருகத்திற்கு ரூ.1000, சதுப்புநில முதலைகளுக்கு ரூ.500 என அனைத்து விலங்குகளுக்குமான உணவுத் தொகையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் ஒரு உயிரினத்துக்கான ஒரு நாள் உணவுத் தொகையாகும்.
zoo

வாடிக்கையான தத்தெடுப்பாளரான சிவகார்த்திகேயன்!

உலகில் உள்ள பல உயிரியல் பூங்காக்களிலும் விலங்குகள் தத்தெடுப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வண்டலூரில் உயிரியல் பூங்காவில் 'விலங்கு தத்தெடுப்பு' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட 2009ம் ஆண்டு பல விலங்குகளை தத்தெடுத்தவர்களால் 32,805 ரூபாய் விலங்குகளை பராமரிக்கக் கிடைத்துள்ளதாக பூங்காவின் இணையதளத்தின் குறிப்பிடப்பட்டுள்ளது. இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின்படி,

"2010ம் ஆண்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், 3 வெள்ளை புலிக் குட்டிகளுக்கான ஓராண்டு பராமரி்ப்புச் செலவிற்காக ரூ.37,80,000 நன்கொடையாக அளித்தது. அந்த ஆண்டே, நடிகர் கார்த்தி ஒரு வெள்ளை புலிக்குட்டியினை 6 மாதங்களுக்கு தத்தெடுத்து ரூ77,000 நிதியளித்தார்.

அடுத்தடுத்த ஆண்டுகளில், பள்ளி, கல்லுாரிகள், பெரு நிறுவனங்கள், வங்கிகளும் முன்வந்து உயிரினங்களை தத்தெடுத்த நிலையில் 2017ம் ஆண்டு தத்தெடுப்பவர்களின் எண்ணிக்கை சரிவடைந்து, 11 பேர் மட்டும் தத்தெடுத்தனர். இந்நிலையிலே,

2018ம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் ’அனு’ என்ற வெள்ளைப் புலியை 6 மாதங்களுக்கு தத்தெடுத்துள்ளார். அதே போல், 2019ம் ஆண்டு உலக வன உயிரின நாளான மார்ச் மாதம் 3ம் தேதி நடிகர் விஜய் சேதுபதி, வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வருகை தந்து ‘ஆதித்யா’ மற்றும் ’ஆர்த்தி’ எனும் 2 வங்காள புலிகளை தத்து எடுத்தார். அதன்படி, புலிகளின் பராமரிப்பு மற்றும் உணவுக்கான ஆறு மாதச் செலவுத்தொகையாக ரூ.5 லட்சத்தை வழங்கி உள்ளார். 2009ம் ஆண்டு முதல் கடந்தாண்டு வரை இத்திட்டத்தின் கீழ் தத்தெடுப்பாளர்களால் வனவிலங்குகளின் பராமரிப்புக்காக 95 லட்சம் ரூபாய் சேகரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
zoo

"2018ம் ஆண்டு முதலே இத்திட்டத்திற்கான இணையதள வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. பார்வையாளர்களுக்கு இத்திட்டம் குறித்து அறிந்து கொள்ளும் வகையில், பூங்காவில் ஆங்காங்கே விளக்கப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. முகநுால் போன்ற சமூக வலைதளங்களிலும் தொடர்ச்சியாக விலங்கு தத்தெடுப்பு குறித்து பதிவுகளை பதிவிட்டு வருகிறோம். தவிர,

”சில நிறுவனங்களிடமும் அணுகி நன்கொடைகளை பெறுவதற்கான முயற்சிகளையும் செய்து வருகிறோம். இருப்பினும், விலங்குகளின் பராமரிப்பு செலவுகளில் தோராயமாக 5% மட்டுமே, தத்தெடுப்பாளர்களின் பங்காக உள்ளது. நிறைய மக்கள் முன்வந்து இயன்ற செலவினங்களை ஏற்றுக்கொண்டால், இன்னும் சிறப்பாக செயல்பட முடியும்," என்று கூறினார் உயிரியல் பூங்காவின் அதிகாரி.

குழந்தைகளின் பிறந்தநாள், திருமண நாள் போன்ற கொண்டாட்டங்களின் போது, ஆதரவற்றோர் இல்லங்கள் செல்வது போன்று வனவிலங்கு உயிரினங்களை தத்தெடுத்து, முக்கியமான தினத்தில் மறக்கமுடியாத அனுபவமாக மாற்றலாம். ஏனெனில், ஒரு விலங்கின் தத்தெடுப்பாளர் என்ற முறையில் பூங்காவிற்கு செல்வது தனி ஆனந்தத்தினை அள்ளி தரும் தானே!