புற்றுநோய் மரபணு வரைபடத்தை வெளியிட்ட ஐஐடி மெட்ராஸ் - தரவு தளமும் அறிமுகம்!
ஐஐடி மெட்ராஸ், புற்றுநோய் ஆராய்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்தியாவிலேயே முதலாவது புற்றுநோய் மரபணு தரவுத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஐஐடி மெட்ராஸ், புற்றுநோய் ஆராய்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்தியாவிலேயே முதலாவது புற்றுநோய் மரபணு தரவுத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு அதிகளவில் உள்ள போதும், உலகளாவிய மரபணு ஆய்வுகளோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் குறைவாக இருப்பதாகவே மதிப்பிடப்படுகிறது. இந்தியாவில் பரவலாக உள்ள புற்றுநோய்களுக்கென மரபணுக் கட்டமைப்பு இல்லாத காரணத்தால், இந்தியாவில் புற்றுநோயின் குறிப்பிட்ட திரிபுகளைக் கண்டறியக்கூடிய நோய் கண்டறியும் சாதனங்களோ, மருத்து வகைகளோ பட்டியலிடப்படவில்லை.

இந்தியாவில் பல்வேறு புற்றுநோய்களுக்கு மரபணு ரீதியாக இருந்துவரும் இடைவெளியை நிரப்பும் வகையில், புற்றுநோய் மரபணுத் திட்டத்தை கடந்த 2020-ம் ஆண்டில் ஐஐடி மெட்ராஸ் தொடங்கியது. இத்திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 480 மார்பகப் புற்றுநோய் நோயாளிகளின் திசு மாதிரிகளில் இருந்து 960 முழு எக்சோம் வரிசைமுறை சேகரிக்கும் பணி நிறைவுபெற்றுள்ளது.
மும்பையில் உள்ள கார்கினோஸ் ஹெல்த்கேர், சென்னை புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் நிவாரண அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து ஐஐடி மெட்ராஸ் இந்திய மார்பகப் புற்றுநோய் மாதிரிகளில் இருந்து மரபணு திரிபுகளின் பெயர் குறிப்பிடப்படாத சுருக்கத்தை சேகரித்தது.
உலக புற்றுநோய் தினம் (பிப்ரவரி 4, 2025) கடைபிடிக்கப்படும் நிலையில், இந்தப் பணி முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்திய மார்பகப் புற்றுநோய் மரபணு வரிசை உருவாக்கம் நிறைவடைந்ததாக அறிவித்த ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, ‘பாரத் புற்றுநோய் மரபணு வரைபடத்தை இக்கல்வி நிறுவன வளாகத்தில் வெளியிட்டார்.
இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களும் மருத்துவர்களும் வெளிப்படையாக அணுகக்கூடிய வகையில் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் எளிதில் அணுகக்கூடிய வகையில், bcga.iitm.ac.in என்ற தரவுத்தளத்தை இக்கல்வி நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.
“அனைவருக்கும் ஐஐடிஎம் என்ற சமூகத்திற்கான உறுதிப்பாட்டில் உண்மையாக உள்ள நாங்கள், மூளைத் தரவுகளைத் தொடர்ந்து இக்கல்வியாண்டில் இரண்டாவதாக புற்றுநோய் மரபணு தரவுகளை வெளியிடுகிறோம். இதன் மூலம் இக்கொடிய நோய்க்கு வழிவகுக்கும் காரணங்கள் பற்றிய ஆழமான நுண்ணறிவு பெறப்படும் என்றும், ஆரம்பகட்டத்திலேயே தடுத்து நிறுத்த உதவும் என்றும் நம்புகிறோம். நாட்டில் உள்ள வெவ்வேறு புற்றுநோய்களுக்கான மரபணு வரைபடத்தில் உள்ள பிரச்சனைகளை அட்லஸ் நிரப்புகிறது. இந்தியாவில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு அதன் திரிபுகளை வகைப்படுத்த இது உதவும். இதனால் ஆரம்பகட்டத்திலேயே நோயைக் கண்டறிதல், நோய் முன்னேற்றம், சிகிச்சை விளைவுகளால் ஏற்பட்டுள்ள மாறுபாடுகளை அறிந்துகொள்ள முடியும்,” என ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் வி.காமகோடி குறிப்ப்ட்டார்.
‘உயர்சிறப்பு கல்வி நிறுவனங்களின்’ முன்முயற்சிகளுக்கு இந்திய அரசு அளித்துவரும் நிதியுதவித் திட்டத்தின்கீழ் இக்கல்வி நிறுவனத்தின் ‘புற்றுநோய் மரபியல் மற்றும் மூலக்கூறு சிகிச்சைக்கான உயர் சிறப்பு மையம்’ ஆராய்ச்சிகளை மேற்கொண்டது.
“இந்தியாவில் புற்றுநோய் சார்ந்த பயோமேக்கர்களை அடையாளம் காண இந்த தரவுத்தளம் விலைமதிப்பற்ற ஆதாரமாக இருக்கும். மார்பகப் புற்றுநோய்களை முன்கூட்டியே கண்டறிய இது உதவும். தவிர, இந்திய மக்களுக்கு குறிப்பிட்ட சிறந்த சிகிச்சை உத்திகளை உருவாக்குவதற்கான புதிய மருந்து இலக்குகளை அடையாளம் காணவும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,” என ஐஐடி மெட்ராஸ் புற்றுநோய் மரபியல் மற்றும் மூலக்கூறு சிகிச்சைக்கான உயர்சிறப்பு மையத்தின் தலைவரும், திட்ட ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் எஸ்.மகாலிங்கம் கூறும்போது, தெரிவித்தார்.

“புற்றுநோய் வகைகளில் புற்றுநோய் மரபணுவியல் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்களிடம் இருந்து தரவை வழங்குவதையும் BCGA நோக்கமாகக் கொண்டுள்ளது. தரவுகளைப் பெறுவதற்கும் இந்த மையம் தயாராக இருக்கும். ஆபத்து அதிகமுள்ள குழுக்களை அடையாளம் காணவும், புற்றுநோய் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும், தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சைக்கான உத்திகளை வடிவமைக்கவும், சிகிச்சை விளைவுகளைப் புரிந்துகொள்ளவும் பயோமார்க்கர்களை அடையாளம் காண இத்தரவு பயன்படுத்தப்படும்,” என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த புற்றுநோய் வரைபடம், புற்றுநோயின் முன்னேற்றம், பரிணாம வளர்ச்சியின் மரபணு அடிப்படையில் தகவல்களை வழங்குகிறது. இந்தியாவில் உயிரி மருத்துவ ஆராய்ச்சி மற்றும் சுகாதார அமைப்பு ‘தனிப்பயனாக்கப்பட்ட மருத்துவம்’ என்ற கொள்கையை நோக்கி மாறுவதற்கு உதவிகரமாக இருக்கும். மருத்துவம் தொடர்பான முடிவெடுக்கும் செயல்பாட்டில் தனிநபரின் மரபணு- மூலக்கூறு தகவல்களை இணைப்பதன் வாயிலாக மருத்துவ பராமரிப்பின் தரத்தையும் மேம்படுத்தலாம்.
குறைந்த செலவில் புற்றுநோயைக் குணப்படுத்தும் இடைநிலை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை விரைவுபடுத்துவதற்காக ஐஐடி மெட்ராஸ் மற்றும் கார்கினோஸ் ஹெல்த்கேர் இணைந்து, புற்றுநோய்க்கான தேசிய துல்லிய மருத்துவ மையத்தின் கீழ் இந்த பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது.
Edited by Induja Raghunathan