'இந்தியாவுக்கு தேவை 100 கோடி டாலர் வருவாய் கொண்ட நிறுவனங்கள்' – ஸ்ரீதர் வேம்பு கருத்து!
நிறுவனங்கள் மதிப்பீட்டில் அதிக கவனம் செலுத்துவது அவற்றின் நீண்ட கால தொலைநோக்கில் இருந்து திசை திருப்புகிறது, என ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.
சந்தை மதிப்பீட்டில் அல்லாமல் வருவாயில் 100 பில்லியன் டாலர் கொண்ட தொழில்நுட்ப நிறுவனங்களை இந்தியா உருவாக்க வேண்டும், என ஜோஹோ கார்ப்பரேஷன் சி.இ.ஓ ஸ்ரீதர் வேம்பு வலியுறுத்தியுள்ளார்.
சீனாவில் கடந்த 20 ஆண்டுகளில் பல உலக அளவிலான தொழில்நுட்பங்களை உருவாக்கியது போல, இந்தியா தனது பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்க இத்தகைய நிறுவனங்களை உருவாக்க வேண்டும், என அவர் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
“இந்தியாவில் இருந்து, 100 பில்லியன் டாலர் (மதிப்பீட்டில் அல்லாமல் வருவாயில்), கொண்ட தொழில்நுட்ப நிறுவனங்களை உருவாக்க முடியுமா? நாம் மக்களை மேம்படுத்த வேண்டும் எனில் இத்தகைய பல நிறுவனங்கள் தேவை. இத்தகைய உலக சாம்பியன் நிறுவனங்கள் பலவற்றை சீனா கொண்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இவற்றை உருவாக்கியுள்ளது,” என வேம்பு குறிப்பிட்டுள்ளார்.
“எது நம்மை அங்கு கொண்டு செல்லாது என நான் சொல்கிறேன். சந்தை மதிப்பீட்டில் நாம் கவனம் செலுத்துவதை விடவில்லை எனில் இது சாத்தியமில்லை, என கூறியுள்ளார்.
“நீண்ட பயணத்திற்குத் தயாராக இருக்கும் மற்றும் குறுகிய கால நோக்கில் தங்கள் செலவுகளை ஈடு செய்து கொண்டே நீண்ட கால இலக்கையும் சமன் செய்யக்கூடிய திறன் கொண்ட, தொலைநோக்கு மிக்கவர்கள் மற்றும் உருவாக்கக் கூடியவர்களால் மட்டுமே இது சாத்தியம்,” என அவர் மேலும் கூறியுள்ளார்.
மிதிப்பீட்டில் மிகை கவனம் செலுத்துவது, நீண்ட கால நோக்கில் இருந்து நிறுவப்னங்களை திசை திருப்பும். தொழில்முனைவோர் வருவாயில் கவனம் செலுத்த வேண்டும்.
பங்கு குமிழ்கள் மற்றும் எளிதாக நிதி கிடைப்பது நிறுவனங்கள் வளர்ச்சியை தடுக்கும்.
“பங்கு குமிழ் நம்மை இலக்கில் இருந்து திசைத் திருப்புகிறது. ஏனெனில், குறுகிய காலத்தில் மதிப்பீட்டை மேம்படுத்துவதில் கவனம் திரும்பி, நிறுவன நிர்வாகம் பங்கு விலையில் கவனம் செலுத்தத் துவங்குகிறது,” என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
நிறுவனத்தின் பெயரை ஸ்ரீதர் வேம்பு குறிப்பிடவில்லை என்றாலும், ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனம் தனது 13 சதவீத ஊழியர்களை ஆட்குறைப்பு செய்வதாக அறிவித்த பிறகு அவரது இந்த கருத்து வெளியாகியுள்ளது. இதனால், 5,000 ஊழியர்களில் 660 ஊழியர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
நாஸ்டக்கில் பட்டியலிடப்பட்டுள்ள இந்நிறுவனம், 400 மில்லியன் மதிப்பிலான பங்குகளை திரும்பி வாங்குவதற்கான திட்டத்திற்கு இயக்குனர் குழு ஒப்புதல் அளித்துள்ளது என்பதையும் தெரிவித்துள்ளது.
“சரியாக செய்யப்பட்ட லட்சக்கணக்கான செயல்களில் விளைவாக (அதே நேரத்தில் தவறாக அமைந்து பாடம் கற்றுக்கொடுத்த லட்சக்கணக்கான செயல்கள்) மதிப்பீடு அமைய வேண்டுமே தவிர மதிப்பீடே ஒற்றை இலக்காக மாறும் போது பயனற்று போகிறது (குட் ஹார்ட்ஸ் லா), என்று ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.
ஆங்கிலத்தில்: புவனா காமத், தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan