தண்ணீர் மாசுகளை உறிஞ்சக் கூடிய கடற்பாசி டைல்ஸ் உருவாக்கிய கட்டிடக் கலைஞர்!
’இண்டஸ்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த கடற்பாசி டைல்ஸ், பயோரியாக்டர் சுவர் அமைப்பு கொண்டது. இதன் மூலம் பயோரெமெடியேஷன் முறையில் தண்ணீரை சுத்தப்படுத்தலாம்.
மாசு காரணமாக ஏற்படும் எதிர்மறை விளைவுகளை பருவநிலை மாற்றத்தின் வாயிலாக நம்மால் கண்கூடாகப் பார்க்கமுடிகிறது. எண்ணெய் கசிவு, பிளாஸ்டிக் ஆகியவற்றால் எண்ணற்ற கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து வருகிறது. மீன்களும் பல்வேறு உயிரினங்களும் இறந்து கரை ஒதுங்குகின்றன. நிலையின் தீவிரத்தை உணர்ந்து நம்முடைய நடைமுறைகளை மாற்றிக்கொண்டு நம் கோளை பாதுகாப்பதற்கான வழிமுறைகளை ஆராயவேண்டிய நேரமிது.
அத்தகைய பணியில் ஈடுபட்டுள்ளார் கட்டிடக் கலைஞரான ஷ்னீல் மாலிக். இவர் ’இண்டஸ்’ (Indus) என்கிற பெயரில் டைல்ஸ் உருவாக்கியுள்ளார். இந்த டைல்ஸ் தண்ணீரில் இருந்து மாசுகளையும் நச்சுப் பொருட்களையும் உறிஞ்சக்கூடியதாகும்.
லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் படித்த ஷ்னீல் புதுடெல்லியைச் சேர்ந்தவர். பயோரெமிடியேஷன் முறையில் சுற்றுச்சூழலில் இருக்கும் மாசுகளை அகற்ற, கடலின் தரைப்பகுதியில் காணப்படும் ஒற்றை உயிரணு கொண்ட பூக்கள் பூக்காத இந்த உயிரினங்களைப் பயன்படுத்துகிறார்.
லண்டன் பல்கலைக்கழக கல்லூரியானது தண்ணீர் மாசுப் பிரச்சனைக்குத் தீர்வுகாண வெவ்வேறு துறைகளை உள்ளடக்கிய அணுகுமுறையைக் கொண்ட திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளதாக ’க்ரீன் மேகசின்’ குறிப்பிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் டைல் சார்ந்த மாடுலர் பயோரியாக்டர் சுவர் அமைப்பான ’இண்டஸ்’ வடிவில் தீர்வுகாணப்படும்.
"டைல்ஸ் மற்றும் ஒட்டுமொத்த அமைப்பின் வடிவமைப்பும் உள்ளூர் பொருட்கள் மற்றும் நுட்பங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் மூலதன செலவு கணிசமாக குறையும்,” என்று ஷ்னீல் தெரிவித்ததாக க்ரீன் மேகசின் குறிப்பிடுகிறது.
”இந்த டைல்ஸ்களை ஏற்கெனவே இருக்கும் சுவரில் பொருத்திவிடலாம். அல்லது சிறியளவில் செயல்படும் கைவினைத் தொழிற்சாலைகளின் மேற்கூரையில் பொருத்திவிடலாம். ஆனால் இதை சமூக அளவில் பயன்படுத்த ஒரு தனிப்பட்ட மரப்பலகை அமைப்பை நிறுவி டைல்ஸ்களை அதில் வைக்கலாம்.
இந்த டைல்ஸ் இலைகள் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிலுள்ள நரம்பு போன்ற அமைப்பில் கடற்பாசி உள்ளது. தண்ணீர் இதன் வழியாக செல்லும். இதிலுள்ள ஹைட்ரோஜெல் கடற்பாசியை உயிர்ப்புடன் வைத்திருக்கும். இவை மறுசுழற்சிக்கு உட்பட்டவை. அத்துடன் மக்கும்தன்மைக் கொண்டவை.
இந்த டைல்ஸ்களை உருவாக்குவது எளிது. கடற்பாசிக்கான பொருட்கள் தூள் வடிவில் வழங்கப்படும். இதைக் கொண்டு டைல்ஸ்கான ஹைட்ரோஜெல்லை உருவாக்கலாம் என ஷ்னீல் ‘அவுட்டோர் டிசைன்’ உடனான உரையாடலில் தெரிவித்துள்ளார்.
“ஹைட்ரோஜெல் முழுவதுமாக நனைந்து ஊறிவிடும் சமயத்தை அதை மாற்றவேண்டும். தண்ணீரில் உள்ள மாசு அளவைப் பொருத்து இவற்றை மாற்றுவதற்கான நேரம் மாறுபடும். ஆனால் பல மாதங்களுக்கு நிலையாக இருக்கும்படியான பல்வேறு கலவைகளையும் நாங்கள் உருவாக்கியுள்ளோம்,” என்றார்.
குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு கடற்பாசிகள் மாற்றப்படும். டைல்ஸ் மறுபயன்பாட்டிற்கு உட்படுத்தப்படும். மொத்த அமைப்பையும் உடைக்காமல் இவை எளிதாக அகற்றப்படும் வகையில் ஒன்றோடொன்று இணைக்கபட்டுள்ளது.
நவீன மேற்கத்திய தொழில்நுட்பத்தைக் கொண்டு தண்ணீரை சுத்திகரிக்கத் தேவையான வசதி கைவினைத் தொழிலாளர்களிடம் இல்லை என்பதை எங்களது ஆய்வின் மூலம் தெரிந்துகொண்டோம். கூடுதல் வசதியைப் பெறத் தேவையான பொருளாதார திறனும் அவர்களிடம் இல்லை. எனவே அவர்களுக்கு உகந்த அமைப்பு அவசியமாகிறது,” என்று ஷ்னீல் தெரிவித்தார்.
இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் நிலையில் தற்போது அச்சில் வார்க்கப்படும் இந்த டைல்ஸ்களை தனித்தேவைக்கேற்ப Bio-ID Lab மூலம் வெவ்வேறு மாசு வகைகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்க முடியும்.
கட்டுரை: THINK CHANGE INDIA