Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

அறிவியலில் சாதனைப் படைத்த 7 இந்திய பெண் விஞ்ஞானிகள்!

நம் நாட்டிற்கு பெருமை சேர்த்த முன்னணி பெண் விஞ்ஞானிகள் பற்றிய தொகுப்பு இது.

அறிவியலில் சாதனைப் படைத்த 7 இந்திய பெண் விஞ்ஞானிகள்!

Friday February 21, 2020 , 4 min Read

அறிவியலில் எட்ட சாத்தியமில்லாததாக கருதப்பட்ட உச்சத்தையும் பெண்கள் எட்டியுள்ளனர். நோபல் பரிசு வென்றது முதல் நாசாவிற்கு செல்வது வரையிலும் பெண் விஞ்ஞானிகள் வரலாற்றில் தங்களது பெயர்களை இடம்பெறச் செய்துள்ளனர்.


உலகின் பல்வேறு பகுதிகளைப் போன்றே இந்தியாவிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவு ஆணாதிக்கம் நிறைந்ததாகவே காணப்படுகிறது. இருப்பினும் ரிது கரிதால், சந்திரிமா சாஹா போன்றோர் இஸ்ரோ, INSA போன்ற நிறுவனங்களில் உயர் பதவி வகித்து புதிய திட்டங்களைச் செயல்படுத்தி சாதனை படைத்து வருகின்றனர்.

அவ்வாறு அறிவியலில் சாதனைப் படைக்கும் பெண்களின் பட்டியல் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.

1

டெசி தாமஸ்

இந்தியாவின் ‘ஏவுகணைப் பெண்’ என்றழைக்கப்படும் டெசி தாமஸ் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) வானூர்தி அமைப்புகள் இயக்குநர் ஜெனரல் ஆவார். டிஆர்டிஓ-வின் அக்னி-4 ஏவுகணை திட்டத்தில் திட்ட இயக்குநராக பதவி வகித்தவர். நாட்டின் ஏவுகணைத் திட்டத்திற்கு தலைமை வகித்த முதல் பெண் விஞ்ஞானி என்கிற பெருமைக்குரியவர்.


56 வயதான இவர் ஏவுகணை வழிகாட்டுதல் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இந்தத் துறையில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். அக்னி ரக ஏவுகணை வடிவமைப்பில் முக்கியப் பங்கு வகித்துள்ளார். பல்வேறு ஃபெலோஷிப்களும் கௌரவ டாக்டர் பட்டங்களும் பெற்றுள்ளார்.

ரிது கரிதால்

சந்திராயன் 2 திட்டத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய அளவில் பங்களித்தவர் ரிது கரிதால். ‘இந்தியாவின் ராக்கெட் பெண்மணி’ என்றழைக்கப்படும் ரிது கரிதால் 2007-ம் ஆண்டு இஸ்ரோவில் இணைந்தார். மங்கல்யான் திட்டத்தின் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார்.


விண்வெளிப் பொறியாளரான இவர் லக்னோவில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். லக்னோ பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி இயற்பியல் படித்தார். இந்திய அறிவியல் நிறுவனத்தில் விண்வெளிப் பொறியியல் பட்டம் பெற்றார்.


2007-ம் ஆண்டு மறைந்த குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாமிடம் இருந்து இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி விருதைப் பெற்றார்.

முத்தையா வனிதா

முத்தையா வனிதா சந்திராயன்-2 திட்ட இயக்குநர் ஆவார். கோள்களுக்கு இடையிலான திட்டப்பணிகளை தலைமையேற்று செயல்படுத்திய முதல் பெண் விஞ்ஞானி என்கிற பெருமைக்குரியவர். இவர் துணை இயக்குநராக இருந்து திட்ட இயக்குநராக பதவி உயர்வு பெற்றார். சென்னையைச் சேர்ந்த இவர் கிண்டி பொறியியல் கல்லூரியில் மின்னணு அமைப்புப் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார்.


இவர் இஸ்ரோவில் முப்பதாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருகிறார். உதவி பொறியாளராக பணிவாழ்க்கையைத் தொடங்கி நிலையான வளர்ச்சியை எட்டியுள்ளார். இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.


கார்டோசாட்-1, ஓசன்சாட்-2 உள்ளிட்ட விண்கலன்களில் திட்ட துணை இயக்குநராக இருந்துள்ளார். 2006-ம் ஆண்டு சிறந்த பெண் விஞ்ஞானி விருது பெற்றார்.

ககன்தீப் காங்

ககன்தீப் வைராலஜிஸ்ட் மற்றும் அறிவியலாளர். இவர் குழந்தைகளைத் தாக்கும் வைரஸ் நோய்க்கிருமிகளை ஒழிப்பது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு பிரபலமானவர். இவர் ராயல் சொசைட்டியின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இவர் ஃபெலோவாக தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியப் பெண் விஞ்ஞானி என்கிற பெருமைக்குரியவர்.


உலகின் பழம்பெரும் அறிவியல் நிறுவனமான ராயல் சொசைட்டி சிறந்த விஞ்ஞானிகளை கௌரவித்து வருகிறது. ககன்தீப் ட்ரான்ஸ்லேஷனல் ஹெல்த் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டில் (THSTI) நிர்வாக இயக்குநராக பணியாற்றி வருகிறார். இவர் உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசியாவின் நோய்த்தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவராக உள்ளார்.


ககந்தீப் தேசிய ரோட்டாவைரஸ் மற்றும் டைபாய்ட் கண்காணிப்பு நெட்வொர்க் உருவாக்கியுள்ளார். தடுப்பூசி ஆராய்ச்சிக்காக ஆய்வகங்களை நிறுவியுள்ளார். நோய்தொற்று, குடல் செயல்பாடு, உடல் மற்றும் அறிவு வளர்ச்சி ஆகியவற்றிடையே உள்ள சிக்கலான தொடர்பு குறித்து ஆய்வு செய்து வருகிறார். அத்துடன் இந்தியாவில் நோய் எதிர்ப்பு ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட விரும்புகிறார்.

மங்களா மணி

மங்களா மணி அண்டார்டிகாவின் உறைபனிச் சூழலில் 403 நாட்கள் செலவிட்டு அதிக நாட்கள் தங்கிய முதல் பெண் விஞ்ஞானி என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். 56 வயதான இவர் இந்த பணிக்குத் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு இத்தகைய பனிச்சூழலுக்கு பரிச்சயமில்லாதவர்.


2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் அண்டார்டிகாவில் உள்ள பாரதி ஆராய்ச்சி மையத்திற்கு பயணம் மேற்கொள்ளத் தேர்வான 23 பேர் அடங்கிய குழுவில் இவரும் இடம்பெற்றிருந்தார். அறிவியல் பிரிவில் உள்ள பெண்கள் குறித்த பிபிசி தொடரில் இவர் இடம்பெறவிருக்கிறார். செய்தித்தாள் ஒன்றில் வெளியான ஒரு கட்டுரையில்,

”பெண்கள் அனைத்துத் துறைகளிலும் கால்பதித்து வருகின்றனர். பெண்கள் தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பை ஏற்கத் தயாராக இருக்கவேண்டும். சிறப்பான அறிவாற்றல் இருக்குமானால் சாதனை படைக்க எல்லைகளே கிடையாது,” என இவர் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

காமாட்சி சிவராமகிருஷ்ணன்

புளூட்டோவை ஆய்வு செய்வதற்காக நாசா நியூ ஹாரிசன் என்கிற விண்கலத்தை ஏவியது. புளூட்டோவில் இருந்து தகவல் சேகரிப்பதற்கான சிப் மற்றும் அல்காரிதம் உருவாக்கும் பொறுப்பை ஏற்றவர் காமாட்சி சிவராமகிருஷ்ணன். விண்கலத்தில் உள்ள சிப் சிக்னல்களை சேகரித்து மூன்று மைல் தொலைவில் உள்ள விண்வெளி நிலையத்திற்கு அனுப்பும்.


காமாட்சி மும்பையில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்த பிறகு ஸ்டான்ஃபோர்ட் சென்று தகவல் கோட்பாடு படித்தார். அதன்பிறகு Admob-ல் தலைமை விஞ்ஞானியாக இயந்திரக் கற்றல் ஸ்டாக் குறித்து ஆராய்ந்தார். அதன் பிறகு அவர் ஈடுபட்ட ஆராய்ச்சிகள் காஸ்மோ தொடர்பாக பணியாற்ற வழிவகுத்தது.


தற்போது மீண்டும் இயந்திரக் கற்றல் ஸ்டாக்கிற்கு திரும்பி சொந்தமாக தனித்துவமான தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார். ட்ராபிரிட்ஜ் (Drawbridge) என்கிற தளத்தை உருவாக்கியுள்ளார். இது அமெரிக்காவில் பெண்கள் தலைமையில் செயல்படும் நிறுவனங்களில் விரைவாக வளர்ச்சியடைந்த நிறுவனமாகும்.

சந்திரிமா சாஹா

சந்திரிமா உயிரியல் அறிஞர். இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் முதல் பெண் தலைவர் ஆவார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி பொறுப்பேற்றார். 85 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த அகாடமியின் வரலாற்றில் பெண் ஒருவர் பொறுப்பேற்பது இதுவே முதல் முறை.


சந்திரிமா 2008ம் ஆண்டு முதலில் INSA-வில் தேர்வாகி 2016 முதல் 2018-ம் ஆண்டு வரை துணைத் தலைவராக பணியாற்றினார். இவர் செல் உயிரியலில் நிபுணத்துவம் பெற்றவர். ‘காலா அசார்’ தாக்கக்கூடிய லஷ்மேனியா என்னும் தொற்று நோய் குறித்து தீவிரமாக ஆய்வு மேற்கொண்டுள்ளார். 80-க்கும் அதிகமான ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார்.


ICMR சகுந்தலா அமீர்சந்த் விருது (1992), வெவ்வேறு மாதிரி உயிரினங்களில் செல் அழியும் செயல்முறையை புரிந்துகொள்வதில் பங்களித்ததற்காக DNA Double Helix Discovery (2003) 50வது ஆண்டு விழாவிற்கான சிறப்பு விருது என பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.


விஞ்ஞானியாக ஆரம்பக்கட்டத்தில் சக ஆண் ஊழியர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளார். இவர்கள் பெண் விஞ்ஞானி என்பதால் சந்திரிமா உடன் கைகுலக்கவும் முன்வரவில்லை. இருப்பினும் தொடர்ந்து போராடி வெற்றியை சாத்தியப்படுத்தியுள்ளார்.


ஆங்கில கட்டுரையாளர்: நிரந்தி கௌதமன் | தமிழில்: ஸ்ரீவித்யா