தமிழ் சினிமாவுக்கு கேரளத்தின் புது வரவு: செங்கேணியாய் வாழ்ந்த லிஜோமோல் ஜோஸ் யார்?
'ஜெய் பீம்' திரைப்படத்தால் பாராட்டப்படும் லிஜோமோல்!
'ஜெய் பீம்' திரைப்படத்தை பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டும் ஒற்றை பெயர் அதில் செங்கேணியாக நடித்திருக்கும் லிஜோமோல் ஜோஸை தான். இருளர் பழங்குடிப் பெண்ணாக படம் முழுக்க வரும் லிஜோமோல் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதனால் தான் சூர்யாவை தாண்டி அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
லிஜோமோல் ஜோஸ் யார்?
தமிழ் சினிமாவை ஆண்டுகொண்டிருக்கும் நடிகைகள் அனைவரும் கேரளத்து வரவு தான். லிஜோமோல் ஜோஸும் கேரள வரவு தான். பூர்வீகம் கேரளா என்றாலும் லிஜோவுக்கு சிறுவயது முதலே தமிழுடன் ஒரு நெருக்கம் இருந்தது.
ஆம், கேரளத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடுக்கி மாவட்டம் பீர்மேடு பகுதி தான் லிஜோவுக்கு சொந்த ஊர். பீர்மேட்டில் பள்ளிப் படிப்பையும், கொச்சியில் கல்லூரி படிப்பையும் முடித்தவருக்கு படிப்பே பிரதானமாக இருந்தது.
கல்லூரியில் பேராசிரியராக வேண்டும் என்ற நினைப்புடன் கல்வியில் கவனம் செலுத்தி வந்த லிஜோ, முதுகலை படிப்பை மேற்கொள்ள பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் இணைந்துள்ளார். அங்கு இருந்தபோது தான் ஒரு நாள், அவரின் தோழி ஒருவர் ஃபஹத் பாசிலின் மலையாள படமான 'மஹேஷிண்டே பிரதிகாரம்' படத்தில் இடுக்கி பெண் வேடத்தில் நடிக்க ஆடிஷன் நடந்து வருவதாக சொல்லியுள்ளார்.
சினிமாவை திரையில் பார்ப்பது மட்டுமே சினிமாவுக்கும் லிஜோவுக்கும் உள்ள அதிகபட்சமான தொடர்பு. பள்ளி, கல்லூரி மேடையில் கூட லிஜோ நடித்ததில்லை. அப்படி இருந்தவருக்கு இந்த ஆடிஷனில் கலந்துகொள்ள வேண்டும் என்று ஒரு ஆசை வருகிறது. உடனே யோசிக்காமல் அதற்காக தனது போட்டோவை அனுப்பி விடுகிறார்.
எதிர்பாராமல் அனுப்பிய அந்த போட்டோவை பார்த்த படக்குழு லிஜோவை ஆடிஷனில் கலந்துகொள்ள அழைப்பு விடுகிறது. கேரளாவில் நடந்த ஆடிஷனில் கலந்துகொள்ள வீட்டில் அனுமதி கேட்கிறார். ஒரு ஆர்வத்தில் இதைச் செய்ய விரும்புவதாக சொன்னவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால், ஆடிஷனில் கலந்துகொள்ள முடியாது என்று தெரிவிக்கிறார்.
ஆனால், லிஜோவும் புகைப்படத்தையும், அவரின் இடுக்கி மொழியும் அந்த கேரக்டருக்கு அவர் தான் பொருத்தமாக இருப்பார் என்பதை உணர்ந்த படத்தின் இயக்குனர் லிஜோவை விடவில்லை.
இறுதியாக, விடாபிடியாக நிற்க வீட்டில் அனுமதி கிடைக்கிறது. முதல் படமும் வெளிவருகிறது. இடுக்கி மக்களின் வாழ்க்கையை வெளிப்படுத்திய ’மஹேஷிண்டே பிரதிகாரம்' படத்தில் இடுக்கி பெண்ணாக கனகச்சிதமாக பொருந்திப்போனார் லிஜோ. எதிர்பாராமல் கிடைத்த அந்த படத்தால் மலையாளத்தில் அடுத்தடுத்து வாய்ப்பு கிடைத்தது. அனைத்திலும் பெரிய கேரக்டர் எதுவும் இல்லை. என்றாலும் மக்களின் மனதில் பதிந்த அவருக்கு தமிழ் சினிமா பெரிய வாய்ப்பளித்தது. தமிழ் சினிமாவை அவரை நாயகியாக்கியது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சசி, நடிகர்கள் சித்தார்த் - ஜிவி பிரகாஷை வைத்து எடுத்த குடும்ப படமான 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தில் ராஜி என்ற முக்கிய கேரக்டரில் லிஜோவை நடிக்க வைத்தார். போக்குவரத்து ஆய்வாளரான சித்தார்த்துக்கும், பைக் ரேஸரான ஜிவி பிரகாஷ்க்கும் இடையேயான ஈகோவை சமாளிக்கும் பெண்ணாக சிறப்பான நடிப்பை இதில் வெளிப்படுத்தினார்.
இந்தப் படம்தான் 'ஜெய் பீம்' வாய்ப்பையும் லிஜோவுக்கு பெற்றுதந்தது. 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தை பார்த்து தான் 'ஜெய் பீம்' இயக்குநர் த.செ.ஞானவேல் லிஜோவுக்கு வாய்ப்பளித்துள்ளார். அப்படியாக, 'செங்கேணி' பாத்திரத்துக்கு உயிர்கொடுத்து தனது அபார நடிப்பால் இப்போது தமிழக ரசிகர்கள் மனதில் அழுத்தமாக நிலைத்துள்ளார்.
'ஜெய் பீம்' படத்தில் இருளர் பெண்ணாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த லிஜோ செய்த முயற்சிகள் ஏராளம். படத்தில் கமிட் ஆன பிறகு இருளர் மக்கள் வசிக்கும் கிராமங்களில் அந்த மக்களுடன் தங்கி அவர்கள் உண்ணும் உணவை உண்டு சில நாட்கள் வாழ்ந்துள்ளார். அவர்களின் பழக்கவழக்கத்தை கற்றுக்கொண்டுள்ளார். இதில் கிடைத்த அனுபவத்தில் படத்தில் நிஜ இருளர் பெண்ணாக நடித்து அனைவரின் உள்ளத்திலும் இடம்பிடித்துள்ளார் லிஜோமோள் ஜோஸ்.