Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

‘பேட்டிங்’ கேள்விக்கு, 'கூகுள் இட்' என்று மாஸா பதிலளித்த பும்ரா- சுந்தர் பிச்சை, எலான் மஸ்க் பாராட்டு!

இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியில் பேட்டிங் பற்றிய கேள்விக்கு, ஜஸ்பிரித் பும்ரா அளித்த பதில் வைரலாகியுள்ளது. பும்ராவின் கருத்துக்கு கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையும், டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க்கும் அளித்திருக்கும் பதில் கவனம் பெற்றுள்ளது.

‘பேட்டிங்’ கேள்விக்கு, 'கூகுள் இட்' என்று மாஸா பதிலளித்த பும்ரா- சுந்தர் பிச்சை, எலான் மஸ்க் பாராட்டு!

Thursday December 19, 2024 , 3 min Read

பேட்டிங் பற்றி இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ராவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் இணையத்தில் வைரலாகியுள்ளது. கேளிக்கையாக பும்ரா அளித்த பதில் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி உலகளவில் டெக்னாலஜியில் நம்பர் 1 ஆகத் திகழும் சுந்தர் பிச்சை, எலான் மஸ்க் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பார்டர் கவாஸ்கர் கோப்பைக்காக இந்தியா- ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் போட்டியில் வெற்றிக்காக இந்தியா கடுமையாக போராடி வருகிறது.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 3வது நாள் முடிவில் 51 ரன்களில் 4 விக்கெட்டை இழந்து தடுமாறியது.

மூன்று முறை மழை குறுக்கிட்டதால் ஓவர்கள் குறைக்கப்பட்டது. கிடைத்த ஓவர்களில் இந்திய அணியை வீழ்த்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸின் பந்து வீச்சு இருந்தது. கடைசியில் ஒரு விக்கெட் மட்டுமே இருந்த நிலையில், ஜஸ்பிரித் பும்ரா ஆகாஷ் தீப் ஜோடியின் ஆட்டத்தால் இந்தியா பாலோ ஆன் ஆபத்தில் இருந்து தப்பித்தது. முதன் இன்னிங்ஸ் முடிவில் இந்தியா 74.5 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 252 ரன்கள் எடுத்திருந்தது. 5வது நாள் ஆட்டத்தில் 98 ஓவர்கள் உள்ள நிலையில் பும்ரா ஆகாஷ் தீப் விளையாட உள்ளனர்.

இந்நிலையில், 3ம் நாள் ஆட்ட முடிவில் காபா ஸ்டேடியத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஜஸ்பிரித் பும்ராவிடம் பேட்டிங் பற்றி செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில் வைரலாகியுள்ளது. பும்ரா ஒரு சிறந்த பந்து வீச்சாளர் அவருக்கு பேட்டிங் பற்றி தெரியாது என்கிற விதத்தில்,

“பேட்டிங் பற்றிய கேள்வியை உங்களிடம் கேட்பது சரியாக இருக்காது என்றாலும் இந்திய அணியின் பேட்டிங் இந்த ஆட்டத்தில் எப்படி இருந்தது?” என்று செய்தியாளர் கேட்டார்.

சற்றும் யோசிக்காமல் பதிலளித்த பும்ரா,

“நிச்சயமாக இது ஒரு சுவாரஸ்யமான கேள்வி. என்னுடைய பேட்டிங் திறமையை பற்றி நீங்கள் கேள்வி எழுப்புகிறீர்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன் அடித்த வீரர் யார் என்று (Google it) கூகுளில் தேடிப் பாருங்கள்...” என்று மாஸாக பதிலளித்தார்.

அவரின் பதில் அந்த அறையில் சிரிப்பை ஏற்படுத்தினாலும் தன்னுடைய சாதனை என்ன என்பதை நாசுக்காக கேள்வி கேட்ட பத்திரிக்கையாளருக்கு நறுக்கென சுட்டிகாட்டியுள்ளார்.

“யார் சரியாக விளையாடினார்கள், யார் சரியாக விளையாடவில்லை என்று ஒருவரை ஒருவர் கைகாட்டும் அணி நாங்கள் இல்லை. அணிக்குள் சில மாற்றங்கள் நடந்திருக்கிறது, புதிய வீரர்கள் இணைந்திருக்கிறார்கள், அவர்கள் கற்று கொண்டு வருகிறார்கள்,” என்று பும்ரா பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேட்டி அளித்திருந்தார்.

தன்னுடைய பேட்டிங் பற்றி பும்ரா அளித்த கெத்தான பதில் இணையத்தில் வைரலாகியுள்ளது. 2022ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா 9 விக்கெட்டுகள் இழந்திருந்த நேரத்தில் ஒரே ஓவரில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸ்கள் அடித்தவர் பும்ரா. நோ பால், சிங்கிள் மற்றும் எக்ஸ்ட்ராஸ் உடன் அந்த ஓவரில் 35 ரன்கள் வந்தது. இது உலக சாதனை என்பது குறிடத்தக்கது.

இதனிடையே, பும்ராவின் கூகுள் இட் கருத்துக்கு கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை இணையத்தில் பதிலளித்துள்ளார்.

“நான் கூகுள் செய்து பார்த்தேன் - கம்மின்சின் பந்துகளை சிக்சர்களாக்கத் தெரிந்த ஒருவருக்கு எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதும் தெரியும்! இந்தியாவை ஃபாலோ ஆனில் இருந்து காப்பாற்றி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளீர் பும்ரா,” என்று அவர் தன்னுடைய ட்டீவீட்டில் பதிவிட்டிருந்தார்.

பும்ராவின் பேட்டிங் குறித்து பிச்சை செய்திருந்த ட்வீட்டில் பதிலளித்திருந்த டெஸ்டா சிஇஓ எலான் மஸ்க் “சிறப்பு” என்று பதிலுக்கு ட்வீட் செய்திருந்தார்.

வைரல் பேட்டிங் கருத்துக்கு சுந்தர் பிச்சையும் எலான் மஸ்க்கும் பதிலளித்துள்ளது, பும்ராவின் புத்திசாலித்தனம் மற்றும் தைரியம் கிரிக்கெட் வட்டாரங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு பேசும் பொருளாக மாறியுள்ளது - அவர் ஏன் உலகம் முழுவதும் போற்றப்படுகிறார் என்பதை டெக் ஜெயன்ட்டுகளின் பதில் மீண்டும் நிரூபித்துள்ளது.

அதே சமயம், தன்னுடைய பேட்டிங் திறன் குறித்த கேள்வியை தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல் ஜாலியாக பதிலளித்த பும்ராவை கூகுள் இந்தியா பெருமைபடுத்தியுள்ளது.

ஜஸ்ஸி பாய் என்று செல்லமாக அழைக்கப்படும் பும்ராவை பாராட்டும் விதமாக கூகுள் இந்தியா ஆன்லைனில் “நான் ஜஸ்ஸி பாயை மட்டுமே நம்புகிறேன்” என்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. பேட்டிங் பந்து வீச்சு எதுவாக இருந்தாலும் பும்ராவின் விளையாட்டு திறமையை தொழில்நுட்ப ஜாம்பவானான கூகுள் நம்புகிறது என்பது இதில் இருந்து தெரிகிறது.