Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

நிலமற்ற 10 குடும்பங்களுக்கு தங்கள் நிலத்தை பிரித்துக் கொடுத்த கேரள தம்பதி!

தனது வீட்டின் கிரகபிரவேசத்திற்கு முன்னதாக நிலமற்ற 10 ஏழை குடும்பங்களுக்கு கேரளாவைச் சேர்ந்த தம்பதி தங்களது நிலத்தை பிரித்துக்கொடுத்துள்ளனர்.

நிலமற்ற 10 குடும்பங்களுக்கு தங்கள் நிலத்தை பிரித்துக் கொடுத்த கேரள தம்பதி!

Wednesday May 18, 2022 , 2 min Read

கேரள மாநிலம் பலால் மற்றும் கோடோம்-பெல்லூர் பஞ்சாயத்துகளில் ஏக்கர் கணக்கில் ரப்பர் எஸ்டேட் வைத்திருக்கும் சஜீவ் மட்டத்தில் அக்குபஞ்சர் சிகிச்சையும் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயா சஜீவ்.

இந்த தம்பதி 15 ஆண்டுகளுக்கு முன்பு சொந்த வீடு கட்டுவதற்காக கனகப்பள்ளியில் நிலம் வாங்கிய போது, ஒரு அற்புதமான முடிவை எடுத்தனர்.

அதாவது புது வீடு கட்டி குடியேறுவதற்குள் சமூகத்திற்கு பயனுள்ள வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தனர். தேவையுள்ள சிலருக்கு பண உதவி செய்யலாம் என சஜீவ் பரிந்துரைத்துள்ளார். ஆனால், அவரது மனைவி ஜெயா வீடு இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு நிலம் கொடுத்து உதவலாம் என முடிவெடுத்தார். இந்த யோசனை இருவருக்கும் ஒத்துப்போக வேலையை ஆரம்பித்தனர்.

இவர்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வீடு கட்டும் பணியை தொடங்கினர். 2021 டிசம்பரில், பணிகள் முடியும் தருவாயில் இருந்தபோது, ​​நிலமற்ற 10 குடும்பங்களுக்கு நிலம் கொடுப்பது குறித்து தனது நண்பர்களிடம் தெரியப்படுத்தினர்.

கனகப்பள்ளியில் உள்ள செயின்ட் மார்டின் டி போரஸ் தேவாலயத்தின் விகாரி பீட்டர் கனீஷ் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவை அமைத்தனர்.

"கமிட்டியின் அனைத்து உறுப்பினர்களும் எனது நண்பர்கள். நான் அவர்களிடம் இரண்டு விஷயங்களை மட்டுமே சொன்னேன். அவர்கள் தேர்ந்தெடுக்கும் அனைத்து நபர்களும் தகுதியானவர்களாக இருக்க வேண்டும், மேலும், 10 பயனாளிகளில் நான்கு பேர் கிறிஸ்தவர்கள், மூன்று இந்துக்கள் மற்றும் மூன்று முஸ்லிம்களாக இருக்க வேண்டும்," என சஜீவ் வேண்டுகோள் வைத்துள்ளார்.
Kerala couple

இந்தக் குழு செய்தியாளர் சந்திப்பை நடத்தி டிசம்பர் மாதம் நிலத்திற்கான விண்ணப்பங்களை கோரியது. கோட்டயம், சேர்த்தலா போன்ற இடங்களில் இருந்து 60 விண்ணப்பங்கள் குவிந்தன.

கண்ணூர் மற்றும் காசர்கோட் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பயனாளிகள் கனகப்பள்ளிக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் அந்த இரண்டு மாவட்டங்களில் இருந்து விண்ணப்பங்களை குழு பட்டியலிட்டது. பின்னர் விண்ணப்பதாரர்கள் வீட்டிற்கும் நேரில் சென்று அவர்கள் தகுதியானவர்களா? என ஆய்வு நடத்தினர். இந்த தேடலின் முடிவில் தகுதியுள்ள நபர்களாக 7 இந்துக்கள், இருவர் முஸ்லிம்கள் மற்றும் ஒரு கிறிஸ்தவர் இடம் பிடித்தனர்.

மேற்கு எளேரி பஞ்சாயத்து பீமநடி கூலிப்பாறையில் 26 ஆண்டுகளாக வாடகை வீட்டில் நோயுற்ற பெற்றோர் மற்றும் குழந்தைகளுடன் தனியொரு தாயாக போராடி வரும் சந்தியா வினீத் வசித்து வருகிறார். இதேபோல் கண்ணூர் மாவட்டம் தளிபரம்பாவில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் முதுகு தண்டில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக வேலையை இழந்து, விதவையான லீலாம்மா இரண்டு சிறு குழந்தைகளுடன் போராடி வருகிறார். இப்படி உண்மையாகவே உதவி தேவைப்படும் நபர்களை குழு சல்லடை போட்டு சலித்து எடுத்துள்ளது.

Kerala couple
இதேபோல் பரப்பா அருகே உள்ள பேரிகுளத்தைச் சேர்ந்த பிந்து; கண்ணங்காடு அருகே உள்ள ஆரங்கடியைச் சேர்ந்தவர் யமுனா, 41; புல்லூர்-பெரிய ஊராட்சிக்கு உட்பட்ட எரியை சேர்ந்த சுமதி; பரப்பாவில் ஏரம்குனிலைச் சேர்ந்த பின்சி; எரியாவைச் சேர்ந்த முடங்கியவர் சாபு கே.சி; நீலேஷ்வர் அருகே வங்காளத்தில் கார்த்தியானி; மற்றும் காசர்கோடு பெடட்கா பஞ்சாயத்தை சேர்ந்த நசீமா ஆகியோர் பயனாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

சாலையோர மனைகளின் மார்க்கெட் விலை ஒரு சென்ட் ரூ.1 லட்சம் ஆகும். ஒவ்வொரு மனைக்கும் சாலை வசதி இருக்கும் வகையில் சஜீவ் சுமார் 60 சென்ட்களை ஒதுக்கியுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 8), சஜீவ் எம் ஜி மட்டத்தில் மற்றும் அவரது மனைவி ஜெயா சஜீவ் ஆகியோர், தலா ஐந்து சென்ட் நிலங்களை பயனாளிகளுக்கு வழங்கியுள்ளனர். தற்போது குழு அவர்கள் வீடு கட்ட தேவையான உதவிகளை செய்து வருகிறது.

தகவல் உதவி - நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்