Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

'பிளம்பிங் வேலை செய்து என் நான்கு பிள்ளைகளைக் காப்பாற்றுகிறேன்' – கேரள பழங்குடி பெண்!

கேரளாவைச் சேர்ந்த ஷைலஜா அய்யப்பன் திறன் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் பிளம்பிங் வேலையைக் கற்றுக்கொண்டு அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தன் பெண் குழந்தைகள் நான்கு பேரையும் தனி ஆளாகக் காப்பாற்றி வருகிறார்!

'பிளம்பிங் வேலை செய்து என் நான்கு பிள்ளைகளைக் காப்பாற்றுகிறேன்' – கேரள பழங்குடி பெண்!

Monday May 30, 2022 , 3 min Read

ஷைலஜா அய்யப்பனுக்கு 37 வயதாகிறது. இவர் கேரளாவில் உள்ள அதிரப்பள்ளியின் சோலையார் பகுதியைச் சேர்ந்தவர். கதர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவர் சமூகத்தில் வேரூன்றி இருக்கும் தடைகளைத் தவிடு பொடியாக்கியுள்ளார். ஆண்களுக்கான பகுதியாக நாம் நினைக்கும் பிளம்பிங் வேலை செய்து தன் குழந்தைகள் நான்கு பேரையும் காப்பாற்றி வருகிறார்.

ஷைலஜாவின் கணவர் அவரையும் நான்கு பெண் குழந்தைகளையும் நிராதரவாக விட்டு சென்றுவிட்டார். ஷைலஜா கிடைத்த வேலைகளை செய்து வந்தார். வீட்டை சுத்தம் செய்வது, சமையல் செய்து கொடுப்பது இப்படி எந்த வேலை கிடைத்தாலும் அதை ஏற்றுக்கொண்டு செய்திருக்கிறார்.

1

வழக்கமான வேலைகளைச் செய்து வந்தாலும் வித்தியாசமாக ஏதோ ஒன்றில் ஈடுபடவேண்டும் என்கிற நினைப்பு இவர் மனதில் இருந்து வந்தது. இது ஒருபுறம் இருக்க கிடைத்த வருமானமும் போதவில்லை.

இவர் வசித்தது காட்டுப் பகுதி. சாலக்குடி இவரது இடத்திற்கு அருகிலிருக்கும் நகர். அதுவே 65 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஒதுக்குப்புறமான இடமாக இருப்பதால் வேலைக்கு செல்வதும் கஷ்டமாக இருந்துள்ளது.

இப்படியே நாட்கள் குழப்பத்துடனும் பணக்கஷ்டத்துடனும் நகர்ந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில்தான் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகத்தின்கீழ் உள்ள ஜன் சிக்‌ஷான் சன்ஸ்தான் (JSS) இவருக்குக் கைக்கொடுத்து உதவியுள்ளது.
2

திறன் இந்தியா பிரச்சாரத்தின்கீழ் வெவ்வேறு துறைகளில் மக்கள் திறன் பெறுவதற்காக இந்த முயற்சி உருவாக்கப்பட்டுள்ளது. ஷைலஜா வசித்த பகுதியில் இருக்கும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பயிற்சியளிக்க இந்நிறுவனம் ஏற்பாடு செய்தது.

புதிய தொடக்கம்

”அதிரப்பள்ளி கிராமப் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் வி.தங்கம்மா தொழில் சம்பந்தப்பட்ட இந்தப் பயிற்சி பத்தி என்கிட்ட சொன்னாங்க. உடனே எனக்கு ஆர்வமா இருந்துது. எதுவுமே யோசிக்காம போய் சேர்ந்துட்டேன். எனக்குப் பிடிச்சு ஆர்வமா கலந்துகிட்டதால சீக்கிரமே கத்துக்க முடிஞ்சுது,” என்கிறார் ஷைலஜா.

ஷைலஜா மட்டுமல்ல, அவரது மகள்கள் நான்கு பேரும் ஸ்கில் இந்தியா திட்டத்தின்கீழ் பிளம்பிங் வேலைகளில் பயிற்சி பெற்றார்கள். இப்போது ஷைலஜா வசிக்கும் பகுதியில் யாருக்கு பிளம்பிங் வேலைக்காக ஆள் தேவைப்பட்டாலும் உடனே அழைக்கும் ஒரே நபர் ஷைலஜா மட்டுமே.

“ஒரு மாசத்துக்கு எப்படியும் 5,000 ரூபாய் சம்பாதிக்கறேன். ஒரு பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வெச்சிட்டேன். ஒரு பொண்ணு வேலைக்கு போறா. மத்த ரெண்டு பேரும் படிக்கறாங்க. கௌரவமா குடும்பம் நடத்திகிட்டு இருக்கேன்,” என்கிறார்.

2020-2021 ஆண்டுகளில் JSS சோலையார் பழங்குடி காலனியில் ஷைலஜா உட்பட 20 பேரைத் தேர்வு செய்து மூன்று மாத கால பயிற்சி கொடுத்தது.

3

ஆண்களுக்கான வேலை என்கிற சமூக கண்ணோட்டத்தை மாற்றியமைத்து இந்தத் துறையில் வேலை செய்வதற்காக 2022-ம் ஆண்டின் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டத்தில் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம் ஷைலஜாவை கவுரவித்துள்ளது.

நாட்டில் நான்கு பெண்களுக்கும், குறிப்பாக கேரளாவில் இவருக்கு மட்டுமே இந்த கவுரவம் கிடைத்துள்ளது. மற்றவர்கள் மகாராஷ்டிரா, சண்டிகர், டெல்லி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

பாலினம் சார்ந்த பாகுபாடு

பிளம்பிங் போன்ற வேலைகளைப் பெண்கள் அதிகம் செய்வதில்லை என்கிறார் ஷைலஜா. பயிற்சி முடிந்த பின்னரும் அவருடன் பயிற்சி எடுத்துக்கொண்டவர்களில் வெகு சிலரே இந்த வேலையைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

“பயிற்சி முடிச்சோம். பக்கத்துல இருக்கற காலனிகள்ல நிறைய வேலை கிடைக்க ஆரம்பிச்சுது. நான் பயிற்சி எடுத்துக்கறதையும் வேலை செய்யறதையும் பார்த்து நிறைய பேர் ஆச்சரியப்பட்டாங்க. என்னால இந்த வேலையை ஒழுங்கா செய்யமுடியுமான்னு சிலருக்கு சந்தேகம்கூட வந்துது. ஆனா இந்த வேலைதான் எனக்கு ஒரு புது நம்பிக்கையை கொடுத்திருக்கு. என் பசங்களை கரையேத்தவும் உதவுது,” என்று புன்னகையுடன் குறிப்பிடுகிறார் ஷைலஜா.

கிட்டத்தட்ட ஒரு வருடமாக இந்த வேலை செய்து வருகிறார். இதுவரை பெரிய காண்ட்ராக்ட் எதுவும் எடுத்து செய்யவில்லை. இருந்தாலும் ரிப்பேர், இன்ஸ்டலேஷன் வேலைகள் போன்றவற்றை செய்கிறார்.

4
“கதர் பழங்குடி காலனியில அரசாங்கத்தோட குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கு. இதனால கிட்டதட்ட எல்லார் வீட்லயும் தண்ணி கனெக்‌ஷன் இருக்கும். எங்க ஏரியால நல்லா பயிற்சி எடுத்திருக்கற பிளம்பர் கிடைக்கறது கஷ்டம். நான் ரொம்ப கம்மியான பணத்துக்கு இந்த வேலைங்களை பண்ணிக் கொடுக்கறேன்,” என்கிறார்.

ஒரு மாதத்திற்கு கிட்டத்தட்ட 10 பிளம்பிங் வேலைகள் கிடைக்கும் என்கிறார் ஷைலஜா. ஆனால், ஒரு பெண்ணை பிளம்பிங் வேலைக்குக் கூப்பிடவேண்டுமா என்கிற தயக்கம் மக்களிடம் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

”எனக்கு வேலை வந்துட்டா ரொம்ப ஈடுபாடோட செய்வேன். பள்ளம் தோண்டறது, பைப்களை கட் பண்றதுன்னு இப்படி எல்லா வேலையையும் நானே செஞ்சு முடிப்பேன்,” என்கிறார்.

படிப்பறிவு இல்லாமல் போனாலும் இந்த வேலை தனது வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்திருப்பதாக அவர் நம்புகிறார். கற்றுகொண்ட திறனை வீணாக்காமல் இனி வரும் காலத்திலும் தொடர்ந்து இந்த வேலையை செய்வேன் என்கிறார்.

ஆங்கில கட்டுரையாளர்: அபூர்வா பி | தமிழில்: ஸ்ரீவித்யா