Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

குயர் சமூகத்துக்கு குரல் கொடுக்கும் கிரீஷ்-மவுலி இணை பகிரும் அனுபவங்கள்!

’சமூக நீதிக்காக இயங்குபவர்கள், குயர் சமுகத்திற்காகவும் இயங்க வேண்டும்’ : LGBTQ சமூக ஆர்வலர்கள் கிரீஷ் மற்றும் மவுலி

குயர் சமூகத்துக்கு குரல் கொடுக்கும் கிரீஷ்-மவுலி இணை பகிரும் அனுபவங்கள்!

Wednesday February 13, 2019 , 8 min Read

’கப்பிள் பேட்டி எல்லாம் ரொம்ப அறுவையாக இருக்கறதுனாலேயே எங்களுக்கு அது பத்தின நல்ல அபிப்ராயம் இல்லை’ என்ற டிஸ்க்ளெயிமரோடு தான் பேட்டி கொடுத்திருக்கிறார்கள் கிரீஷும், மவுலியும். குயர் இலக்கிய படைப்புகளை வெளியிடவும், அவை குறித்த விவாதங்களை நடத்தவும் குயர் சென்னை கிரானிக்கல்ஸ் பதிப்பகத்தை தொடங்கியது, இந்தியாவின் முதல் குயர் இலக்கிய விழாவை நடத்தியது என கிரீஷ், மவுலி இணை எல்.ஜி.பி.டி.க்யூ சமூகத்திற்காக தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிறார்கள்.

2019- ஆன பிறகும் கூட பழைமைவாதத்தை பிரச்சாரம் செய்து, வன்மத்தை வளர்த்துக் கொண்டே இருக்கும் பெரும்பான்மைக்கு மத்தியில் போராடுவது சாதாரணமானது அல்ல. முன்னோடிகளாகவும், முன்னுதாரணங்களாகவும் இருக்கும் இவர்களோடு இ-மெயில் வழியே கண்ட பேட்டி :  

கேள்வி : உங்களோட பேக்ரவுண்ட், வேலை பற்றி சொல்லுங்க?

கிரீஷ்: நான் நாகர்கோவில்ல பிறந்தேன்.சென்னைக்கு வேலை தேடி வந்து அப்புறமா கவின்கலைக் கல்லூரியில படிச்சு இப்போ அட்வர்டைசிங்ல இருக்கேன். என்னோட பாலீர்ப்பு பத்தி என்னோட வீட்டுல அக்காவுக்கு நல்லா தெரியும். அம்மாவுக்கு தெரியும்னு நான் நம்புறேன். ஆனா நாங்க அதைப்பத்தி பேசிக்குறது இல்ல. சினிமாத் துறை, ஐ.டி, இண்டீரியர்னு நிறைய மாறி இப்போ விளம்பரத்துறையில ஓரளவுக்கு செட் ஆகி இருக்கேன். இது தவிர எழுதுறது ரொம்ப பிடிக்கும். 2018-ல் ’விடுபட்டவை’னு ஒரு புத்தகம் வெளியிட்டு இருக்கேன். நானும் மவுலியும் குயர் சென்னை கிரானிக்கள்ஸ்னு ஒரு பதிப்பகத்தையும் நடத்திக்கிட்டு இருக்கோம்.

மவுலி : நான் வளர்ந்தது பாண்டிச்சேரில. எம்.டெக் படிச்சிருக்கேன். என்னோட பதின் பருவத்தில இருக்கும் போது வீட்டுல என்னோட பாலீர்ப்பு பற்றி சொன்னேன். அதைக் கேட்டு அவங்க சொன்ன ஒரே பதில் நான் படிப்பில கவனமா இருக்கணும்கிறது மட்டும் தான். என்னோட அப்பா அம்மா தான் அவங்க குடும்பத்துல முதல் தலைமுறை பட்டதாரிகள், அவங்களை படிப்பு தான் வலிமையாக்குனது. அதனாலேயே என் படிப்புக்கும் அக்கா படிப்புக்கும் ரொம்ப முக்கியத்துவம் கொடுத்தாங்க.

என்னோட இருபதுகள்-ல தான் என்னோட பாலீர்ப்பு பத்தின யதார்த்தத்தை அவங்க பார்த்தாங்க. என்னோட வாழ்க்கை திட்டங்கள்; திருமணம், etc., பற்றி எல்லாம் பேசுனோம். நான் பொது வெளியில எல்.ஜி.பி.டி.க்யூ ஆர்வலரால இயங்குறது அவங்களுக்கு கவலையா இருந்தது. என்னோட பாதுகாப்ப நெனச்சு கவலைப்பட்டாங்க. 

நான் ஐ.டில ப்ரோக்ராம் மேனேஜரா இருக்கேன், குறைவா ரெப்ரெசெண்ட் செய்யப்படுற சமூகங்களை (LGBTQ), மாற்றுத் திறனாளிகள், பெண்கள்) சேர்ந்தவர்களுக்கு ஒரு பாதுகாப்பான வேலை இடத்தை உருவாக்கிக் கொடுக்குறதும் நான் செய்யுற வேலையில வரும்.

“வேற்றுமை, சமத்துவம் மற்றும் உட்படுத்துதல்” (Diversity, Equity and Inclusion) அப்படிங்குற ஐடியாவுக்குக் கீழ இது வரும். பிற நிறுவனங்கள் தங்களுடைய வேலை இடத்தை இன்க்ளூசிவா உருவாக்கிக்க வழிநடத்துற கன்சல்டண்டாகவும் இருக்கேன். 

கேள்வி : நீங்க ரெண்டு பேரும் எப்படி சந்திச்சீங்க? ஒருவருக்கொருவர் கம்ஃபர்டபிளா ஆனதுக்கு என்ன காரணம்?

கிரீஷ்: நாங்க ரெண்டுபேரும் சந்திச்சது ரொம்ப ரொம்ப யதார்த்தமாக ஒரு ஈவெண்ட்ல. அப்போ நான் வேற ஒரு பிரச்சினையில இருந்ததால என்னால சரியா மவுலிகிட்ட பேசமுடியல. அதுக்கு பிறகு ரெண்டு மூணு ஈவண்ட்ல நாங்க சந்திச்சு இருக்கோம். ஒருத்தர் மேல ஒருத்தருக்கு விருப்பம் இருக்குறது தெரிஞ்சு இருந்தாலும் நாங்க வேற வேற ரிலேஷன்ஷிப்ல இருந்ததால ரொம்ப நெருக்கமாகாமலே இருந்தோம். அதுக்கு பிறகு ஒரு ரெண்டு வருஷம் கழிச்சு தான் நாங்க எந்த குழப்பமும் இல்லாம சந்திக்கலாம்னு முடிவு பண்ணினோம்.

எந்த ஒரு ரிலேஷன்ஷிப்புலேயும் ஆரம்பக் காலத்துல நம்மைப் பத்தி நாமே வெளியே சொல்ல வெட்கப்படுற சில விஷயங்களைச் சொல்ல மாட்டோம். நம்மை ஜட்ஜ் பண்ணிடுவாங்களோன்னு ஒரு பயம் இருக்கும். ஆனா அந்த மாதிரி எந்த பயமும் இல்லாம ஒருத்தரோட பேச முடியறது தான் எனக்கு முதல்ல ரொம்ப கம்பர்டபிளா இருந்துச்சு. அப்புறம் நாங்க இது ஒரு ரிலேஷன்ஷிப் தான் நெனைச்சு எதையுமே தொடங்கல.

நாங்க திட்டம் போடவே இல்ல. அது தானா நடக்கட்டும்னு ரெண்டுபேரும் நினைச்சது தான அதை இன்னைக்கு ஒரு ரிலேஷன்சிப்பா மாத்தி இருக்கு. எங்களோட அரசியல் ஒரே மாதிரி இருந்ததால வேற விஷயங்கள் எல்லாம் யோசனைக்கு வரவே இல்லை.

மவுலி : சென்னையில் இருக்க கே (gay) சமூகம் ரொம்ப சின்னது. எதாவது ஒரு வழியில எல்.ஜி.பி.டி.க்யூ நிகழ்வுகளிலையோ, சமூக ஊடகம் வழியாவோ நான் சந்திச்சிருக்கதுக்கு வாய்ப்பிருந்தது. அப்படி பார்க்கும் போது, கிரீஷை பார்ப்பதுக்கு முன்னாடியே அவரைப் பற்றி தெரிஞ்சு இருந்தது. நாள் போகப் போக, நாங்க ஒரு ரிலேஷன்சிப்ல இருந்தா நல்லா இருக்கும்னு நெனச்சோம். 

கேள்வி : குயர் இலக்கிய விழா (queer lit fest) நடத்தணும்னு யோசிச்ச காரணம் என்ன? ஆர்கனைஸ் பண்றப்போ எதாவது முரண்பாடுகள் வந்துச்சா ? நிகழ்வு முடிஞ்ச பிறகு எப்படி ஃபீல் பண்ணீங்க?

கிரீஷ்: குயர் இலக்கிய விழா நடத்தணும் அப்படிங்குறது முழுக்க முழுக்க மவுலியோட ஐடியா. அதை அவர் சொன்னப்போ கூட நடத்தலாம், ஆனா பதிப்பகம் ஆரம்பிச்சு ஒரு ஆறு மாசத்துல நடத்த முடியுமாங்குற கேள்வி இருந்துச்சு. ஆனா மவுலி அதுக்குள்ள முழுசா போய் வேலை பார்க்கத் தொடங்கினப்போ தான் நானும் அது இந்த வருஷம் நடத்தப்போறோம்னு நம்பினேன். 

கண்டிப்பா கான்பிளிக்ட் வந்துச்சு. தலைப்புகள், டிசைன், வென்யூ, ஸ்பீக்கர்ஸ் அப்டின்னு எல்லாத்துலையும் கான்பிளிக்ட் வந்துச்சு. ஆனா அதைப்பத்தி பேசவோ, நம்மோட கருத்தை புரிய வைக்கவோ கூட நேரம் இல்லாத அளவுக்கு வேலைகள் ரெண்டு பேருக்கும் இருந்துச்சு. ரெண்டு பேர்ல யாரோ ஒருத்தரோட முடிவை கேட்டுட்டு நகர்ந்துக்கிட்டே இருந்தோம். கடைசி ரெண்டு வாரமும் தினமும் பதினெட்டுல இருந்து இருபது மணிநேரம் சேர்ந்து வேலை செய்யும்போது நாங்களா ஒரு சின்க்குக்கு வந்துட்டோம்.  

ப்ரோக்ராம் முடிஞ்ச பிறகு இந்தியாவோட முதல் குயர் லிட் பெஸ்டை பெரிசா எந்த சப்போர்ட்டும் இல்லாம எங்களை, எங்களோட அரசியலை நம்பின கொஞ்சம் மக்களோட சேர்ந்து பண்ணிட்டோம் அப்டிங்குற திருப்தி இருந்துச்சு. 

மவுலி : நான் குயர் இலக்கிய விழாவுக்கான ஐடியாவ சொன்னப்போ, வொயலட்டும் கிரீஷும் அதை ஏத்துக்கல. ஒரு குயர் நபராக எனக்கு யாருமே வாழ்க்கைய எப்படி வாழணும்னு சொல்லிக் கொடுக்கல. எல்லாமே என் அனுபவத்தை வெச்சு தான் நடந்தது, அதனாலேயே ‘எதை வேண்டுமானாலும் செய்யலாம்’ அப்படிங்குற உணர்வு இருந்துச்சு. கூடவே, இப்படித் தான் ஒரு விஷயத்தை செய்யணும் அப்படிங்குற விதிமுறைகளையும், அமைப்புகளையும் எல்லாம் எனக்கு பிடிக்காது. இங்க நான் ஒரு வாடிக்கையாளரும் கூட. 

ஒரு கே நபராக இங்கே ஏற்கனவே இருக்கிற இலக்கிய வெளி, நான் நினைப்பது போல இன்க்ளூசிவாக இல்லை. என்னை மனசுல வெச்சுட்டு, ஒரு இலக்கிய வெளி உருவாக்கணும்னு நெனைச்சேன். சொல்லப் போனால், நான் எதாவது திட்டம் தொடங்கும் போது எனக்கு அது பிடிக்குமா பிடிக்காதா என யோசிச்சிட்டு தான் தொடங்குவேன். எல்லா கட்டத்துலயும் வந்த முரண்பாடுகளையும், எங்களோட அரசியலை சமரசம் செஞ்சுக்காம தீர்த்துக்கிட்டோம்.  

கேள்வி : நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து பேங்க் ஜாயிண்ட் அக்கவுண்ட் தொடங்குறதுல இருந்த பிரச்சினைய சொல்லிருந்தீங்க. அப்படி இந்த அமைப்பு சாதகமாக இல்லாததால என்னென்ன பிரச்சினைகளை சந்திக்குறீங்க? அதை எப்படி சமாளிக்குறீங்க?

கிரீஷ்: பேங்க் ஜாயிண்ட் அக்கவுண்ட் தொடங்குறது, வீடு பாக்குறது, ஆபீஸ்ல செக்சுவாலிட்டினால வர பிரச்சினைகள்னு அடிக்கடி ஏதாவது பிரச்சினைகள் வந்துட்டே தான் இருக்கு. ஆனா என்ன பிரச்சினை வந்தாலும் சேர்ந்து பாத்துக்கலாம்னு ஒரு எழுதப்படாத உறுதிமொழி அடிப்படையில வாழ்க்கை போகுது. மனநலம் சில சமயம் கடுமையா பாதிக்கப்படும். அந்த மாதிரியான நேரத்துல நாங்க எங்களுக்குள்ள அதைப் பத்தி பேசுறோம். தேவைப்பட்டா எக்ஸ்பர்ட் உதவிகளும் எடுத்துக்குறோம்.

மவுலி : ஹெட்ரோசெக்ஸுவலாக இல்லாத ஒருத்தருக்கு சாதகமாகவே இருக்கக் கூடாதுன்னு தான் இந்த அமைப்பு இயங்குது. யதார்த்தத்தில், ஒரு குழுவாக எங்கள் இருவராக எதையுமே ஆக்சஸ் செய்ய முடியாது. ரெண்டு பேரில் ஒருவருக்கு எதாவது நடந்தா கூட, எங்களுடைய உறவை இந்த அமைப்பு புரிஞ்சுக்காம, நாங்க என்ன ‘மாதிரி’யான ஆட்களாக இருந்தோம்னு தான் பேச்சை தொடங்குவாங்கனு நினைக்கிறேன்! 

கேள்வி :தமிழ்நாட்டுல எல்.ஜி.பி.டி.க்யூ சமூகத்துக்காக இயங்குறோம்னு சொல்ற சில குழுக்களுக்கு உள்ளேயே இருக்க வேற்றுமைய பத்தி நீங்க ரெண்டு பேருமே நிறைய பேசிருக்கீங்க - அவங்களோடான பேச்சுவார்த்தை எப்படி இருக்கு? 

கிரீஷ்: கண்டிப்பா வேற்றுமைகள் நிறைய இருக்கு. அதைப்பத்தி, அந்த குழுக்கள் எப்படி ஒரு குறிப்பிட்ட மக்களுக்கான ஆதரவை மட்டும் கொடுக்குதுன்னு பேசி இருக்கோம். அதனாலேயே அந்த குழுக்கள்ல இருந்து நானும் மவுலியும் கிட்டத்தட்ட கட்டப்பஞ்சாயத்து மாதிரியான ஒரு கூட்டம் நடத்தப்பட்டு வெளியேற்றப் பட்டோம். என்னுடைய எழுத்துக்கள் முழுக்க அழிக்கப்பட்டுச்சு. அதுக்குப் பிறகு நம்மோட பாதுகாப்பத் தாண்டி வேற எதுவும் இல்லைன்னு எங்களோட இடத்தை நாங்களே உருவாக்கிக் கிட்டோம். இப்போ எங்களோட உரையாடலை நாங்க பொது சமூகத்துக்கிட்ட நிகழ்த்திக்கிட்டு இருக்கோம்.

மவுலி : பேச்சுவார்த்தை நடத்துனோம், எதுவும் மாறப் போறதில்லைன்னு உணர்ந்தோம்.குயர் இயக்கம் அல்லது எது மெயின்ஸ்ட்ரீம் குயர் இயக்கம்னு சொல்லப்படுதோ அது என்.ஜி.ஓக்களாலும், அதற்கு நிதி உதவி செய்பவர்களாலும் வழிநடத்தப்படுது. என்.ஜி.ஓ-க்களால் விதிகளுக்கு எதிரா இயங்க முடியாதுன்னு எனக்கு புரிய கொஞ்ச காலம் ஆச்சு. என்.ஜி.ஓ-க்கள் உங்களுக்கு உதவும் அமைப்பாகவோ அல்லது யாருக்கு உதவி பண்ணனும்னு தோணுதோ அவங்களுக்கு உதவும் அமைப்பாகவோ தான் இருக்குறாங்க – அவர்களால் மாற்றத்தை கொண்டு வர முடியாது. அங்க நடக்கும் உரையாடலே தங்களுக்கு வர்ற நிதியை வச்சு என்ன வேலை செய்ய முடியும் அப்படிங்குறது தானே தவிர. உரிமைகளை அடிப்படையாக வச்சு இல்ல. 

ஊரில் இருக்கும் நிறைய ‘பெரிய ஆட்களுக்கு’ எதிரா பேசினோம்; நிறைய ‘கட்ட பஞ்சாயத்து’க்கள பார்த்தோம் இதெல்லாம், நம்ம எல்லாருமே ஒரு குழு தான்னு நம்பிட்டு இருந்த காலத்துல. அது எப்பவுமே அதிகாரத்துல இருக்கவங்களுக்கு தான் சாதகமா அமையும்னு புரிஞ்சுது. தமிழ்நாட்டுல இருந்துட்டு, எந்தவொரு களத்துல எந்த சமூகத்தை சேர்ந்தவங்க ரொம்ப காலமா இருக்காங்கன்னு புரிஞ்சுக்க நமக்கு பி.ஹெச்.டி தேவையில்ல. அவங்க எல்லாரையும் ‘ நல்லா இருங்க’னு வாழ்த்திட்டு எங்களுக்கான வெளியை உருவாக்கினோம். 

எங்களோட இருத்தலை, அதற்கான அடையாளத்தை அழிக்க முயற்சிக்கும் போது, அவங்களோட பேச்சுவார்த்தை நடத்தணும்னு அவசியம் இல்லை. 2014- 2016ல இது எல்லாம் நடந்த போது நமக்கானதாக ஒரு சமூகம் இருக்குங்குற பிம்பம் உடைஞ்சு விழுந்துது. ரொம்பவே பலவீனமா இருந்தேன். என்னைக்காவது அவங்களோட அரசியலுக்கு உண்மையா அவங்க பேசுவாங்கன்னு நம்புறேன். 

கேள்வி : கடந்த செப்டம்பர்ல செக்க்ஷன் 377-ஐ ரத்து செய்தபோது – இது முழுமையான வெற்றி கிடையாதுன்னு ஒரு வாதம் இருந்துச்சு. அதைப் பற்றின உங்களோட கருத்து? 

கிரீஷ்: என்னைப் பொறுத்தவரைக்கும் பிரிவு 377 என்பது ஒரு கட்டமைக்கப்பட்ட பிம்பம் தான். 377 தலைக்குமேல தொங்குற கத்தி மாதிரி இருந்தாலும் அது மாறினா எல்லாமே மாறிடும்னு ஒரு பிம்பம் இருந்துச்சு. அது இப்போ இல்ல. அந்த ஒரு இடத்துல வெற்றி. ஆனா அதுக்குப்பிறகு தான் உண்மையான வேலைகள் செய்ய வேண்டி இருக்கு. நாம 377 பத்தி மட்டுமே பேசிட்டு இருந்ததால மத்த டயலாக் எதும் பேசவே முடியல. இப்போ அதை பண்ண முடியும்.

மவுலி : செக்ஷன் 377-ஐ நீக்குனது, நிச்சயமாக சமூகத்துல ஒரு பகுதி மக்களை வலிமையாக்குச்சு. சட்ட ரீதியான விளைவுகளை சந்திக்க வேண்டாம் எனும் விடுதலை உணர்வு தான் அந்த வலிமைக்கு காரணம். ஆனாலுமே நடைமுறையில் நிறைய சிக்கல்கள் இருக்குது. ஒரு நபரோட பாலினம், சாதி, வர்க்கத்திற்கு ஏற்ற மாதிரி பிரச்சினைகள் மாறுது. சமுக நீதிக்கான எந்த இயக்கமும் எல்.ஜி.பி.டி.க்யூ பிரச்சினைகளுக்காகவும் இயங்கணும். 

கேள்வி : ஓரு கப்பிளாக ’திருமணம்’ அப்படிங்குற ஐடியாவ நீங்க எப்படி அணுகுறீங்க? செயற்பாட்டாளரளாக ’கே திருமணங்கள்’ (gay marriage) பத்தின உங்களோட நிலைப்பாடு என்ன ?

கிரீஷ்: ஒரு கப்பிளா எனக்கு திருமணமானவர்களுக்கு கிடைக்குற அங்கீகாரம் தேவையா இருக்கு. அரசாங்கம் மூலமா கிடைக்குற உரிமைகள் அனைத்துமே தேவையா இருக்கு. ஒரு ஹெட்ரோசெக்சுவல் கப்பிள்கு கிடைக்குற சலுகைகள் எல்லாமே எனக்குத் தேவை. ஆனா அதுக்கு திருமணம் ஒரு தீர்வான்னு எனக்கு தெரியல.

திருமணமாகாம சேர்ந்து வாழுற எல்லாருக்கும் பாலினம், பாலீர்ப்பு எல்லாம் தாண்டி உரிமைகள் ஒண்ணா இருக்குற நிலமை வரணும். அப்போ திருமணம் பத்தின விவாதங்கள் பரவலா நடக்கும். திருமணம் ஒரு மிகைப்படுத்தப்பட்ட விஷயம் அப்டிங்குற முடிவு வரும்னு நினைக்குறேன். 

மவுலி : திருமணத்தினால் நிறைய சட்ட ரீதியான சமுக ரீதியான நன்மைகள் கிடைக்கின்றன. அது எதுவுமே திருமணத்தோடு தொடர்புபடுத்தப்படக் கூடாதுன்னு நினைக்கிறேன். இப்படி நாங்க சேம்-செக்ஸ் திருமணமாகாத தம்பதிக்கு சட்ட சலுகைகள் வேணும்னு கேட்கும் போது, அது ஹெட்ரோசெக்ஸுவல் தம்பதிகளுக்கும் தான். வாழ்க்கையில் இவ்வளவு தூரம் சமூகத்திற்கு எதிரா வாழ்ந்தாச்சு, இப்போ நான் ஏன் ஒரு அமைப்புக்குள்ள வரணும்னு நினைக்கப் போறேன், அதனால என்ன மாற்றம் வரும்?! 

ஆனா, நான் திருமணம் செஞ்சுக்கணும்னு நெனைக்குற சேம்-செக்ஸ் தம்பதிகளுக்கு எதிரா பேச மாட்டேன். திருமணம் எல்லாருக்குமானதாக இருக்கணும் . திருமண சமத்துவம் தான் எல்.ஜி.பி.டி.க்யூ உரிமைக்கான அடிப்படைன்னு சொன்னா, அதை ஏத்துக்க மாட்டேன். 

கேள்வி : உங்களுக்கு குழந்தைகள் வேணும்னு தோன்றியது உண்டா? நீங்கள் பெற்றோர்களாக இருந்து குழந்தை வளர்க்குறது பற்றி என்ன நினைக்குறீங்க? 

கிரீஷ்: எனக்குக் குழந்தைகள் வளர்க்குறதுலையோ, எனக்குன்னு குழந்தைகள் இருக்குறதுலையோ கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. எனக்கு குழந்தைகள் வளர்க்குறதுக்கான உரிமை இருக்கும் போது, எனக்கு விருப்பம் இருக்கா இல்லியான்னு என்னோட முடிவை சொல்லணும்னு தான் நான் நினைக்குறேன். உனக்கு அந்த உரிமையே கிடையாதுன்னு இருக்குறதை என்னால ஏத்துக்க முடியல.

என்னால ஒரு நல்ல பேரண்டா இருக்க முடியும்னு தோணல. இப்போ உதாரணமா எனக்கான குழந்தைன்னு நான் எவ்வளவு தான் அக்கறை எடுத்து வளர்த்தாலும் என்னுடைய குழந்தை இந்திய சமூகத்துல தான் வளரப் போகுது. ஒரு கே கப்பிளோட குழந்தையை இந்த சமூகம் எப்டி நடத்தும்னு எனக்கு நல்லாவே தெரியும். என்னோட குழந்தை வளர்ப்பு திறமையைக் காட்ட நான் ஒரு குழந்தையை பரிசோதனை பண்ணிடுவேனோன்னு எனக்கு ஒரு பயம் எப்பவும் இருக்கு, ஒரு குழந்தையோட மெண்டல் ஹெல்த் மத்த எல்லாத்தை விடவும் முக்கியம்.

கேள்வி : மத்திய அரசும், மாநில அரசும் குயர் சமூகத்தை உட்படுத்தி திட்டங்கள் வரைவது இல்லை. செயல்பாடு மற்றும் சீர்திருத்தத்திற்கான தேவை அதிகமா இருக்கு? இந்த போராட்டம் சோர்வடைய செய்யுதா? 

கிரீஷ்: தேவைகள் அதிகமா இருக்கு. அரசு எதுவுமே பண்றது இல்லை. அந்த மாற்றங்கள் உடனடியா நடக்க வாய்ப்பே இல்லன்னாலும் ரொம்ப மெதுவா மாறும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அதுனால அது என்னை சோர்வடையச் செய்யுறது இல்ல. ஆனா தேவைகள் என்னன்னு கேட்குற இடத்துல காலம் காலமா குறிப்பிட்ட சில நபர்கள் மட்டுமே இருக்குறது தான் சோர்வடையச் செய்யுது. உதாரணமா ஓர்பாலீர்ப்பு கொண்ட ஆண்களோட தேவைகள்னு முதல்ல சொல்றது திருமணத்துக்கான உரிமைகள் தான். ஆனா அதைக் கேக்குறவங்க வேற எல்லா விஷயத்துலையும் தன்னிறைவு அடைஞ்சவங்களா இருக்காங்க.

கல்வி, வேலைவாய்ப்பு மாதிரியான மற்ற தேவைகள் இருக்குறவங்களுக்கும் கல்யாணம் தான் முதல் ப்ரியாரிட்டின்னு இவங்க பேசுறது ரொம்பவே என்னை சோர்வடையச் செய்யுது. 

மவுலி : குயர் சமூகத்துக்குன்னு பெரிய வாக்கு மதிப்பு இல்ல, அதனால எந்த கட்சியும் ஓட்டு வாங்க எங்களுக்குனு இயங்குற வாய்ப்பில்ல. அதனால எந்த கட்சியாவது குயர் சமூகத்திற்குன்னு இயங்குறதா இருந்தா அது அவங்களோட சமூக நீதி அரசியலா மட்டும் தான் இருக்கும். அது தான் சரியான விஷயம். அதை அவங்க செய்வாங்கன்னு நம்புறேன்.