Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

கோவிட் சமயத்தில் ‘ப்ளூ டார்ட்’ நிறுவனத்தில் திறம்பட செயல்பட்ட இரு பெண்கள்!

ப்ளூ டார்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் பெண் விமானி கொரோனா பெருந்தொற்று சமயத்தில் முக்கியப் பங்களித்துள்ளனர்!

கோவிட் சமயத்தில் ‘ப்ளூ டார்ட்’ நிறுவனத்தில் திறம்பட செயல்பட்ட இரு பெண்கள்!

Saturday June 13, 2020 , 3 min Read

கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக நாடு சிறப்பாகப் போராடும் வகையில் ப்ளூ டார்ட் உதவியுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது முதல் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் தடைபடாமல் இருக்க டன் கணக்கிலான சரக்குகளை ப்ளூ டார்ட் கொண்டு சேர்த்துள்ளது.


இந்நிறுவனம் சமீபத்தில் அதன் போயிங் 757-200 ரக சரக்கு விமானத்தை கொல்கத்தா-குவாங்சூ, சீனா-கௌஹாத்தி-கொல்கத்தா ஆகிய வழித்தடங்களில் இயக்கியது. இந்த சரக்கு விமானங்களில் பிபிஈ மற்றும் கோவிட்-19 தொடர்புடைய மருத்துவப் பொருட்கள் கொண்டு வரப்பட்டது.


ப்ளூ டார்ட் சரக்கு விமானம் கொல்கத்தா-தாகா-கொல்கத்தா வழித்தடத்தில் அடிக்கடி இயக்கப்பட்டது. டெல்லி-குவாங்சூ, சீனா-டெல்லி, கொல்கத்தா-குவாங்சூ, சீனா-கொல்கத்தா வழித்தடங்களில் ஏப்ரல் மாதம் முழுவதும் இயக்கப்பட்டது.


கொரோனா பெருந்தொற்று சமயத்தில் இந்நிறுவனத்தின் இரண்டு பெண் ஊழியர்கள் முக்கியப் பங்களித்துள்ளனர்.

1

துள்சி மிர்சந்தனி

ப்ளூ டார்ட் ஏவியேஷன் நிர்வாக இயக்குநர் துள்சி மிர்சந்தனியின் பயணம் 1995-ம் ஆண்டு தொடங்கியது. அந்த சமயத்தில் இந்நிறுவனம் தொடங்கப்படவில்லை.

“Blue Dart Clyde Cooper நிறுவனர் தலைமையில் 1996-ம் ஆண்டு இந்தியாவின் முதல் உள்நாட்டு சரக்கு விமான நிறுவனம் தொடங்கப்பட்டது. கொல்கத்தாவில் ஜப்பான் ஏர்லைன்ஸில் எனது பணி வாழ்க்கையைத் தொடங்கினேன். அதைத் தொடர்ந்து மும்பை, பெங்களூரு, டெல்லி, சென்னை ஆகிய இடங்களில் பணியாற்றினேன்,” என்று துள்சி நினைவுகூர்ந்தார்.

விமானப் போக்குவரத்து பிரிவில் செயல்படுவது குறித்து அவர் திட்டமிடவில்லை. படிப்புச் செலவுகளை சமாளிக்க தற்காலிகமாக இந்தப் பிரிவில் இணைந்தார். மாண்ட்ரியல் கான்கார்டியா பல்கலைக்கழகத்தில் இண்டர்நேஷனல் ஏவியேஷன் பிரிவில் எம்பிஏ பட்டம் பெற்றுள்ளார்.


இவர் தனது ஐம்பதாண்டு கால பணி வாழ்க்கையில் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். இவர் பணியாற்றியபோதுதான் இந்நிறுவனத்தின் B737-200 சரக்கு விமான சேவை நிறுத்தப்படு அதற்கு பதிலாக அதிக எரிபொருள் திறன் கொண்ட B757-200 அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மாற்றம் தொடர்பான பணிகளையும் மேம்பாட்டுப் பணிகளையும் குழுவினர் வெற்றிகரமாக மேற்கொண்டனர்.


இதற்கான தொழில்நுட்பம் நிறுவனத்திற்குள்ளாகவே உருவாக்கப்பட்டது. செயல்பாடுகள் திறம்பட மேற்கொள்ளப்படவும் சிறந்த பணிச்சூழல் அமையவும் அனைத்து விமான நிலையங்களிலும் கட்டமைப்பு மற்றும் இதர வசதிகள் விரிவுபடுத்தப்பட்டது.

“விமான எரிபொருள் விலை அதிகரிப்பதும் இந்திய ரூபாய் மதிப்பு குறைந்து வருவதும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. அதுமட்டுமின்றி உள்கட்டமைப்புச் செலவுகளும் அதிகரித்து வருகிறது. இதனால் சுமை அதிகரித்துள்ளது. கட்டமைப்பு வசதிகள் பயணிகள் சேவை வழங்கும் விமான நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதால் விமான நிலையங்களில் நாங்கள் தொடர்ந்து சவால்களை சந்தித்து வருகிறோம்,” என்றார்.

பெருந்தொற்று கால சேவை

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் ப்ளூ டார்ட் நிறுவனம் இந்திய அரசாங்கம், பல்வேறு மாநில அரசாங்கங்கள், உள்ளூர் நகராட்சிகள், மருத்துவமனைகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் போன்றவற்றிற்கு ஆதரவளித்ததாக துள்சி தெரிவிக்கிறார்.

“இந்தியாவில் உள்ள 7000-க்கும் அதிகமான அஞ்சல் குறியீடுகள் முழுவதும் ப்ளூ டார்ட் அதன் வலுவான வான்வழி மற்றும் தரைவழி எக்ஸ்பிரஸ் நெட்வொர்க் மூலம் அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களை விநியோகம் செய்து வருகிறது. வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தொடர்பற்ற டெலிவரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் சரக்கு போக்குவரத்து தொடர்பான சேகரிப்பு மற்றும் விநியோக முறையில் தொடர்பு ஏற்படுவது தவிர்க்கப்படும்,” என்று துள்சி விவரித்தார்.

சர்வதேச அளவில் இந்நிறுவனம் மருத்துவப் பொருட்களைக் கொண்டு சேர்ப்பதற்காக எல்லை தாண்டி சீனாவிற்கு விமானத்தை இயக்கியுள்ளது. அத்துடன் மியான்மர், ஹாங்காங், பங்களாதேஷ் ஆகிய பகுதிகளுக்கும் விமான சேவையை விரிவுபடுத்தியுள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் என்ஆர்ஐ-க்களுக்கு மருந்துகளை விநியோகித்து வருகிறது.

க்வென்லின் டிசோசா

2

கொரோனா பெருந்தொற்று சமயத்தில் ப்ளூ டார்ட் நிறுவனத்தின் செயல்பாடுகளை துள்சி மேற்பார்வையிடும் நிலையில் 24 வயதான க்வென்லின் டிசோசா தன் உயிரை பணயம் வைத்து விமானியாக பணியாற்றி சேவையளித்து வருகிறார்.


க்வென்லின் முறையான உரிமம் பெற்ற பிறகு 2015-2017 காலகட்டத்தில் IGRUA-ல் சிமுலேஷன் பயிற்றுவிப்பாளராக (Simulation Instructor) பணியாற்றினார். இறுதியாக 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் ப்ளூ டார்ட் ஏவியேஷனில் சேர்ந்தார்.

“சரக்கு போக்குவரத்துப் பிரிவு முழு வீச்சில் இயங்கி அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் உதவி வருகிறது. அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை டெலிவர் செய்கிறது. அத்துடன் எங்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டியது அவசியமாகிறது. இதுபோன்ற இக்கட்டான சூழலில் எங்கள் ஆதரவும் சேவையும் நாட்டிற்கு அவசியமானது,” என்று அவர் குறிப்பிட்டார்.

பயமும் பதட்டமும் தடையாக இருந்தாலும், இந்தப் பொறுப்பானது தைரியமான மனநிலையை ஊக்குவிக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை என்கிறார் க்வென்லின்.

“ஆரம்பத்தில் சீனாவிற்குச் செல்வதற்கான வாய்ப்பு கிடைத்தபோது சற்றே தயக்கம் ஏற்பட்டது. எனினும் துள்சியிடம் என்னுடைய கவலையை வெளிப்படுத்தியபோது பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விரிவாக தெரிவித்து என் பயத்தைப் போக்கினார். என்னுடைய குடும்பத்தினரும் நண்பர்களும் எனக்குத் தொடர்ந்து ஊக்கமளித்து வருகின்றனர். என் பணி காரணமாக நான் வேறொரு நகரத்தில் வசிக்கிறேன். இதுபோன்ற கடினமான சூழல்களைக் கடந்து செல்ல என் நண்பர்களும் வழிகாட்டிகளும் உறுதுணையாக இருக்கின்றனர்,” என்றார்.

விமான பயிற்சிக் குழுவில் (Flying Training Team) பங்களிக்கவேண்டும் என்பதே இவரது நீண்ட கால இலக்கு. மேலும் ATPL உரிமம் பெற்று பயிற்சியைத் தொடங்கவும் விரும்புகிறார். “இந்த அற்புதமானத் துறையை ஆராய்ந்து வருகிறேன். தொடர்ந்து அறிவாற்றலை மேம்படுத்தி திறனை வளர்த்துக்கொள்ள விரும்புகிறேன். அதேசமயம் தொடர்நது வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருகிறேன்,” என்றார்.

“பெண்கள் தாங்கள் தேர்வு செய்யும் துறையில் உயர் நிலையை எட்டுவது கடினமாக இருப்பது உண்மைதான். எனினும் தகுதி அடிப்படையில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டால் பாலினம் ஒரு தடையல்ல என்பதே என் கருத்து. எந்த வணிகமாக இருப்பினும் வளர்ச்சி மட்டுமே இலக்காக இருக்கும். ஒவ்வொரு நிறுவனத்திலும் உள்ள விவேகமுள்ள தலைவர்கள் இதைப் புரிந்துகொண்டு தங்களது வணிக இலக்குகளை எட்ட உதவும் பெண்களை நிச்சயம் பாராட்டுவார்கள்,” என்றார் துள்சி.

ப்ளூ டார்ட் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் மற்றவர்கள் மிகப்பெரிய இலக்குகளைக் கொண்டு உச்சத்தை எட்ட உந்துதளிக்கின்றனர்.


ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஸ்ரீவித்யா