திருமண கடன் வழங்க மேட்ரிமனி.காம் அறிமுகம் செய்யும் புதிய நிதி தளம்!
திருமண கடன்களுக்கான WeddingLoan.com ஐடிஎப்சி, டாடா கேபிடல், எல் அண்டு டி பைனான்ஸ் உள்ளிட்ட நிதிச்சேவை நிறுவனங்களுடன் இணைந்து, பல வகை திருமண கடன்களை அளிக்க உள்ளது.
இணையம் மூலம் திருமண பொருத்தம் பார்க்கும் சேவை வழங்கும் மேட்ரிமனி.காம் (Matrimony.com), திருமண கடன்களுக்கான பிரத்யேகமான வெட்டிங்லோன் (WeddingLoan.com) நிதிநுட்ப மேடையை துவக்கியுள்ளது.
இந்த மேடை, ஐடிஎப்சி, டாடா கேபிடல், எல் அண்டு டி பைனான்ஸ் உள்ளிட்ட நிதிச்சேவை நிறுவனங்களுடன் இணைந்து, பல வகை திருமண கடன்களை அளிக்க உள்ளது.
“திருமணத்திற்காக கடன் வாங்குவது வழக்கமானது என்றாலும், குழப்பமான நிபந்தனைகள், அதிக வட்டி விகிதம், மறைந்திருக்கும் கட்டணங்கள், சாதகம் இல்லாத திரும்பி செலுத்தும் முறைகள் போன்ற சிக்கல்கள் உள்ளன. இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வாக, WeddingLoan.com அமையும்,” என்று மேட்ரிமனி.காம் திருமண கடன் பிரிவு வர்த்தக தலைவர் மயங்க் ஜா கூறினார்.
"கமிஷன் அடிப்படையில் செயல்படும் கடன் தரகர்கள் வாடிக்கையாளர்களை விட தங்களுக்கு சாதகமான கடன்களை பரிந்துரைக்கின்றனர் என்பது தான் பிரச்சனை. மற்ற அம்சங்களை விட கடன் பெறுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வெட்டிங்.காம் அமைந்திருக்கும். வாடிக்கையாளர்களின் எதிர்பாராத தேவையை பூர்த்தி செய்யும் வகையில் எங்கள் சேவை அமையும்,” என்று அவர் கூறினார்.
இந்திய திருமணங்கள் சமூக மற்றும் கலாச்சார நோக்கில் முக்கியமாக அமைகின்றன. இதன் கொண்டாட்டம் பல நாட்கள் நீடிக்கலாம். இதன் முக்கியத்துவத்தை இந்திய திருமணங்கள் தொடர்பான அதிக செலவில் இருந்து புரிந்து கொள்ளலாம். உலகில் அதிக திருமண செலவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. திருமணம் தனிப்பட்ட நிகழ்வாக மட்டும் அல்லாமல், முக்கிய பொருளாதார நிகழ்வாகவும் அமைகிறது. நிதி திட்டமிடல் மற்றும் செலவு திட்டம் தேவைப்படுகிறது.
நவம்பர் 12 முதல் டிசம்பர் 16 வரையான இந்திய திருமண பருவம், ரூ.6 லட்சம் கோடி வர்த்தக வாய்ப்பை கொண்டுள்ளது. இந்த பருவத்தில் 48 லட்சம் திருமணம் நடைபெறும் என கருதப்படுகிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 35 லட்சம் திருமணங்கள் மூலம் ரூ.4.25 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெற்றதாக அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பை மேற்கோள் காட்டும் பைனான்சியல் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது.
இந்த அமைப்பின் தரவுகள் படி, தற்போதைய திருமண பருவம் பலவகை செலவு போக்குகளை கொண்டுள்ளது. எதிர்பார்க்கப்படும் 48 லட்சம் திருமணங்களில் பெரும்பாலானவை, ரூ.3 முதல் 10 லட்சம் வரை மதிப்பு கொண்ட மத்திய பட்ஜெட் ரகத்தைச் சேர்ந்தவை. பத்து லட்சம் திருமணங்கள் ரூ.15 லட்சம் அளவில் திட்டமிடப்பட்டுள்ளது. பிரிமியம் பிரிவில் ரூ.25 லட்சம் செலவில் 7 லட்சம் திருமணங்கள் நடைபெற உள்ளன. ஒரு லட்சம் திருமணங்கள் ரூ.50 லட்சம் முதல் ஒரு கோடி மதிப்பு கொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
ஆங்கிலத்தில்: சயான் சென், தமிழில்: சைபர் சிம்மன்
'கல்வியை விட ஆடம்பரத் திருமணங்களுக்கு அதிகம் செலவு செய்யும் இந்தியர்கள்' - அறிக்கையில் தகவல்!
Edited by Induja Raghunathan