10 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய Microsoft நிறுவனம் திட்டம்!
புத்தாண்டு பிறந்து சில நாட்களே கடந்துள்ள நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஊழியர்களில் 5 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ஐ.டி. துறையினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
புத்தாண்டு பிறந்து சில நாட்களே கடந்துள்ள நிலையில், Microsoft நிறுவனம் தனது ஊழியர்களில் 5 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ஐ.டி. துறையினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பணவீக்கம், பொருளாதார மந்த நிலை போன்ற காரணங்களால் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் மட்டும் உலகம் முழுவதும் உள்ள முன்னணி நிறுவனங்களில் 30,000 பேர் வேலை இழந்துள்ளனர். அனைத்து தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களது பணியாளர்களில் 5 முதல் 10 சதவீதத்தை குறைக்க திட்டமிட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடந்த ஆண்டு இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் 18,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா 11,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. ட்விட்டரின் உரிமையாளரான எலான் மஸ்க், நிறுவனத்தின் 50 சதவீத ஊழியர்களை, அதாவது சுமார் 3,700 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளார். இவை தவிர பல முன்னணி நிறுவனங்களும் ஊழியர்களை குறைத்து வருகின்றன.
இந்நிலையில், உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் இந்த ஆண்டின் முதல் தொடக்கமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் அதிரடி முடிவு:
முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் உலகம் முழுவதும் 2 லட்சத்து 20 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களில் 5 சதவீதம் ஊழியர்களை, அதாவது, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக ஸ்கை நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த பணி நீக்க நடவடிக்கையானது இன்னும் சில நாட்களில் தொடங்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனவரி 24, 2023 அன்று 2023 நிதியாண்டிற்கான அதன் இரண்டாம் காலாண்டு நிதி முடிவுகளை மைக்ரோசாப்ட் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சத்ய நாதெல்லா, நிறுவனத்தின் முதலீட்டாளர்களுக்கான செய்திகளை வெளியிடும் முன்பு, பணி நீக்கம் குறித்த அறிவிப்பை வெளியிடலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல் காலாண்டில் விண்டோஸ் மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோசாப்டின் நிகர வருமானம் $17.6 பில்லியன் டாலர்களாக இருந்தது, இது கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 14% குறைந்துள்ளது. அதன் முதல் காலாண்டு வருவாய் $50.1 பில்லியனாக இருந்தது, இது ஆண்டுக்கு ஆண்டு 11% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு: கனிமொழி
'அடுத்து 2 ஆண்டுகளுக்கு ரொம்ப கஷ்டம் தான்' - மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாதெல்லா எச்சரிக்கை!