திருமணத்திலிருந்து தப்பிக்க 16 வயதில் ஓடிய சிறுமி; 5 ஆண்டுகளில் போலீஸ் கான்ஸ்டபிளாக திரும்பிய அதிசயம்!
திருமணத்தில் இருந்து தப்பிப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி, கஷ்டப்பட்டு படித்து காவல்துறை அதிகாரியாக 5 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்ப கிடைத்துள்ள சம்பவம் உற்சாகமூட்டும் கதையாக மாறியுள்ளது.
திருமணத்தில் இருந்து தப்பிப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி, கஷ்டப்பட்டு படித்து காவல்துறை அதிகாரியாக 5 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்ப கிடைத்துள்ள சம்பவம் உற்சாகமூட்டும் கதையாக மாறியுள்ளது.
இந்தியாவில் பெண்ணின் திருமண வயது 18 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 18 என்பதே பெண்ணுக்கு திருமணம் செய்ய ஏற்ற வயது அல்ல, 21 ஆக உயர்த்தினால் என்ன என்ற விவாதங்களும் ஒருபுறம் நடைபெற்று வருகிறது.
மத்திய, மாநில அரசுகள் என்னதான் குழந்தை திருமணத்தை சட்டம் போட்டு தடுத்தாலும், பெற்றோர்கள் விழிப்புணர்வு இன்றியும், குடும்ப வறுமை காரணமாக தங்களது பிள்ளைகளுக்கு 18 வயதிற்கு முன்னதாக பாலியல் விவாகம் செய்து வைக்கும் முறை இன்றளவும் நடைமுறையில் உள்ளது. குறிப்பாக வடமாநிலங்களில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகளுக்கு கூட திருமணம் செய்து வைக்கும் நடைமுறை உள்ளது. இதனால் ஏராளமான சிறுமிகள் வீட்டை விட்டு வெளியேறுவதாகக் கூறப்படுகிறது.
அப்படி இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்ள பிடிக்காமல் தனது கனவிற்காக வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி, இன்று காவல்துறை அதிகாரியாக முன்னேறியுள்ளது குறித்த செய்தி இணையத்தில் பாராட்டுக்களை குவித்துவருகிறது.
கனவை துரத்திச் சென்ற சிறுமி:
ஜூன் 12ம் தேதி 2018ம் ஆண்டு பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் இருந்து கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 16 வயது சிறுமி, கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். ஆனால், அப்போது அவர் டெல்லியில் காவல்துறை அதிகாரி ஆவதற்கான பயிற்சியில் இருந்து வந்துள்ளார்.
போச்சஹான் காவல்நிலைய SHO அரவிந்த் பிரசாத் தனது ஸ்டேஷனில் நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றி ஆராய்ந்துள்ளார். அப்போது 2018ம் ஆண்டுக்கு முன்பிருந்தே நிலுவையில் உள்ள வழக்குகளின் பட்டியலை தயார் செய்ய உத்தரவிட்டுள்ளார். அப்போது மஹ்பூர் கிராமத்தைச் சேர்ந்த மைனர் சிறுமி காணாமல் போன வழக்கு அவரது கவனத்தை ஈர்த்துள்ளது. உள்ளூர் சந்தைக்கு சென்ற சிறுமி கடத்தப்பட்டதாக பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தியுள்ளார்.
“மூன்று பேர் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்த அவரது தந்தை உட்பட அவரது குடும்ப உறுப்பினர்களிடம் போலீசார் விசாரித்தனர். இருப்பினும், சிறுமி எங்கு இருக்கிறார் எனத் தெரியாது எனக்கூறியுள்ள்னர். மேலும், இந்த வழக்கில் கடத்தப்பட்டவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை,” என்கிறார்.
போலீசாரின் தீவிர விசாரணைக்கு விடையாக
கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சிறுமியின் தூரத்து உறவினர் குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. உடனே அந்த முகவரிக்கு விரைந்த போலீசாருக்கு, சிறுமி எங்கியிருக்கிறார், என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற தகவல்கள் கிடைத்துள்ளன.
சிறுமி டூ கான்ஸ்டபிள்:
16 வயதில் காணாமல் போன சிறுமி, தற்போது 21 வயது திருமணமாகாத பெண்ணாக முசாபர்பூரில் உள்ள நீதித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி, “தனக்கு நேர்ந்தது என்ன?” என வாக்குமூலம் அளித்துள்ளார். அங்கு தான் மிகப்பெரிய அதிரடி திருப்பமே நடந்துள்ளது. தன்னை யாருமே கடத்தவில்லை என்றும், பெற்றோர் கொடுத்துள்ள புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் யாரையுமே தான் பார்த்தது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
“எனது தந்தை கூலித்தொழிலாளி, குடும்பம் மிகவும் ஏழ்மையான சூழ்நிலையில் இருந்ததால், இளம் வயதிலேயே திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தனர். இதனால் எனக்கு உறவினர்களுடன் தகராறு ஏற்பட்டது. இனியும் இங்கிருந்தால் திருமணம் செய்து வைத்துவிடுவார்கள் என்பதால், முசாப்பூர் நகரில் இருந்து வெளியேறினேன். நான் படிக்க விரும்பினேன். வீட்டை விட்டு வெளியேறி டெல்லி வந்த நான், அங்கு படிப்பை தொடர விரும்பினேன். பல போட்டித்தேர்வுகளை எழுதினேன். தற்போது டெல்லி காவல்துறைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளேன்,” என தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
படிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வீட்டை விட்டு வெளியே வந்த 16 வயது சிறுமி, 5 ஆண்டுகளாக படித்து பல தேர்வுகளில் பங்கேற்று, இன்று டெல்லி காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பயிற்சி பெற்றுவருகிறார். இந்த செய்தி இணையத்தில் வைரலானதை அடுத்து சிறுமியாக சென்று பெண் காவலராக தன்னை தரம் உயர்த்திக்கொண்ட பெண்ணின் விடாமுயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
தொகுப்பு: கனிமொழி
குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவ மொபைல் வாகனம் அறிமுகப்படுத்திய காவல் அதிகாரி!