Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

ஒரே க்ளிக்; ஒரே நாளில் ஏழைச் சிறுமியின் வாழ்க்கையை மாற்றிய போட்டோ!

ஏழ்மையின் காரணமாக 5 வயதில் உணவு மற்றும் கல்வி உரிமை கிடைக்காமல் பள்ளி வாசலில் ஏக்கத்துடன் காத்திருந்த சிறுமிக்கு சமூக ஊடக வைரலால் ஆச்சரியம் நிகழ்ந்துள்ளது.

ஒரே க்ளிக்; ஒரே நாளில் ஏழைச் சிறுமியின் வாழ்க்கையை மாற்றிய போட்டோ!

Tuesday November 12, 2019 , 3 min Read

ஊடகங்களில் இன்றைய ‘வைரல்’ என்று பகிரப்படும் பெரும்பாலானவை கடந்து சென்று விடும் ஒன்றாகவே இருக்கும். ஆனால் ஐதராபாத்தில் வைரலாக்கப்பட்ட ஒரு புகைப்படம் சிறுமி ஒருவரின் வாழ்க்கைப் பாதையை மாற்றியமைத்துள்ளது.


கையில் அலுமினிய பாத்திரத்துடன் நீல நிற குர்தா மற்றும் அழுக்கு பேன்ட் அணிந்து ஏக்கத்துடன் காத்திருக்கும் இந்தச் சிறுமியின் பெயர் மோதி திவ்யா. 5 வயதே ஆன திவ்யா தன் சக வயது சிறுவர்கள் சீருடை அணிந்து வகுப்பறைக்குள் பாடம் படிப்பதை வெளியில் நின்று ஏக்கத்துடன் எட்டிப் பார்க்கிறார். இதுதான் அந்த போட்டோவில் இருந்தது.


எப்போதும் வகுப்பு முடிந்து மாணவர்கள் மதிய உணவு உண்ட பின் இருக்கும் மிச்ச சோறு திவ்யாவின் தட்டிற்கு வந்து சேரும் இதற்காகவே தினந்தோறும் பள்ளி வாசலில் வந்து காத்துக் கொண்டிருக்கிறார் இந்தச் சிறுமி. பள்ளியில் வேறொரு நிகழ்ச்சியை பதிவு செய்ய வந்த ஈநாடு தெலுங்கு செய்தித்தாளின் புகைப்படக் கலைஞர் ஸ்ரீனிவாஸ் சிறுமி ஏக்கத்துடன் காத்திருக்கும் காட்சியைக் கண்டு மனம் பொருக்காமல் தனது கேமராவில் படம்பிடித்துள்ளார்.

andhra

பட உதவி: Eenadu

திவ்யாவிடம் பேச்சுக் கொடுத்து அவர் ஏன் அங்கு காத்திருக்கிறார் என்று ஸ்ரீனிவாஸ் அறிந்து கொண்டார். ஐதராபாத்தின் குடிமல்கபூரில் இயங்கி வருகிறது தேவல் ஜாம் சிங் அரசு உயர் நிலைப் பள்ளி. இந்தப் பள்ளியின் அருகாமையில் உள்ள குடியிருப்புப் பகுதியில் வசித்து வருகிறார் திவ்யா.


கூலித் தொழில் செய்து வரும் பெற்றோர் வேலைக்குச் சென்றுவிட மதிய நேரத்தில் பசியால் வாடியவர் தினசரி பள்ளிக்கு வந்து மாணவர்கள் சாப்பிட்டது போகக் கிடைக்கும் மீதமான சாப்பாட்டை வாங்கிச் சாப்பிட்டு வந்துள்ளார். தெலங்கானாவின் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த திவ்யாவின் குடும்பம், பள்ளியில் இருந்து 300 மீட்டர் இடைவெளியில் அமைந்துள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் தார்ப்பாய் அமைத்த தற்காலிகக் குடியிருப்புகளாக இருக்கின்றன.

21-ம் நூற்றாண்டிலும் உணவு மற்றும் கல்வி உரிமை கிடைக்காமல் காலித்தட்டுடன் காத்திருக்கும் திவ்யாவின் புகைப்படத்தை போட்டு ’பசியின் பார்வை’ என்று கட்டுரை வெளியிட்டிருந்தது ஈநாடு.
திவ்யா

பள்ளிச் சீருடையில் திவ்யா, படஉதவி : முகநூல் பக்கம்

திவ்யாவை புகைப்படம் எடுக்க நேர்ந்தது எப்படி என்று கூறிய ஸ்ரீனிவாஸ், “அந்தப் பள்ளி குடிசைகளை ஒட்டி இருப்பதால் டெங்கு ஒழிப்பிற்கு பள்ளி நிர்வாகம் எடுத்துள்ள சுகாதார நடவடிக்கைகள் பற்றி புகைப்படம் எடுக்கச் சென்றேன். வாசலில் பைக்கை நிறுத்திக் கொண்டிருந்த போது திவ்யா எனக்கு முன்னால் பள்ளிக்குள் சென்று கொண்டிருந்தார்.

நேராகச் சென்று ஒரு வகுப்பறையின் வாசலில் காத்திருந்தார். உடனடியாக அதை புகைப்படமாக பதிவு செய்தேன். பின்னர் திவ்யாவிடம் ஏன் இங்கு காத்திருக்கிறாய் என்று கேட்டதற்கு அவள் தினசரி இங்கு வந்து மீதமாகும் உணவை வாங்கி உண்டுவிட்டு செல்வதாக தெரிவித்ததாக கூறி இருக்கிறார் ஸ்ரீனிவாஸ்.

திவ்யாவின் புகைப்படம் வைரலாக குழந்தைகள் உரிமைக்காக செயல்பட்டு வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான எம்வி பவுண்டேஷனின் (Mamidipudi Venkatarangaiya Foundation) கவனத்தையும் ஈர்த்துள்ளது. புகைப்படத்தை பார்த்த பின்னர் எம்வுஎஃப்ன் அமைப்பாளர் ஆர் வெங்கட் ரெட்டி தனது குழுவினரை அந்தப் பகுதிக்கு அனுப்பி திவ்யா மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி விசாரித்துள்ளார். அப்போது திவ்யாவின் பெற்றோர் குப்பை அள்ளுபவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

திவ்யா

திவ்யாவின் வீடு, படஉதவி : முகநூல் பக்கம்

திவ்யா ஏன் பள்ளிக்கு அனுப்பப்படவில்லை என்பதை கேட்டறிந்து பள்ளி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி அதே பள்ளியில் திவ்யாவை படிப்பதற்காக சேர்த்துள்ளனர். புதன்கிழமை பள்ளி வாசலில் அழுக்கு ஆடைகளுடன் கையில் பாத்திரமேந்தி உணவுக்காகக் காத்திருந்த திவ்யாவிற்கு அடுத்த நாளே புதிய சீருடைகளோடு பள்ளி வகுப்பறைக்குள் சக மாணவர்களுடன் படித்து அறிவுப் பசியையும் போக்குவதற்கான வழி காட்டப்பட்டுள்ளது.

என் பொண்ணு ஸ்கூலுக்கு போறானு திவ்யாவோட அப்பா லஷ்மன் மகிழ்ச்சியோடு கூறி இருக்கிறார்.
திவ்யா

படஉதவி : முகநூல் பக்கம்

திவ்யாவின் பெற்றோர் லஷ்மனும், யசோதாவும் குப்பை அள்ளும் தொழிலாளிகள். இருவரும் திவ்யாவை வீட்டில் விட்டு விட்டு காலையில் 6 மணிக்கு வேலைக்குச் செல்பவர்கள் மதியம் 2 மணிக்கு தான் வீடு திரும்புகிறார்கள். இதனால் மதிய வேளையில் உணவுக்காக திவ்யா பள்ளிக்கு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.


லஷ்மன், யசோதா தம்பதியின் இளைய மகள் திவ்யா. இவரை பள்ளியில் சேர்க்க லஷ்மன் அணுகிய போது 5 வயது நிறைவடையாததால் சேர்க்கை கொடுக்க முடியாது என்று மறுத்துள்ளனர்.

“என்னுடைய மூத்த மகள் விடுதியில் தங்கி படிக்கிறாள். திவ்யாவையும் பள்ளியில் சேர்க்கலாம் என்று நிர்வாகத்திடம் கேட்ட போது சரியான வயது இன்னும் வரவில்லை என்று சேர்க்கை தர மறுத்துவிட்டார்கள். ஆனால் நேற்று முதல் என்னுடைய 2வது மகளும் பள்ளிக்குச் செல்கிறாள்,” என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் லஷ்மன்.

தகவல் உதவி : The News Minute