பாலுறவில் எது முக்கியம்? - பாலியல் கல்வியாளராக பல்லவி உருவெடுத்த கதை!
பல்லவி பர்ன்வால் ஒரு பாலியல் கல்வி பயிற்சியாளர் (sexuality coach). பாலியல், நெருக்கம் மற்றும் உறவுகள் தொடர்பான சவால்களை எதிர்கொள்ள மக்களுக்கு உதவுவதே பாலியல் கல்வி பயிற்சியாளர்களின் பணி.
“இந்த கிரகத்தில் 40 ஆண்டுகள் கழித்த நான், இது மாதிரியான அன்பை இதுவரை அனுபவித்ததில்லை. காதல் பற்றி எண்ணங்கள் வேண்டாம் என கருதிய நேரத்தில் ஜான் என் வாழ்க்கையில் வந்தார். எங்களின் உறவு மென்மையானது, முதிர்ச்சியடைந்தது, உணர்ச்சிவசப்பட்டது. எனது பாலியல் நல பயிற்சியாளர் வேலையை ஜான் பாராட்டுகிறார். எங்களுக்குள் நல்ல கெமிஸ்ட்ரி உள்ளது,” என்று பாலியல் கல்வியாளர் பல்லவி பர்ன்வால் தனது கணவர் ஜானைப் பற்றி தனது இன்ஸ்டா பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
- இந்தப் பதிவு, பல்லவி தனது இணையை தாண்டி இன்ஸ்டாகிராமில் 2.28 லட்சம் பின்தொடர்பவர்களுக்கும் வெளிப்படுத்தியுள்ள அளவில்லா காதலின் ஒப்புதல் வாக்குமூலம் ஆகும்.
பல்லவி பர்ன்வால் ஒரு பாலியல் கல்வி பயிற்சியாளர் (sexuality coach). பாலியல், நெருக்கம் மற்றும் உறவுகள் தொடர்பான சவால்களை எதிர்கொள்ள மக்களுக்கு உதவுவதே பாலியல் கல்வி பயிற்சியாளர்களின் பணி. மக்கள் தங்கள் பாலியல் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்த அவர்களால் உதவ முடியும்.
பாலியல் நல பயிற்சியாளராக இருப்பவர்கள் தனிப்பட்ட பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும். இதனை ஆமோதிக்கும் பல்லவி, அப்படியான பாதிப்பை ஏற்றுக்கொள்ளுவது இந்த வேலையில் அவசியமானது என்று குறிப்பிடுகிறார். அதனால்தான் தனது வேலை குறித்த கணவரின் பார்வையை சிலாகித்து இன்ஸ்டாவில் பதிவிட்டார்.
எப்படி தொடங்கியது பயணம்?
பல்லவி, 2019-ஆம் ஆண்டு பாலியல் நலக் கல்வித் துறையில் தனது பயணத்தைத் தொடங்கினார். அவரின் சொந்த வாழ்க்கையில் கிடைத்த அனுபவமே, இந்தப் பயணத்தை தொடங்க வழிவகுத்தது. தனது சொந்த சூழ்நிலைகளையும், அதனை வென்ற முயற்சிகளையும், தனது பாடங்களையும் வெற்றிகளையும் உலகத்துடன் பகிர்ந்து கொள்ளும் அவரின் செயலே, பல்லவியை இன்ஸ்டாகிராமில் ஒரு வழிகாட்டியாக அவரை உயர்த்தியுள்ளது.
டெல்லியில் வசிக்கும் பல்லவி, லைஃப் சயின்ஸ் பாடத்தில் பட்டம் பெற்றவர். அதனாலோ என்னவோ, பாலியல் கல்வி பற்றி வெளிப்படையாகவும் எளிமையாகவும் பேசக் கூடியவராக திகழ்கிறார். ஏனென்றால், பாலியல் என்பது வெறும் உடல் ரீதியான தொடர்பு மட்டுமல்ல, அதனை தாண்டி, ஒருவரின் வளர்ப்பு, சுய பிம்பம் போன்ற பலவற்றை உள்ளடக்கியது என்று நம்புகிறார் பல்லவி.
பாலுறவின் நுணுக்கங்களை உடைத்தல்
பல்லவி பெற்ற அனுபவமும் நம்பிக்கையும்தான் தற்போது பாலியல் கல்வி பயிற்சியாளராக மக்களுக்கு அவர் உதவ வழிவகுத்து இருக்கிறது. அதுவே, ‘கெட் இன்ட்டிமெசி’ (GetIntimacy) என்கிற பாலியல் நலம் தொடர்பான ஸ்டார்ட்அப்பை உருவாக்க வைத்து, தற்போது பாலியல் தொடர்பான படிப்புகள், ஆலோசனைகள் போன்ற ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வழியாகவும் வழங்க வைக்கிறது.
“செக்ஸ் சிக்கலானது” - இது பல்லவியின் கூற்று.
இதற்கான காரணத்தை விளக்கும் அவர்,
“ஒவ்வொரு நபருக்கும் ஒன்று அல்ல, மூன்று பாலியல் தன்மைகள் உள்ளன. அதாவது, உங்களின் பாலியல் தன்மை, உங்கள் துணையின் பாலியல் தன்மை மற்றும் அவர்கள் இருவரும் வளர்க்கும் உறவின் பாலியல் தன்மை ஆகியவை தான்அது. எனவேதான், செக்ஸ் உண்மையில் சிக்கலானது,” என்று அவர் விரிவாகக் கூறுகிறார்.
டேட்டிங் மற்றும் திருமணத்திற்கு முந்தைய பாலுறவு ஆகியவற்றை சகித்துக் கொள்ளாத பழமைவாத மனப்பான்மையை உள்வாங்கி வளர்ந்த இளம் பெண் ஒருவருக்கு நேர்ந்த சம்பவத்தை உதாரணம் காட்டும் பல்லவி, தனது காதலன் அன்பாக கட்டியணைக்க முற்பட்டபோது அந்தப் பெண் உணர்ச்சி ரீதியாக உடைந்ததை மேற்கோள்காட்டுகிறார்.
நம் நாட்டில் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் இவை. 2022-ஆம் ஆண்டில் புனேவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு நடத்திய ஆய்வில், உலகில் இளைஞர்கள் அதிகம் வசிக்கும் இந்தியாவில் 15-29 வயதினர் 27.5% பேருக்கு தேவையான பாலியல் சுகாதார ஆதரவு மற்றும் கவனிப்பு இல்லை என்பது தெரியவந்தது.
இளைஞர்களுக்கு உறவுகள் குறித்த தெளிவினை ஏற்படுத்த வேண்டிய சூழல் இருக்கும் நிலையில், தற்போது இருக்கும் கொள்கைகள் அனைத்தும் இனப்பெருக்கம் தொடர்பான பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதில் மட்டுமே கவனம் செலுத்துவதை இதே ஆய்வு கண்டுபிடித்தது.
அதனால்தான், பல்லவி மக்களை செக்ஸ் என்பது உடல்களை சார்ந்தது மட்டுமல்ல, நம்பிக்கைகள், வலிகள், பாதிப்புகள், உணர்ச்சிகள், கனவுகள், மதிப்புகள், அச்சங்கள் ஆகிய பலவற்றையும் உள்ளடக்கியது என சிந்திக்க வலியுறுத்துகிறார்.
பகிர்ந்த அனுபவங்கள்
ஜார்க்கண்டில் ஒரு கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தவர் பல்லவி. பல இந்திய குடும்பங்களைப் போலவே, அவரது குடும்பமும், பாலியல் - எதிர்மறை வளர்ப்பு சூழலிலேயே அவரை வளர்த்தது. பாலியல் மற்றும் பெண் உடலைப் பற்றிய விவாதங்களை அங்கு பேச முடியாது. இதன் பொருள் மாதவிடாய் கல்வி என்பதே இல்லை. அப்படி இருக்கும் நிலையில் டீனேஜ் கிரஷ் என்பது எல்லாம் அவரது குடும்பத்தில் எப்படி இருக்கும் யோசித்து பாருங்கள்.
இப்படித்தான் எதிர்கொண்ட சிறுவயது கதைகளை பல்லவி, ஆன்லைனில் பகிர்ந்து கொள்ளத் தொடங்கியதும், இதேபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொண்டவர்கள் அவரைத் தொடர்பு கொள்ளத் தொடங்கினர். அது, இறுதியில் அவரை ஒரு பாலியல் கல்வியாளராக மாற வழிவகுத்தது. தன்னை தொடர்புக் கொள்பவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார் பல்லவி. பெண்கள் மட்டுமல்ல, ஆண்களுக்கும். அதில், அதிகமானோர், 26-45 வயதினர்.
“எனது பயிற்சியைத் தொடங்கியபோது, பெண்களை விட அதிகமான ஆண்கள் அதிக எண்ணிக்கையில் வழிகாட்டுதலுக்காக என்னிடம் வந்தனர். ஆலோசனையை நாடும் தம்பதிகள் பலரும் பெருநகரங்களைச் சேர்ந்தவர்கள்” - பல்லவி.
பாலினத்தைச் சுற்றியுள்ள தடைகளை வெளிப்படையாகக் கூறுவது அல்ல, மாறாக பாலியல் ஏன் முக்கியமானது என்பதைப் புரிந்துகொள்ள மக்களை தூண்டுவதுதான் பல்லவியின் குறிக்கோள்.
“இன்று இருக்கும் பிரபலமான ஊடகங்களோ அல்லது போர்னோகிராபி படங்களோ ஆண்கள்தான் எப்போதும் பாலியலுக்கான தூண்டுதலை செய்ய வேண்டும் என்பது போன்ற கற்பனைகளை திணிக்கின்றன. இவை அனைத்தும் உண்மை இல்லாத கருத்துகள். ஆலோசனையில் சந்தித்த ஆண்கள் பலரும் பதற்றம் காரணமாக ஆணுறையை பயன்படுத்த சிரமப்படுகிறார்கள். அதேநேரம், பெண்களை வெறும் போக பொருட்களாகக் கருதுவதை தங்களது உரிமையாக சிந்திக்கிறார்கள். இந்த இரண்டுமே பாதிப்புக்கான வழி,“ என்கிறார்.
பாலியல் உறவில் தம்பதிகள், ஒருவருக்கொருவர் தேவைகளுடன் ஒத்திசைவாக இருப்பதும் முக்கியம். இது பாலியல் உறவில் ஒரு முக்கியமான அம்சமாகும். ஒருவருக்கொருவர் அக்கறையுடன் இருக்கிறோமா? உங்களுக்கு எனக்கு என்ன தேவை? இவை தம்பதிகள் ஒருவருக்கொருவர் கேட்க வேண்டிய கேள்விகள். இவை கேட்கப்படும்போது பாதிப்புகள் குறையும்” என்கிறார் பல்லவி.
இப்படி, பாலியல் கல்வி இன்னும் இயற்கைக்கு புறம்பானதாக சித்தரிக்கப்பட்டு தடை செய்யப்படும் இக்காலகட்டத்தில், பல்லவி பாலியல் பிரச்சினைகளுக்கு தீர்வு அளித்து, நடைமுறைகளை உடைத்தெறிந்து வருகிறார்.
- மூலம்: சரண்யா சக்ரபாணி
இந்திய சினிமாவின் முதல் அந்தரகக் காட்சி படமாக்க உதவும் ஒருங்கிணைப்பாளர் ஆஸ்தா கன்னா!
Edited by Induja Raghunathan