மாற்றுத்திறனாளிகள் நலனுக்குப் பாடுபடும் போலியோ பாதிப்புடைய சுஜாதா கண்ணன்!
தமிழ்நாட்டில் மாற்றுத்திறன் பெண்கள் நலனுக்கான இயங்கும் மாற்றுத்திறனாளி பெண்கள் வளர்ச்சி குழுமத்தின் நிறுவனராக விளங்கும் சுஜாதா அக்கா, இண்டஸ் ஆக்ஷன் திட்டத்திலும் முக்கியப் பங்காற்றி வருகிறார்.
சுஜாதா கண்ணன் - இவருக்கு ஒன்றரை வயதாக இருந்தபோது காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். காய்ச்சல் இரண்டு மணி நேரம்தான் இருந்தது என்றாலும், அவரை போலியா தாக்கியது.
இப்போது 42 வயதாகும் சுஜாதா அக்கா (அப்படித்தான் அவர் அன்போடு அழைக்கப்படுகிறார்), மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் காப்பாளராக, வழக்கறிஞராக செயல்பட்டு தமிழ்நாட்டில் உள்ள நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்.
மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகள் பெண்கள் உரிமைகளுக்காக பாடுபடும் அறக்கட்டளையான மாற்றுத்திறனாளி பெண்கள் வளர்ச்சி குழுமத்தின் நிறுவனராகவும் விளங்குகிறார்.

“நான் ஆரோக்கியமான குழந்தையாக தான் பிறந்தேன். முதல் பிறந்த நாளுக்கு பிறகு நடக்கத் துவங்கி விட்டேன். ஆனால், நான் தூளியில் இருந்து இறங்க முடியாமல் தடுமாறி கீழே விழுந்து மீண்டும் எழுந்திருக்க முடியாமல் தடுமாறிய தினத்தை என் தந்தை நினைவு கூர்கிறார். மருத்துவமனைக்கு சென்றபோது நான் போலியோவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது,” என சுஜாதா கூறுகிறார்.
சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள திடீர் நகரில் வளர்ந்த சுஜாதா, 9 வயதில் பல்வேறு அறுவை சிகிச்சைகளை செய்து கொண்டு சிறப்பு ஷூ அணிந்து பள்ளிக்குச் சென்றார். மற்ற குழந்தைகள் தரையில் அமர்ந்த போது அவருக்கு தனியே இருக்கை தேவைப்பட்டது. இதனால் தனியாக உணர்ந்தவர் வீட்டில் புலம்பிக்கொண்டிருந்தார்.
சுஜாதா ஷூக்களை வீசி எறிந்துவிட்டு, எதையேனும் பிடித்தபடி நடக்கத் துவங்கினார். பத்தாம் வகுப்பு வரை படித்தவர், “கணக்கு பாடத்தை வெறுத்ததால் தேர்ச்சி பெறவில்லை. இதனால் படிப்பை நிறுத்திக் கொண்டேன்,” என்கிறார்.
பின்னர், அவர் கோஆப்டெக்ஸ் உள்ளிட்ட இடங்களி விற்பனையாளராக பணியாற்றத் துவங்கினார்.
தனிப்பட்ட செயல்பாடு
“நான் பிசிஓவை நடத்திக்கொண்டிருந்தபோது, அரசு தங்களுக்கு தரும் திட்டங்கள் மற்றும் தங்கள் உரிமைகளை அறியாமல் இருந்த பல மாற்றுத்திறனாளிகளை சந்தித்தேன்,” என்கிறார். இங்கிருந்து தான் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகளுக்காக பாடுபடும் அவரது பயணம் துவங்கியது.
மாற்றுத்திறனாளிகள் பென்ஷனுக்கு விண்ணப்பிக்க வைத்து அந்தப் படிவங்களை பூர்த்தி செய்ய கலெக்டர் அலுவலகம் செல்வது போன்ற உதவிகளை செய்தார். மாதந்தோறும் அந்த தொகையை எடுத்துக்கொள்ள வங்கிக்கும் அழைத்துச்சென்றார்.
“என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் அன்போடு எளிய வாழ்க்கை வாழ்கிறேன். பென்ஷன் தினத்தன்று நாள் முழுவதும் பரபரப்பாக இருப்பேன். மற்ற நாட்களில் மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்வேன்,” என்கிறார் சுஜாதா.
2017ல் மொத்த குடும்பங்களும் பெரும்பாக்கத்திற்கு குடிபெயர வேண்டியிருந்தது. அந்த இடத்தில் 300-350 மாற்றுத்திறனாளிகள் இருப்பதை கவனித்தார் சுஜாதா. எனவே, மேலும் செயல்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்தார். அவர்கள் குடிபெயர்வுக்கு பிறகு முகவரி மாறியதால் பென்ஷன் நின்று போனது.
“பென்ஷன் தொகை 1,000 தான் என்றாலும், இவர்களுக்கு அது முக்கியம் என்பதால் ஏமாற்றம் அடைந்தனர். அந்த பென்ஷன் தொகை மட்டும் அல்லாமல் விதவைகள் மற்றும் சிலரது பென்ஷன் கிடைக்க போராடினேன்,” என்கிறார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் தொண்டு நிறுவனங்கள் பற்றிய தகவல்களையும் சேகரித்தார். வசந்தம் அறக்கட்டளை மூலம் அவர் தமிழ்நாடு முழுவதும் 50 பேருக்கு சர்க்கர நாற்காலி வழங்கினார்.
கோவிட் பெருந்தொற்று காலத்தில் சிறிய கடைகள் அல்லது தள்ளுவண்டி வியாபாரம் செய்து வந்த மாற்றுத்திறனாளிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். அவர்கள் உதவிகாக தொண்டு நிறுவனங்களை தொடர்பு கொண்டு, மீண்டும் அவர்கள் வியாபாரம் செய்ய வழி செய்தார். அவர்களில் பெரும்பாலானோர் தினக்கூலி வேலை பார்ப்பவர்கள்.

“மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு குறைவு மற்றும் எங்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை இல்லை. மாற்றுத்திறனாளிகள் பிள்ளைகள் 10 பேருக்கு கல்லூரிக்கான ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை பெற்றுத்தந்தேன்,” என்கிறார்.
நிதி உதவி பெற்றுத் தருவதோடு, அவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து நம்பிக்கையோடு இருக்க மற்றும் வியாபாரம் செய்யவும் உதவி வருகிறார். சிறு வயது முதல் அறிந்த ஷீலா என்பவரை உதாரணமாக சொல்கிறார்.
“ஷீலா வீட்டை விட்டு வெளியே வந்ததில்லை. நான் பலமணி நேரம் அவருடன் பேசி, வீட்டை விட்டு வெளியே வர வைத்தேன்,” என்கிறார்.
“அவருக்காக சின்ன துணிக்கடை மற்றும் பிறகு தள்ளுவண்டி கடை வைத்துக்கொடுத்தேன். அவர் வெளியே வந்து தள்ளுவண்டி கடையை நடத்தினார். அரசிடம் இருந்து ஸ்கூட்டி பெற்றுத்தந்தேன்” என்று கூறுகிறார்.
சமூக சாதனையாளர்
மாற்றுத்திறனாளி பெண்கள் வளர்ச்சி குழுமத்தை துவக்கியபோது மாற்றுத் திறனாளிகளுக்கான அவரது செயல்பாடு கவனத்தை ஈர்த்தது. இந்த அமைப்பில் இந்தியா முழுவதும் 300 பேர் உறுப்பினராக உள்ளனர். நகர்புர விளம்புநிலை சமூகத்தினருக்கான தகவல் மற்றும் வளம் அமைப்பின் நிறுவனர் வனேசா பீட்டருடன் இணைந்து இந்த அமைப்பை துவக்கினார்.
கடந்த ஆறு மாதங்களாக இண்டஸ் ஆக்ஷனின் சமாஜ்/ சமூகம் 3.5 % திட்டத்தில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். மற்ற இரண்டு செயற்பாட்டாளர்களுடன் இணைந்து, தங்கள் பகுதியில் ஆர்டிஇ 12 (1) (c) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
அரசியல் சாசனத்தின் 21 ஏ ஷரத்தின் படி, 6 வயது முதல் 14 வயது வரையான குழந்தைகள் அடிப்படைக் கல்வி பெற உரிமை உள்ளவர்கள். இந்த உரிமையை செயல்படுத்த, கல்வி உரிமை சட்டம், ஆர்.டி.இ 2009 கொண்டு வரப்பட்டது. 2010ல் இது அமலுக்கு வந்தது.
அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள் சமூகத்தின் விளிம்பு நிலை மற்றும் ஏழை மக்களின் குழந்தைகளுக்கு கல்வி அளிக்க வேண்டும் என்றும், இதற்காக வகுப்பின் 25 சதவீத இடங்களை அளிக்க வேண்டும் என்றும் இந்த சட்டப்பிரிவு தெரிவிக்கிறது.
மறுகுடியமர்வு பகுதிகளில், அங்கன்வாடிகளில் உள்ள தகுதி வாய்ந்தவர்களை கண்டறிய, பள்ளி அதிகாரிகள் அரசு அதிகாரிகளை தொடர்பு கொள்வது போன்றவற்றில் பிளாக் ஹெட்ஸ் போன்ற அமைப்புடன் இணைந்து செயல்படுவதில் கவனம் செலுத்தினார்.
தனது அனுபவத்தை கொண்டு குழுவினருக்கு உதவி நடைமுறை சவால்களை சந்திக்க கைகொடுத்தார்.
இப்போது இக்குழுவினர் அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனிலும் கவனம் செலுத்தி வருகிறது. தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் நலத்திட்டங்களை 50 கட்டுமான ஊழியர்களுக்கு புரிய வைப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கட்டுமான தொழிலாளர்கள் தங்களுக்கான உறுப்பினர் அட்டை பெறவும் உதவி வருகின்றனர்.
இண்டஸ் ஆக்ஷன் இ-சேவை குழுவின் முன்னோட்ட ஆய்விலும் பங்கேற்றுள்ளார். அவர்கள் பார்வையை புரிந்து கொள்வதற்காக இச்சேவை மையங்களை நடத்துபவர்கள், மக்களிடம் நேர்காணல் செய்துள்ளார். இந்த ஆறு மாதங்கள் அவரது வாழ்க்கையை முழுவதும் மாற்றியுள்ளது.
“கூகுள் டாக்ஸ், மீட், டிரைவ் பயன்படுத்த கற்றுக்கொண்டுள்ளேன். சோம்பல் விலகி களத்தில் அதிக நேரம் பணி செய்கிறேன்,” என்கிறார்.
“முதல் குழுவில் ஐந்து சமூக சாதனையாளர்களுக்கான பயிற்சி, விழிப்புணர்வு, ஆவணமாக்கல், அரசு உதவித் திட்டங்கள் செயலாக்கம் ஆகியவற்றை கொண்டுள்ளன.
பயிற்சி, பங்கேற்பு முறை, அவர்கள் சமூக தலைவர்களாக உதவுவது ஆகியவை இதில் அடங்கும். பங்குதாரர்கள் உரையாடல், அரசு அனுபவங்கள் மற்றும் பரிசோதனை பயிற்சி ஆகியவை இதில் உள்ளன” என்கிறார் இண்டஸ் ஆக்ஷன் தென் மண்டல செயல்பாடுகள் பொறுப்பாளர் ஜெயசுந்தரி.
அண்மையில் சுஜாதா மகளிர் தின நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்திருந்தார்.
“அதோடு, நானே ஸ்கூட்டர் ஓட்டத் துவங்கியுள்ளேன்...” என்கிறார் பெருமிதத்துடன்.
ஆங்கிலத்தில்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: சைபர் சிம்மன்

‘15வயதில் கழுத்துக்கு கீழ் முடங்கிப் போன வாழ்க்கை’ - மாற்றுத் திறனாளிகளின் மாற்றமாய் மாறிய விராலி!
Edited by Induja Raghunathan