Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

குழந்தைகளுக்கு கோவிட் வந்தால் எம்.ஐ.எஸ்-சி நோய் அபாயம்: எப்படித் தற்காப்பது? டாக்டர் ராஜ்குமார் விளக்கம்!

குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதால், நம்முன் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை எம்.ஐ.எஸ் - சி நோய் தான். மூன்று நாட்களுக்கும் மேலாக காய்ச்சல் நீடிக்கும்போது, அவர்களது உடலில் இருக்கும் இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு, அவர்களது இதயம் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கிறார் டாக்டர்.ராஜ்குமார்.

குழந்தைகளுக்கு கோவிட் வந்தால் எம்.ஐ.எஸ்-சி நோய் அபாயம்: எப்படித் தற்காப்பது? டாக்டர் ராஜ்குமார் விளக்கம்!

Tuesday January 18, 2022 , 7 min Read

ஒமைக்ரான் காரணமாக இந்தியாவில் தற்போது கொரோனா 3வது அலையில் நாம் சிக்கி இருக்கிறோம். கடந்த அலைகளில் இருந்து வேறுபட்டு இம்முறை நோயின் தீவிரம் குறைவாகவே இருந்தபோதும், நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரண்டாவது அலையின் போதே, மூன்றாவது அலையில் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுவர் என்ற கருத்து பரவலாக இருந்தது.

எனவே, தற்போது பெற்றோர் மத்தியில் மூன்றாவது அலையால் தங்களது குழந்தைகளுக்கு பாதிப்பு வருமோ என்ற அச்சம் நிலவுகிறது. குளிர்காலத்தில் சாதாரணமாக புளூ அதிகம் பரவும் என்பதால், கொரோனாவிற்கும், சாதாரண சளி, காய்ச்சலுக்கும் எப்படி வேறுபாடு காண்பது என்ற குழப்பமும் உள்ளது.

covid children

ஒமைக்ரானில் இருந்து குழந்தைகளை எப்படி பாதுகாப்பது, ஒருவேளை நோய்த்தொற்று ஏற்பட்டால் என்னமாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது பற்றிய சந்தேகங்கள் பெற்றோர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.

இதுபற்றி, க்ளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனை, குழந்தை மருத்துவம் -தொற்று நோயியல் ஆலோசகர் மருத்துவர் ஜே ராஜ்குமார் இடம் தமிழ் யுவர்ஸ்டோரிக்காக பேசினோம்.

அவரின் உரையாடலில் இருந்து உங்களின் சந்தேகங்களுக்கான பதில்கள் இதோ...

இணை நோயுள்ள குழந்தைகளுக்கு கூடுதல் கவனம் தேவை

3வது அலைக்குள் வந்து விட்டோம். இந்த அலை ஒமைக்ரானால் என்பது உறுதியாகி விட்டது. பெரும்பாலும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக பாதிப்பில்லாத நோயாகத்தான் இருந்து வருகிறது. காய்ச்சல், சளி, இருமல் என வந்து செல்கிறது. வயதானவர்களுக்கு, இணைநோய் பாதிப்பு இருப்பவர்களுக்கு கூடுதல் பாதிப்பு ஏற்படுகிறது.

உலகம் முழுவதிலுமே அப்படித்தான் இருக்கிறது. நம்மூரிலும் அப்படித்தான் உள்ளது. பரவல் தன்மை அதிகமாக இருப்பதுதான் பிரச்சினை. ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட வைரஸை விட இது 15 மடங்கு வேகமாகப் பரவுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

ஆரம்பத்தில் வந்த கோவிட்டில் வீட்டில் நான்கு பேர் இருந்தால், அவர்களில் ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால், மற்றவர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படும் அளவு குறைவு. டெல்டாவில் இது சற்று அதிகமாக இருந்தது. ஆனால், ஒமைக்ரானிலோ ஒரு வீட்டில் ஒருவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டால், நான்கு பேருக்கும் கட்டாயம் திற்று ஏற்படுகிறது. குழந்தைகளும் இதில் தப்பவில்லை. எனவே தான் கடந்த அலைகளைக் காட்டிலும் இந்த அலையில் குழந்தைகளும் அதிகளவில் தொற்றுக்கு ஆளாகிறார்கள். ஆனால், அதிக பாதிப்பில்லை என்பதுதான் ஆறுதலான விசயம்.

12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, இதய பாதிப்பு, கிட்னி பாதிப்பு, உடல் பருமன், மூளை சம்பந்தப்பட்ட பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு, ஏற்கனவே ஏதோவொரு நோய்க்கு மருந்து உட்கொண்டு வரும் குழந்தைகளுக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்படும் போது, நிச்சயம் அது கவலைக்குரிய விசயம் தான். இந்தக் குழந்தைகளிடம் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலைக்கு ஆளாகலாம். எனவே ஆரம்ப கட்டத்திலேயே இவர்களை மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று உரிய சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம்.

Dr. Rajkumar

குழந்தைகள் நல டாக்டர் ராஜ்குமார்

அறிகுறிகள்:

பெரியவர்களிடம் இருந்து குழந்தைகளுக்கு அறிகுறிகள் வேறுபடும். பெரியவர்களுக்கு இருமல், மூச்சு வாங்குதல் போன்ற பிரச்சினைகள் இருக்கும். குழந்தைகளுக்கு சாதாரண சளி, காய்ச்சல், உடல்வலி என்பது போல் வந்து போகிறது. சில குழந்தைகளுக்கு வாந்திபேதி ஏற்படுகிறது. ஒரு சில குழந்தைகளுக்கு மட்டுமே மூச்சுத் திணறல் அதிகமாக இருப்பது போன்ற பிரச்சினைகள் காணப்படுகிறது.

குறிப்பாக 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குத்தான் மூச்சுத் திணறல் பிரச்சினைகள் ஏற்படுகிறது. அதேபோல், ஒரு வயது குழந்தைகளுக்கும் கொரோனா ஏற்பட்டால் பாதிப்பு அதிகமாக இருக்கலாம்.

முந்தைய திரிபுகளில் இருந்து ஒமைக்ரான் எப்படி மாறுபடுகிறது?

வீட்டில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தாலே, அந்த வீட்டில் உள்ள மற்றவர்களும் பாசிட்டிவ்வாக இருக்க வாய்ப்பு அதிகம். எப்போது நாம் கட்டாயம் குழந்தைகளுக்கும் கொரோனா பரிசோதனை எடுக்க வேண்டுமென்றால், மூன்று நாட்களுக்கும் மேலாக சளி, காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் இருக்கிறதென்றால், நிச்சயம் உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டும். அவர் அறிவுறுத்தினால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளலாம். அதில், தொற்று இருப்பது உறுதியானால் உடனடியாக அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.

இந்த வைரஸின் தாக்கமானது குழந்தைக்கு குழந்தை மாறுபடலாம். ஒரு குழந்தைக்கு லேசான காய்ச்சலுடன் கடந்து போகலாம். ஒரு சிலருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்படலாம். ஆனால் எப்படி இருந்தாலும் வைத்தியமுறை ஒன்றுதான். காய்ச்சலுக்கு மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு அதிகப்படியான நீர் ஆகாரங்களை மறக்காமல் தர வேண்டும்.

பயப்பட வேண்டிய பிரச்சினை:

குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதால், நம்முன் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை எம்.ஐ.எஸ் - சி (Multisystem inflammatory syndrome MIS-C) நோய் தான். இதில்,

குழந்தைகளுக்கு மூன்று நாட்களுக்கும் மேலாக காய்ச்சல் நீடிக்கும்போது, அவர்களது உடலில் இருக்கும் இரத்த நாளங்கள் பாதிக்கப்படலாம். இதனால், அவர்களது இதயம் பாதிக்கப்படலாம். இந்த நோய்த்தான் இப்போது நமக்கு கவலை. மூன்று நாட்களுக்கும் மேலாக குழந்தைகளுக்கு காய்ச்சல் இருக்கும்போது, இதனை நாம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். உடனடியாக மருத்துவரைப் பார்க்கும்போது, அவர் எம்.ஐ.எஸ்-சிக்கான அறிகுறிகள் இருந்தால், அதற்கான சிகிச்சையை பரிந்துரைப்பார்.
MIS-C

இந்த எம்.ஐ.எஸ்-சி நோயால் சிலருக்கு இரத்த ஓட்டம் மாறுபடலாம், நாடித்துடிப்பு குறைதல், இரத்த அழுத்தம் குறைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். சமயங்களில் உயிருக்கே கூட ஆபத்தாகலாம் என்பதால் இந்த நோய்ப்பற்றி நாம் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம்.

அறிகுறிகள்

மூன்று நாட்களுக்கும் மேலாக காய்ச்சல், தோலில் ஏதேனும் வித்தியாசங்கள் வந்து போகலாம், சிலருக்கு தீவிரமான வயிற்றுவலி, வாந்திபேதி வரலாம், ஒரு சிலருக்கு நாடித்துடிப்பு குறைவதால் மயக்கம், நெஞ்சு படபடப்பு போன்றவை ஏற்படலாம். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான அறிகுறிகள் இருப்பதால், மூன்று நாளைக்கும் மேலாக குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்றவை இருந்தாலே உடனடியாக மருத்துவரை சென்று பார்ப்பது நல்லது.

இந்த எம்.ஐ.எஸ்-சி பிரச்சினை குழந்தைகளுக்குத்தான் அதிகம். பெரியவர்களுக்கும் ஏற்படுவதாக சில ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. ஆனால், குழந்தைகளுக்குத்தான் இதில் ஆபத்து அதிகம். அதனால்தான் கொரோனாவில் குழந்தைகளுக்கு இந்த நோயால்தான் நாம் அதிகம் கவலைப்பட வேண்டும். ஏனெனில் இரத்த நாளங்கள் பாதித்து, இறுதியில் இதயத்திற்கும் பாதிப்பு நேரிடலாம். சமயங்களில் இது குழந்தையின் உயிருக்கேகூட ஆபத்தாகலாம். கொரோனா பாதிக்கப்பட்ட குழந்தைகளில் ஒரு சதவீதத்தினருக்கு மட்டுமே இந்த பாதிப்பு ஏற்படலாம் என்றாலும், உயிருக்கே ஆபத்தானது என்பதால், இதில் நாம் கவனமுடன் இருக்க வேண்டும்.

பின் விளைவுகள்:

கொரோனா வந்து போனவர்களுக்கு லாங் கொரோனா சிண்ட்ரோம் என்ற பாதிப்பு ஏற்படுகிறது. பெரியவர்களுக்கு நெஞ்சுபடபடப்பு, தூக்கமின்மை, வழக்கமான வேலைகளில் ஈடுபட முடியாமல் போவது, சோர்வாக இருப்பது போன்ற பாதிப்புகள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது சாதாரணமாக கொரோனா வந்து குணமாகிய அடுத்த ஆறு மாதங்களுக்கு காணப்படுவதாகத் தெரிகிறது. குழந்தைகளுக்கும் இதேபோன்ற பாதிப்புகள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

நோயற்ற பாதிப்புகள் அதிகம்

கொரோனாவால் நோய்ப் பாதிப்புகளைவிட, நோயில்லாத பாதிப்புகளே இப்போது அதிக அச்சுறுத்தலாக இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இடையில் சில மாதங்கள் மீண்டும் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தார்கள். இப்போது மீண்டும் அது தடைபட்டு விட்டது. வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள் குழந்தைகள். இதனால் டிவி பார்க்கும் நேரம் அதிகரிக்கிறது.

ஆன்லைன் வகுப்புகளைக்கூட டிவி மற்றும் செல்போனிலேயே பார்க்கிறார்கள். வகுப்பு நேரங்களைத் தாண்டியும் டிவி மற்றும் செல்போனில்தான் பொழுதைப் போக்குகிறார்கள். எவ்வளவுதான் நாம் இதனைக் கட்டுப்படுத்த நினைத்தாலும், அது ஓரளவுக்குத்தான் சாத்தியமாகிறது. இதில் அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. ஏனென்றால் அவர்களால் தங்களது சகவயதுக் குழந்தைகளுடன் சென்று விளையாட முடிவதில்லை. இதெல்லாம் குழந்தைகளுக்கு ரொம்ப பாதிப்பு தான். எந்த வயதில் என்ன தேவையோ அது அவர்களுக்கு சரியாகக் கிடைப்பதில்லை.

சரியாக பேச்சு வராத குழந்தைகளுக்கு டேகேர் செல்லும்போது, சக குழந்தைகளுடன் பேசி பேச்சு வர ஆரம்பிக்கும். இப்போது அதற்கு வாய்ப்பில்லாமல் இருக்கிறது. இதேபோல், ஹைபர் ஆக்டிவிட்டி, ஆட்டிசம் போன்ற பிரச்சினைகளும் பெரும்பாலும் பள்ளிகளில்தான் கண்டறியப்படும். அப்படி கண்டுபிடிக்கப்படும்போது, அதை ஆரம்ப நிலையிலேயே சரி செய்வதற்கான முயற்சிகளைத் தொடங்க முடியும்.

ஆனால், இப்போது சிறு குழந்தைகள் பள்ளி பக்கமே செல்ல முடியாத சூழல் இருப்பதால், இந்தப் பிரச்சினைகள் எந்தளவிற்கு உள்ளது என்பதே தெரியவில்லை. நமக்குத் தெரிய வரும் போது, அது தாமதமாக இருந்தால் சிகிச்சை அளிப்பதும் தாமதமாகிறது.

மற்றொரு கவலைக்குரிய விசயம் தடுப்பூசி. பெரும்பாலும் குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லவே பெற்றோர்கள் பயப்படுகிறார்கள். குறிப்பாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் தயக்கம் இருக்கிறது. இதனால் குறிப்பிட்ட சமயங்களில் போடப்பட வேண்டிய தடுப்பூசிகள் தள்ளிப் போகின்றன. உலகம் முழுவதும் இப்படி தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் டிப்தீரியா, டெட்டனஸ், தட்டம்மை போன்ற பல பழைய நோய்கள் மீண்டும் தலைதூக்க வாய்ப்புள்ளது.

நோயின் தீவிரம் :

ஓமைக்ரானின் தீவிரம் குறைவாகவே உள்ளது. பாதிக்கப்பட்ட எல்லோருக்குமே மூச்சுத்திணறல் ஏற்படுவதில்லை. குழந்தைகள் ஆகட்டும், பெரியவர்கள் ஆகட்டும், இணைநோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே நோயின் தீவிரம் அதிகமாக உள்ளது.

வைரஸின் உருமாற்றத்தால் இந்த நிலை உள்ளது. அதோடு இம்முறை பெரும்பான்மையான மக்கள் தடுப்பூசி போட்டு விட்டனர். தடுப்பூசியும் நோயின் தீவிரத்தை குறையச் செய்வது கண்கூடாக நாம் காணும் உண்மை. மூன்றாவதாக மக்களுக்கு நல்ல விழிப்புணர்வு இருக்கிறது. ஏதாவது பிரச்சினை என்றால் சீக்கிரம் சென்றால் சரி செய்து கொள்ள முடியும் என்ற தெளிவு இருக்கிறது.

நிறைய பேர் ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சைக்கு வருவதால், விரைவாக அவர்களை குணப்படுத்த முடிகிறது. இதனால் இறப்பு விகிதம் குறைகிறது. இவை எல்லாவற்றிற்கும் மேல் தமிழக அரசும், மருத்துவமனைகளும் தயார் நிலையில் உள்ளன. தேவையான மருத்துவவசதி கையிருப்பில் உள்ளதால், இந்த அலையை நாம் சிறப்பாக கையாள முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

kids vaccine

இதுவும் கடந்து செல்லும்

சாதாரணமாக ஒரு அலை மெதுவாக அதிகரித்து, உச்சநிலையை அடைந்து பின்னர் சரிவைச் சந்திக்கும். முந்தைய இரண்டு அலைகளைவிட இம்முறை வேகமாக பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே விரைவாக உச்சநிலையை அடைந்து, சரிவைச் சந்திப்போம். ஆனால் உச்சநிலையில் இருக்கும்போது, அதிகப்படியான மருத்துவச் சேவைகள் தேவைப்படும்.

1980களில் வந்த புளூ வைரஸ் மாதிரியே கொரோனாவும் நம்மை கடந்து செல்லும். புளூ வைரஸ் வரும்போது, தீவிரமானதாக வந்தது. பின்னர் சாதாரண நோயாக மாறியது. கொரோனாவும் அதுபோல் மாறும். ஆனால் அது உடனடியாக நடக்கும் என உறுதியாகச் சொல்ல முடியாது. அதைக் கணிக்க முடியாது. அதுதான் இப்போது பிரச்சினை.

இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த மாற்றம் நடக்கலாம் அல்லது ஒரு வருடம்கூட ஆகலாம். ஆனால் அதுவரை நாம் கவனமாக இருக்க வேண்டியது கட்டாயம். அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும். பூஸ்டர் செலுத்திக் கொள்ள வேண்டும்.  

பெரியவர்களின் கடமை

குழந்தைகள் பெரும்பாலும் தற்போது வெளியில் செல்வதில்லை. எனவே அவர்களுக்கு நோய் வருகிறது என்றால் அது பெரியவர்கள் மூலம்தான். வெளியில் சென்று வரும் பெரியவர்கள்தான், வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு நோய்த்தொற்றைக் கொடுக்கிறோம். எனவே வெளியில் செல்லும் பெரியவர்கள், முகக்கவசம், கை சுத்தம், சமூக இடைவெளி போன்றவற்றைச் சரியாக பின்பற்றினாலே குழந்தைகளை கொரோனா தொற்றில் இருந்து சுலபமாக காப்பாற்றிவிட முடியும். ஒருவேளை நமக்கு நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டால், குழந்தைகளிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். வீட்டிற்குள்ளேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சிறுகுழந்தைகளுக்கு தடுப்பூசி

வயதுவாரியாக படிப்பாக தடுப்பூசியை ஆரம்பித்ததுபோல், குழந்தைகளுக்கும் தடுப்பூசி கட்டாயம். 15 முதல் 18 வரை உள்ள குழந்தைகளுக்கு ஏற்கனவே தடுப்பூசியை ஆரம்பித்து விட்டோம். முதியோர்களுக்கு, முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் ஊசி போடும் வேலைகளும் தொடங்கி விட்டது. கைவசம் உள்ள தடுப்பூசி அளவை வைத்து, 15 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி போடுவது பற்றி தீர்மானிப்பார்கள். கூடிய சீக்கிரம் அது செயலுக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

ஏனென்றால், தடுப்பூசியை அனைவரும் செலுத்திக் கொள்ளாதவரை தொடர்ந்து, இந்த வைரஸ் உருமாற்றம் அடைவதை யாரும் தடுக்க முடியாது. எனவே, அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி என்பதில் மாற்றுக்கருத்தில்லை. தொடர்ந்து இதுபற்றி ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

கொரோனா என்பது சாதாரணமாக குழந்தைகளுக்கு வந்து போகக்கூடிய சளி, இருமல் நோய்த்தான். ஆனால் மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படலாம் என்ற பேச்சு முன்பிருந்தே இருந்ததால், இதற்கென குழந்தைகள் நல மருத்துவர்களுக்கு, செவிலியர்களுக்கு அரசு சிறப்பு பயிற்சிகள் கொடுத்துள்ளது. குழந்தைகளுக்கான சிகிச்சை கருவிகள், படுக்கை வசதிகள் போன்றவைகளும் பெரியவர்களிடம் இருந்து வேறுபடும். எனவே அவற்றையும் அரசு தயார் செய்து வைத்துள்ளது.

கொரோனா பாதிப்பிற்கு ஆளான குழந்தைகளுக்கென தனி வார்டும் தயார் செய்யப்பட்டுள்ளது. நோயின் தன்மை பற்றியும் நமக்கு தெரியும் என்பதால், அதைக் கையாள்வதற்கும் நாம் தயார் நிலையில்தான் இருக்கிறோம்.