Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

வறுமையின் கொடுமை; கணவரின் குரூரம் - கல்வி என்னும் ஆயுதத்தால் ஐஏஎஸ் ஆன சவிதா பிரதான்!

குடும்ப துஷ்பிரயோகம், வறுமை, மாமியார் கொடுமை இன்னும் பல கற்பனை செய்ய முடியாத போராட்டங்களை எதிர்கொண்டு, இன்று கல்வி எனும் ஆயுதத்தால் தீங்கு இழைத்தோருக்கு பதிலடி கொடுத்துள்ளார் ஐஏஎஸ் அதிகாரி சவிதா பிரதான்.

வறுமையின் கொடுமை; கணவரின் குரூரம் - கல்வி என்னும் ஆயுதத்தால் ஐஏஎஸ் ஆன சவிதா பிரதான்!

Tuesday July 09, 2024 , 5 min Read

குடும்ப துஷ்பிரயோகம், வறுமை, மாமியார் கொடுமை இன்னும் பல கற்பனை செய்ய முடியாத போராட்டங்களை எதிர்கொண்டு, இன்று கல்வி எனும் ஆயுதத்தால் தீங்கு இழைத்தோருக்கு பதிலடி கொடுத்துள்ளார் ஐஏஎஸ் அதிகாரி சவிதா பிரதான். பழங்குடி கிராமத்தில் பிறந்த ஒரு இளம் பெண் முதல் மரியாதைக்குரிய அரசு அதிகாரி வரையிலான அவரது பயணம் தைரியம், நம்பிக்கை மற்றும் நீதிக்கான இடைவிடாத நாட்டம் ஆகியவற்றின் படிப்பினைகளால் நிரம்பியுள்ளது.

அடிப்படை வசதிகள் இல்லாத குக்கிராமத்தில் வளர்ந்த சவிதா, கல்வியைப் பயன்படுத்தி அவரது வாழ்க்கையை மாற்றியதுடன், மற்றவர்களுக்கு உதவக்கூடிய நிலைக்கு உயர்ந்துள்ளார். கடின உழைப்பு மற்றும் கற்றல் மூலம், தடைகளைத் தாண்டி வெற்றியை அடைய முடியும் என்பதை அவரது பயணம் காட்டுகிறது. இன்று, உங்களிடம் கல்வி இருந்தால் எந்த சவாலும் பெரியதல்ல என்பதை நிரூபித்து பலரை ஊக்குவிக்கும் அவரது கதை....

savitha pradhan

ஒரு கனவை நோக்கிய பாதை...

மத்திய பிரதேசத்தில் உள்ள மண்டாய் என்ற சிறிய பழங்குடி கிராமத்தில் தொடங்கியது சவிதாவின் பயணம். இன்றைய நவீன வாழ்க்கைக்கு நேரெதிராய் எவ்வித வசதிகளின்றி வாழ்க்கையை தொடங்கியுள்ளார். இந்த சவால்கள் இருந்தபோதிலும், அவரது பெற்றோர்கள் கல்விக்கு மதிப்பளித்தனர்.

சமூகத்தில் பல பெண்கள் படிக்காத நிலையில் சவிதாவின் பெற்றோர்கள் கல்விக்கு முக்கியத்துவம் அளித்துள்ளனர். சவிதாவின் பள்ளிப் படிப்பு கடினமான சூழ்நிலையில் தொடங்கியது. விடியற்காலையில் எழுந்து வயல்வெளிக்கு சென்று அவரது குடும்பத்திற்கு உதவுவார், அது அவரை சோர்வடையச் செய்தாலும் அவர் கல்வியைத் தொடருவதில் உறுதியாக இருந்தார்.

"என்னுடைய காலை வேலையினை முடித்தபிறகு, பல கிலோமீட்டர் நடந்து பள்ளிக்கு செல்ல வேண்டும். இது சோர்வாக இருந்தாலும், இது தான் என் மாற்றுவாழ்க்கைக்கான வாசல்," என்று அவர் நினைவு கூர்ந்தார்.

மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் இருந்த சவிதா அதற்கான பாதையில் செல்லும் பொருட்டு உயிர்நிலைப் பள்ளியில் உயிரியியல் பிரிவை தேர்ந்தெடுத்துள்ளார்.

உயிரியியல் படிப்பதன்மூலம் மருத்துவப் படிப்பிற்கான நுழைவாயிலான PMT (நீட்டிற்கு முன்னான நுழைவு தேர்வு)தேர்வில் தேர்ச்சி பெற வழிவகுக்கும் என்று எண்ணியதால் இந்த முடிவினை எடுத்தாதர்.

"நான் என் வாழ்க்கையை மாற்றவும், மற்றவர்களுக்கு உதவவும் விரும்பினேன். அதற்கு டாக்டராவதுதான் வழி என்று எனக்குத் தெரியும். மேலும், உயிரியல் என்னைக் கவர்ந்தது, அது சரியான பாதையாகத் தோன்றியது," என்று சவிதா விளக்குகிறார்.

கட்டாய திருமணமும்; தடம் புரண்ட கனவுகளும்...

டாக்டராக வேண்டும் என்ற கனவுகளை சவிதா வளர்த்தெடுக்கத் தொடங்கியபோது, ​​​​அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டது. பணக்காரக் குடும்பத்திலிருந்து அவரை திருமணம் செய்து கொள்வதற்கான வாய்ப்பு வந்ததால், திசைதிருப்பப்பட்ட அவருடைய பெற்றோர் அவருக்கு திருமணம் ஏற்பாடு செய்தனர். வேறு வழியின்றி பெற்றோர்களின் கட்டாய திருமணத்திற்கு ஆளாகினார். இந்த முடிவு அவருடைய கல்வி லட்சியங்களுக்கு முட்டுக்கட்டை போட்டது.

"நான் எதிர்ப்பு தெரிவிக்க முயற்சித்தேன். என் தந்தையிடம் திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை, படிக்க விரும்புவதாக கூறினேன். ஆனால், முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டிருந்தது," என்றார் வருத்ததுடன்.

கட்டாயத் திருமணமும் அவருக்கு ஒழுங்காக அமையவில்லை. சந்தோஷம் நிறைந்திருக்க வேண்டிய மணவாழ்க்கை ஆழ்ந்த துன்பத்தை ஏற்படுத்தியது. அவருடைய மாமியாரின் கொடுமைகளுக்கு ஆளாகினார். ஒரு குடும்ப உறுப்பினர் என்றில்லாமல் பணிப்பெண் போல நடத்தப்பட்டுள்ளார். சவிதா குறிப்பாக ஒரு வேதனையான நிகழ்வைப் பகிர்ந்து கொள்கையில்,

"சாப்பிடுவதற்கு சப்பாத்திகளை உடையில் மறைத்து வைத்து கொள்வேன். ஏனெனில் அவர்கள் எனக்கு போதுமான அளவு உணவு கொடுக்க மாட்டார்கள். உயிர் வாழ்ந்தாக வேண்டும் அல்லவா," என்று அவர் கூறுகையிலே, சவிதாவின் வாழ்க்கையில் அக்காலகட்டம் ஆழமான வடுக்களையும், சொல்லப்படாத வேதனைகளும் நிறைந்திருந்துள்ளது என்பது தெரிகிறது.

மணவாழ்க்கையில் அவருக்கு துஷ்பிரயோகம் உடல் ரீதியாக மட்டுமல்ல, நிதி மற்றும் உணர்ச்சி ரீதியாகவும் இருந்தது. சவிதா எந்த வகையான ஆதரவிலிருந்தும் தனிமைப்படுத்தப்பட்டார்.

"என்னிடம் பணம் இல்லை. படிப்பைத் தொடர வழி இல்லை. என்னை ஒரு பொருட்டாகவே மதிக்காமல், வெறும் சிரமமாக பார்த்தவர்களையே நான் முழுமையாகச் சார்ந்திருக்க வேண்டிய நிலையில் இருந்தேன்," என்றார்.

நிதிச் சுதந்திரம் இல்லாததால் படிக்கும் கனவும் தகர்க்கப்பட்டது. இக்கட்டான சூழ்நிலைகள் அதிகரித்து கொண்டே இருந்ததில், தன் நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற சவிதாவின் தீர்மானம் வலுப்பெற்றது. துஷ்பிரயோகம் செய்யும் கணவனை விட்டு வெளியேற அவர் முடிவு செய்தபோது அவரது வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது.

"என்னால் இனியும் இந்த பந்தத்தை நீட்டிக்க முடியாது என்று நிலையில் தான் திருமண வாழ்க்கையை முடித்து கொள்ள முடிவெடுத்தேன். என் குழந்தைகளுக்காக, எனக்காக, கசப்பான மணவாழ்க்கையிலிருந்து வெளியேறினேன். வீட்டைவிட்டு வெளியேறுவது என்பது வெளிச்சம் எங்கே என்று தெரியாமல் இருட்டில் அடியெடுத்து வைப்பது போல் இருந்தது. இதயம் படபடவென துடித்தது, ஆனால், குழந்தைகளின் வாழ்க்கைக்காக அம்முடிவை எடுத்தேன்," என்றார்.

துாக்கமற்ற இரவுகள்; வாழ்க்கையை மாற்றிய கல்வி!

சவிதா அவரது பெற்றோரின் வீட்டிற்கு திரும்பியதும், கலவையான எதிர்வினைகளை சந்தித்தார். ஏனெனில், அவரது தாய் அவரது முடிவை ஆதரித்தாலும், சவிதாவின் இம்முடிவு பொதுவாக அவர்களது சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்படாததால், குடும்பத்தில் பதற்றம் ஏற்பட்டது.

"என் அம்மா என் பாறை. நான் உடைந்து போனபோது, என்னை வலிமையாக்க அவர் எனக்கு உதவினார்," என்று அவர் நினைவு கூர்ந்தார்.

தனது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பவும், அவரது குழந்தைகளுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்யவும் தீர்மானித்த சவிதா, பல வேலைகளில் ஈடுபட்டார். பகலில் தையல் தொழிலாளியாகவும், இரவில் அலுவலகங்களை சுத்தம் செய்யும் பணியும் செய்தார்.

ஆனால், பல மணி நேர வேலை, உடல் ரீதியான பாதிப்பு என ஒவ்வொரு வேலையும் பல சவால்கள் நிறைந்திருந்தது. ஒவ்வொரு நாள் முடிவிலும், அவரது குழந்தைகள் நிம்மதியாக உறங்குவதை கண்ட மறுநாளுக்கான உற்சாகத்தை பெற்றார். வேலை, படிப்பு மற்றும் தாய்மையை சமநிலைப்படுத்துதல் என அக்காலக்கட்டத்தில் பல கஷ்டங்களை கடந்து வந்துள்ளார்.

ஒரு தவறான திருமணத்தை முறித்துவிட்டு, அவரது வீட்டிற்குத் திரும்பிய பிறகு இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார். நிலையான எதிர்காலத்திற்கு கல்வி மிக அவசியம் என்பதை அவர் உணர்ந்தார். ஒரு தெளிவான குறிக்கோளுடன், தொலைதூரக் கல்வியில் எம்.ஏ. படிப்பில் சேர்ந்தார். படிப்பில் முழு கவனத்துடனும், ஒரு தாயாகவும் தொழிலாளியாகவும் அவரது பாத்திரங்களை சமநிலைப்படுத்தினார்.

சூரிய உதயத்திற்கு முன் தொடங்கிய அவருடைய நாட்கள் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு முடிந்துள்ளது. ஒவ்வொரு நாள் பொழுதும் சோர்வாக இருந்தபோதிலும், சவிதா இரவு வெகுநேரம் வரை சலிக்காமல் படித்தார்.

"எங்கள் வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்ற உறுதியுடன், தூக்கத்தை எதிர்த்துப் போராடி, ஒற்றை விளக்கின் வெளிச்சத்தில் படித்த இரவுகள் பல இருக்கின்றன," என்றார்.

ஆனால், சவிதாவின் கல்வி வெற்றிக்கான பாதையானது கடுமையான சவால்களால் சூழந்திருந்தது. அதில், பிரிந்த கணவனின் கொடூர செயல்களும் அடங்கும். அவருடைய முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எண்ணத்திலும், அவரது ஸ்பிரிட்டை உடைக்கும் முயற்சியிலும், அவருடைய கணவர் ஒருநாள் வீட்டிற்கு வந்து, சவிதா பரீட்சைக்கு செல்ல தயாராக இருந்தபோது, அவர்மீது ​​சிறுநீரை கழித்துள்ளார். அவரை அவமானப்படுத்தி, அவருடைய கண்ணியத்தை இழக்க செய்வதன்மூலம் அவரது கல்வி இலக்கு சுக்குநொறுங்காகும் என்ற அனுமானத்தில் அவர் இதுபோன்ற ஒரு கோர செயலை செய்துள்ளார்.

ஆனால், சவிதா இதையெல்லாம் ஒரு பொருட்டாககூட எண்ணவில்லை. அவருடைய இலக்கு பல மடங்கு தெளிவாகியதுடன், அதன் பாதை எவ்வளவு கடினமானதாக இருப்பினும், அதில் பயணிக்கும் உந்துதலை அளித்தது.

இறுதியில் அவரது எம்.ஏ படிப்பை சிறந்த மதிப்பெண்களுடன் முடித்தார். பொது நிர்வாகப் பாடத்தில் கல்லூரியில் முதலிடம் பெற்றார். இது அவரது எதிர்கால வெற்றிக்கு அடித்தளமிட்டது. பட்டம் பெற்றபிறகு, செய்தி தாள் ஒன்றில் சிவில் சர்விஸ் தேர்வு பற்றியும், அப்பணிக்கு ரூ.16,000 சம்பளம் அளிக்கப்படும் என்ற செய்தியை தெரிந்துகொண்டார். அப்போது அவருக்கு மனதில் இருந்ததெல்லாம் ஒன்று தான். கை நிறைய சம்பாதிக்க வேண்டும், குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை அமைக்க வேண்டும் என்பது மட்டுமே. அன்று முதல், குழந்தைகளின் வளமான எதிர்காலத்திற்கு சிவில் சர்வீஸ் தேர்வே சரியானது என்று அதை அடைவதை இலக்காக்கினார்.

கல்வி என்பது சமூக சமத்துவத்திற்கான ஒரு முக்கிய கருவி!

பல வருட போராட்டம் மற்றும் விடாமுயற்சிக்குப் பிறகு, சவிதாவின் முயற்சிக்கு பலன் கிடைத்தது. ஆம், அவர் முதல் முயற்சியிலேயே மாநில சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்று அரசாங்கப் பணியை பெற்றார். அப்போது, ​​மத்தியப் பிரதேச அரசு சிவில் சர்வீஸ் தேர்வின் மூன்று அடுக்குகளில் ஒவ்வொன்றிலும் தேர்ச்சி பெறும், பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக 25,000 ரூபாய் வழங்கியது. சவிதா மூன்றிலும் தேர்ச்சி பெற்று இருந்ததால், அவருக்கு அரசாங்கத்தால் 75,000ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

"எனக்கு வேலை கிடைத்த நாளில், இறுதியாக என் விதியைக் கட்டுப்படுத்தியது போல் உணர்ந்தேன். இப்போது மற்றவர்களுக்கு உதவும் நிலையில் இருக்கிறேன். என் நிலையில் இருந்தால் எந்தவொரு நபரும் பைத்தியம் பிடித்திருப்பார்கள்," என்று நினைவு கூர்ந்தார்.

கல்வி என்பது அதிகாரமளித்தல் மற்றும் சமூக சமத்துவத்திற்கான ஒரு முக்கியமான கருவி என்பதை தீர்க்கமாக நம்புகிறார். அவரது சொந்த வாழ்க்கையில் கல்வியின் சக்தியால் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நன்கு உணர்ந்துள்ள அவர் அதிகாரத்திற்கு வந்தபிறகு, கல்வி வாய்ப்புகள் அனைவருக்கும், குறிப்பாக விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு கிடைக்க செய்வதில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். ஒரு அரசாங்க அதிகாரியாக, சவிதா பெண்களை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மேம்படுத்துவதற்காக முயற்சிகளில் தீவிரமாக பங்கேற்கிறார்.

சவிதாவின் கதை மனிதனின் மீள்தன்மை மற்றும் கல்வியின் மாற்றும் சக்திக்கு ஒரு சக்திவாய்ந்த உதாரணம். ஒரு பழங்குடி கிராமத்தில் பிறந்த ஒரு இளம் பெண் முதல் மரியாதைக்குரிய அரசு அதிகாரி வரை, அவரது பயணம் தைரியம், நம்பிக்கை மற்றும் நீதிக்கான இடைவிடாத நாட்டம் ஆகியவற்றின் படிப்பினைகளால் நிரம்பியுள்ளது.

"எவ்வளவு கஷ்டம் வந்தாலும், எண்ணியது நிகழும் வரை முயற்சியை கைவிடாதீர்கள். உங்களைச் சுற்றியுள்ள உலகத்தை மாற்றுவதற்கான உங்கள் ஆயுதம் கல்வி," என்று அனைவருக்கும் நம்பிக்கையூட்டும் செய்தியுடன் முடித்தார் சவிதா.