‘தூய்மைப் பணி டு இங்கிலாந்தில் பி.ஹெச்டி’ - தன் வாழ்க்கையை திருத்தி எழுதிய இளைஞரின் வலிமைக் கதை!
மும்பை மாநகராட்சியில் தூய்மைப் பணியில் 12 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்த இளைஞர் தனது அயராத முயற்சியால் இன்று பி.ஹெச்டி படிப்புக்காக இங்கிலாந்துக்குப் பறக்கப்போகிறார். இந்த அசாத்திய பயணம் நம் ஒவ்வொருவருக்கும் உத்வேகம் ஊட்டவல்லவை.
மும்பை மாநகராட்சிப் பகுதிகளில் திரட்டப்படும் குப்பைகளை வேன்களில் அள்ளிக் கொட்டும் ‘மோட்டார் லோடர்’ பணியை செய்துகொண்டே கல்லூரிப் படிப்பு முதல் எம்.ஃபில் வரை முடித்த உத்வேக இளைஞரான 30 வயது மயூர் ஹெலியாவுக்கு இங்கிலாந்தின் லான்காஸ்டர் யுனிவர்சிட்டியில் பி.ஹெச்.டி பயிலும் வாய்ப்பு, முழு நிதியுதவியுடன் கிடைத்துள்ளது.
அவரது ஆய்வுக் களமும் ‘சுகாதாரப் பணி’ பற்றியதுதான். இம்மாதம் இலங்கிலாந்து புறப்படும் அவர், சமீபத்தில்தான் தனது மாநகராட்சிப் பணியை ராஜினாமா செய்தார்.
மும்பை மாநகராட்சியின் சுகாதாரத் துறையில் மோட்டார் லோடராக பணிபுரிந்து வந்த ஹெலியாவின் தந்தை நோய்வாய்ப்பட்டு இறந்தார். அப்போது, 18 வயது மயூர் ஹெலியாவுக்கு அம்மா, தம்பி, தங்கை ஆகியோர் அடங்கிய குடும்ப பாரத்தை சுமக்கும் பொறுப்பு வந்தது. அரசின் நிவாரண அடிப்படையில் ஹெலியாவுக்கு 2010-ல் அப்பாவின் வேலை கிடைத்தது.
பிளஸ் டூ தேர்வில் தோல்வி அடைந்திருந்த ஹெலியா, மீண்டும் தேர்வு எழுத முடியாத சூழலுடன், குடும்ப நிலையால் அப்பா செய்த வேலைக்கே சென்றார். முதல் நாள் கிடைத்த வேலை அனுபவம்தான் ஹெலியாவின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தும் முடிவை எடுக்கத் தூண்டியது. இது குறித்து ஹெலியா விவரித்தது:
“அது எனக்கு ஒரு பயங்கரமான தொடக்கம். நூற்றுக்கணக்கான சிக்கன், மட்டன் கடைகளில் இருந்து குப்பைகளைத் திரட்ட வேண்டும். எனக்கு முன் அனுபவம் இல்லாததால், நேர்த்தியாக குப்பைகளைத் திரட்டி தொட்டிக்குள் போடத் தெரியவில்லை. என் உடை முழுக்கவே ஆடு, கோழிகளின் ரத்தம் சிந்தி வழிந்தன. அப்போதுதான் என் வாழ்க்கைக்குத் தேவையானது என்ன என்பதைத் தீர்மானித்தேன். ஆம், படிப்புதான் நமக்கு சரி என்று உணர்ந்தேன். மீண்டும் பிளஸ் 2 தேர்வு எழுத வேண்டும் என்று தீர்மானித்தேன்.”
மிகத் தீவிரமாக படிப்பிலும் கவனம் செலுத்தி 2022ல் மீண்டும் பிளஸ் 2 தேர்வு எழுதி, அதில் தேர்ச்சியும் பெற்றார். அதன்பின், மும்பை வில்சன் கல்லூரியில் பி.ஏ பொலிட்டிகல் சயின்ஸ் சேர்ந்தார். அங்கு தனக்கு விருப்பமான பாக்சிங் பயிற்சியையும் பெற்றார்.
இரவு 10 மணி முதல் 5 மணி வரை மாநகராட்சிப் பணி, காலையில் கிளம்பி சமோசா சாப்பிட்டுவிட்டு கல்லூரிக்குச் செல்வார். வகுப்பு முடிந்தவுடன் மதியம் வீட்டுக்குச் சென்று சாப்பிட்டுவிட்டு தூங்குவார். மாலையில் எழுந்து மீண்டும் கல்லூரிக்குச் சென்று சிறிது நேரம் பாக்சிங் பயிற்சி செய்வார்.
பிறகு, ரயில்வே ஸ்டேஷன் அருகிலுள்ள ஒரு சாலையோர ஓட்டலில் நான்கைந்து அவித்த முட்டைகளை வாங்கிச் சாப்பிடுவார். அதன்பின், மோட்டார் லோடர் தூய்மைப் பணியைத் தொடங்குவார். காலையில் மீண்டும் சமோசா... வகுப்பு... மதிய தூக்கம்... மாலை பாக்சிங்... இரவுப் பணி... ரிப்பீட்டு.
வறுமை காரணமாக கல்லூரியில் படித்துக்கொண்டே இரவு நேரத் தூய்மைப் பணியை செய்தாக வேண்டிய சூழல். இப்படியாக ஒன்றல்ல, ரெண்டல்ல, மொத்தம் 12 ஆண்டுகள் இரவு பகலாக சுழன்றார் ஹெய்லி.
பி.ஏ. பட்டப்படிப்பு முடியும் தறுவாயில்தான் ‘டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ்’ பற்றி தனது நண்பன் மூலம் தெரிந்துகொண்ட ஹெய்லி, அங்கு சேர்வதற்கான நுழைவுத் தேர்வுக்கு தயாரானார். ‘சோஷியல் ஒர்க் இன் தலித் அண்ட் ட்ரைபிள் ஸ்டடீஸ்’ துறையில் முதுகலைப் பட்டப்படிப்பில் சேர்ந்தார். வீடு சென்றுவிட்டு வேலைக்குப் போவதில் சிரமம் இருந்ததால், ஹாஸ்டலில் நண்பர்களின் அறைகளியே தூங்கிவிடுவார்.
2017-ல் எம்.ஏ முடித்தபிறகு ‘டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ்’ கல்வி நிறுவனத்திலெயே எம்.ஃபில் படிப்பைத் தொடர்ந்தார். உதவிப் பேராசிரியர் டாக்டர். ஷைலேஷ்குமாரின் வழிகாட்டுதலில் எம்.ஃபில் முடித்தார். தனது மாணவர் ஹெய்லி குறித்து ஷைலேஷ்குமார் கூறும்போது,
“ஒரு சுகாதாரப் பணியாளர் பின்னணியில் இருந்து முற்றிலும் வேறுபட்ட பாதையில் மயூர் ஹெலியா பயணித்திருப்பது உத்வேகம் ஊட்டும் விஷயம். தான் மட்டுமின்றி தன் சமூகத்துக்கே பெரும் தூண்டுதலை ஏற்படுத்தியிருக்கிறார்,” என்கிறார்.
விமானத்தில் பற்றக்கவுள்ள தன் மகன் குறித்து பெருமிதமாக பேசும் தாயார் சாந்தா ஹெலியா, “நான் ஏழாம் வகுப்பு வரைதான் படித்தேன். ஆனால், என் பிள்ளைகளை படிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லி வளர்த்தேன். என் குழந்தைகளை இங்கிலீஷ் மீடியம் பள்ளியில் சேர்த்தபோது குடும்பத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது இன்னும் நன்றாக நினைவிருக்கிறது. இன்று, அவர்களும் எங்களுடன் இணைந்து பெருமிதம் கொள்கின்றனர்,” என்றார். மேலும் அவர் கூறியது:
“தங்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, மும்பை மாநகராட்சியில் தூய்மைப் பணிபுரியும் பல குழந்தைகளைப் பார்த்திருக்கிறேன். அவர்களில் பலரும் சிகரெட், மது, சூதாட்டத்துக்கு அடிமையாகின்றனர். அப்படியான அவலச் சூழலுக்கு என் பிள்ளைகளை ஆளாகாமல் பார்த்துக்கொண்டேன்,” என்கிறார் பாசம் பொங்க.
பி.ஹெச்டி படிப்புக்காக இங்கிலாந்து புறப்படும் மயூர் அளித்த பேட்டி ஒன்றில்,
“நான் இந்தியாவில் இருந்தாலும் சரி, வெளிநாட்டில் இருந்தாலும் சரி, என் நாட்டு மக்களுக்காகவே எப்போதும் பணிபுரிவேன். மும்பை மாநகராட்சியில் தூய்மைப் பணி செய்வதற்காக மாணவர்கள் பலரும் பள்ளியில் இருந்து டிராப்-அவுட் ஆகிறார்கள். இந்த அவலநிலை நீடிக்கக் கூடாது. அந்தக் குழந்தைகளின் கல்வியிலும், எதிர்கால தலைமுறையை உயர்த்துவதுலும் நான் கவனம் செலுத்துவேன்,” என்கிறார் நம்பிக்கையுடன்.
தகவல் - புகைப்பட உறுதுணை: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்
Edited by Induja Raghunathan