Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

350 கோடி மாத்திரைகள் விற்று சாதனைப் படைத்த டோலோ-650 : வெற்றி ரகசியம் என்ன?

கோவிட்-19 பாதிப்பு சூழலுக்கு மத்தியில் அதிக விற்பனையான காய்ச்சல் மாத்திரையாக கருதப்படும் டோலா-650 மாத்திரையின் வெற்றிக்கதை பற்றி ஒரு பார்வை.

350 கோடி மாத்திரைகள் விற்று சாதனைப் படைத்த டோலோ-650 : வெற்றி ரகசியம் என்ன?

Monday January 24, 2022 , 4 min Read

இந்தியா முழுவதும் கோவிட்-19 மூன்றாவது அலை வீசிக்கொண்டிருக்கும் நிலையில், சமூக ஊடகங்களில் டோலோ-650 அலை வீசிக்கொண்டிருக்கிறது. ஃபேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப் என முன்னணி சமூக ஊடக சேவைகளில் எல்லாம் Dolo-650 மாத்திரையின் மகிமையை கொண்டாடும் மீம்களையும், பகிர்வுகளையும் பார்க்க முடிகிறது.

கோவிட்-19 பாதிப்புக்கு மத்தியில், இந்தியாவில் 350 கோடி டோலோ மாத்திரைகள் விற்பனை ஆனதாக வெளியான செய்தியே டோலோ மீம்களுக்கு பின்னே உள்ள முக்கியக் காரணமாக அமைகிறது. கோவிட் பாதிப்புக்கு மத்தியில் அதிகம் பரிந்துரைக்கப்பட்ட காய்ச்சல், வலி மாத்திரையாகவும் டோலோ- 650 திகழ்கிறது.

கோவிட்- 19 பாதிப்புக்கு முன், ஆண்டுக்கு 7.5 கோடி அட்டை டோலோ- 650 விற்பனை ஆனதாக IQVIA ஆய்வு நிறுவன புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது. அதன் பிறகு, கோவிட்-19 பாதிப்புக்கு மத்தியில் 2020ம் ஆண்டில் 9.4 கோடி அட்டைகள் டோலோ- 650 மாத்திரைகள் விற்பனை ஆயின.

2021 நவம்பர் மாதத்தில் 14.5 கோடி அட்டைகள் அதாவது 217 கோடி மாத்திரைகள் விற்பனை ஆயின.
dolo-650

எவரெஸ்ட் அளவு

கடந்த இரண்டு ஆண்டுகளில் மொத்தமாக 350 கோடிக்கும் மேல் டோலோ-650 மாத்திரைகள் விற்பனை ஆகியுள்ளன. 1.5 செமீ நீளம் கொண்ட இந்த மாத்திரைகளை அடுக்கினால், எவரெஸ்ட் மலை சிகரத்தை விட 6,000 மடங்கு பெரிதாக இருக்கும் என ஒரு கணக்கு சொல்லப்படுகிறது. இதிலிருந்தே கோவிட் காலத்தில் விற்பனை ஆன டோலோ மாத்திரைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

டோலோ மாத்திரை அதிகம் விற்பனை ஆனது மட்டும் அல்லாமல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட காய்ச்சல் மாத்திரையாகவும் இருக்கிறது. 2020 ஜனவரியில் கோவிட் தொற்று வெடித்த பிறகு, கூகுள் தேடியந்திரத்தில் ’Dolo-650' மாத்திரை இரண்டு லட்சம் முறைக்கு மேல் தேடப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் உள்ள மற்றொரு முன்னணி மாத்திரையான கால்பால் (Calpol 650’) இரண்டாவது இடத்தில் வருகிறது.

டோலா

கோவிட்-அலை

கோவிட்-19 இரண்டாம் அலைக்கு மத்தியில் டோலோ மாத்திரை விற்பனை அதிகரித்ததோடு, கூகுளில் தேடப்படுவதும் அதிகரித்துள்ளது. இந்த புள்ளி விவரங்களில் இருந்து டோலோ- 650 அதிகம் விற்பனை ஆன காய்ச்சல் மாத்திரையாக இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இதன் காரணமாக, அதன் உற்பத்தி நிறுவனம் ’மைக்ரோ லேப்’சிற்கு வருவாயையும் அள்ளிக் கொடுத்திருக்கிறது.

டோலோ-650 என்பது காய்ச்சல், உடல் வலிக்காக பரவலாக அறியப்பட்ட மாத்திரையாக இருந்தாலும், கோவிட் சூழலில் இந்த மாத்திரை பெற்றிருக்கும் செல்வாக்கு வியக்க வைப்பதாகவே இருக்கிறது. டாக்டர்களால் அதிகம் பரிந்துரைக்கப்பட்டதோடு, சாமானியர்கள் அதிகம் அறிந்த மாத்திரையாகவும் அமைந்துள்ளது.

டோலோ-650 மாத்திரையின் இந்த வெற்றிக்கு காரணம் என்ன என்று பார்ப்பதற்கு முன், இந்த மாத்திரையின் பின்னே உள்ள மைக்ரோ லேப்ஸ் நிறுவனம் பற்றி பார்க்கலாம். பெங்களூருவை தலைமையகமாகக் கொண்ட ’மைக்ரோ லேப்ஸ்’ (Micro Labs) நிறுவனம் 1973ல் சென்னையில் துவக்கப்பட்டது.

டோலா

மைக்ரோ லேப்ஸ் நிறுவனத்தின் தற்போதை சி.இ.ஓ திலிப் சுரானா

மைக்ரோ லேப்ஸ்

மைக்ரோ லேப்ஸ் நிறுவனத்தின் தற்போதை சி.இ.ஓ திலிப் சுரானாவின் தந்தை ஜி.சி.சுரானா நிறுவனத்தை துவக்கினார். அதன் பிறகு, நிறுவனம் படிப்படியாக வளர்ந்து இந்தியாவின் முன்னணி மருந்தக தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனங்களில் ஒன்றாக உருவாகியிருக்கிறது.

இருதய சிகிச்சை, கண் சிகிச்சை, நீரிழிவு சிகிச்சை, வலி நிவாரணி, ஆண்டிபயாடிக்ஸ், நரம்பியல் உள்ளிட்ட பிரிவுகளில் மருந்துகளை இந்நிறுவனம் உற்பத்தி செய்கிறது. மாத்திரைகள், திரவங்கள், சிரஞ்சிகள், ஆயின்மெண்ட் உள்ளிட்ட வகைகளில் மருந்துகளை விற்பனை செய்து வருகிறது.

நிறுவனத்தின் சி.இ.ஓவான திலிப் சுரானா, 1983ம் ஆண்டு பொறுப்பிற்கு வந்தார். சகோதரர் ஆனந்த் சர்மாவுடன் இணைந்து நிர்வாகத்தை கவனித்து வருகிறார். நிறுவனம் இந்தியாவில் 14 நவீன உற்பத்தி ஆலைகள் மற்றும் மூன்று ஆய்வு மையங்களைக் கொண்டுள்ளது.

ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ பிரதிநிதிகளுடன், நாடு முழுவதும் உள்ள டாக்டர்கள், மருத்துவமனைகளை அணுகி வருகிறது. 1993ம் ஆண்டு முதல் ஏற்றுமதி மற்றும் சர்வதேச சந்தையிலும் கவனம் செலுத்தி வருகிறது.

டோலோ-650

இந்நிலையில், டோலோ 650 விற்பனை நிறுவனத்தை மேலும் பிரபலமாக்கியுள்ளது.

டோலோ-650 என்பது உண்மையில் காய்ச்சல், வலிக்கான பரிந்துரைக்கப்படும் பொதுவான பாராசிட்டாமல் மாத்திரை வகையச்சேர்ந்தது. கால்பால், குரோசின் உள்ளிட்ட வேறு பல பிராண்ட் மாத்திரைகளும் இந்தப் பிரிவில் உள்ளன.

microlabs

Microlabs நிறுவனம்

மற்ற காய்ச்சல் மாத்திரைகளை விட டோலோ- 650 மாத்திரை அதிகம் விற்பனை ஆவது ஏன் எனும் கேள்விக்கு பதிலாக பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. மாத்திரையின் இலகுவான பெயர் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

மற்ற மாத்திரைகள் பொதுவாக 500 மில்லி கிராம் பாராசிட்டாமல் கொண்டுள்ள நிலையில் இதில் 650 மிகிராம் கொண்டிருப்பதால், இது சற்று சக்தி வாய்ந்தது என மக்கள் நினைப்பது ஒரு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. சரியான நேரம், அதிர்ஷ்டம் போன்ற காரணங்களும் சொல்லப்படுகின்றன.

ஆனால், நிறுவன சி.இ.ஓ திலிப் சுரானா, இந்த மாத்திரை வெற்றிக்கான காரணத்தை இணையதள பேட்டியில் விரிவாக பகிர்ந்து கொண்டுள்ளார்.

விழிப்புணர்வு பிரச்சாரம்

”பாராசிட்டாமல் மாத்திரை சந்தை எப்போதுமே போட்டி மிகுந்ததாக இருந்தது. இந்தப் பிரிவில் வேறுபட்டு நிற்கக் கூடிய மாத்திரையை அளிக்க விரும்பினோம். சந்தையை ஆய்வு செய்து, மருத்துவர்களிடம் ஆலோசனை செய்த பிறகு, காய்ச்சல் நிர்வாகத்தில் இடைவெளி இருப்பதை புரிந்து கொண்டோம். பாராசிட்டமால் 500 மிகி அளிக்கும் நிவாரணம் போதாமல் இருப்பதை உணர்ந்து, 1993ல் டோலோ -650 மாத்திரையை அறிமுகம் செய்தோம்,” என சுரானா கூறியுள்ளார்.

மாத்திரையின் வடிவமைப்பிலும் கவனம் செலுத்தி, எளிதாக விழுங்கக் கூடிய அளவில் உருவாக்கினோம் என்கிறார் சுரானா.

டோலோ பெயரும் ஏற்றதாகவே அமையவே, 2010ல் மிகச்சிறப்பாக நிர்வகிக்கப்படும் பிராண்ட் என்ற பாராட்டையும் டோலோ பெற்றது.

டோலா

டோலோ எப்போதுமே, டாக்டர்கள் மத்தியில் பிரபலமாகவே இருந்துள்ளது எனும் சுரானா, கோவிட் காலத்தில் ஏற்பட்டுள்ள பிரபலத்தை தாங்களும் எதிர்பார்க்கவில்லை என்கிறார்.

”கோவிட் முக்கிய அறிகுறிகளான காய்ச்சல், வலிக்கு டோலோ ஏற்றதாக அமைவது அதன் வெற்றிக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார். மேலும், தடுப்பூசி இயக்கத்தின் நடுவே, இது தொடர்பாக டோலோ மேற்கொண்ட விழிப்புணவு பிரச்சாரமும் ஒரு காரணமாக இருக்கலாம்,” என்கிறார் சுரானா.

கோவிட் சூழலில், தேவைப்பட்ட இடங்களில் எல்லாம் மாத்திரை கிடைக்க, விற்பனை பிரதிநிதிகள் தீவிரமாக செயல்பட்டனர் என்கிறார். எங்கள் உற்பத்தி உள்கட்டமைப்பு, ஊழியர்கள், விற்பனை பிரதிநிதிகள் ஈடுபாடு எல்லாமும் சேர்ந்து தான் இந்த வெற்றிக்குக் காரணம் என்கிறார்.

தகவல் உதவி: Moneycontrol, ceo magazine