Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

WhatsApp’ல் தினமும் 20 சேலைகள் விற்பனை; மாதம் 40 ஆயிரம் வருமானம்!

ஐடி பணிக்குச் சென்று கொண்டே வீடு திரும்பியபின் வாட்ஸ் ஆப் மூலம் புடவை விற்பனை தொழில் செய்யும் பூர்ணிமா மோகன், நல்ல லாபம் ஈட்டி வருவதுடன், 60 பெண்களுக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

WhatsApp’ல் தினமும் 20 சேலைகள் விற்பனை; மாதம் 40 ஆயிரம் வருமானம்!

Monday January 13, 2020 , 4 min Read

வீண் ஃபார்வேர்டு மெசேஜ் பகிர்வுகள், வெட்டி அரட்டை, பொழுதுபோக்குகாக மட்டுமே பயன்படுத்திய வாட்ஸ அப்’பை பெரும்பாலான பெண்கள் வணிகதளமாக மாற்றியுள்ளனர் என்பது நீங்களும், நானும் கண்டறிந்த ஒன்றே! ஏனெனில், நிச்சயம் நீங்களும் ஏதேனும் ஒரு பொருள்களின் விற்பனை சார்ந்த வாட்ஸ ஆப் குரூப்பின் உறுப்பினராக இருப்பீர்! அப்படியாக, ஒயிட் காலர் பணியில் பணிபுரிந்து திருமணத்திற்கு பிறகு குழந்தைக்காக பணி துறந்த இல்லத்தரசிகள், படித்துக் கொண்டே பார்ட் டைம் வேலை செய்ய விருப்பமுள்ள காலேஜ் கண்மணிகள், சைடு பிசினஸ் பார்க்கும் நிறுவன ஊழியர்கள் என எக்கச்சக்கமான பெண்கள் வாட்ஸ ஆப் வணிகம் மூலம் தொழிலில் சாதித்து வருகின்றனர். அதிலொருவர் பூர்ணிமா மோகன்.


2014 ஆண்டு வாட்ஸ் ஆப்’பில் மகளிர்களின் பேஷன் சார்ந்த பொருள்கள் விற்பனையை தொடங்கியவர். இன்று, பணிக்குச் சென்று திரும்பிய பின் கிடைக்கும் 5 மணி நேரத்தில் 20 சேலைளை விற்று, மாதம் ரூ.20,000 லாபமாக ஈட்டி வருகிறார். ’கிளாத்திங் ஆர்பிட்ஸ்’ (Clothing orbitz) என்ற பிராண்ட்டை உருவாக்கி 60 பெண்களுக்கு வேலை வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் பூர்ணிமா.

'எப்போதும் ஓய்வு எடுக்க மறுக்கும் அழிவில்லா ஃபேஷன் ஆடை புடவை மட்டுமே...’ என்கிறார் பூர்ணிமா.
Poornima Mohan

பூர்ணிமா மோகன்

பட்டப்படிப்பு முடித்தவுடன் பணி, பணியின் ஊடே புடவை வியாபாரம், என குடும்பச் சூழலுக்காக உழைத்து, உயர்ந்து வரும் பருவப் பெண் பூர்ணிமா மோகன். பூர்விகம் கரூர். சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார். மகளின் படிப்புக்காக பெற்றோர் இருவரும் திருப்பூர் துணி நிறுவனத்தில் தங்கி பணிபுரிய, அரசுப் பள்ளிகளிலே படித்துள்ளார் பூர்ணிமா.


ஏதேனும் செய்து குடும்ப நிலையை உயர்த்திவிட முடியாதா? என்ற ஏக்க உணர்வு கொண்ட மிடில் கிளாஸ் மக்களுக்கே உரிய மனநிலை தான் பூர்ணிமாவின் பெற்றோர்களுக்கும். விளைவாய், இருவரும் பணிதுறந்து, புடவை வியாபாரம் செய்துள்ளனர். துணிகளை வீடுகளுக்குக் கொண்டுபோய் இன்ஸ்டால்மென்ட்டில் விற்று, ஒவ்வொரு நாளும் கலெக்ஷன் செய்யும் கடுமையான உழைப்பு நிறைந்த தொழிலில் ஏற்பட்டதோ நஷ்டம். புடவை வாங்கியவர்கள் இன்று தர்றேன், நாளை தர்றேன்னு இழுத்தடிக்க கடன்கள் பெருகியது.

“அம்மாவும், அப்பாவும் வேலையவிட்டுவிட்டு புடவை வித்தாங்க. அதில் எக்கச்சக்க கடன். அதனால, கவர்மென்ட் ஸ்கூல்ல படிக்க ஆரம்பிச்சேன். காலேஜ் சேர்ந்த அப்புறம் அது இன்னும் அதிகமாச்சு. பல நாள் பீஸ் கட்டாம வெளியவே நின்னுருக்கேன். அப்போ, அம்மா அவங்க தாலிய வச்சு பீஸ் கட்டினாங்க.

என் வாழ்க்கைல பணம் நிறைய வேலைய காமிச்சுருக்கு. அப்பா, அம்மா வேலைக்கு போகல. அவங்களை நான் தான் பாத்துக்கணும். சென்னையில் ஒரு தனியார் கம்பெனில வேலை பாக்குறேன். நிறைய ப்ரீ டைம் கிடைச்சதுனால, சில்க் த்ரெட் ஜுவல்லரி பண்ணேன். அது நல்லா சேல் ஆச்சு. நிறைய பல்க் ஆர்டர்ஸ் கூட கிடைச்சது. நான் ஒரு ஆளா செய்து அதை விக்கிறது கஷ்டமானது.

“கிடைச்ச கஸ்டமர்ஸ் வச்சு, அம்மா பண்ண சாரீ பிசினஸே பண்ணலாம்னு நினைச்சேன். ஆனா, இன்வெஸ்ட்மென்ட் பண்றமாதிரி இருக்கக்கூடாது என்பதில் ரொம்ப ரொம்ப தெளிவா இருந்தேன். ஏன்னா, என்னாகினாலும் கடன் வாங்கக் கூடாதுனு முடிவா இருந்தேன்,” என்று பகிரத் தொடங்கினார் பூர்ணிமா.

அச்சமயத்தில் தான், மகளிர் பேஷன் சார்ந்த பொருள்கள் வாட்ஸ் ஆப்’பில் விற்பனையாகத் தொடங்கிய காலக்கட்டம். துணிந்து களத்துக்குள் இறங்கினார் பூர்ணிமா. பெண்களுக்கான ஹேண்ட்பேக், நகைகள், வாட்ச் தொடங்கி சேலைகள் வரை சகல பேஷன் பொருள்களையும் ஜீரோ முதலீட்டில் வாட்ஸ் ஆப்’பில் தயாரிப்புகளின் புகைப்படங்களை பகிர்ந்து விற்கத் தொடங்கியுள்ளார்.

whatsapp business

‘முதலீடற்ற முதலாளி’ கான்செப்ட் சாத்தியப்படுவதற்கு முன் ஏராள அடிப்படை வேலைகளைச் செய்துள்ளார். நம்பகமான உற்பத்தியாளர்களைத் தேடி அலைந்து, அவர்களது தயாரிப்புகளின் தரத்தினை ஆராய்ந்துள்ளார். வாடிக்கையாளர்கள் ஆர்டர் கொடுத்தவுடன் உற்பத்தியாளர்களுக்கு தகவல் கொடுக்கிறார். தயாரிப்பின் இருப்பை தெரிந்து கொண்டு, பின் வாடிக்கையாளர்களிடம் இருந்து பேமெண்டை பெறுகிறார். அதில், பூர்ணிமாவின் லாபம் போக பொருளின் அசல் விலை உற்பத்தியாளருக்கு அனுப்படுகிறது. பிறகு, உற்பத்தியாளரே நேரடியாக வாடிக்கையாளரது முகவரிக்கு பொருளை அனுப்பி வைக்கிறார்.


தொடக்கத்தில் சகல பேஷன் அயிட்டங்களையும் விற்பனை செய்தவர், தற்போது புடவை வியாபாரத்தை மட்டும் முன்னெடுத்து வருகிறார்.

“ஒரு வாட்ஸ் ஆப் குரூப்பில் 200பேர் வரை இருக்கிறார்கள். மொத்தம் 12 வாட்ஸ் ஆப் குரூப்பை கவனித்து வருகிறேன். நியூ கஸ்டமர்ஸ், ரெகுலர் கஸ்டமர்ஸ், ரீசேல்லர்ஸ், கம்ப்ளைட்ண்ஸ் என வாடிக்கையாளர்களை வகையாக பிரித்து வைத்து, ஒவ்வொருத்தருக்கும் தனிகவனம் கொடுப்பேன். வாட்ஸ் ஆப் தவிர்த்து, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என அனைத்து சோஷியல் மீடியாவில் தயாரிப்புகளின் புகைப்படங்களை பதிவேற்றி புரோமோட் செய்து வருகிறேன். காலேஜ் செட் சேலைகள், விழாக்களுக்கு மொத்த குடும்பத்திற்கு ஒரே மாதிரியான சேலைகள்னு பல்க் ஆர்டர்சும் கிடைக்கும்,” என்கிறார்.

விற்பனையாளர் வாடிக்கையாளரை அறியார். வாடிக்கையாளர் விற்பனையாளரை அறியார். வாங்கும் புடவையையும் வாடிக்கையாளர்கள் நேரில் பார்க்கும் வாய்ப்பும் இல்லை. எனவே, பூஜ்யத்திலிருக்கும் வாடிக்கையாளர்களது நம்பகத்தன்மையை வெறும் செல்போன் செயலி குறுந்தகவல்களால் மட்டுமே அதிகரிக்கச் செய்வது என்பது சவால் நிறைந்த டாஸ்க்.

ஆனால், ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றில் கஸ்டமர் சப்போர்ட் எக்ஸ்கியூட்டிவ்வாக பணிபுரிந்த அனுபவம் கொண்டிருந்த பூர்ணிமாவிற்கு கஸ்டமர்களை கையாளுவது எளிதாகவே இருந்தது.


இருப்பினும், ‘expectation vs reality’ மீம்களுக்கான சிறந்த கன்டென்டே ஆன்லைன் ஷாப்பிங் என்பதால் தயாரிப்புகளின் தரத்தில் எந்தவொரு குறையும் இருக்கக்கூடாது என்பதில் அதிகக் கவனம் செலுத்தியுள்ளார். அதற்காக கஸ்டமர்களுக்கு லைட்டிங்குடன் எடுக்கப்பட்ட தயாரிப்புகளின் புகைப் படத்துடன், ரியல் புகைப்படத்தையும், வீடியோவையும் அனுப்புகிறார். பூர்ணிமாவின் ஸ்வீட் அணுகலினாலே, 1000த்துக்கும் மேற்பட்ட ரெகுலர் கஸ்டமர்களைக் கொண்டுள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளாக உற்பத்தியாளர்களையும், வாடிக்கையாளர்களையும் இணைக்கும் பாலமாக செயல்படும் பூர்ணிமா, அவருக்குக் கீழ் செயல்படும் 60 மறுவிற்பனையாளர்களை உருவாக்கியுள்ளார். பெரும் நிறுவனங்களில் பணிபுரிந்து வேலையை துறந்தவர்கள் துவங்கி, காலேஜ் படிக்கும் மாணவிகள் வரை 60 பேர் பூர்ணிமாவிற்கு ஆர்டரை பெற்றுத் தந்து அவர்களுக்கான லாபத்தை ஈட்டி வருகின்றனர்.
clothing orbitz

புடவை வாங்கிய வாடிக்கையாளர்களின் வாட்ஸ்-அப் மெசேஜ்


“நான் செய்வதை பார்த்திட்டு, ப்ரெண்ட்ஸ், சொந்தக்காரங்க, ஏன்... என்னோட கஸ்டமர்சே என்னிடம் நாங்களும் இந்த பிசினஸ் பண்ண நினைக்கிறோம். எங்களுக்கு கைட் பண்ண முடியுமானு கேட்பாங்க. நான் கஸ்டமரை எப்படி அணுகுவது, பிரச்சினைகளை எப்படி கையாளுவதுனு எல்லாமே சொல்லிக் கொடுத்திருவேன். நிறைய பேர் எனக்கு கீழே பணிபுரிய ஆரம்பித்தார்கள். அவர்களுக்காக எவ்ளோ மினிமம் லாபம் எனக்கு வைக்கமுடியுமா, அதை மட்டும் வைத்துக் கொண்டு அவங்களுக்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருவேன்.”

இப்போது, இது எங்களோட கூட்டு பிசினஸ். என்னைவிட அவங்க தான் நிறைய புரோமோட் செய்து ஆர்டர்களை பெறுகின்றனர். இந்தத் துறையை பொறுத்தவரை கண்ணுக்குத் தெரியாத போட்டியாளர்கள் அதிகம். ஆரோக்கியமான போட்டி இருப்பது நல்லது தான். இப்போதும் என்னுடன் சேர்ந்து பயணிக்க நினைப்பவர்கள் தயக்கமின்றி தொழில் சார்ந்த சந்தேகங்களை என்னிடம் கேட்கலாம், என்று உற்சாகத்துடன் கூறினார் பூர்ணிமா.

இதுவரை ஆன்லைன் புடவை விற்பனையில் கிடைத்த பணத்தை வருங்கால சாரீ ஷாப்பிற்கான முதலீடாக சேமித்து வைத்துவரும் அவரது எதிர்கால இலக்கு புடவை வாங்குவதற்கு என்று பிரத்யேக ஆப் உருவாக்கி ஆப்லைனிலும் தொடர்ந்து பயணிக்கவேண்டும் என்பதே!

நீங்களும் சாரீ லவ்வரா? அல்லது உங்களுக்கும் இந்த பிசினஸை செய்யணுமா? அப்போ உடனே பூர்ணிமாவை அணுகுங்கள்.


தொடர்புக்கு:- Clothing orbitz | whatsapp group: 919578055449 | இன்ஸ்டா: @clothing_orbitz