40 ஆண்டுகளாக உலகெங்கும் மணம் வீசி ஊதுபத்தி வணிகத்தில் நிலைத்து நிற்கும் Shalimar Incense வெற்றிக்கதை!
பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஷாலிமார் இன்சென்ஸ், கூட்ட நெரிசல் மிகுந்த இந்திய அகர்பத்தி சந்தையில் அதன் பிராண்டை விடாமுயற்சியுடன் வளர்த்து, பாரதம் முழுவதும் அதன் நறுமணம் பரவிக்கிடக்கிறது. அதன் 40 ஆண்டுகால வணிகப்பயணத்தை பகிர்ந்தார் ஷாலிமார் தூபத்தின் இயக்குநர் அல்கேஷ் ஷா.
பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஷாலிமார் இன்சென்ஸ், கடும் போட்டிமிகுந்த இந்திய அகர்பத்தி சந்தையில் அதன் பிராண்டை விடாமுயற்சியுடன் வளர்த்து, பாரதம் முழுவதும் அதன் நறுமணம் பரவிடச் செய்துள்ளது. அதன் 40 ஆண்டுகால வணிகப்பயணத்தை பகிர்ந்தார் ஷாலிமார் தூபத்தின் இயக்குநர் அல்கேஷ் ஷா.
எந்த ஆன்மீக நிகழ்வும், பண்டிகை நிகழ்ச்சிகளும் துாபமின்றி முழுமைபெறாது. அது நீண்ட குச்சி வடிவிலான ஊதுபத்திகளாகவோ, கூம்பு அல்லது கப் வடிவ துாப்களாகவோ இருக்கலாம். அந்நறுமண வஸ்துகள் அமைதியான சூழலை உருவாக்குவதுடன், அறையை அதன் வாசமிகு நறுமணத்தால் பரப்புகின்றன. இதனால், அவற்றிற்கு உலகளவில் பெரும் தேவை இருப்பதில் ஆச்சரியமில்லை.
சைக்கிள் ப்யூர் அகர்பட்டி, மங்கல்தீப், ஹெச்இஎம், ஜெட் பிளாக் மற்றும் பூல் உள்ளிட்ட பல பாரம்பரிய பிராண்டுகளுடன் இந்தியாவில் தூபச் சந்தை ஒரு போட்டித்தன்மை வாய்ந்த ஒன்றாகும். இந்த சந்தையில் மற்றொரு போட்டியாளர் வினோத் ஷாவால் நிறுவப்பட்ட 40 ஆண்டு பழமையான பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட ஷாலிமார் இன்சென்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகும்.

சிறந்த தரம்; சிறக்கும் வணிகம்!
1976ம் ஆண்டு, ஷா அவரது குடும்பத்திற்குச் சொந்தமான ஜவுளித் தொழிலில் இருந்து பிரிந்து ஷாலிமரைத் தொடங்கினார். அதன் ஆரம்ப ஆண்டுகளில், ஷா வாசனை திரவியம் தயாரிக்கும் கலை மற்றும் அறிவியலையும், தூப வணிகத்தின் அடிப்படைகளையும் கற்றுக்கொண்டார்.
மேலும், நிறுவனம் அதன் தயாரிப்புகளைப் பரிசோதித்து, எது சிறப்பாகச் செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள வாடிக்கையாளர்களின் கருத்துகளைப் பெறத் தொடக்கயது.
"முதல் நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் வரை, நாங்கள் நஷ்டத்திலே இயங்கி வந்தோம். 1982ம் ஆண்டுக்கு பிறகே லாபம் ஈட்டத் தொடங்கினோம்," என்று இரண்டாம் தலைமுறை தொழில்முனைவோரும் ஷாலிமார் தூபத்தின் இயக்குநருமான அல்கேஷ் ஷா, பகிர்ந்து கொண்டார்.
இன்று, ஷாலிமார் நீண்ட தூரம் பயணித்து, இந்தியா முழுவதும் அதன் இருப்பை நிலைநிறுத்தியதுடன், கிழக்கு இந்தியாவில் அதன் நறுமணம் எங்கும் பரவிக்கிடக்கிறது.
IMARC குழுமத்தின் கூற்றுப்படி, இந்திய தூப (அகர்பட்டி) சந்தை சுமார் ரூ.10,000 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது 2024 மற்றும் 2032ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் 8% CAGR ஐ பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷாவின் கூற்றுப்படி, ஷாலிமாரின் செழிப்பான வணிகத்திற்கான ரகசியம் மலிவு விலையில் தரமான தயாரிப்புகளை வழங்குவதாகும். தற்போதைய ட்ரெண்டில் நிலைநிறுத்தி கொள்ள, நிறுவனம் அதன் தயாரிப்புகளில் தொடர்ந்து புதுமைகளை உருவாக்கி வருகிறது. ஏனெனில், நுகர்வோரது விருப்பம் இப்போது மலர்களில் இருந்து வாசனை திரவியம் நோக்கி விரிவடைந்துள்ளது.
ஷாலிமரின் போர்ட்ஃபோலியோவில் 300க்கும் மேற்பட்ட ஸ்டாக்-கீப்பிங் யூனிட்கள் (SKUகள்) உள்ளன, அவை ஷாலிமார் ரெட்ரா, ஷாலிமார் சுபக்தி மற்றும் ஷாலிமார் கமல் உள்ளிட்ட பல்வேறு துணை பிராண்டுகளின் கீழ் விற்கப்படுகின்றன. அதன் விலைகள் பேக் மற்றும் அளவைப் பொறுத்து ரூ.35 முதல் ரூ.1,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளன. நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் தயாரிப்பு, மலிவு விலையில் பல்வேறு வாசனைத் திரவியங்களை ஒரே பேக்கேஜ்ஜிங்கில் வழங்கும் அதன் ஃபோர்-இன்-ஒன் தூபப் பாக்கெட்டாகும். இந்த நவீன யுகத்தில், தூபத்தின் பயன்பாடு மத மற்றும் ஆன்மீக நோக்கங்களுக்கு அப்பால் நறுமணம் வரை விரிவடைந்துள்ளது.

40 ஆண்டு பழமை; இந்தியா முழுவதும் பரவிய அதன் மணம்!
பொதுவாக வீட்டில் ஒரு நல்ல நறுமணத்திற்காகவே துாபங்களை மக்கள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். வாடிக்கையாளர்களின் புதிய தேவைகளைப் பூர்த்தி செய்ய, நிறுவனம் அதன் தயாரிப்பு வரிசையில் ஊத் மரங்களை சேர்த்துள்ளது. ஊத் என்பது தூபம், வாசனைத் திரவியம் மற்றும் சிறிய கைவேலைப்பாடுகளில் பயன்படுத்தப்படும் ஒரு மணம் கொண்ட, பிசின் மரமாகும். மத்திய கிழக்கில், ஷாலிமரின் ஊத் பிராண்ட் ஒரு பிரபலமான தயாரிப்பு ஆகும். ஷாவின் கூற்றுப்படி, 40 ஆண்டுகளாக ஷாலிமார் அதன் மூலப்பொருட்களில் சமரசம் செய்யாமல், தொடர்ந்து வாசனைத் திரவியங்களை பரிசோதித்தும், மேம்படுத்தியும் வருகிறது.
வணிகத்தின் தொடக்கத்திலிருந்தே நிலையான வளர்ச்சியைக் கண்ட நிறுவனம், 2017-18 ஆம் ஆண்டில் அதன் வணிக நடவடிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்த முடிவு செய்தது. அதன்படி, ஷாலிமார் அதன் விற்பனைக்கான மொத்த வலையமைப்பிலிருந்து விலகி விற்பனைக் குழுவை அமைத்து, சில்லறை விற்பனை நிலையங்களுக்குச் சென்றது. மேலும், கர்நாடகாவிலிருந்து பீகார் மற்றும் ஆந்திராவிற்கும் அதன் உற்பத்தி அலகுகளை விரிவுபடுத்தியது.
"இந்த மாற்றத்திற்குப் பிறகு நாங்கள் மிகவும் நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளோம். ஷாலிமார் தொடர்ந்து ஆண்டுதோறும் 15%க்கும் அதிகமாக வளர்ந்து வருகிறது. எதிர்காலத்தில் இந்தப் போக்கைத் தக்க வைத்துக் கொள்ள எதிர்பார்க்கிறோம்," என்றார்.
ஷாலிமார் அதன் உற்பத்தி அலகுகள் மற்றும் உற்பத்தி அல்லாத செயல்பாடுகளுக்காக சுமார் 450 பேரைப் பணியமர்த்தியுள்ளது. அதன் தொழிற்சாலைகளில் 85% பெண் ஊழியர்களும், மற்ற செயல்பாடுகளில் 65% பெண் தொழிலாளர்களும் பணியாற்றிவருகின்றனர். தூப வணிகம் சவாலானது மற்றும் மிகவும் சிக்கலானது. வணிகத்தை தொடங்கி ஆரம்பக் காலக்கட்டத்தில் சில தடைகள் இருப்பினும், இத்தொழிலில் எவரும் நுழைவது எளிது.
மேலும், வாடிக்கையாளர்களின் விருப்பத்தேர்வுகள் பிராந்தியத்திற்கு பிராந்தியம் வேறுப்பட்டு இருப்பதால் இதன் சந்தை மிகவும் துண்டு துண்டாக இருக்கிறது. அசாமில் உள்ள ஒரு வாடிக்கையாளர் விரும்பும் வாசனை மகாராஷ்டிராவில் உள்ள வாசனை திரவியத்திலிருந்து வேறுபட்டது, என்று ஷா கூறுகிறார்.
"வாடிக்கையாளர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள நாங்கள் எப்போதும் செவியை திறந்து வைத்திருக்கிறோம். மேலும் அவர்களின் விருப்பத்தேர்வுகள் மாறிக்கொண்டே இருக்கின்றன," என்றார்.
மேலும், நிறுவனம் மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் தென்கிழக்கு ஆசியா சந்தைகளில் அதன் இருப்பை விரிவுபடுத்தியுள்ளது. ஏற்றுமதிகள் மூலம் அதன் வருவாயில் சுமார் 20% -ஐ ஈட்டுகிறது. ஷாலிமார் அதன் இணையதளத்திலும், ஃபிளிப்கார்ட், அமேசான் மற்றும் பிக்பாஸ்கெட் போன்ற மின்வணிக தளங்களிலும் ஆன்லைன் இருப்பைக் கொண்டுள்ளது.
ஆன்லைன் விற்பனையிலிருந்து கிடைக்கும் வருவாய் ஷாலிமாரின் வணிகத்தில் குறிப்பிடத்தக்க பகுதியாக மாறும் என்று ஷா எதிர்பார்க்கிறார். அதன் எதிர்காலத் திட்டங்களின் ஒரு பகுதியாக, ஷாலிமார் கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற தென்னிந்திய மாநிலங்களுக்கு அதன் வரம்பை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. தற்போதுள்ள 20 நாடுகளில் இருந்து 40 ஆக ஏற்றுமதி செய்யும் நாடுகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
"சரியான நறுமணத்தை ஒருவர் வழங்கி, சரியான விநியோகத்தைக் கொண்டிருந்தால், இந்த வணிகத்தில் நீங்கள் பிழைப்பீர்கள்," என்று கூறிமுடித்தார் ஷா.

ரூ.1,000 கோடி மதிப்புடைய 12 பில்லியன் ஊதுபத்திகளை விற்பனை செய்துள்ள ‘சைக்கிள் பியூர்’ வளர்ச்சிக்கதை!