அம்மா பயிற்சி எடுத்த அதே இடத்தில் 27 ஆண்டுகளுக்குப் பின் மகன்!
27 ஆண்டுகளுக்கு முன்பு அம்மா பயிற்சி பெற்ற அதே ராணுவ பயிற்சி அகாடாமியில் மகனும் வெற்றிகரமாக பயிற்சி பெற்று பட்டம் பெற்ற நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.
27 ஆண்டுகளுக்கு முன்பு அம்மா பயிற்சி பெற்ற அதே ராணுவ பயிற்சி அகாடாமியில் மகனும் வெற்றிகரமாக பயிற்சி பெற்று பட்டம் பெற்ற நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னை OTA-வில் நடந்த அற்புதம்:
இரண்டாம் உலகப் போரின் போது இந்திய மற்றும் காமன்வெல்த் படைகளில் பணியாற்றும் அதிகாரிகளின் பெரும் தேவையை பூர்த்தி செய்வதற்காக 1942-45க்கு இடையில் ஏழு அதிகாரிகள் பயிற்சி பள்ளிகள் இந்தியாவில் நிறுவப்பட்டன. அதன் பின்னர், யுத்தம் முடிந்ததும் அந்த பயிற்சி பள்ளிகள் அனைத்துமே மூடப்பட்டன.
1962ல், சீன-இந்தியப் போரைத் தொடர்ந்து, திறமையான அதிகாரிகளை உருவாக்க வேண்டிய அவசியம் இந்திய அரசுக்கு ஏற்பட்டது. இதனையடுத்து, புனே மற்றும் சென்னை என இரண்டு இடங்களில் அதிகாரிகள் பயிற்சி பள்ளிகள் (OTS) இராணுவத்தில் அவசர கமிஷனுக்கான அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க நிறுவப்பட்டன.
சென்னையில் உள்ள ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகாடமி 15 ஜனவரி 1963 அன்று ஆரம்பிக்கப்பட்டது. இதன் முதல் பிரிகேடியராக ராம் சிங்கால் நியமிக்கப்பட்டார். சுமார் 750 ஏக்கர் வரை பரவியுள்ள சென்னை ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகாடமி (OTA), இந்திய ராணுவத்திற்கான பல்வேறு அதிகாரிகளை உருவாக்கி வருகிறது. இங்கு 1992ம் ஆண்டு முதல் கேடட்களுக்கான பயிற்சி நடைபெற்று வரும் நிலையில், கடந்த 30 ஆண்டுகளில் நடக்காத அதிசய நிகழ்வு இந்த ஆண்டு கேடட்களுக்கான பயிற்சி நிறைவு விழாவில் அரங்கேறியுள்ளது.
27 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்:
இந்திய குடிமக்களில் பெரும்பாலானோருக்கு ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பது கனவாக இருக்கும். இந்திய குடும்பங்களைப் பொறுத்தவரை ராணுவத்தில் பணியாற்றும் குடும்பத்தினரின் அடுத்தடுத்து தங்களது வாரிசுகளை ராணுவத்தில் இடம் பெற செய்வதை லட்சியமாகக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், 27 ஆண்டுகளுக்கு முன்பு தாய் பயிற்சி பெற்ற அதே ராணுவ பயிற்சி அகாடமியில், மகன் பட்டம் பெற்ற நிகழ்வு அரங்கேறியுள்ளது.
கடந்த ஜூலை 30ம் தேதி, சென்னையில் உள்ள ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகாடமியில் பாஸிங் அவுட் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 125 ஆண்களும், 41 பெண் கேடட்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் தான் யாருமே எதிர்பார்க்காத, இதுவரை அரங்கேறாத ஒரு அற்புதமான நிகழ்வு நடந்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் தனது மகனும் பங்கேற்றுள்ளதை எண்ணி பூரிப்புடன் ரசித்துக் கொண்டிருந்தார், முன்னாள் மேஜரான ஸ்மிதா சதுர்வேதி. இவர் சென்னையில் உள்ள ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகாடமியில் 1995ம் ஆண்டு பயிற்சி பெற்ற கேடட்களில் ஒருவர்.
தற்போது 27 ஆண்டுகளுக்குப் பிறகு தனது அதே ராணுவ அகடாமியில் பயிற்சி எடுத்து, பட்டம் பெற்ற புகைப்படத்தை பெருமையுடன் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து சென்னை ராணுவ கேடட் பயிற்சி நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
"இன்று ஒரு பெண் ராணுவ அதிகாரிக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான தருணம் இது. ஓய்வு பெற்ற மேஜர் ஸ்மிதா சதுர்வேதி, 1995ம் ஆண்டு 27 ஆண்டுகளுக்கு முன்பு தான் பயிற்சி பெற்ற சென்னை ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகாடமியில் தனது மகனும் பட்டம் பெற்றதை கண்டு நெகிழ்ந்தார்,” என பதிவிடப்பட்டுள்ளது. அத்துடன் சென்னை பயிற்சி அகாடமியில் கேடட்டாக மேஜர் ஸ்மிதா சதுர்வேதியின் பழைய புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளனர்.
இந்த சோசியல் மீடியா பதிவு வைரலானதை அடுத்து, அம்மா மற்றும் மகனுக்கு நெட்டிசன்கள் வாழ்த்து மழை பொழிய ஆரம்பித்தனர்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அந்த ட்விட்டர் பக்கத்தில் கமெண்ட் செய்துள்ள ஸ்மிதா சதுர்வேதி,
“எங்களுக்கு இது மிகப்பெரிய விஷயம். இன்று தேர்ச்சி பெறும் அனைத்து மாணவர்களையும் வாழ்த்த விரும்புகிறேன். மேலும், OTA அவர்களை நன்றாக வளர்த்ததற்கு வாழ்த்துகள்...” எனத் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகாடமியில் தான் பயிற்சி பெற்றதை விட தற்போது பல மடங்கு முன்னேறி இருப்பதாக தெரிவித்துள்ளார். இங்கு நான் பயிற்சி பெற்ற காலத்தில் இல்லாத நிறைய புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. மெஸ்கள், மாணவர்கள் வசிக்கும் இடத்தில், கேடட்கள் வசிக்கிறார்கள் என மாற்றத்தை எண்ணி வியந்துள்ளார்.