கருப்பட்டி சாஷே, நியூட்ரி மிக்ஸ், பனை பைட்ஸ் - பனைத் தொழிலை காக்க தொழில்முனைவரான 'Palm era' கண்ணன்!
பனங்கருப்பட்டியின் பயன்பாட்டை அதிகரித்து, மக்கள் நல்ல ஆரோக்கியத்தை பெறவும் விவசாயிகள் லாபம் அடையவும் வழி வகுத்துள்ளார் மென்பொறியாளர் கருப்பட்டி கண்ணன்.
தமிழ்நாட்டின் மாநில மரம் 'பனை'. ஆனால், பாடப்புத்தகங்களிலும், அரசிதழ்களில் மட்டுமே இந்த பெருமையும் அங்கீகாரமும், நிதர்சனத்தில் பனை மரங்களை அழிக்கும் நிலை தான் இருக்கிறது.
இதற்குத் தீர்வு தர முடியுமா என்று சிந்தித்ததன் விளைவாக பனைங்கருப்பட்டி மற்றும் பனை சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தன்னுடைய 'பாம் இரா' (Palm Era) மூலம் விற்பனை செய்யத் தொடங்கி அதில் முன்னேற்றமும் கண்டிருக்கிறார் மென்பொறியாளரான கண்ணன்.
Palm Era தொடங்கிய 3 ஆண்டுகளில் அதன் இலக்கை அடைந்துள்ளதா என்றும் தொழில்முனைவராக அவர் அடைந்திருக்கும் மகிழ்ச்சி குறித்தும் கண்ணன் யுவர் ஸ்டோரி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.
“திருநெல்வேலி மாவட்டம் நம்பியான்விளை என்னுடைய சொந்த ஊர். 2008ல் என்ஜினியரிங் படித்து முடித்து ஐடி பணியில் சேர்ந்து 13 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். 4 ஆண்டுகளுக்கு முன்னர் கோவில் திருவிழாவிற்காக ஊருக்கு சென்றிருந்த போது விவசாயிகள் பனைமரங்களை வெட்டி அழிப்பதைக் கண்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. எதற்காக இந்த மரங்கள் அழிக்கப்படுகின்றன என்று கேட்டதற்கு, மரத்தில் இருந்து விழும் பனம்பழங்கனை சாப்பிட வரும் காட்டு பன்றிகள் மற்ற பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயம் பாதிக்கப்படுகிறது, என்று அவர்கள் கூறினர்.
காலம் காலமாக பனைமரம் ஏறியவர்கள் வருமானம் இல்லை என்பதால் இந்தத் தொழிலை கைவிட்டிருந்தனர். மரத்தில் இருந்து பனம்பழம் கீழே விழாமல் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம், லாபம் வேண்டாம் என்று ஒரு தோட்டத்தை சேர்ந்த விவசாயி கூறியதும், பனை ஏறும் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் பெருக வழி செய்ய வேண்டும் என்கிற எண்ணமும் என்னை விடாமல் துரத்தியது.
"பனைஏறும் சமூகத்தில் இருந்து வந்த நான் என்னுடைய சமூகத்திற்கு திரும்ப ஏதேனும் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துத் தொடங்கியதே Palm Era,” என்கிறார் முதல் தலைமுறை பட்டதாரி தொழில்முனைவர் கண்ணன்.
கருப்பட்டி விற்பனை லாபமா?
பனையில் இருந்து கிடைக்கும் எல்லா பொருட்களுமே பலம் வாய்ந்தவை. ஆனால், அவற்றில் கொஞ்ச நாட்கள் வைத்து பயன்படுத்தக்கூடியது என்றால் அது பனங்கருப்பட்டி. பனங்கருப்பட்டி விற்பனையை ஏன் தொடங்கக் கூடாது இதனால் பனைஏறுபவர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தேன்.
சந்தையில் கலப்படமில்லாத பனங்கருப்பட்டியின் புழக்கம் அதிகம் இல்லை. அதுமட்டுமின்றி, நாட்டுச் சர்க்கரை, வெள்ளை சர்க்கரை உற்பத்தியில் பெரு நிறுவனங்கள் கால்பதித்த நிலையில் கருப்பட்டி உற்பத்தியில் கார்ப்பரேட்டுகளின் கவனம் இல்லை. அதனால் எந்திரங்கள் பயன்பாடுகள் இல்லாத ஒரு உற்பத்தித் துறையாக இது இருக்கிறது, அந்த வெற்றிடத்தை ஏன் நான் நிரப்பக் கூடாது என்கிற கேள்வி எழுந்தது.
ஆரம்பத்தில் கருப்பட்டியை காய்ச்சி சாலையோரங்களில் விற்கத் தொடங்கியுள்ளார் கண்ணன். ஆனால், பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. மென்பொருள் பின்னணி இருந்ததால் https://thepalmera.in/ என்கிற வலைப்பக்கத்தை தொடங்கி பொருட்கள் விற்பனையை செய்யத் தொடங்கியுள்ளார்.
"என்னுடைய குடும்பத்தில் நான் முதல் தலைமுறை தொழில்முனைவர். ஸ்டார்ட் அப், நிதி, தொழில்முனைவு இந்த வார்த்தைகளெல்லாம் தெரியாமல் தான் சுயதொழில் பாதையில் பயணிக்கத் தொடங்கினேன். பனை தொடர்பாக நிறைய ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படித்து, வேளாண்மை பல்கலைக்கழகங்களுக்கு சென்ற போது தான் தொழில்முனைவு பற்றிய அடிப்படை விஷயங்களை தெரிந்து கொண்டேன். 2023ல் தமிழ்நாடு அரசின் ஊக்கம் தரும் ஸ்டார்ட் அப் என்கிற பிரிவில் TANSEED நிதி பெற்று ஸ்டார்ட் அப்பில் சரியான திசையில் தொழிலை கொண்டு சென்றேன்."
தொழில் பயணத்தில் கற்ற பாடம்
ஒரு product வெற்றி பெற அதில் தனித்துவம் இருக்க வேண்டும். விழிப்புணர்வு காரணமாக மக்கள் பழமைக்கு மாறி வருகின்றனர். வீதிக்கு வீதி ஆர்கானிக் பொருட்கள் கிடைக்கிறது, இதில் மாறுபட்டு பனை பொருட்களில் மட்டும் கவனம் செலுத்தி வியாபாரத்தை பெருக்குவது எப்படி என்று சிந்தித்தேன்.
கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் நேரடியாக சென்று பனை பொருட்களில் என்ன புதுமையை புகுத்தலாம் என்று கலந்து ஆலோசித்தேன். அவர்களிடம் பனையின் வகைகள் பற்றிய விளக்கம் இருந்ததே தவிர, இதில் ஏன் எந்திரங்கள் பயன்பாடு இல்லை என்கிற கேள்விக்கு பதில் இல்லை.
"தொழில்முனைவு பற்றி எனக்கும் போதிய அனுபவம் இல்லை, இருப்பினும், கையில் இருந்த பணத்தை வைத்து 5 லட்சம் ரூபாய்க்கு கருப்பட்டியை உற்பத்தி செய்தோம். 4 மாதம் மட்டுமே கிடைக்கும் கருப்பட்டியை உற்பத்தி செய்து சென்னைக்கு எடுத்து வந்து விற்பனை செய்ய திட்டமிட்டேன்."
எப்படி விற்பனை செய்வது என்று தெரியவில்லை, கருப்பட்டியை சேமித்து வைக்க கிடங்கும் கிடைக்காததால், என்னுடைய 2 BHK வீட்டிலேயே ஒரு அறையில் அவற்றை வைத்துவிட்டேன். மழை காலத்தில் கருப்பட்டி உருகும் என்று தொழில் தொடங்கிய புதிதில் எனக்கு தெரியாது. ஒரு திருமணத்திற்காக ஊருக்கு போய்விட்டு திரும்பி வந்து பார்த்த போது, கருப்பட்டி புஞ்சை பிடித்து வீணாகிவிட்டது. சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பு கருப்பட்டியை கழிவறையில் கொட்டி கரைத்தேன் என்று தொடக்கத்தில் தான் சந்தித்த நஷ்டத்தை பற்றி, கூறினார் கண்ணன்.
என்னுடைய சேமிப்பில் இருந்து போட்ட முதலீடு வீணானது வருத்தத்தை தந்தது. தொழில் கனவை இதோடு நிறுத்திவிடுமாறு குடும்பத்தார் தெரிவித்தனர். வேலை பார்த்துக் கொண்டே என்னுடைய தொழில்முனைவர் கனவையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றேன். எதனால் கருப்பட்டி உருகுகிறது என்று தமிழ்நாட்டின் வேளாண்மை பல்கலைக்கழகங்களுக்கு நேரில் சென்று பல ஆய்வுக் கட்டுரைகளைப் படித்தேன்.
இயந்திர பயன்பாடு
முதலில் 2 ஆண்டுகள் கருப்பட்டியை பாரம்பரிய முறையில் காய்ச்சினோம், அதில், இயந்திரங்களின் பயன்பாட்டை புகுத்தலாம் என்று முடிவு செய்து. பிரத்யேகமாக இதற்கென ஒரு இயந்திரத்தை வடிவமைத்து வாங்கினேன். சுயதொழில் கடனாக ரூ.40 லட்சம் பெற்று கடந்த ஆண்டு முதல் நவீன முறையில் கருப்பட்டி தயார் செய்து வருகிறேன்.
"நேரடியாக கருப்பட்டி காய்ச்சும் போது வேலையாட்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படுவது இயந்திர பயன்பாட்டால் தவிர்க்கப்படுவதோடு தூசு விழுவது கருகிப் போவது போன்றவை குறைகிறது. பனை ஏறுபவர்களிடம் இருந்து தினசரி பதநீர் பெற மற்றவர்களை விட 40 சதவிகிதம் அதிக தொகையை கொடுத்தும் ஊக்கப்படுத்துகிறோம். இதனால் அவர்களின் அன்றாட வருமானம் கணிசமாக உயர்ந்துள்ளது."
சந்தையில் புதுசு
கருப்பட்டியை பவுடராக வைத்தால் உருகாது என்பதோடு பலருக்கு அதை உடைப்பதில் இருக்கும் சிரமத்தை போக்கும் விதமாக பவுடர்களாக விற்பனை செய்ய முடிவெடுத்தேன். கார்ப்பரேட் நிறுவனங்களில் இருப்பவர்கள் பயன்படுத்தும் விதமாக ready to use சாஷேகளில் 6 கிராம் கருப்பட்டி பவுடர் பேக்குகளை அறிமுகப்படுத்தினோம். அதில் கூடுதலாக சத்துகள் சேர்த்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் உற்பத்தியை தொடங்கினேன்.
3 ஆண்டுகள் கருப்பட்டி மட்டுமே விற்பனை செய்த நிலையில், இயந்திர பயன்பாட்டை அறிமுகப்படுத்திய பிறகு நிரந்தரமாக 10 பேர் பணியாற்றத் தொடங்கியுள்ளனர். கருப்பட்டி 4 மாதங்கள் மட்டுமே கிடைக்கும் பொருள் என்பதால் மற்ற மாதங்களில் என்ன செய்யலாம் என்ற ஆராய்ச்சியைத் தொடங்கி பனங்கிழங்கு பவுடர், சிவப்பு நிற பழம் மற்றும் காய்கறிகளை வைத்து Red bliss என்கிற பெயரில் கருப்பட்டி மால்ட் அறிமுகம் செய்தோம்.
சருமம் மற்றும் haemoglobin-க்கு உகந்ததாக இதில் சத்துக்கள் உள்ளன. அடுத்ததாக பனங்கிழங்கை ready to eat பொருளாக அறிமுகம் செய்வதற்கான ஆய்வு நடந்து கொண்டிருக்கிறது, விரைவில் அது சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளோம்.
எங்களிடம் வேலையாற்றும் ஊழியர்களுக்கும் பனைமரம் ஏறுபவர்களும், விவசாயிகளும் ஆண்டு முழுவதும் வருமானம் பெற வேண்டும், என்பதே என்னுடைய இலக்கு. அதை அடைந்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி பகுதியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் palmera-வின் ஆலைக்கு காயல்பட்டினம், அடைக்கலபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் பதநீர் கொண்டு வந்து கொடுத்துவிட்டு செல்கின்றனர். உடன்குடி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து பனங்கிழங்கு வாங்கி பவுடர் செய்து விற்பனை செய்கிறோம்.
வாடிக்கையாளர்களை அடைந்தது எப்படி?
சொந்தமாக கருப்பட்டி தயாரித்து விற்பனை செய்கிறோம் மக்கள் எளிதில் வந்து வாங்கி விடுவார்கள் என்ற முதலில் நினைத்தேன். ஆனால், அப்படி நடக்கவில்லை, அமேசான் தளம் பிராண்ட் வருமானத்தை தரவில்லை என்றாலும் பிராண்ட் பில்டிங்கிற்கு உதவியாக இருந்தது. அதன் பின்னர், எங்கள் இணையதளத்திற்கு வந்து வாடிக்கையாளர்களை வாங்க வைத்தோம். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் அதிக வாடிக்கையாளர்களை சென்றடைவதற்கான பணிகளை இப்போது செய்து வருகிறோம்.
வளர்ந்து வரும் தொழில்
முதல் ஆண்டு ரூ.6 லட்சம் வருமானம் கிடைத்தது, அதுவே 2வது ஆண்டு ரூ.18 லட்சமாக இருக்க, இந்த ஆண்டு 30 லட்சம் வருமானத்தை பெற்றிருக்கிறோம். பொருளின் தரம் மக்களுக்கு பிடித்திருக்கிறது அதனால் ஒவ்வொரு ஆண்டும் வருமானம் பெருகுகிறது என்பதை பார்க்க முடிகிறது.
எனினும், ரூ.70 லட்சம் முதலீட்டை அடையும் வருமானம் என்ற இலக்கை இன்னும் அடைய முடியவில்லை, நிச்சயமாக எதிர்காலத்தில் அந்த நிலையும் மாறும். ஒவ்வொரு ஆண்டும் வருமானம் அதிகரிக்கிறது அதே போல, நாங்களும் புதிய கருப்பட்டி சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறோம், என்று கூறுகிறார் கண்ணன்.
என்னுடைய மனைவி எனக்கு தொழிலில் உதவியாக இருக்கிறார். மக்களின் தேவைக்கு ஏற்ப கருப்பட்டி சார்ந்த புதிய பொருட்களை தயாரிப்பதற்கான திட்டங்களை வகுத்து கொடுக்கிறார். அதுமட்டுமின்றி, சென்னையில் சிறுதானியங்கள் மற்றும் கருப்பட்டி கலந்த பேக்கரி வகைகளை தயாரித்து கொடுத்து வருகிறார்.
என்னுடைய வீட்டில் என் குழந்தைகள் ஆரோக்கியமான எந்த உணவை உட்கொள்கிறார்களோ அவற்றையே மற்ற குழந்தைகளும் உட்கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தில் நாங்கள் இருவரும் செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.
எதிர்கால இலக்கு
சென்னையில் பணியாற்றிக் கொண்டே வாரம் ஒரு முறை தூத்துக்குடிக்கு சென்று வந்து இரண்டையும் சமன்படுத்தி எடுத்துச் செல்வதாகக் கூறும் கண்ணன், தமிழ்நாட்டில் 5 கோடி பனைமரங்கள் உள்ளன, அவற்றில் 10 ஆயிரம் மரங்களில் மட்டுமே ஏறுகின்றனர். 5 கோடியில் 10 சதவிகித மரங்களில் ஏறி பதநீர் எடுத்தாலே 5 ஆயிரம் கோடி வருமானத்தை பெற முடியும். அனைத்து பனைதொழிலாளர்களையும் ஒருங்கிணைத்து இந்த இலக்கை அடைய வேண்டும், என்பதே என்னுடைய ஆசை.
சோர்ந்து போனது உண்டா?
கருப்பட்டி சார்ந்த தொழிலை தொடங்கப் போகிறேன் என்று சொன்னதும் ஆரம்பத்தில் குடும்பத்தினர் ஒத்து கொள்ளவே இல்லை. மாமனாரும், அப்பாவும் வேண்டாம் என்று தான் சொன்னார்கள். இது மிக மோசமான துறை இதில் ஜெயித்தவர்கள் யாரும் இல்லை என்று என்னை தடுத்தார்கள். ஆனால், வேலையை விடாமல் இந்தத் தொழிலையும் செய்வதாக சொன்னதும் அவர்கள் ஓரளவு சமாதானம் அடைந்தனர்.
இரண்டாவது ஆண்டு என்னுடைய அப்பா தடுத்தும் கருப்பட்டி விற்பனை செய்தேன். அப்போது துபாயைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று பிராண்டிங், ஓலைப்பெட்டியில் கருப்பட்டி விற்பனை போன்றவை பிடித்துப் போய் Palm Era-வை ரூ.25 லட்சம் கொடுத்து வாங்கத் தயாராக இருந்தனர்.
என்னுடைய அப்பாவிடம் இது பற்றி கேட்ட போது, இதற்குத் தான் இத்தனை கஷ்டங்களை கடந்து வந்தாயா என்று அவர் கேட்டது எனக்கு நேர்மறை உத்வேகம் தந்தது. ஒரு பிராண்டுக்கு ரூ.25 லட்சம் விலை கொடுத்து வாங்கத் தயாராக இருந்தால் அதன் மதிப்பை புரிந்து கொள், என்று அவர் சொன்னது இந்தத் தொழிலை தொடர்ந்து வழிநடத்திச் செல்ல உற்சாகமாக இருந்தது. Tanseed விருது பெற்றது, மீடியாக்கள் பாராட்டி எழுதுவது ஓரளவு அவர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.
சாதிக்க என்ன முக்கியம்?
Time management இருந்தால் multi tasking என்பது சாத்தியமே. நான் இல்லாமல் ஒரு business தொடர்ந்து நடப்பதற்கான ஒரு முறையை உருவாக்கினேன். Operations, Process, Customer care, feedback, digital marketing, என எங்களது பொருட்களை வாங்குபவர்களுக்கு அது போய் சேருவதற்கு முன்னரே 2 குறுந்தகவல் ஒரு போன் கால் என ஒரு பெரிய பிராண்டுக்கான உணர்வை கொடுத்துவிடும்.
எல்லாவற்றிலும் நான் தலையிடத் தேவையில்லை, மேற்பார்வை செய்தாலே போதும் என்கிற ஒரு முறையை உருவாக்கியுள்ளேன். அதனால் ஐடி ஊழியராகவும், தொழில்முனைவராகவும் என்னால் சமன்படுத்தி கொண்டு செல்ல முடிகிறது, என்று கூறுகிறார் கண்ணன்.
3 ஆண்டுகளில் 23 தொழில்கள் - பாடங்களை படிக்கட்டுகளாக மாற்றி உயர்ந்த திருவண்ணாமலை இளைஞர்!