ஆப் மூலம் வீடு தேடி வரும் 'இஸ்திரி சர்வீஸ்' - Iron Box தொடங்கிய சென்னை இளைஞர்!
செயலி புக்கிங்கில் வீட்டிற்கே வந்து ஐயன் துணிகளை பெற்றுச் சென்று துணிகளுக்கு எவ்வித பாதிப்புமின்றி ஸ்டீம் ஐயன் செய்து 48 மணி நேரத்தில் வழங்குகிறது ஐயன் பாக்ஸ். தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு எளிய ஐடியாவை உருவாக்கி வெற்றி கண்டிருக்கும் 24 வயது இளைஞரின் புத்தொழில் முயற்சி இளைஞர்களுக்கான இன்ஸ்பிரேஷன்.
ஐயன்காரரிடம் இருந்து இன்னும் துணி வரவில்லையா? ஒரு வாரம் ஆச்சு இன்னும் ஐயனிங் துணி எடுத்துட்டு போகலை என்று வீடுகள் தோறும் அன்றாடம் இந்தப் புலம்பல்கள் இருக்கும். தானும் இதனை அனுபவித்த நிலையில், இதற்கானத் தீர்வாக ஸ்டீம் ஐயனிங் சர்வீஸ் நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார் 24 வயது ரூபேஷ் துங்கர்வால்.
தன்னுடைய புத்தொழில் பயணத்தை யுவர் ஸ்டோரி தமிழிடம் 'Iron Box' நிறுவனரும் சிஇஓவுமான ரூபேஷ் பகிர்ந்து கொண்டார்.
நான் பிறந்து வளர்ந்தது சென்னையில் தான். பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு இளநிலை bio- informatics என்ஜினியரிங் படித்திருக்கிறேன். என்னுடைய குடும்பத்தினர் 40 ஆண்டுகளாக ஃபார்மா துறையில் மருந்துகள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். அதனாலேயே புதிய மருந்துகள் கண்டுபிடிப்பு தொடர்பானது என்பதால் நானும் bio informatics எடுத்து படித்தேன். டிப்ளமோ மற்றும் முதுநிலையில் எம்பிஏ பட்டம் பெற்றிருக்கிறேன், இது தவிர தொழில்முனைவு சார்ந்த சில படிப்புகளையும் பயின்றிருக்கிறேன்.
ஃபார்மசூட்டிகல் துறையில் 7 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்கிறேன், என்னுடைய விருப்பத்தினால் படிக்கும் போதே நண்பர்களுடன் சேர்ந்து இந்தியாவிலேயே முதன் முறையாக 2010ம் ஆண்டில் OMG என்ற சர்ப்ரைஸ் பிளானிங் ஸ்டார்ட் அப் தொடங்கி சில காலங்கள் நடத்தி வந்தோம். படிப்பைத் தொடர்வதற்காக அந்த ஸ்டார்ட் அப் நிறுத்தி வைத்திருந்தேன்.
குடும்பத் தொழிலைத் தாண்டி தொழில்நுட்பத்தை வளர்ச்சியின் உதவியுடன் புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என்ற விருப்பம் எனக்குள் வளர்ந்து வந்தது. 2015ம் ஆண்டில் நான் என்னுடைய தினசரி செயல்களில் துணிகளை ஐயன் செய்து வாங்கி வருவதில் இருக்கும் சிக்கலை உணர்ந்தேன். இதனையடுத்து, இதற்குத் தீர்வு காணும் தேடலில் கிடைத்ததே Iron box என்கிறார் ரூபேஷ்.
2018ம் ஆண்டு முதன்முதலில் சென்னையில் ‘ஐயன் பாக்ஸ்’ தன்னுடைய சேவையைத் தொடங்கியது.
இந்த ironing service நிறுவனமானது முழுக்க முழுக்க தொழில்நுட்பம் சார்ந்து துணிகளை எடுத்துச் சென்று ஐயன் செய்து மீண்டும் வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு சேர்ப்பது வரை அனைத்தையும் செய்கிறது.
Ironbox என்ற செயலியை உங்களது போனில் பதிவிறக்கம் செய்து எங்களின் சேவையை பெறத் தொடங்கலாம். யார் வேண்டுமானாலும் பயன்படுத்தும் விதத்தில் எளிய முறையிலேயே செயலி வடிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
“எந்த நேரத்தில் வந்து துணிகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற ஸ்லாட்டை குறிப்பிட்டுவிட்டால் அந்த நேரத்தில் எங்களின் டெலிவரி ஆட்கள் வீட்டுக்கே வந்து துணிகளை எடுத்துச் சென்றுவிடுவர். ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஒரு தனிப்பட்ட கலெக்ஷன் பேக் வைத்திருக்கிறோம், ஐயனிங் செய்வதற்கும் professional ஐயனர்கள் இருப்பதனால் துணியின் வாழ்நாள் நீடிக்கும்.
கரித்துண்டு பயன்படுத்தும் ஐயன் பெட்டிகளில் அதிக சூடுபட்டு துணிகள் கருகிப்போய்விடும். ஆனால், எங்களின் ஐயனிங் முறையே வித்தியாசமானது துணிகளுக்கு உள்ளே ஆவியாகச் சென்ற சுருக்கங்களை நீக்கும் ஸ்டீம் ஐயனிங் முறையில் நாங்கள் துணிகளை இஸ்திரி செய்து தருகிறோம். டெலிவரியும் கூட 24 முதல் 48 மணி நேரத்தில் நிச்சயம் வாடிக்கையார்களுக்கு கிடைத்துவிடும் அதற்கு நாங்கள் உத்தரவாதம்.
இந்தியாவில் லாண்ட்ரி துறை என்பது அமைப்பு சாராதொழிலாக இருக்கிறது. மேலும், ஏற்கனவே பழக்கத்தில் இருக்கும் ஐயனிங் முறையில் அவர்கள் சரியான பதிலை வாடிக்கையாளர்களுக்குத் தருவதில்லை. ஐயன் பாக்ஸ் சர்வீஸில் அனைத்துமே எளிமையான ஆப் பதிவிலேயே முடிந்துவிடும்.
”துணிகள் சுத்தமாகவும், நேர்த்தியாகவும் ஐயன் செய்யப்பட்டு முறையாக காலர் மற்றும் சட்டை பொத்தான்கள் பொருத்தப்பட்டு சரியாக கவர் செய்யப்பட்டு டெலிவரி தரப்படும். இவை அனைத்தும் தற்போது நீங்கள் செய்யும் ஐயனிங்கிற்கான அதே செலவிலேயே செய்து தரப்படும்,” என்கிறார் ரூபேஷ்.
இரண்டு கோவிட் பெருந்தொற்று காலம் உள்பட சுமார் 4 ஆண்டுகளாக ஐயன் பாக்ஸ் திருப்திகரமான சேவையை வழங்கி வருகிறது. பழைய ஐயனிங் முறையால் துணிகள் நிறம் மங்கிப் போகும், வாழ்நாள் நீடிக்காது உள்ளிட்ட பிரச்னைகள் vacuum steam ironing முறையில் இல்லை. இதனால் எங்களது ஐயன் பாக்ஸ் சேவைக்கு நாளுக்கு நாள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பகுதிநேர மற்றும் முழுநேர டெலிவரி ஆட்கள், உள்ளூர் ஐயன் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், கார்மென்ட்ஸ் மற்றும் அபாரல்ஸ் துறையில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த ஸ்டீம் ஐயனிங் ஆட்கள் உள்பட சுமார் 50 பேர் ஐயன் பாக்ஸில் பணியாற்றி வருகின்றனர்.
IronBox செயல்பாடுகள்
சென்னையில் சூளைமேடு, வேப்பேரி, கீழ்பாக்கம், சிந்தாதிரிபேட்டை, எழும்பூர், ஓட்டேரி, கொசப்பேட்டை, துரைப்பாக்கம் உள்ளிட்ட 10 பகுதிகளில் தற்போது ஐயன் பாக்ஸ் சேவையானது வழங்கப்பட்டு வருகிறது, அடுத்த சில மாதங்களில் அண்ணாநகர், ஷெனாய் நகர், திருமங்கலம், முகப்பேறு, அயனாவரம் உள்ளிட்ட 15 இடங்களில் எங்களது சேவையை விரிவாக்க திட்டமிட்டுள்ளோம்.
தற்போது 8000 வாடிக்கையாளர்கள் எங்களது செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர், வாரம் ஒரு முறை, வாரத்திற்கு இரண்டு முறை என்று சுமார் ஆயிரம் பேர் தொடர்ந்து எங்களது சேவையை பெற்று வருகின்றனர்.
தற்போது சேவை வழங்கப்படும் பகுதிகளில் நாள் ஒன்றிற்கு 4 ஆயிரம் துணிகள் ஐயன் செய்யப்படுகிறது, எங்களின் தரமான சேவை பிடித்துப் போனதால் வாடிக்கையாளர்கள் எந்த அச்சமுமின்றி மகிழ்ச்சியாக தொடர்ந்து எங்களை அணுகுகின்றனர்.
“Seed funding முறையில் ரூ.70 லட்சம் முதலீட்டில் ஐயன் பாக்ஸ் தொடங்கப்பட்டது, இப்போது மேலும் சென்னையின் இதர பகுதிகள், தமிழகம் மற்றும் இந்தியா முழுவதிலும் இதனை விரிவாக்கம் செய்வதற்கான முதலீடுகளை எதிர்பார்க்கிறோம்,” என்றார் ரூபேஷ்.
சவால்களும், விரிவாக்கமும்
Franchisee-கள் துணிகளை வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்று வந்து எங்களுடைய ஹப்பில் கொடுத்துவிட்டால் ஸ்டீம் ஐயன் செய்து அவர்களுக்குத் திரும்ப அளிக்கப்படும் அதனை அவர்கள் வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இப்படியான ஒரு franchisee முறையை திருச்சியில் செயல்முறைப்படுத்த உள்ளோம்.
”ஒவ்வொரு புத்தொழிலிலும் ஒவ்வொரு நாளுமே சவாலானது தான், தினந்தோறும் தீர்வு காணக்கூடிய புதுப்புது பிரச்னைகள் இருந்து கொண்டே தான் இருக்கின்றன, தொழிலை எப்படி மேலும் வளர்க்கலாம் என்பதை புதிய புதிய அனுபவங்களில் இருந்து நாம் கற்கலாம்.”
ஐயன் பாக்ஸ் தொடங்கிய போது அனைத்தையும் நாங்களே செய்துவிடலாம் என்று நினைத்தோம், ஆனால் நடைமுறையில் அதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தன. வாடிக்கையாளர்களை திருப்திபடுத்துவது, பிக்அப் மற்றும் டெலிவரி, ஐயனிங், தொழில்நுட்ப மற்றும் தொழில் வளர்ச்சி, மார்க்கெட்டிங் என அனைத்தையும் எங்களது குழுவினரே பார்த்துக் கொள்கின்றனர். எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து செயல்படுவது சற்றே சவாலானது.
இதே போன்று இது சாமானியர்களாலும் பெறக்கூடிய சிறந்த சேவை என்பதை உறுதி செய்வதே எங்களது முதல் சவாலாக இருந்தது, எனவே, அந்தப் பகுதியில் ஐயனிங் சேவைக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ அதே விலையில் நாங்களும் ஐயனிங் செய்து கொடுக்கிறோம்.
“எனினும் முதலில் வரும் வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் விதமாக சில சலுகைகளை வழங்குகிறோம், முதல் முறை இலவச ஐயனிங் இரண்டாவது முறை 50 சதவிகித கட்டணத்தில் ஐயன் சேவை மற்றும் மூன்றாவது முறை 20 சதவிகித கட்டணம் நான்காவது முறையில் இருந்து சாதாரண கட்டணம் செலுத்தி ஐயன் சேவையைக் பெறலாம். COD மற்றும் ஆன்லைன் பேமெண்ட் மூலம் கட்டணத்தை செலுத்தலாம்.”
அடுத்த இரண்டு ஆண்டுகளில் சென்னை முழுவதிலும் மற்றும் இரண்டாம் நிலை நகரங்களான மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களிலும், பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட மாநிலங்களிலும் எங்களது சேவையை விரிவாக்கம் செய்யும் இலக்கோடு பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
”தற்போது மாதத்திற்கு ரூ.5 லட்சம் டர்ன்ஓவர் செய்யப்படுகிறது அடுத்த நிதியாண்டில் இதனை ரூ.15 முதல் ரூ.20 லட்சமாக்க வேண்டும் என்பதே எங்களுடைய திட்டமாக இருக்கிறது. 2018 ஏப்ரல் மாதத்தில் ஐயன் பாக்ஸ் ஸ்டார்ப் அப் செயல்படத் தொடங்கிய நிலையில் ஜுன் மாதம் முதலே வருவாய் ஈட்டத் தொடங்கிவிட்டது. வாடிக்கையாளர்களின் திருப்தியே எங்களுக்கு மார்க்கெட்டிங்காக அமைந்துவிட்டது,” என்று மகிழ்கிறார் ரூபேஷ்.