முதல் நாள் ஜீரோ ஆர்டர்; இப்போ 3 லட்சம் ரெஸ்டாரண்ட் பார்ட்னர்கள் - Swiggy சி.இ.ஓ.-வின் நெகிழ்ச்சி பதிவு!
முதல்நாளில் ஆர்டரே இல்லாமல் தொடங்கிய ஸ்விக்கி, இன்றோ 3 லட்சம் ரெஸ்டாரண்ட்களை தன்னுடன் இணைத்துக் கொண்டு அசுர வளர்ச்சி கண்டுள்ளது, என அதன் இணை நிறுவனர் பகிர்ந்துள்ளார்.
இந்தியாவில் உணவு விநியோகச் சங்கிலித் தொடர் வர்த்தகத்தில் ஸ்விக்கியின் வெற்றி பிரமிப்பூட்டும் உதாரணமாகும். மிகச்சாதாரணமாக, எளிமையாகத் தொடங்கிய முதல் நாளில் ஒரு ஆர்டர் கூட கிடைக்காததிலிருந்து இன்று 3 லட்சம் ரெஸ்டாரண்ட் பார்ட்னர்களைக் கொண்ட பிரமிப்பூட்டும் வளர்ச்சி குறித்து அந்நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி ஸ்ரீஹர்ஷா மெஜட்டி லிங்க்டு இன்னில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
2014-ம் ஆண்டில் ஸ்விக்கி முதன் முதலில் தொடங்கப்பட்ட போது முதல் ஆர்டரையே 2வது நாளில்தான் பெற்றது. முதல்நால் ஜீரோ ஆர்டருடன் தொடங்கி, இன்றோ 3 லட்சம் ரெஸ்டாரண்ட்களை தன்னுடன் இணைத்துக் கொண்டு அசுர வளர்ச்சி கண்டுள்ளது ஸ்விக்கி.
ஸ்விக்கி தொடங்கி 10 ஆண்டுகள் ஆன பெருமையைக் கொண்டாடி வருகிறது. இதனையடுத்து ஸ்விக்கி சி.இ.ஓ. ஸ்ரீஹர்ஷா மெஜட்டி தன் பதிவில் கூறியிருப்பதாவது:
ஆகஸ்ட் 6, 2014-ல் ஸ்விக்கியைத் தொடங்கிய நாளில் ஆர்டர்களே இல்லை. ஜீரோவில்தான் முடிந்தோம். 2வது நாளில் முதல் ஆர்டர் வந்ததிலிருந்து பயணம் தொடங்கியது. எங்களது ஆரம்பகால பார்ட்னர் Truffles. அது முதன் முதலில் 2 ஆர்டர்களுடன் தொடங்கியது. அப்போது முதல் ஒரு நாளில் 7,261 ஆர்டர்கள் என்று குவிந்தது வரை எத்தனை தூரம் நாங்கள் பயணித்து வந்திருக்கிறோம் என்பதை எடுத்துக்காட்டுவதாகும்.
இந்த மாதம் 10 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், நேதன் (ஹோல் இன் த வால்), அங்கீத் (ஆனந்த் ஸ்வீட்ஸ்), அவினாஷ் (டஃபிளிஸ்), சமீர் (சினிட்டா), பவன் தீப், சேத்தன் (தந்தூர் ஹட்), காஷிஃப் (லக்னோ ஸ்ட்ரீட்), ரோஜர் (வயா மிலானோ), மற்றும் காஷ்யப் (கிராமின்) ஆகிய கூட்டாளிகளுடன் நான் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
உணவு விநியோக வர்த்தகம் என்பது அப்போதே அதன் ஆரம்பக்கட்டத்தில் இருந்த போது இந்த கூட்டாளிகள் எங்கள் மீது வைத்த நம்பிக்கை அளப்பரியது. அவர்கள்தான் எங்கள் அடிப்படை கூட்டாண்மை உறுப்பினர்கள். இவர்கள் இல்லாவிட்டால் இன்று இந்தியாவில் உணவு விநியோகம் என்பது இன்று அடைந்திருக்கும் வளர்ச்சியை அடைந்திருக்காது.
இன்று 3 லட்சம் ரெஸ்டாரண்ட்கள், உணவு விடுதிகளுடன் எங்களுடைய கூட்டுறவானது பெருமை மிக்க உயரத்தை எட்டியுள்ளது. இந்த வெற்றிக்கு எங்களுடன் ஆரம்பத்தில் இணைந்தவர்களுக்கு நன்றியை உரித்தாக்குகிறேன். இவர்கள் எங்களுடன் வெறுமனே வியாபாரக்கூட்டாளிகள் என்பதல்ல இவர்கள்தான் எங்கள் அணியின் மைய உறுப்பினர்கள். அவர்களது ஆதரவினால்தான் இன்று ஸ்விக்கி என்ற சொல் ஒவ்வொரு இந்தியர் வீட்டிலும் புழங்கக்கூடிய ஒரு சொல்லாகியுள்ளது.
எதிர்கால கூட்டாண்மைகள், வளர்ச்சி, புதுமை புகுத்தல், குறித்து உற்சாகமடைகிறோம். நாங்கள் இணைந்து எங்கள் வாடிக்கையாளர்கள் ஈடு இணையற்ற சேவைகளை வழங்குவோம்.
எங்களுடைய பெருமைக்குரிய வளர்ச்சிப் பயணத்தின் இதயமாக இயங்கிய உங்களுக்கு நன்றியை உரித்தாக்குகிறேன். எங்களிடமிருந்து சிறந்தது இன்னும் வரவில்லை என்று கூற ஆசைப்படுகிறேன். இவ்வாறு லிங்க்டு இன் பகிர்வில் கூறியுள்ளார் ஸ்ரீஹர்ஷா மெஜட்டி.
.