ஏழை மாணவர்களின் வாழ்வில் இமயம் அளவு மாற்றம் ஏற்படுத்தும் ‘டீம் எவரெஸ்ட்’
கார்த்தி என்ற அந்த இளைஞன் தொடங்கிய டீம் எவெரெஸ்ட் இன்று பல மாணவர்களுக்கு வழிகாட்டி வருகிறது.
இறுதி ஆண்டு பொறியியல் படித்துக்கொண்டிருந்த இளைஞர் ஒரு நாள் கல்லூரி முடிந்து தன் அறைக்குப் போகும்போது தான் ஆரம்பிக்க நினைத்த தொண்டு நிறுவனத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என்ற சிந்தனையோடு இருந்தார்.
தமிழன், மற்றும் தமிழ் பற்று காரணமாக ஒரு தமிழ் பெயர் வைக்கலாம் என்று முதலில் நினைத்த அவர், ஒருவேளை நிறுவனம் தமிழகம் தாண்டி வளர்ந்தால், மற்ற மாநிலத்தவர்களுக்கு பெயர் உச்சரிப்பது கடினமாக இருக்கக்கூடாது என்று ஆங்கிலப்பெயர் வைக்க முடிவு செய்தார்.
உலக அளவில் பணி செய்தால் அனைவருக்கும் பரிச்சயமாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் வர, நினைவுக்கு வந்த பெயர்கள் தாஜ் மஹாலும், எவரெஸ்டும். இறுதியில் எவரெஸ்ட் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தான்.
கார்த்தி என்ற அந்த இளைஞர் தொடங்கிய ’டீம் எவெரெஸ்ட்’ ‘Team Everest' இன்று பல மாணவர்களுக்கு வழிகாட்டி, அவர்கள் வாழ்வில் ஒளியேற்றி வருகிறது.
சிறு வயதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வளர்ந்து, பின்னர், சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்த கார்த்தி, இரண்டு இடங்களுக்கும் இடையில் உள்ள பொருளாதாரம் மற்றும் கல்வித்தரத்தின் வித்தியாசத்தை உணர்ந்தார். இந்த ஏற்ற தாழ்வுகளை ஒரு நாள் நீக்க வேண்டும், குறிப்பாக கல்வியில் சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என்று மேல்நிலைப்பள்ளியில் படிக்கும்போதே முடிவெடுத்தார்.
பொறியியல் படிப்பை 2006ஆம் ஆண்டு முடித்து, கல்லூரி வளாக நேர்முகத்தேர்வின் மூலம் காக்னிசன்ட் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தார் கார்த்தி. ஒரு ஆண்டு கணிணி சார்ந்த பிரிவில் இருந்த கார்த்தி, பின்னர் சமூகப்பணி பிரிவுக்கு (corporate social responsibility / CSR) மாறினார். ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களுடன் இணைந்து பணியாற்றியதில், அவர்கள் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் என்பதை கவனித்தார். இதுபோல் பல தன்னார்வலர்கள் பணிபுரிந்தால் ஒரு இயக்கமாகவே மாறி எவ்வளவு மாணவர்கள் வாழ்க்கையை மாற்றமுடியும் என்று நினைத்தார்.
பணியில் இருக்கும்போதே டீம் எவரெஸ்ட் அமைப்பைத் தொடங்கினார். பொருளாதாரத்தில் பின்தங்கிய பள்ளி மாணவர்களுக்கு முதலில் புத்தகங்கள், சீருடை கொடுத்து உதவி செய்தார். அதோடு, அவர்களை ஊக்குவிப்பது, பிற திறன்களை கற்றுத்தருவது என்று கல்வி தாண்டிய அவர்கள் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தினார்.
அலுவலகத்திற்கும் செல்லவேண்டும் என்பதால் காலை மூன்று மணிக்கே எழுவது, மதிய உணவு இடைவேளையில் என்று டீம் எவரெஸ்டுக்காக சிரத்தை எடுத்தார். அவரோடு பல தன்னார்வலர்கள் இணைந்து செயல்பட்டனர்.
2014ஆம் ஆண்டு வேலையை ராஜினாமா செய்து டீம் எவரெஸ்ட் பணியில் முழுவதுமாக இறங்கினார் கார்த்தி. அதை நடத்துவதில் முதல் சில ஆண்டுகள் மிகவும் கடினமான ஒரு காலகட்டம் என்கிறார் அவர்.
“டீம் எவரெஸ்டை நடத்திச்செல்ல, மற்றவர்களை என்னுடன் சேர்ந்து தன்னார்வப் பணியில் ஈடுபடுத்த, அவர்களை ஊக்குவிக்க என நானும் பல திறமைகளை வளர்த்துக்கொண்டேன்,” என்கிறார்.
அவரது தன்னார்வலக் குழு, அடுத்த கட்டமாக, வசதி இல்லாத மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கலாம் என்ற முடிவெடுத்து, அதற்குத் தேவையான நிதி திரட்டுவதில் முதலில் ஒரு பெரிய சவாலாக இருந்தது.
படிப்படியாக அவர்கள் முயற்சி செய்து, இப்போது ஊக்கத்தொகை அளிக்க சுமார் 70% கூட்டுநிதி திரட்டல் (crowd funding) மூலமாகவும், 30% கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலமாகவும் நிதி பெறுவதாகத் தெரிவிக்கிறார். கார்த்தி டீம் எவரெஸ்டில் சம்பளம் பெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
‘நானே மாற்றம்’ என்று பொருள்படும் ‘I am the change’ என்ற ஊக்கத்தொகைத் திட்டம், பெற்றோர் இருவரும் அல்லது ஒருவர் இல்லாத மாணவர்கள், படிக்க வசதி இல்லாத மாணவர்கள் தங்கள் கல்லூரிப்படிப்பைத் தொடர உதவுகிறது.
தற்போது சென்னை, கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் உள்ள மாணவர்களுக்கு இந்த உதவி வழங்கப்படுகிறது (https://www.everestscholarship.com/). இந்த ஊக்கத்தொகை மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில் 850 மாணவர்கள் கல்லூரிப் படிப்பை தொடர முடிந்தது.
ஊக்கத்தொகை அளிப்பதோடு, டீம் எவரெஸ்ட் மாணவர்களுக்கு கல்வி மற்றும் வேலைக்குத் தேவையான திறன்களை வளர்க்க உதவுகிறது. ஆங்கிலத்தில் பேச, பிரச்சினைகளை வித்தியாசமான கோணத்தில் அணுக, என்று குறைந்தது ஒவ்வொரு ஆண்டும் அவர்களுக்கு 100 மணி நேரம் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒரு வருடத்தில் அவர்கள் 30 நாட்கள் பெரிய நிறுவனங்களில் இன்டெர்ன்ஷிப் (internship) பயிற்சிக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
தந்தையை இழந்த குணதேவன் டீம் எவெரெஸ்டின் ஊக்கத்தொகை மூலம் 2016ல் மெக்கானிக்கல் பிரிவில் பொறியியல் கல்வி முடித்தார். இந்தப் பயிற்சிகள் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலையில் சேர உதவியதாகத் தெரிவிக்கிறார். இப்போது குணதேவனும் டீம் எவெரெஸ்டில் தன்னார்வலராக செயல்படுகிறார்.
ஒரு நிறுவனத்தின் பெயருக்குப் பின்னால் ஒரு காரணம் இருக்கும். ஆனால் டீம் எவரெஸ்டுக்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன.
”எவரெஸ்டை விட உயர்ந்த மலை இல்லை அதனால் ஒருவர் அதில் சிகரத்தைத் தொடுகிறார், தன்னார்வலப் பணியே மனிதப் பண்பின் உச்சம், அப்பணியில் ஈடுபடும்போது மலை உச்சியைத் தொட்ட உணர்வு கிடைக்கிறது என்று,” காரணங்களை அடுக்கிக்கொண்டே போகிறார் கார்த்தி வித்யா.
ஒருவர் தனித்துச் செயல்பட முடியாது, ஒரு குழுவாகதான் பணியாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் டீம் என்ற வார்த்தையையும் சேர்த்துக்கொண்டதாகத் தெரிவித்தார்..
நிறுவனத்தின் பெயருக்கு பல காரணங்கள். அவர் பெயருக்கு?
கார்த்தி வித்யா என்ற அவரது வித்தியாசமான பெயர் குறித்து கேட்டபோது, ஊடகத்தில் இதுவரை பகிர்ந்து கொண்டதில்லை என்று சொல்லியபடி, நான்காம் வகுப்புப் படிக்கும்போது நடந்த சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.
அவரது அம்மா லக்ஷ்மி மோகன் என்று கையெழுத்து போட்டபோது எதற்காக அப்பா பெயரையும் சேர்க்கிறீர்கள் என்று கேட்டாராம். அதுதான் நம் வழக்கம் என்று கூறினாராம் அம்மா. அப்பாவிடம் ஓடிப்போய் அவர் ஏன் அம்மா பெயரை தன் பெயரோடு சேர்த்து எழுதவில்லை என்று கேட்டாராம்.
“என் அப்பா சொன்ன பதில் நினைவில்லை. ஆனால் அந்த சிறு வயதிலேயே எனக்கு திருமணமானால் என் மனைவி பெயரை என் பெயரோடு சேர்க்கவேண்டும் என்று முடிவு செய்தேன். அப்படித்தான் வித்யா என்ற பெயரைச் சேர்த்துக்கொண்டேன்,” என்கிறார்.
கார்த்தி டீம் எவரெஸ்ட் தொடங்கும் முன்பே தன் பெற்றோரை இழந்தார். அவர் மனைவி அவர் விரும்பிய பாதையில் செல்ல உறுதுணையாக இருப்பதாக கார்த்தி தெரிவிக்கிறார். அவரது தன்னார்வலப் பணிக்காக கார்த்தி வித்யா புதிய தலைமுறை, காக்னிசன்ட், ஐ-வாலண்டியர் போன்ற நிறுவனங்களின் விருதுகளைப் பெற்றுள்ளார்.
நேரம் கிடைக்கும்போது மட்டும் தன்னார்வலப் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளாமல், அனைவரும் அதெற்கென்று நேரம் ஒதுக்க வேண்டும் என்கிறார் கார்த்தி.
“133 கோடி மக்கள் இருக்கும் நம் நாட்டில் ஒவ்வொருவரும் மாதத்திற்கு ஒரு நாள் மட்டும் சமூகப் பணிக்காக நேரம் ஒதுக்கினால் கூட எவ்வளவோ பெரிய மாற்றத்தை ஏற்படுத்தமுடியும்,” என்கிறார்.
கல்வியில் சமத்துவம் ஏற்படுத்துவதோடு, தொண்டு பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள விரும்புவர்களுக்கு டீம் எவரெஸ்ட் ஒரு தளமாக அமையவேண்டும் என்பதே அவரது விருப்பம்.